• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மங்கள வார்த்தைகள்

பாவிகளாகிய எங்களுக்காக


எளிய பெண்மணியாகிய மரியா தம்மை இறைவனின் அடிமையெனத் தாழ்த்தியபோது இறைவனின் இடம்வரை உயர்த்தப்பட்டார். அவரின் தாயாகும் அளவுக்கு பேறுடையாள் ஆனார். அன்னை மரியா இவ்வளவுக்கு எட்டாத உயரத்தில் ஏற்றிவைக்கப்பட்டிருப்பதைக் காணும் நாம், நம்முடைய நிலையை உணர்கிறோம். பாவிகளாகிய எங்களுக்காக வேண்டிக்கொள்ளுமென பதிலுரைக்கிறோம். இப்பதிலைச் சொல்லி நம்மை நாம் தாழ்த்தும் பொழுது இறைமாட்சி நமக்கு வெளிப்படுகிறது. இறையருளைப் பெற்ற நாம் சிறிது உயர்த்தப்படுகிறோம். இதுபோன்று ஒவ்வொரு முறையும் நம்மை நாம் தாழ்த்தும் தருணத்தில் ஆன்மீக வாழ்வில் ஒவ்வொரு மேலே ஏறிச்செல்கிறோம். நிறையொளியை நோக்கி நடை போடுகிறோம்.

நிறையொளி மனதினில் ஒளிரும்பொழுது மனிதன் தன் தாழ்மையை நன்கு உணர்ந்து தன்னுள்ளிருந்து தோன்றும் இயல்பான பதிலை வெளியிடுகின்றான். "நானே உலகின் ஒளி; என்னைப் பின் செல்பவன் இருளில் நடவான்; உயிரின் ஒளியைக் கொண்டிருப்பான்" (அரு. 8:12) என்றார் இயேசு. மனிதரின் ஒளியான இயேசு இருளில் உலாவும் மனிதனில் ஒளிர்ந்தார் (அரு. 1:4) பிரகாசிக்கும் இயற்கை யொளியில் ஒன்றும் மறைவாய் இருக்க முடியாததுபோல இருள்படர்ந்த மனிதனின் விண்ணொளி கூர்வீசி ஒளிரும் பொழுது அவன் தன் உண்மை நிலையைக் கண்ணுறுகின்றான். உணர்ந்த உண்மையை உணர்ந்தவாறு அடியவன், ஊழியன், அடிமை, பாவியென அறிக்கையிடுகின்றான்.

இந்த அறிக்கை உண்மையை உரைப்பதால் அங்கு உண்மையான தாழ்ச்சி நிலவுகிறது. உண்மையை உள்ளபடியே ஏற்றுக்  கொள்வதில்தான் உண்மையான தாழ்ச்சி வெளிப்படுகிறது. உண்மையில் மனிதன் அடிமைதான். சுதந்திரப் பறவையாக விரும்பியதையெல்லாம் அடைய முடியாதபோது அவன் அடிமையின் அன
ுபவத்தை பெறுகிறான். இது உண்மையின் சூழ்நிலையில் அமைந்திருப்பதால் இதை நாம் தாழ்ச்சி என்றுரைக்கிறோம்.

மிகுந்த தாழ்ச்சி உடையவர்களே ஒளியைப் பெற்றுக் கொள்கின்றனர். ஒளி கானானேயப் பெண்ணின் மேல் பிரகாசிக்கிறது. அந்த ஒளியை அடையவேண்டுமென முயற்சிக்கிறாள். முயற்சியில் பல தோல்விகளைச் சந்திக்கின்றாள். முட்டுக்கட்டைகளை ஒவ்வொன்றாக விலக்கிக் கொண்டு முன்னேறுகிறாள். கடைசியாக மிகப்பெரிய தடை, பிள்ளைகளின் உணவை நாய்களுக்குப் போடுதல் நன்றன்று என்று ஆண்டவர் கூறியது. மேசையிலிருந்து விழும் துண்டுகளை நாய்கள் உண்ணும் என்றுரைத்து அந்த அம்மா பெரும் தடையையும் வெற்றி கொள்கின்றாள். எவ்வளவுக்கு தாழ்த்த முடியுமோ அவ்வளவுக்குத் தாழ்த்தி ஒளியைப் பெற்றுக் கொள்கின்றாள் (மத். 15:21-28; மாற் 7:24-30.)

தாழ்ச்சியின் வழி பெற்றுக் கொண்ட மாட்சியான ஒளி மனிதனை மெல்ல மெல்ல ஆட்கொள்ளுகையில் மனிதன் மேலும் தாழ்த்துகின்றான். ஒளியைப் பெற தான் தகுதியற்றவன் என்பதை இயல்பாக ஒப்புக்கொள்கின்றான். நூற்றுவர் தலைவன் தன் ஊழியனின் இருள் போக்க அருளொளியின் பாதையைக் கேட்டறிகிறான். அந்தப் பாதையில் அருளை அடைவேன் என்ற நம்பிக்கையில் முனைந்து செல்கின்றான். ஒளியின் திறனில் தன்னுடைய இப்போதைய நிலையையும் தான் பின்னால் அடையப்போகும் ஒளியின் மேன்மையையும் சீர்தூக்கிப் பார்க்கின்றான். ஒளியின் ஊற்றாகிய ஆண்டவரிடம் நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன் என்கிறான். தூய ஒளியைத் துய்த்துணரும் எந்த மனிதரிடமும் உதிக்கும் உளப்பாங்கு இது. (மத். 8:5-13, மாற் 7:1-10, அரு. 4:43-54).

தகுதியற்றவன் என்று தாழ்த்துகையில் மேலும் ஒளி வந்தடைகிறது. அந்த வேளையில் ஒளி அவனை இன்னொரு உயரத்துக்கு அழைத்துச் செல்கிறது. அருளே வடிவான ஆண்டவரை சக்கேயு சந்திக்கின்றார். ஒளியின்பால் தனக்கிருக்கும் ஆர்வத்தை வெளியிடுகின்றார். நீதியின் ஒளி அவரை ஒளிர்விக்கிறது. இந்த ஒளியில் அவர்தம் பழைய பாவநிலை தெளிவாகத் தெரிகிறது. அநீத செல்வத்தைக் கொண்டு நண்பரைத் தேடிக்கொள்ள வேண்டும். இவரோ தம் செல்வத்தில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கின்றார். பிறருடைய பொருளைக் கவர்ந்திருந்தால் நான்கு மடங்கு திருப்பிக் கொடுக்கிறேன் என்றார். அக இருளகற்றி அருளொளி ஏற்றும் பொழுதும் தன் உடமையெல்லாம் துறக்கும் மனநிலை உருவாகின்றது. (லூக். 9:1-10)

எந்த அளவுக்கு துறக்கும் நிலை உருவாகிறதென்றால் எல்லாவற்றைவும் விட்டுவிட்டு வாழ்வும் வழியும் உண்மையுமான (அரு:14:11) இயேசுவைப் பின்பற்றத் தூண்டுகிறது. புனித இராயப்பர் தன்னுடைய தொழிலில் முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். ஒளியான இயேசுவைச் சந்திக்கின்றார். ஒளி அவரை ஆட்கொள்கின்றது. ஒளியான இயேசுவைப் பின்பற்றுமாறு அழைப்பு வருகின்றது. வீடு வாசல், மனைவி மக்கள், சொத்து சுகம் யாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றுகின்றார்.  ஒளியைத் தேடவும், ஒளியால் நிரப்பப்படவும், ஒளியைப் பரப்பவும் வாழ்வை முற்றிலும்  ஒளியால் அர்ப்பணிக்கின்றார் (லூக். 5:1-11.)

அர்ப்பண வாழ்வைத் துவக்குபவர் அவ்வாழ்வை மேலும் ஆழப்படுத்த முயல்வர். மேலும் ஒளியைப் பெற செபவாழ்வே சிறந்ததெனத் தெரிய வருகின்றனர். எப்பொழுதும் செபியுங்கள் என்ற கனித சின்னப்பரின் பரிந்துரை நினைவுக்கு வருகிறது. அதன்படி வாழ்வையே செபமாக மாற்றுகின்றனர். தாழ்ச்சி நிறைந்த வாழ்வே சிறந்த செப வாழ்வெனக் கண்டறிகின்றனர். ஆயக்காரன் உவமையில் ஆயக்காரர் இதை அறிவார். அதனால் அவர் ஆலயத்திற்குள் நுழையாமல் தொலைவில் நிற்கின்றார். கண்களை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. மார்பிலே பிழையறைந்து கொண்டார். பாவி என் மேல் இரக்கம் வையுமென வேண்டுகிறார் (லூக் 18:31-34) இவரே சிறந்த செப வாழ்வு வாழ்கிறவரென இயேசுவே பாராட்டுகின்றார்.

செபத்தின் மூலம் சிறுபிள்ளைபோல இறைவனை அணுகிச் செல்பவர்களுக்கே இறைவன் மாபெரும் மறையுண்மைகளை வெளிப்படுத்துகின்றார். ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் மறைக்கப்பட்ட மறையுண்மை சிறுவர்களாகிய அப்போஸ்தலருக்கே வெளியிடப்பட்டது (மத். 11:25-27, லூக் 10:21.) அழைப்பு கிடைத்தற்குரியது என்று கருதியவர் புனித சின்னப்பர். அதிலே வேரூன்றியிருந்தார் (கொலோ 2:7.) செபத்தின் வழி அருளொளியின் பீத்தை அணுகிச் செல்கின்றார். அதை அணுக அணுக அறிய முடியாத மறையுண்மைகளை, குறிப்பாக உயிர்ப்பை நன்கு தெரிந்தார். இவ்வாறு மிகப்பெரிய உண்மைகளைத் தெரியும் பேறு பெற்றவுடன், தான் மிகச் சிறியவன் காலந்தப்பிய பிறவி (1கொரி 15:8-9) எனத் தன்னைத் தாழ்த்துகின்றார்.

திருமறையின் அரிய உண்மைகளைச் செபத்தில் அறிபவர்கள் தவத்திற்கு இயல்பாக ஈர்த்துச் செல்லப்படுகிறார்கள். ஸ்நாபக அருளப்பர் முற்றிலும் ஒளியால் ஆட்கொள்ளப்பட, கடும் தவம் புரிந்தார். தவத்திற்கேற்ப வெட்டுக்கிளியையும் காட்டுத் தேனையும் உண்கின்றார். ஒட்டக முடியிலான உடையை அணிந்திருக்கின்றார். பாலைவனத்தில் குடியிருக்கின்றார். செபத்தில் ஏற்றிய ஒளி தவத்தில் அதிகரிக்கின்றது. அவர் படிப்படியாகத் தளர்கின்றார். ஒளியான இயேசு அவரில் வளர்கின்றார், நிறைகின்றார் (அரு. 3:30.) இந்த உயரிய நிலையில் அவருடைய மிதியடிவாரை அவிழ்க்க "நான் தகுதியற்றவன்" என்றார் (மாற் 1:7.) ஊனுருகி உள்ளொளி பெருகும் வேளையில் இயல்பாகத் தோன்றும் பதிலிது.

தவத்தைப் பேணி ஒளியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டவர்கள் அந்த ஒளியிலே சங்கமிக்க விரும்புவர். வாழ்வு ஒரு தேடலென படிப்பிப்பவர் சிமியோன். ஒளி வாழ்வைத் தேடிக் கொண்டே தன் வாழ்நாளெல்லாம் கழித்தவர். உள்ளொளி பெருக்க காலமெல்லாம் காத்துக் கிடப்பதில் தனி இன்பம் கண்டவர். எதிர்நோக்கிய ஒளி எதிர்பார்த்தபடியே ஆலயம் வந்தது. ஆவியின் தூண்டுதலினால் இனங்கண்டு கொண்டு மெய் மறந்து பாடுகின்றார். ஒளியை என் கண்கள் கண்டு கொண்டன. இது புற இனத்தாருக்கு இருளகற்றும் ஒளி. இஸ்ராயேலை ஒளிர்விக்கும் மாட்சிமையெனப் பாடியபின் உம் அடியானை அமைதியாகப் போகவிடும் என்று தன் ஆவலை வெளிப்படுத்துகின்றார். நிறையொளியின் முன் மேலும் தாழ்த்தி அவ்வொளியிலே சங்கமிப்பதே அடியவரின் இயல்பு.

ஆண்டவர் இயேசுவும் ஒரு பக்தன். அவரும் இதே பக்திநெறியைக் கடைப்பிடித்துள்ளார். அடியவர்களுக்கெல்லாம் அடியவராகத் தம்மை ஆக்கிக் கொண்ட அவர் அனைவருக்கும் பக்தி நெறியின் மாதிரி காட்டியுள்ளார். அவருடைய பயபக்தியை முன்னிட்டு இறைவன் அவருக்குச் செவி சாய்த்தார் (எபி 5:7) எனச் சொல்லப்படுகிறது. தன்னுடைய பக்தியை பணிவிடை புரிவதிலும் பலருடைய மீட்புக்குத் தன்னைக் (மாற் 10:45) கையளிப்பதிலும் விளக்கியுள்ளார். பணியின் வழி ஒளிபெற்ற அவரது உடல் மோயீசனின் உடலைவிட மேலாகக் கதிர்வீசி பிரகாசித்தது. அவர் எவ்வாறு தன்னைத் தாழ்த்தி ஒளியில் மிளிர்ந்தாரென்பதைப் புனித சின்னப்பர் கூறுகிறார்:

"கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை, விடாது பற்றிக்கொண்டிருக்க  வேண்டியதொன்றாகக் கருதவில்லை.  ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வாழ்வை ஏற்று மனிதருக்கு ஒப்பானார், மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர் மண்ணவர் கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர். தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக இயேசுக் கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்" (பிலி 2:6-11.) படிப்படியாக தாழ்த்திய இயேசு ஒளிமயமானார். உலகுக்கே ஒளி கொடுக்கும் ஒளிப்பிழம்பானார். இளஞ்ஞாயிறுபோல அனைவருக்கும் ஒளியூட்டுபவரானார்.

இந்த ஒளியை முதன் முதலில் பெற்றவர் கன்னிமரியா. இயேசுவின் பாதையில் நடந்து சிறிது சிறிதாகத் தன்னைத் தாழ்த்துகிறார். இறைவனுக்காக எல்லாவற்றையும் துறக்கிறார். வெறுமையாகுவதே வாழ்வெனக் கருதினார். இறை வார்த்தையைச் சிந்திப்பதிலும் தியானிப்பதிலும் செபிப்பதிலும் தவம் செய்வதிலும் தம் வாழ்வைச் செலவிட்டார். அழைத்தலுக்குப் பிரமாணிக்கமாயிருந்து அறிய இயலாத மறையுண்மைகளை அறிந்து இறைவனில் ஒன்றிப்பதே தன் இன்ப வாழ்வெனக் கருதினார். வாழ்ந்தாலும் இறந்தாலும் ஆண்டவருக்கே என்ற நோக்குடன் வாழ்ந்து ஒளியில் வளர்ந்து அருளில் நிறைந்து நீங்காப் பேரானந்தம் பெற்றார்.

அந்த பேரானந்தத்தைப் பெறவும், பக்தி நெறியில் வளரவும், அன்னையின் கரம் பற்றி வழி நடக்கவும் செபமாலை செபிக்கின்றோம்.  அருள்நிறை செபத்தில் பாவிகளாகிய எங்களுக்காகவேண்டிக்கொள்ளும் என ஒவ்வொரு முறை செபிக்கும்போதும் நம்மை நாம் தாழ்த்துகிறோம். ஒவ்வொரு தாழ்ச்சியும் அருள் வாழ்வில் ஒவ்வொரு படி நம்மை உயர்த்துகிறது. நாம் தவத்திலும் செபத்திலும் வளர்ந்து மறையுண்மைகளைத் தெரிந்து தெளிந்து ஒளியான இயேசுவில் ஒன்றிக்கின்றோம். இவ்வாறு செபமாலையில் நம்மை நாம் தாழ்த்தி அகஇருள் அகற்றி அருள் ஒளி ஏற்றி வைக்கிறோம். உலகிற்கு ஒளியாகத் திகழ்கிறோம் (மத் 5:14.) ஒளியான இயேசுவும் மரியாவும் நம்முடனே உறைகின்றனர்.
          

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்