|
Year C |
|
திருவருகைக்காலம்
4ஆம் ஞாயிறு |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே
தோன்றுவார்.
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம்
5: 2-5a
ஆண்டவர் கூறுவது இதுவே: நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே!
யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்!
ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே
தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்.
ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர்
அவர்களைக் கைவிட்டு விடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள்
எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள்.
அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது
பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும்
அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது
அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; அவரே அமைதியை அருள்வார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா 80: 1ac-2b. 14-15. 17-18 (பல்லவி: 3)
Mp3
=================================================================================
பல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.
1ac இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே,
ஒளிர்ந்திடும்! 2b உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை
மீட்க வாரும்! பல்லவி
14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப்
பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! 15 உமது
வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்!
பல்லவி
17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே
நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! 18 இனி நாங்கள்
உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள்
உமது பெயரைத் தொழுவோம். பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 5-10
சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, "பலியையும்
காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத்
தந்தீர். எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல.
எனவே நான் கூறியது: என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற,
இதோ வருகின்றேன். என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது"என்கிறார்.
திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும், "நீர் பலிகளையும்
காணிக்கைகளையும் எரிபலிகளையும் பாவம் போக்கும் பலிகளையும்
விரும்பவில்லை; இவை உமக்கு உகந்தவையல்ல" என்று அவர் முதலில்
கூறுகிறார்.
பின்னர், "உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்" என்கிறார்.
பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கிவிடுகிறார். இந்தத்
திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒருமுறை தம் உடலைப் பலியாகச்
செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 1: 38
அல்லேலூயா, அல்லேலூயா! நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே
எனக்கு நிகழட்டும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?
+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45
அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஒர் ஊருக்கு
விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை
வாழ்த்தினார்.
மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த
குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று.
எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.
அப்போது எலிசபெத்து உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி
பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என்
ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என்
காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால்
துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய
நீர் பேறுபெற்றவர்" என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்யும் மக்களாய் வாழ்வோம்
ஒரு நாள் சாயங்கால வேளை. வயதான பெண்மணி ஒருவர் கார் அருகில்
வெகு நேரமாக நிற்பதை ஒருவர் கவனித்தார். வாகனங்கள் அவ்வழியாகச்
செல்லும்போது அந்த பெண்மணி கைகாட்டி நிறுத்தப் பார்த்தார், ஆனால்
எந்த வாகனமும் நிற்கவில்லை. உடனே அந்த நபர் அருகில் சென்று,
"என்ன பிரச்சனை?" என்று அந்த பெண்மணியிடம் கேட்டார். "கார் டயர்
பஞ்சர் ஆகிவிட்டது" என்று அந்த பெண்மணி கூறினார்.
"என் பெயர் தயாளன். நீங்கள் காரில் உட்காருங்கள், நான் டயர்
மாத்தி கொடுக்கிறேன்" என்று சொல்லிவிட்டு அவர் டயரை கழட்ட ஆரம்பித்தார்.
சிறிது நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு டயரை மாற்றினார். அந்த
பெண்மணி, "உங்களுக்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும்?" என்று
கேட்டார். அதற்கு அவர் "நான் பக்கத்தில் சிறியதாக ஒரு டீக்கடை
நடத்தி வருகிறேன், அதில் இருந்து வரும் பணமே எனக்கு போதும்.
நீங்கள் பணம் எதுவும் தரவேண்டாம். நீங்கள் கஷ்டப்படும்
நேரத்தில் என்னாலான உதவி செய்தேன் அவ்வளவே. நீங்கள் பண உதவி
செய்ய வேண்டும் என்றால், வேறு யாராவது ஒரு நபர் கஷ்டத்தில்
இருக்கும்போது என்னை நினைத்து பாருங்கள், அவர்களுக்கு உதவி
செய்யுங்கள்" என்றார்.
அந்த பெண்மணி தயாளனை ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு காரை
எடுத்துக்கொண்டு சென்றார். வழியில் தலைவலி எடுப்பதுபோல்
இருக்கவே அருகில் உள்ள டீக்கடை அருகே காரை நிறுத்திவிட்டு
உள்ளே சென்றார். டீக்கடை பார்ப்பதற்க்கு ரொம்பவே பரிதாபமாக
இருந்தது, உள்ளே இருந்து ஒரு பெண் வந்து, "என்ன வேண்டும்
அம்மா?" என்று கேட்டார். வயதான பெண்மணி டீ கடையில் வேலை
செய்யும் பெண்ணை பார்த்தார், அந்த பெண் ஒன்பது மாத கர்ப்பிணி
என்பதை அவரிடம் பேசி தெரிந்து கொண்டார்.
"குடிக்க டீ கொண்டு வாம்மா" என்றார் அவர். சிறுது நேரத்திற்கு
முன்பாக தயாளன் சொன்னது அவருக்கு நினைவு வந்தது. அந்த அம்மா டீ
குடித்துவிட்டு 5000 ரூபாய் பணத்தை டேபிள் மேல் வைத்து விட்டு
சென்றுவிட்டார். டீ கடையில் வேலை செய்த பெண் காபி டம்பளரை
கழுவி வைத்துவிட்டு வந்தார். டேபிளில் கட்டாக பணம் இருப்பதை
பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதை எடுத்துக்கொண்டு அந்த வயதான
பெண்மணியிடம் கொடுக்க ஓடினார், அதற்குள் கார் கிளம்பி சென்று
விட்டது. கடையில் இருக்கும் வேலை எல்லாம் முடித்துவிட்டு,
கையில் அந்த வயதான பெண்மணி விட்டுச் சென்ற பணத்தையும்
எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றார். பிரசவ செலவுக்கு என்ன
செய்ய போகிறோம் என்று புலம்பி கொண்டு இருந்த தன் கணவர்
தயாளனுக்கு இந்த பணத்தை காட்ட வேண்டும் என்று ஆவலோடு அவர்
அருகில் சென்றார்..
ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கு நாம் செய்கின்ற உதவிக்கு இறைவன்
நிச்சயம் கைம்மாறு தருவார் என்னும் உண்மையை இந்த நிகழ்வானது
மிக அருமையாக எடுத்துக்கூறுகின்றது.
திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம்
படிக்கக்கேட்ட வாசகங்கள் "ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும்
மக்களாக வாழ்வோம் என்னும் சிந்தனையை நமக்கு எடுத்துக்
கூறுகின்றது. எனவே, நாம் அதை குறித்து சற்று ஆழமாக
சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
நற்செய்தி வாசகத்தில் மரியா தன்னுடைய உறவினராகிய எலிசபெத்தை
சந்திக்கச் செல்கின்ற நிகழ்வினைக் குறித்துப் படிக்கின்றோம்.
மரியா எலிசபெத்தை சந்திக்கச் சென்றார் என்று சொல்வதை விடவும்,
அவருக்கு அவருடைய பேறுகால வேளையில் உதவச் சென்றார் என்று
சொல்வது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று தோன்றுகின்றது.
எலிசபெத் தன்னுடைய முதிர்ந்த வயதில் கருத்தரித்திருகின்ற
செய்தியை வானதூதர் வழியாகக் கேள்விப்படும் மரியா, தான்
இருக்கும் இடத்திற்கும் எலிசபெத்து இருக்கும் இடமான
அயின்கரிமிற்கும் நீண்ட தூரம் இருக்கும், மலைப்பாங்கான பகுதி
என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. தக்க நேரத்தில் அவருக்கு உதவி
செய்யவேண்டும், அவருக்கு உறுதுணையாக என்பதுதான் மரியாவின்
எண்ணமாக இருந்தது. எனவேதான் அவர் எலிசபெத்துக்கு உதவி
செய்வதற்கு விரைந்து செல்கின்றார்.
மரியாவிடம் இருந்த "தேவையில் இருக்கின்றவர்களுக்கு உதவி
செய்யும்" மனநிலை நம்மிடம் இருக்கின்றதா? என்று சிந்தித்துப்
பார்க்கவேண்டும். பல நேரங்களில் நம் கண்முன்னால் ஒருவர்
அடிபட்டுக் கிடந்தால் கூட, "நமக்கு ஏன் வம்பு?" என்று கண்டும்
காணமால் போகக்கூடிய நிலைதான் இன்றைக்கு இருக்கின்றது; இத்தகைய
நிலை மாறவேண்டும். மரியாவைப் போன்று தேவையில் இருக்கின்ற
மக்களுக்கு உதவி செய்யகூடிய நல்ல மனிதர்களாக நாம் வாழ்வதற்கு
முயற்சி எடுக்கவேண்டும். அதுதான் நம்முடைய வாழ்விற்கு
அர்த்தத்தைக் கொடுப்பதாக இருக்கின்றது. மட்டுமல்லாமல் தேவையில்
இருப்பவர்களுக்கு, ஏழைகளுக்கு நாம் செய்கின்ற உதவி நம்முடைய
உள்ளத்திற்கு அமைதியைத் தருவதாகவும் இருக்கின்றது.
ஒரு சமயம் கார்ல் மென்னிஞர் (Karl Menningnar) என்ற புகழ்பெற்ற
மருத்துவரிடம் ஒருவர், "எனக்கு அடிக்கடி மனச்சோர்வு
ஏற்படுகின்றது. அப்போதெல்லாம் நான் செய்வது?" என்று கேட்டார்.
அதற்கு அவர், "உங்களுக்கு எப்போதெல்லாம் மனச்சோர்வு
ஏற்படுகின்றதோ அப்போது நீங்கள் கடைக்குச் சென்று, கொஞ்சம்
அரிசி, பருப்பு, காய்கறிகள், துணிமணிகள் வாங்கிகொண்டு உங்கள்
பகுதியில் இருக்கின்ற ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்துப்
பாருங்கள். அப்போது உங்கள் மனச் சோர்வு எல்லாம் நீங்குவதை
உணர்வீர்கள்" என்றார். கார்ல் மென்னிஞர் சொன்னது போன்று அவர்
செய்ய அவருடைய மனச்சோர்வு, கவலைகள் எல்லாம் காணாமலே
போய்விட்டன.
ஆகவே, நாம் மரியாவைப் போன்று தேவையில் இருக்கின்றவர்களுக்கு
உதவுகின்றபோது, நாம் செய்யக்கூடிய அந்த அன்பான உதவிகள் நமது
வாழ்விற்கு அர்த்தத்தைத் தருவதோடு மட்டுமல்லாம், அது நம்முடைய
உள்ளத்திற்கு அமைதியையும் நிம்மதியையும் தரும் என்பது உறுதி.
மரியா இப்படி தேவையில் இருக்கின்ற மக்களுக்கெல்லாம் உதவி
செய்கின்ற பெண்மணியாய் விளங்கியதால்தான் என்னவோ அவர் மகனும்
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் தேவையில் இருக்கின்ற
மக்களுக்கு உதவுகின்றவராக, சென்ற இடங்களிலெல்லாம் நன்மை
செய்பவராக விளங்குகின்றார் (திப 10:38).
மரியா எலிசபெத்தை சிந்தித்த இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகின்ற
இரண்டாவது செய்தி ஒருவர் மற்றவரை அவரிடமிருக்கும் நல்ல
பண்புகளுக்காக பாராட்டவேண்டும் வாழ்த்தவேண்டும் என்பதாகும்.
மரியாவோ எலிசபெத்தை சந்தித்ததும், அவர் முதிர்ந்த வயதில்
கருத்தரித்ததற்காக அவரை வாழ்த்துகின்றார். எலிசபெத்தோ மரியாவை,
அவர் ஆண்டவரின் தாயாக மாறியதற்காக வாழ்த்துகின்றார்
பாராட்டுகின்றார். இதனால் அந்த இடமே மகிழ்ச்சி பொங்கி
வழிகின்றது.
எப்போதுமே நாம் அடுத்தவரிடம் இருக்கும் குறைகளைத்தான் பேசித்
திரிகின்றோமே ஒழிய, நல்லதை ஒருபோதும் பேசுவதில்லை,
பாராட்டுவதில்லை, ஏன் அவர்களுக்கு வாழ்த்துக் கூறுவதும் இல்லை.
என்றைக்கு நாம் அடுத்தவரைப் பாராட்ட, வாழ்த்தக்
கற்றுக்கொள்கின்றோமோ அன்றைக்கு நம்முடைய வாழ்வில் மகிழ்ச்சி
பிறக்கும், மட்டுமல்லாமல், பாராட்டுகின்றபோது
பாராட்டப்படுவோரின் வாழ்வு சிறக்கும் என்பது உறுதி.
ஒரு சமயம் கேப்ரியல் ரோசஸ்டி என்னும் புகழ்பெற்ற ஓவியரை
சந்திக்க முதியவர் ஒருவர் வந்தார். வந்தவர் தன் ஓவியங்கள்
சிலவற்றைக் அவரிடம் காட்டினார். மிகவும் சுமாராக இருந்தன.
ரோசஸ்டி தயங்கித் தயங்கி தன் விமர்சனத்தைச் சொன்னார். அந்த
முதியவர் முகம் வாடியது. .
சிறுது நேரம் கழித்து அவர் வேறு சில ஓவியங்களைக் காட்டினார்.
ஓர் இளம் ஓவியனின் கைவண்ணம் என்று தெரிந்தது. "அற்புதமான
ஓவியங்கள். இந்த இளைஞனுக்கு நல்ல எதிர்காலம்" என்ற ரோசஸ்தி,
"உங்கள் பேரன் வரைந்ததா?" என்று கேட்டார். அதற்கு முதியவர்,
"இந்த ஓவியங்களை என்னுடைய பேரன் வரையவில்லை, நாற்பது
ஆண்டுகளுக்கு முன்னர் நான் வரைந்தவை. உங்களைப் போல் ஒருவர்
அன்றே என்னைப் பாராடியிருந்தால் இன்று நான் உங்களைப் போன்று
வந்திருப்பேன்" என்று மிக வருத்தத்தோடு சொன்னார்.
ஒருவரை, அவரிடம் இருக்கும் திறமைக் கண்டு பாராட்டாமல்
இருப்பதால் எத்தகைய இழப்புகள் ஏற்படுகின்ற என்பதை இந்த நிகழ்வு
மிக வேதனையோடு பதிவு செய்கின்றது. ஆம், நமக்கு அடுத்தவரிடம்
குறைகண்டு பிடிக்கத் தெரிந்திருக்கின்றதே தவிர வாழ்த்தவோ
பாராட்டவோ தெரியவில்லை. ஆனால், மரியாவும் எலிசபெத்தும் இதற்கு
விதிவிலக்காக இருக்கின்றார்கள். அவர்கள் இருவரும் ஓருவர்
மற்றவருக்கு ஆண்டவர் செய்த அற்புதங்களை நினைத்து
வாழ்த்துகின்றார்கள். அதனால் அந்த இடத்தில் மகிழ்ச்சி நிரம்பி
வழிகின்றது.
வால்ட்டர் என்னும் சிந்தனையாளர் சொல்வார், "பாராட்டுவது என்பது
மிகச் சிறப்பான காரியம். அது பாராட்டப்படுவோரிடம் இருக்கின்ற
நல்ல பண்புகளைகூட பாராட்டுவோருக்கு உரித்தாக்கிவிடும்" என்று.
(Appreciation is a wonderful thing; it maeks what is
excellent in others belong to us as well). இது உண்மையிலும்
உண்மை.
ஆகவே, நாம் மரியாவைப் போன்று தேவையில் இருப்போருக்கு உதவிட
விரைவோம், பிறரிடம் இருக்கும் நல்ல பண்புகளை, நல்லதைப்
பாராட்டுவோம், இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு
(டிசம்பர் 19, 2021)
மீக்கா 5:25
எபிரேயர் 10:510
லூக்கா 1:3945
அன்பின் வருகை
திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிற்றில் நாம் ஏற்றும்
மெழுகுதிரி அன்பு என்னும் மதிப்பீட்டைக் குறித்துக் காட்டுகிறது.
'ஆண்டவரே, அமைதியை அருள்வார்!' என்று மிக அழகாக இன்றைய முதல்
வாசகத்தில் பதிவு செய்கிறார் இறைவாக்கினர் மீக்கா. 'அமைதி' அன்பில்
கனிகிறது.
இன்றைய இறைவார்த்தை வழிபாடு மூன்று நபர்களின் வருகை கொண்டுவரும்
உணர்வு பற்றிப் பேசுகின்றது: முதல் வாசகத்தில், இஸ்ரயேலை ஆளப்போகின்ற
அரசர் பெத்லகேமிலிருந்து வருகின்றார். இரண்டாம் வாசகத்தில், மனுக்குலத்தை
மீட்க வந்த தலைமைக்குருவான இயேசு தன் இறைத்தன்மையிலிருந்து மனிதத்
தன்மைக்கு வருகின்றார். நற்செய்தி வாசகத்தில், நாசரேத்தூரிலிருந்த
கன்னி மரிய யூதேயா மலைநாட்டிலுள்ள தன் உறவினர் எலிசபெத்து
நோக்கி வருகின்றார்.
இன்றைய முதல் வாசகம் (காண். மீக் 5:2-5) மிகவும் முக்கியமான
மெசியா முன்னறிவிப்புப் பாடத்தைக் கொண்டிருக்கிறது. இறைவாக்கினர்
மீக்கா யூதாவாழ் மக்களுக்கு நற்செய்தியைக் கொண்டுவருகிறார்.
தாவீதின் வழிமரபில் வரும் புதிய அரசரே அந்த மெசியா. மீக்கா
கிமு 8ஆம் நூற்றாண்டில் இறைவாக்குரைத்தவர். இவரின் சொந்த ஊர்
எருசலேமிற்கு அருகில் உள்ள மொரேஷெத் என்ற ஊர். இவர் நிறைப்
பேரின் கண்களில் புகையாய் இருந்தவர். எருசலேமிற்கு
வெளியிலிருந்து வந்ததால் எருசலேமை மையமாகக் கொண்டிருந்த யூதத்
தலைவர்களின் செருப்புகளுக்குள் சிக்கிய சிறுகல்லாய் அவர்களுக்கு
நெருடலாகவே இருந்தார்.
இன்றைய வாசகம் மீக்கா நூலின் 'தலைமைத்துவப் பிரச்சினை' என்னும்
பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. 'அரசன் உன்னிடத்தில் இல்லாமல்
போனானோ?' (மீக் 4:5) என்ற கேள்வியோடு தொடங்குகிறார் இறைவாக்கினர்.
யூதாவின் ஆட்சியாளர்கள் ஆண்டவராகிய கடவுளின் உடன்படிக்கையை மறந்து,
அவருடைய கட்டளைகளை மீறி, வேற்று தெய்வங்களை வணங்கினர். இவர்களின்
இந்தப் பாவச் செயல் எல்லா மக்களையும் பாதித்தது. ஆள்பவர்களின்
பாவங்களுக்காக ஆளப்பட்டவர்களும் துன்பப்பட்டார்கள். இந்தப்
பின்புலத்தில் புதிய அரசரின் வருகையை முன்மொழிகிறார் மீக்கா.
இந்தப் புதிய அரசரைப் பற்றிய மிக முக்கியமான விடயம் என்னவென்றால்,
இவர் எருசலேமிலிருந்து வரமாட்டார். மாறாக, எருசலேமிற்கு வெளியே
இருந்து வருவார். எருசலேமிலிருந்து இதுவரை வந்தவர்கள் எல்லாம்
மக்களை அடிமைப்படுத்தவும், தங்களைத் தாங்களே வளர்த்தெடுப்பதிலும்
கவனமாக இருந்தனர். மெசியாவை எருசலேமிற்கு வெளியே பிறக்க வைப்பதால்
மீக்கா மெசியா இறைவாக்கையே தலைகீழாக்குகின்றார்: 'எப்ராத்தா
எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய்
இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர்
உன்னிடமிருந்தே தோன்றுவார்.' மேலும், மெசியாவின் முதன்மையான பணியாக
மீக்கா முன்வைப்பது: 'அவர் தம் மந்தையை மேய்ப்பார்.' இதுவரை இருந்த
எருசலேம் மைய அரசர்கள் மந்தையை 'மேய்ந்தார்களே' அன்றி, மந்தையை
'மேய்க்கவில்லை.' தொடர்ந்து, மெசியாவின் ஆட்சியின் அடையாளமாக 'அமைதியை'
மீக்கா முன்வைக்கின்றார்.
ஆக, அரசர் பெத்லகேமிலிருந்து எருசலேம் வருகின்றார். மக்கள் அடிமைத்தனத்திலிருந்து
தங்கள் நாடு திரும்புகிறார்கள். அரசர் தன் மந்தையை ஆயராக இருந்து
மேய்க்கின்றார். மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
மீக்காவின் இந்த இறைவாக்குப் பகுதியைத்தான் ஞானியர் ஏரோதிடம்
வரும் நிகழ்வில் மறைநூல் அறிஞர்கள் எடுத்துரைக்கின்றனர் (காண்.
மத் 2:2). மத்தேயு நற்செய்தியாளரைப் பொருத்தவரையில் மீக்காவின்
இறைவாக்கு இயேசுவில் நிறைவேறுகிறது. ஏனெனில், இயேசு பெத்லகேமில்
பிறக்கின்றார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 10:5-10), எபிரேயருக்கு
எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குருவாக
உருவகித்து, அவர் அனைத்துப் பலிகளையும் விட சிறப்பான பலியைச்
செலுத்தினார் என்று மொழியும் பகுதியில், 'இயேசு மனித உடல் ஏற்ற
நிகழ்வை' பதிவு செய்கின்றார். இயேசு மனுவுடல் ஏற்கும் நிகழ்வு
இறைத்திருவுளம் நிறைவேற்றும் நிகழ்வாக உள்ளது. இயேசு மனுக்குலத்திற்கு
வரும் நிகழ்வும், மனுக்குலத்தை விட்டு இறைத்தந்தையிடம்
செல்லும் நிகழ்வும் இறைவனின் திருவுளம் நிறைவேற்றும் நிகழ்வுகளாக
அமைந்துள்ளன.
யூத வழிபாட்டில் பலிகள் முதன்மையான இடம் பெற்றிருந்தன. லேவியர்
மற்றும் இணைச்சட்ட நூல்களில் பல பகுதிகள் பலிகள் பற்றியும், பலிகள்
நிறைவேற்றுவதற்கான முறைமைகள் பற்றியும் பேசுகின்றன. இறைவாக்கினர்களின்
காலத்தில் பலிகள் சடங்குகளாக மாறியதால், கடவுளே அவற்றை
வெறுக்கின்றார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர்
இயேசுவை தன் சமகாலத்து யூதர்களுக்கு அறிமுகம் செய்யும்போது,
யூத சமயத்தில் விளங்கிய முதன்மையான அடையாளங்களான தலைமைக்குரு,
ஆலயம், திரைச்சீலை, பலிகள் ஆகியவற்றின் வழியாக அறிமுகம்
செய்கின்றார்.
கடவுள் இயேசுவுக்கு ஓர் உடலை அமைத்துக் கொடுக்கின்றார். அதே
உடலை இயேசு சிலுவையில் கையளித்து, உயிர்ப்பின் வழியாக மீண்டும்
பெற்றுக்கொள்கின்றார். எருசலேம் ஆலய வழிபாட்டில் தலைமைக்குரு,
பலி செலுத்தும் வேளையில் உள்ளேயும் வெளியேயும் நடந்துகொண்டே இருப்பார்.
திரைச்சீலையைக் கடந்து அவர் உள்ளே செல்லும்போது பலியுடன்
செல்வார். வெளியே வரும்போது பலி செலுத்துபவருக்கான அருளைக்
கொண்டுவருவார். இயேசு பலிகளையும் கடந்து இறைத்தந்தையின் திருவுளப்படி
நடக்கின்றார். அதாவது, பலியை அன்று, கீழ்ப்படிதலையே ஆண்டவராகிய
கடவுள் விரும்புகிறார் என்று இறைவாக்கினர் சாமுவேல் அரசர் சவுலுக்குச்
சொல்வதை (காண். 1 சாமு 9), இயேசு நிறைவேற்றுகின்றார்.
ஆக, இயேசு இவ்வுலகிற்கு வந்ததும், உயிர்ப்புக்குப் பின்னர் கடவுளிடம்
ஏறிச் சென்றதும் மனுக்குலத்திற்கு மீட்பு தரும் நிகழ்வுகளாக உள்ளன.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 1:39-45) மரியா எலிசபெத்தைச்
சந்தித்த நிகழ்வைப் பதிவுசெய்கிறது. கபிரியேல் தூதர் மங்கள
வார்த்தை சொல்லி முடித்து மறைந்தவுடன், தன் உறவினர் எலிசபெத்தை
தேடி ஓடுகிறார் மரியா. வானதூதர் சொன்ன 'எலிசபெத்து' அறிகுறி சரியா
என்று பார்க்க ஓடினாரா? அல்லது தான் பெற்ற மகிழ்வை தன் உறவினரோடு
பகிர்ந்து கொள்ள ஓடினாரா? அல்லது கருத்தாங்கியிருக்கும் அந்த
முதிர்கன்னிக்கு கைத்தாங்கலாக இருக்க ஓடினாரா? 'எழுந்தாள். ஓடினாள்.
நுழைந்தாள். வாழ்த்தினாள்' - என இரண்டு வசனங்களுக்குள் மரியாளின்
நீண்ட பயணத்தை அடக்கி விடுகிறார் லூக்கா.
இந்தப் பகுதியில் எலிசபெத்து பேசும் வார்த்தைகள் மட்டுமே பதிவு
செய்யப்பட்டுள்ளன. மரியா மூன்று செயல்கள் செய்கின்றார்: (அ)
விரைந்து செல்கின்றார், (ஆ) வாழ்த்துகின்றார், மற்றும் (இ) மௌனம்
காக்கின்றார். எலிசபெத்து மரியாவை மூன்று அடைமொழிகளால்
வாழ்த்துகிறார்: (அ) 'பெண்களுக்குள் ஆசி பெற்றவர்,' (ஆ) 'ஆண்டவரின்
தாய்,' மற்றும் (இ) 'ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று
நம்பியவர்.' ஆண்டவர் சொன்னவை நிறைவேறும் என நம்பியதால் கன்னி
மரியா ஆண்டவரின் தாயாக உயர்கின்றார். 'நான் ஆண்டவரின் அடிமை'
என்னும் மரியாவின் சரணாகதியே அவரை இந்நிலைக்கு உயர்த்துகின்றது.
ஆக, மரியாவின் வருகை எலிசபெத்துக்கும் அவருடைய வயிற்றிலுள்ள குழந்தைக்கும்
மகிழ்ச்சி தருகின்றது.
அரசரின் வருகை, இயேசுவின் வருகை, மற்றும் மரியாவின் வருகை என்னும்
மூன்றையும் இணைக்கும் புள்ளி அன்பு.
நம் வருகை அன்பின் வருகையாக மாற நாம் என்ன செய்ய வேண்டும்?
(அ) இயேசுவை இவ்வுலகிற்குக் கொண்டு வருவதன் வழியாக.
முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் அமைதியற்ற நிலையில் இருக்கின்றனர்.
அவர்களுடைய அரசரின் வருகை அவர்களுக்கு அமைதி தருகின்றது. பெத்லகேமிலிருந்து
வருகின்ற அரசர் 'அமைதியின் நகரான' எருசலேமுக்கே அமைதியைக் கொணர்கிறார்.
இயேசு தானே மனுவுடல் எடுத்து இவ்வுலகிற்கு வருகின்றார். மீட்படைகின்ற
மனுக்குலம் அமைதி காண்கின்றது. நற்செய்தி வாசகத்தில், இயேசுவின்
திருமுன்னிலை எலிசபெத்தின் வயிற்றிலுள்ள குழந்தையை மகிழ்ச்சியால்
நிரப்புகிறது. மனுக்குலத்தின் மீட்பு தொடங்குகின்ற நிகழ்வை மரியா
தனக்குள் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அதை உடனடியாக மற்றவர்களுடன்
பகிர்ந்துகொள்கின்றார். ஆக, கடவுள் இந்த உலகிற்கு வரும் ஒரு
பாதையாக நாம் இருக்கும்போது நாம் அமைதியுடன் இருக்கின்றோம். இந்த
மூன்றிலும் கடவுளின் அன்புச் செயல் மிளிர்கிறது.
(ஆ) மற்றவர்களைத் தேடிச் செல்வது
மரியா தன் உறவினரைத் தேடி நீண்டதொரு பயணம் செய்கின்றார்.
கிறிஸ்து நம்மில் கருவாகத் தொடங்கினால் நாமும் ஓய்ந்திருக்க
முடியாது. நாமும் அடுத்தவர்களுக்குப் பணி செய்வோம். நம்
பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறுவோம். நம் தேவைகளை மறந்து
மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவோம். இப்போது தொடங்குகின்ற மரியாவின்
பயணம், தொடர்ந்துகொண்டே இருக்கும்: பெத்லகேமுக்கு, எகிப்துக்கு,
மீண்டும் நாசரேத்துக்கு, எருசலேம் ஆலயத்துக்கு, கானாவூருக்கு,
கல்வாரிக்கு என இனி அவர் பயணம் செய்துகொண்டே இருப்பார். எல்லாப்
பயணங்களின் முன்னோட்டமே எலிசபெத்தை நோக்கிய பயணம். தான் கடவுளின்
தாயாக இருந்தாலும் தாழ்ச்சியுடன் புறப்படுகின்றார் மரியா. தன்
அன்பைப் பகிர்ந்துகொள்ளச் செயல்கிறார் மரியா. மரியாவின் அன்பும்
தாழ்ச்சியுமே அவரை எலிசபெத்தை நோக்கி உந்தித் தள்ளியது என்கிறார்
புனித பிரான்சிஸ் சலேசியார்.மரியா தன் வழியில் வேறு எந்தக்
கவனச் சிதறலும் கொள்ளவில்லை. அவருடைய இலக்குத் தெளிவு நமக்கு
ஆச்சர்யம் தருகின்றது. 'எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்'
என இங்கே பதிவு செய்கின்றார் லூக்கா. வானதூதர் கபிரியேல் சொன்ன
நொடியில் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார் மரியா. இப்போது ஒரு
மெழுகுதிரி இன்னொரு மெழுகுதிரியைப் பற்ற வைப்பதுபோல, தன்னிடம்
உள்ள தூய ஆவியைத் தன் உறவினருக்குக் கொடுக்கின்றார் மரியா.
(இ) ஆண்டவரில் மகிழ்வது
மரியா-எலிசபெத்து நிகழ்வு முழுவதும் மகிழ்ச்சி இழையோடுகிறது.
இந்த மகிழ்ச்சியின் ஊற்றாக இறைவன் இருக்கின்றார். 'ஆண்டவரின்
மகிழ்வே நம் வலிமை' என்கிறார் நெகேமியா (8:10). மரியாவின் வருகையில்
இறைவனின் கரத்தைக் காணுகின்றார் எலிசபெத்து. அரசரின் வருகையில்
ஆண்டவரின் திருமுன்னிலையைக் காண்கின்றார் மீக்கா.
இறுதியாக, இன்றைய பதிலுரைப் பாடலில் (திபா 80), 'நாட்டின்
புதுவாழ்வுக்காக' மன்றாடும் ஆசிரியர், 'உமது வலக்கை நட்டுவைத்த
கிளையைக் காத்தருளும்!' என வேண்டுதல் செய்து, 'இனி நாங்கள் உம்மை
விட்டு அகலமாட்டோம்' என வாக்குறுதி தருகிறார். கரங்களைப்
பிடித்துக்கொள்ளும் நாம் மற்றவர்களுக்கு நம் கரங்களை
நீட்டினாலும் நாமும் அன்பை ஏந்திச் செல்பவர்களே!
(அருட்தந்தை: யேசு கருணாநிதி)
மதுரை உயர்மறைமாவட்டம்
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
நற்செய்தி - தூதும், தூதுவர்களும்
திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு
(டிசம்பர் 23, 2018)
மீக்கா 5:2-5
எபிரேயர் 10:5-10
லூக்கா 1:39-45
இந்த நாள்களில் இணையதளம், சமூக வலைதளம், தொலைக்காட்சி, பண்பலை,
வானொலி, செய்தித்தாள் என எதைத் திறந்தாலும் செய்திகள் குவிந்து
கிடக்கின்றன. இச்செய்திகள் நற்செய்தியா? என்றால், பல நேரங்களில்
'இல்லை' என்றே நம் பதில் இருக்கிறது. மேலும், இச்செய்தியைக்
கொண்டு வரும் தூதர்களும் நமக்கு விருப்பமானவர்களாக இருப்பதில்லை.
ஏனெனில், ஒவ்வொரு தூதரும் தன் செய்திதான் உண்மை எனச் சொல்வதற்கான
செய்தி நிறுவனத்தால் விலைபேசப்படுகிறார். ஆக, நம்மைச் சுற்றி
கெட்ட செய்திகளும், பொய்களும் அழகாக, பளபளப்பாக வலம் வருகின்றன.
இந்தப் பின்புலத்தில், கிறிஸ்து பிறப்பு நாள் மிக நெருங்கி வந்துவிட்ட
நேரத்தில், 'அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும்
நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்' (காண். லூக் 2:10) என்று
வானதூதர் பெருந்திரள் காத்திருக்கும் வேளையில், 'நற்செய்தியின்
தூது மற்றும் தூதுவர்கள்' என்ற மையச்சிந்தனையில் இன்றைய இறைவாக்கு
வழிபாட்டைக் கொண்டாடுவோம்.
நற்செய்தியாளர் லூக்காவைப் பொறுத்தவரையில் இயேசுவின் பிறப்புச்
செய்தியே நற்செய்தியாக இருக்கிறது. இந்த நற்செய்தியை அறிவிப்பதற்கு
கடவுள் மிகவும் சாதாரணமான, யாரும் கண்டுகொள்ளாத, தங்களை முதன்மைப்படுத்தாத,
எளிய மக்களைத் தேர்ந்துகொள்கிறார். அவர்களையே நற்செய்தியின்
தூதுவர்களாகவும் மாற்றுகின்றார்.
எப்படி?
இன்றைய முதல் வாசகம் (காண். மீக் 5:2-5) மிகவும் முக்கியமான
மெசியா முன்னறிவிப்புப் பாடத்தைக் கொண்டிருக்கிறது. இறைவாக்கினர்
மீக்கா யூதாவாழ் மக்களுக்கு நற்செய்தியைக் கொண்டுவருகிறார்.
தாவீதின் வழிமரபில் வரும் புதிய அரசரே அந்த மெசியா. மீக்கா
கிமு 8ஆம் நூற்றாண்டில் இறைவாக்குரைத்தவர். இவரின் சொந்த ஊர்
எருசலேமிற்கு அருகில் உள்ள மொரேஷெத் என்ற ஊர். இவர் நிறைப்
பேரின் கண்களில் புகையாய் இருந்தவர். எருசலேமிற்கு
வெளியிலிருந்து வந்ததால் எருசலேமை மையமாகக் கொண்டிருந்த யூதத்
தலைவர்களின் செருப்புகளுக்குள் சிக்கிய சிறுகல்லாய் அவர்களுக்கு
நெருடலாகவே இருந்தார்.
இன்று நாம் வாசிக்கும் முதல் வாசகம், மீக்கா நூலின் 'தலைமைத்துவப்
பிரச்சினை' என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. 'அரசன்
உன்னிடத்தில் இல்லாமல் போனானோ?' (மீக் 4:5) என்ற கேள்வியோடு தொடங்குகிறார்
இறைவாக்கினர். இதன் வரலாற்றுப் பின்புலம் பாபிலோனிய அடிமைத்தனம்
என்று தெரிந்தாலும், இதன் பின்புலம் அவ்வளவு தெளிவாக இல்லை. ஆனால்,
ஒன்று மட்டும் நிச்சயமாக இருந்தது. யூதாவின் ஆட்சியாளர்கள் ஆண்டவராகிய
கடவுளின் உடன்படிக்கையை மறந்து, அவருடைய கட்டளைகளை மீறி,
வேற்று தெய்வங்களை வணங்கினர். இவர்களின் இந்தப் பாவச் செயல் எல்லா
மக்களையும் பாதித்தது. ஆள்பவர்களின் பாவங்களுக்காக ஆளப்பட்டவர்களும்
துன்பப்பட்டார்கள். இந்தப் பின்புலத்தில் புதிய அரசனின் வருகையை
முன்மொழிகிறார் மீக்கா. இந்தப் புதிய அரசரைப் பற்றிய மிக
முக்கியமான விடயம் என்னவென்றால், இவர் எருசலேமிலிருந்து வரமாட்டார்.
மாறாக, எருசலேமிற்கு வெளியே இருந்து வருவார். எருசலேமிலிருந்து
இதுவரை வந்தவர்கள் எல்லாம் மக்களை அடிமைப்படுத்தவும், தங்களைத்
தாங்களே வளர்த்தெடுப்பதிலும் கவனமாக இருந்தனர். மெசியாவை எருசலேமிற்கு
வெளியே பிறக்க வைப்பதால் மீக்கா மெசியா இறைவாக்கையே தலைகீழாக்குகின்றார்:
'எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச்
சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்
போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்.' மேலும், மெசியாவின் முதன்மையான
பணியாக மீக்கா முன்வைப்பது: 'அவர் தம் மந்தையை மேய்ப்பார்.' இதுவரை
இருந்த எருசலேம் மைய அரசர்கள் மந்தையை 'மேய்ந்தார்களே' அன்றி,
மந்தையை 'மேய்க்கவில்லை.' தொடர்ந்து, மெசியாவின் ஆட்சியின் அடையாளமாக
'அமைதியை' மீக்கா முன்வைக்கின்றார்.
இன்றைய முதல் வாசகத்தை மொத்தமாகப் பார்த்தால், இங்கே
பேசுபொருளாக இருப்பவர்கள் இருவர்: இங்கே பேசுபொருளாக இருப்பவர்கள்
இருவர்: ஒன்று, அரசன், இரண்டு, மக்கள். 'சிறிய இடத்திலிருந்து
பெரிய அரசன் எழுவான்' - 'மக்கள் தங்கள் நாடு திரும்புவார்கள்'
- 'அரசன் தன் மந்தையை ஆயரென மேய்ப்பார்' - 'மக்கள் பாதுகாப்பாக
இருப்பார்கள்' - 'அரசனே அமைதி. ஆக, 'அரசன்-மக்கள்-அரசன்-மக்கள்-அரசன்'
என்று ஸ்பைரல் படிக்கட்டு போல தன் பாடத்தை எழுதியிருக்கிறார்
மீக்கா.
நாம் இன்று வாசிக்கும் இந்த இறைவாக்குப் பகுதியைத்தான், ஞானியர்
ஏரோதிடம் சென்று, 'யூதரின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?'
(காண். மத் 2:2) என்று கேட்டபோது, மறைநூல் அறிஞர்கள் ஏரோதிடம்
வாசித்துக் காட்டுகின்றனர். ஆக, மீக்கா சுட்டிக்காட்டும் தூர
நாட்டு, ஊழி ஊழிக்கால அரசரை இயேசு எனக் கண்டுகொண்ட பெருமை மத்தேயு
நற்செய்தியாளரையே சாரும்.
ஆக, மீக்கா நற்செய்தியை மெசியாவின் பிறப்பு என்னும் தூதாகக்
கொண்டு வந்து, மெசியாவின் பிறப்பு கொண்டுவரும் தலைகீழ் மாற்றத்தின்
தூதுவராகின்றார். இதுவரை கண்டுகொள்ளப்படாதது இனி கண்டுகொள்ளப்படும்
என்பதும், அனைத்தும் இனி ஆண்டவர் பெயரால் செயல்படும் என்பதும்
மீக்கா தரும் ஆறுதலின் நற்செய்தியாக இருக்கின்றது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 10:5-10), எபிரேயருக்கு
எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குருவாக
உருவகித்து, அவர் அனைத்துப் பலிகளையும் விட சிறப்பான பலியைச்
செலுத்தினார் என்று மொழியும் பகுதியில், 'இயேசு மனித உடல் ஏற்ற
நிகழ்வை' இங்கே பதிவு செய்கின்றார். இயேசுவின் மனுவுடல் ஏற்றல்
இங்கே நற்செய்தியாக அறிவிக்கப்படுகிறது. 'உமது திருவுளத்தை
நிறைவேற்ற இதோ வருகின்றேன்' என்பது மட்டுமே இயேசுவின் அடிநாதமாக
இருக்கின்றது. இதுவே இயேசுவை நற்செய்தியாக மாற்றுகிறது. நற்செய்தியின்
தூதுவராக வந்த அவர் இறைத்திருவுளத்திற்குப் பணிந்திருப்பதையே
மீட்பின் கருவியாக மாற்றினார்.
பலிகள் மற்றும் எரிபலிகள் பற்றிய புரிதல் முதல் ஏற்பாட்டில் 'அடையாளம்'
என்று தொடங்கி, 'அபத்தம்' என்று கடந்து போவதாக இருக்கிறது. அதாவது,
லேவியர் நூல் மற்றும் இணைச்சட்ட நூலில் சொல்லப்படும் பலிகள் மற்றும்
அதற்கான முறைமைகள், இறைவாக்கினர்களின் காலத்திற்கு வரும்போது
தலைகீழாக மாறுகிறது. சீனாய் மலையில் 'பலிகள்' பற்றி விளக்கம்
தரும் இறைவன், பிற்காலத்தில் 'உங்கள் பலிகளா நான் விரும்புபவை?'
என்று சாடுகின்றார். பலிகளைப் பற்றிக்கொண்ட மக்கள் இறைவனையும்,
அயலாரையும் கண்டுகொள்ளாததே இந்த இறையியல் மாற்றத்திற்கான அடிப்படைக்
காரணம். இத்திருமடல் எழுதப்பட்ட காலத்தில் எருசலேம் ஆலயம் அழிக்கப்பட்டிருக்கலாம்.
இருந்தாலும், பலி செலுத்துதல் மக்கள் மனதில் நீங்கா இடம்
பெற்றிருந்தது. இயேசுவின் உடல் ஏற்றலின் சிறப்பு என்னவென்றால்,
அவரின் இந்த ஏற்பு மானிடரின் அனைத்து தரகுகள் மற்றும் பிரதிநிதிகளை
அழிக்கின்றது.
ஆக, ஒரு பக்கம் இயேசுவின் மனுவுரு ஏற்றலை எபிரேயருக்கு எழுதப்பட்ட
திருமடலின் ஆசிரியர் நற்செய்தியாக அறிவித்தாலும், இன்னொரு பக்கம்
இயேசுவே நற்செய்தியாக, இறைத்திருவுளம் நிறைவேற்றுவதையே நற்செய்தியின்
தூதுரையாக, தூதுரைக்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 1:39-45) மரியா எலிசபெத்தைச்
சந்தித்த நிகழ்வைப் பதிவுசெய்கிறது. இவ்விரண்டு தாய்மார்களும்
ஒருவர் மற்றவருக்கான நற்செய்தியின் தூதுவர்களாக மாறுகின்றனர்.
இந்த நிகழ்வு நடைபெறும் இடம் மலைநாட்டில் இருக்கும் ஒரு வீடு.
பங்கேற்போர் இரண்டு பெண்களும், அவர்களின் வயிற்றில் இருக்கும்
இரண்டு குழந்தைகளும். ஓடி வந்த பெண்ணின் வயது 14லிருந்து
18க்குள் இருக்கும். தங்கியிருந்த பெண்ணின் வயது 60க்கு மேல்
இருக்கும். ஒரு சிக்ஸ்டீனும், ஒரு சிக்ஸ்டியும் சந்திக்கும் நிகழ்வு
என்றும் சொல்லலாம். ஒருவர் மட்டுமே பேசுகின்றார். மற்றவர் அப்படியே
மலைபோல மௌனம் காக்கிறார். எலிசபெத்தை அதிக வால்யூமில் வைத்து,
மரியாவை ம்யூட் ஆக்கிவிட்டார் நற்செய்தியாளர்.
கபிரியேல் தூதர் மங்கள வார்த்தை சொல்லி முடித்து மறைந்தவுடன்,
வீட்டைப் பூட்டியும், பூட்டாமலும் விட்டு, தன் உறவினர் எலிசபெத்தை
தேடி ஓடுகிறார் மரியா. வானதூதர் சொன்ன 'எலிசபெத்து' அறிகுறி சரியா
என்று பார்க்க ஓடினாரா? அல்லது தான் பெற்ற மகிழ்வை தன் உறவினரோடு
பகிர்ந்து கொள்ள ஓடினாரா? அல்லது கருத்தாங்கியிருக்கும் அந்த
முதிர்கன்னிக்கு கைத்தாங்கலாக இருக்க ஓடினாரா? 'எழுந்தாள். ஓடினாள்.
நுழைந்தாள். கட்டிப்பிடித்தாள்' - என இரண்டு வசனங்களுக்குள் மரியாளின்
நீண்ட பயணத்தை அடக்கி விடுகிறார் லூக்கா. ஒருவர் தன் கையால் அடுத்தவரின்
முழங்கையைப் பிடிப்பதுதான் இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும்
வாழ்த்துமுறை. மரியாள் என்ன வாழ்த்தினார் என்று குறிப்பிடப்படவில்லை.
மரியாவின் பேச்சும் பதிவு செய்யப்படவில்லை. வானதூதரின் நிகழ்வில்
வாய்விட்டு பேசிய மரியா எலிசபெத்தோடு ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
ஆனால் பின் நீண்ட பாடல் ஒன்று பாடுகின்றார். நம் வீட்டிற்குள்
நம் நண்பர் வந்தால் அவருடைய பெயர் அல்லது அவரின் அன்புப் பெயரைச்
சொல்லிக் கொண்டு ஓடுவோம். ஆனால், வானதூதரும் முதலில் மரியாளின்
பெயரைச் சொல்லவில்லை. எலிசபெத்தும் சொல்லவில்லை. வானதூதர், 'அருள்மிகப்பெற்றவரே'
என்கிறார். எலிசபெத்து, 'பெண்களுக்குள் புகழப்பெற்றவர்' என்கிறார்.
இந்த இரண்டுமே காரணப்பெயர்கள்தாம்.
'குழந்தை துள்ளியது'. விவிலிய ஆசிரியர் கதைகளைப் பதிவு
செய்யும்போது தனக்கு எல்லாம் தெரிந்ததுபோல எழுதுவர். அதற்கு ஒரு
உதாரணம்தான் இது. லூக்கா மருத்துவராக இருந்ததால், கர்ப்பம் தரித்த
பெண்களில் நிகழும் உடல் மாற்றங்கள் அவருக்குத் தெரியும். ஆக,
இயல்பாக நடந்திருக்கும் ஒன்றை தானே வயிற்றுக்குள் சென்று
பார்த்ததுபோல இங்கே பதிவு செய்கின்றார். முதலில் லூக்கா இதைச்
சொல்ல, பின் எலிசபெத்தும் தன் வயிற்றில் குழந்தை துள்ளியதாகக்
குறிப்பிடுகின்றார். 'என் ஆண்டவரின் தாய்' - மரியாளின் வயிற்றுக்குள்
இருக்கும் குழந்தை பற்றி இப்போது எலிசபெத்துக்கு தெரிவதுபோல எழுதுகிறார்
லூக்கா. மரியாளுக்கு வழங்கப்படும் பெயர்களில் எனக்கு மிக அதிகமாக
பிடித்த பெயர் இதுதான். இந்த தலைப்பில் ஆண்டவருக்கும் தனக்குமான
நெருக்கமான உறவை மிக அதிகமாக பதிவு செய்கின்றார் எலிசபெத்து.
முதலில் 'ஆசி பெற்றவர்' என அழைத்தவர், இப்போது 'பேறுபெற்றவர்'
என அழைக்கின்றார். இங்கே மரியாவின் நம்பிக்கைக்கு மணிமகுடம்
சூட்டுகின்றார் எலிசபெத்து.
மரியாள் எலிசபெத்தை சந்திக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
வாசகருக்கு வானதூதரின் வாக்கு பொய்யோ என்ற சந்தேகம் வந்திருக்கும்.
முதலில் சக்கரியா பற்றி பதிவு செய்யும் லூக்கா, தொடர்ந்து மரியா,
பின் எலிசபெத்து என ஒவ்வொரு கட்டமாக காட்சிகளை நகர்த்துகின்றார்.
மேலும், மரியாவை மூன்று மாதங்கள் எலிசபெத்தின் வீட்டில் தங்கச்
செய்கின்றார். ஏற்கனவே இப்போது ஆறு மாதம். இன்னும் மூன்று மாதங்கள்.
ஆக, மரியாள் வீட்டை விட்டு நீங்கும்போது, எலிசபெத்துக்கு
பேறுகாலம் வரும். மூன்று மாதங்கள் உடனிருந்த மரியாள் பேறுகாலத்திலும்
உடனிருந்திருக்கலாமே? எதற்காக மரியாவை வெளியேற்றுகிறார்
லூக்கா? மரியா அங்கே இருந்தால், திருமுழுக்கு யோவானின் பிறப்பும்,
அதன் முக்கியத்துவமும் தெரியாமல் போய்விடும். பிறந்திருக்கும்
யோவான் மெசியாவா, அல்லது கருவிலிருக்கும் இயேசு மெசியாவா என்ற
குழப்பம் வரும். அந்தக் குழப்பத்தை மிக இன்டலிஜென்ட்டாகத் தவிர்க்கின்றார்
லூக்கா. மரியாளும், எலிசபெத்தும் ஒருவருக்கொருவர் சாட்சிகளாக
இருக்கின்றனர்.
ஆக, மரியாளும் எலிசபெத்தும் ஒருவரை ஒருவர் சந்திக்கும், ஒருவருக்கொருவர்
வாழ்த்துக்களைப் பகிரும், ஒருவரேடு ஒருவர் மகிழ்வைப் பகிரும்
நற்செய்தியின் தூதுவர்களாக மாறுகின்றனர்.
இவ்வாறாக, முதல் வாசகத்தில் நற்செய்தி என்பது மெசியாவின் எளிய
பின்புலத்தின் வருகையையும், அவர் தரும் அமைதியையும், இரண்டாம்
வாசகத்தில் நற்செய்தி என்பது இறைத்திருவுளம் நிறைவேற்ற இயேசு
மனுவுடல் ஏற்றதையும் அல்லது மனுவுடல் ஏற்றலே அவரின் இறைத்திருவுளம்
நிறைவேற்றுதலாக இருந்ததையும், மூன்றாம் வாசகத்தில் நற்செய்தி
என்பது கருவில் இருக்கும் ஒரு குழந்தை இறைப் பிரசன்னத்தை உணர்ந்து
துள்ளிக் குதிக்க, அந்தத் துள்ளலில் துள்ளிய இரண்டு பெண்மணிகளின்
மகிழ்வில் இருந்ததையும் பார்க்கிறோம்.
இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் சவால் என்ன?
'கெட்ட செய்திகள் நல்ல செய்திகளைவிட மிக வேகமாகப் பயணம்
செய்கின்றன' என்று சொல்லப்படுவது உண்டு. இன்றைய உலகின் நல்லவை
மற்றும் நல்லவர்களை அனைத்தையும் மறைப்பது போல இன்று கெட்டவை மற்றும்
கெட்டவர்கள் பற்றிய செய்திகளே அதிகம் பேசப்படுகின்றன. 'எவ்வளவு
எடுத்தாலும் போதாது' என்று ஊழல் செய்து, தன்னலம், அநீதி, கண்டுகொள்ளாத்தன்மை
மேலோங்கியிருக்கும் அரசுகள் மற்றும் ஆட்சியாளர்கள் பற்றிய
செய்திகள் நமக்கு கோபத்தை உருவாக்கினாலும், அந்தக் கோபம் நம்
கையறுநிலையில் அடங்கிவிடுகிறது. இயற்கைச் சீற்றம், பேரழிவு
போன்ற செய்திகள் நம் கடவுள் நம்பிக்கையைக் குலைக்கின்றன. மனிதர்களால்
மனிதர்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வன்முறை, கொலை, கொள்ளை
பற்றிய செய்திகள் நம்மில் பயத்தை உண்டாக்குகின்றன. நம் மொபைல்
இன்பாக்ஸ் எழுப்பும் 'டிங்' சப்தம், இமெயில் எழுப்பும் சப்தம்
என நிறைய சப்தங்கள் நமக்கு நெருக்கமானவர்களிடமிருந்து வரும்
செய்திகளை நமக்கு அறிவிக்கின்றன.
இவை எல்லாம் செய்திகளா? கெட்ட செய்திகளா? நற்செய்திகளா?
இவ்வளவு கெட்ட செய்திகளுக்கு நடுவில் நற்செய்தி சாத்தியமா? -
என்றால், சாத்தியமே. எப்படி?
இதற்கான விடை இன்றைய பதிலுரைப் பாடலில் (திபா 80) இருக்கின்றது.
'நாட்டின் புதுவாழ்வுக்காக' மன்றாடும் ஆசிரியர், 'உமது வலக்கை
நட்டுவைத்த கிளையைக் காத்தருளும்!' என வேண்டுதல் செய்து, 'இனி
நாங்கள் உம்மை விட்டு அகலமாட்டோம்' என வாக்குறுதி தருகிறார்.
இறைவனின் அருள்கரம் செயலாற்றும் அனைத்தும் நற்செய்தியே. அவரின்
அருள்கரத்தால் தொடப்பட்டவர்கள் அனைவருமே நற்செய்தியின் தூதுவர்களே.
'நற்செய்தி என்பது திறக்கப்பட்ட வாசனைத் திரவியம் போன்றது. அதை
அதிமாக நாம் பகிரப் பகிர அது நம் கைகளுக்கும் நறுமணம் தரும்'
என்பது ஆப்பிரிக்கப் பழமொழி. தான் பெற்ற இறைவாக்கை மெசியா பற்றிய
நற்செய்தியாக பகர்கிறார் மீக்கா. தன் உடலையே நற்செய்தியாக இறைத்திருவுளத்திற்கு
கையளிக்கிறார் இயேசு. தன் மகிழ்வைப் பகிர தன் உறவினர் இல்லம்
நோக்கி ஓடுகிறார் மரியா. அவரைக் கட்டியணைத்து வாழ்த்துகிறார்
எலிசபெத்து. அவரின் வயிற்றிலிருந்த குட்டிக் குழந்தை அக்களிக்கிறது.
இவை அனைத்திலும் இறைவனின் கரம் இருந்தது. அவரின் கரத்திலிருந்து
வரும் நறுமணத் தைலம் நம் கைகளையும், நாம் தொடும் கைகளையும் மணக்கச்
செய்கிறது.
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Faculty Member
Saint Paul's Seminary
Tiruchirappalli - 620 001
|
|