ஆமென்
"அருள் நிறைமரியே" செபத்தின் முடிவில் வரும் சொல் "ஆமென். இதுவே ஒவ்வொரு செபத்தின் முடிவிலும் உச்சரிக்கப்படுகிறது. திரித்துவப் புகழுரையின் முடிவிலும் ஏனைய எல்லாச் செபங்களின் முடிவிலும் இச்சொல்லைக் காணலாம். இதன் சொற்பொருள், இயற்பொருள், பயன்பொருள் யாவற்றையும் நிரல் படுத்துவோம். ஆங்கில அகராதியில் இச்சொல்லிற்கு ஆம், ஆமா, அப்படியே ஆகட்டும் என்று பொருள். நம் பேச்சு வழக்கில் இதை அப்படியே, ஆமா அப்படித்தான். சரி, சரி, நீங்கள் சொன்னபடியே, உங்கள் கூற்றுப்படியே என்று பொருள் கொள்ளலாம். எபிரேயச் சொல்லுக்கு உண்மை, உறுதி, பிரமாணிக்கம், நாணயம், வாக்கு நாணயம் நேரிய நடத்தை, மாறாத் தன்மை, பிறழாதிருத்தல், உறுதியாயிருத்தல் எனப் பல வகையில் பொருள் கொள்ளலாம். இச்சொல் "ஏமெத்" என்ற மூலச் சொல்லிலிருந்து பிறக்கிறது. ஏமெத் என்ற சொல்லை கெசட் என்ற மற்றொரு எபிரேயச் சொல்லுடன் இணைத்துப் பொருள் கொள்ளவேண்டும். வாக்கு மாறாத தன்மையினால் இறைவன் தம் மக்களை இறுதி வரை நேசித்தார். இந்த நேசத்தினால் அவர் பிரமாணிக்கம் தவறாதவர் என்றழைக்கப்பட்டார். இவ்விரு சொற்களும் ஒன்றையொன்று தழுவியவை; ஏனெனில் ஒன்றை மற்றொன்று நிறைவு செய்கிறது. விசுவசிப்பதால் நேசமும் நேசத்தால் விசுவாசமும் வளர்கிறது. இவ்வுண்மையை தெளிவுபடுத்துகின்றார் ஒசே இறைவாக்கினர். "இஸ்ராயேல் குழந்தையாய் இருந்தபோது அவன் மேல் அன்பு கூர்ந்தோம். எகிப்திலிருந்து என் மகனை அழைத்தோம்... எப்பிராயிமுக்கு நடை பயிற்றுவித்தவர் நாம்தாம். அவர்களைக் கையிலேந்தி நாம் சீராட்டினோம். பரிவு என்னும் கயிற்றால் அவர்களைப் பிணைத்து அன்புக் கயிற்றால் கட்டி நடத்தி வந்தோம். ஆனால் நம் மக்கள் நம்மைவிட்டு விலகிப் போவதிலேயே கருத்தாய் இருக்கிறார்கள். எபிராயிமே உன்னை நாம் எப்படி கைநெகிழ்வோம்? இஸ்ராயேலே உன்னை எப்படிக் கைவிடுவோம்?" (ஓசே 11:1-11) என தம் பிரமாணிக்க அன்பினை வெளிப்படுத்தினார். இந்த மேற்கோளில் இறைவன் இஸ்ராயேலை எவ்வளவு நேசித்தார் என அறிய முடிகிறது. இஸ்ராயேல் பதிலாக இறைவனை நேசித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அன்பு செலுத்தாமல் பாவத்தையே செய்து நன்றியில்லா மக்கள் எனப் பெயர் பெற்றனர். அந்த நிலையிலும் இறைவன் அவர்களைக் கைவிடவில்லை. ஏனெனில் மனிதன் போன்று பதிலுக்குப் பதில் செய்யாமல் இறைவன் தனித்தன்மையுடன் இடைவிடாது அவர்களை ஆதரித்து வந்தார். இந்த ஆதரவிலே இறைவனின் பிரமாணிக்க அன்பைக் காண்பித்தார். இந்த பிரமாணிக்க அன்பிலே அவருடைய மறைவான திட்டம் வெளிப்படுகிறது. கிறிஸ்துவை நமக்குள் வாழ வைத்தலே அத்திட்டம். அவரே ஒவ்வொருவரையும் நிறைவுள்ளவராக்க, அத்திட்டத்தை வெற்றி பெறச் செய்ய அறிவு புகட்டும் திட்டம் (கலா.1:26-28) இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தந்தை தம் ஒரே மகனாகிய இயேசுவையே இவ்வுலகிற்கு அனுப்பினார். அவரும் இறைத் திருவுளத்திற்கேற்ப இப்பணியை நிறைவேற்ற 'இதோ வருகிறேன்' (எபி 10:7) என்றார். தந்தையின் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற உவப்புடன் முன் வந்து எல்லாவற்றிற்கும் எல்லா இடத்திலும் எல்லா நன்மைக்கும் ஆம் என்றே பதிலளித்தார். தந்தையின் வாக்குறுதிகள் யாவற்றுக்கும் ஆமென்பதை அன்றி வேறொன்றையும் அறியார் (IIகொரி 1:19-20) இதைவிட மேலாக அவருடைய வாழ்க்கை முழுவதுமே ஆம் மயமாகிய ஆமென் என்று அழைக்கப்படும் பேறுபெற்றார் (தி.வெ.3:14) இயேசுவின் பெயரான ஆமென் மனிதரின் வாழ்வானது. இயேசுவே வழியும் வாய்மையும் (அரு. 14:7.) அவரிடமே இளைப்பாற்றி உள்ளது. வமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லோரும் என்னிடம் வாருங்கள்; உங்களை நான் இளைப்பாற்றுவேன்" (மத் 11:28) அவரிடமே பசி நீங்கும், தாகம் தணியும். "என்னிடம் வருகிறவனுக்குப் பசியே இராது. என்னில் விசுவாசம் கொள்கிறவனுக்கு என்றுமே தாகம் இராது" (அரு. 6:35.) அவரே முடிவில்லா வாழ்வு. "என் தசையைத் தின்று என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான்" (அரு.6:54) இயேசுவிடமே வாழ்வு உள்ளதால் வாழ விரும்புகின்றவர்கள் அவருடைய வாழ்வையே தம்முடைய வாழ்வாக்க வேண்டும். இவ்வுலகில் வாழ்வென்ற இலக்கணத்திற்கேற்ப வாழ வேண்டுமாயின் அவர்கள் இயேசுவின் வாழ்வையே தம்மில் மலரச் செய்ய வேண்டும். கிறிஸ்தவருக்கு நல்வாழ்வு வாழ அறிவு புகட்டுகின்ற புனித சின்னப்பர் தன்னுடைய மாதிரியைப் பின்பற்றுமாறு அழைக்கின்றார் (பிலி 3:17.) மேலும் அவர் அதற்கான காரணத்தையும் எடுத்துரைக்கின்றார். "நான் கிறிஸ்துவைப் போல் நடக்கிறவாறே நீங்களும் என்னைப்போல் நடந்து கொள்ளுங்கள்" (Iகொரி 11:1) எனப் பணிக்கும் புனித சின்னப்பர் இயேசுவையே தான் வாழ்வதாகச் சான்று பகர்கின்றார். இனி வாழ்பவன் நானல்ல. என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே (கலா. 2:20.) புனித சின்னப்பரின் இந்தக் கூற்று ஆமென் என்ற இயேசுவின் வாழ்வை நாம் வாழ வேண்டுமெனத் திட்டவட்டமாகக் கூறுகிறது. மனுக்குலத்தில் முதன் முதலில் ஆண்டவர் இயேசுவின் ஆமென் எனச் சொன்னவர் புனித கன்னிமரியா. மீட்பின் திட்டத்திற்குத் துணை நிற்க வேண்டுமெனக் கேட்டபொழுது ஆமென் என்றார் (லூக் 1:38) குழந்தையின் உயிரைக் காக்க எகிப்துக்கு ஓட வேண்டும் (மத் 2:13-18) பாஸ்கா விழாவிற்கு எருசலேம் செல்ல வேண்டும் (லூக் 2:29-52.) திருமண விழாவிற்கு கானாவூர் செல்ல வேண்டும் (அரு.2:1-11.) இவற்றிற்கெல்லாம் அவருடைய ஒரே பதில் ஆமென். ஆமென் இறுதியாகக் கல்வாரி அழைத்தது. அங்கேயும் அதே சொல்லை உச்சரித்துத் தன் வாழ்வு முழுவதையுமே கிறிஸ்துவின் மயமாக்கியவர் கன்னிமரியா. இன்று நாம் கொண்டாடும் திருப்பலி அன்னை மரியாவின் ஆமென். மங்கள வார்த்தையின்போது வார்த்தையானவருடன் அவர் உரைத்த ஆமென். எல்லா மனிதர்களும் இறைவனுக்கு உகந்த உவப்பு அளிக்கும் காணிக்கை செலுத்த ஆசிக்கின்றனர். அவர்கள் எவ்வளவு சிறந்த காணிக்கை செலுத்தினாலும் ஏற்கப்பட்டுவிட்டது என்பதற்கு உறுதியில்லை. ஆனால் அன்னையும் ஆண்டவர் இயேசுவும் ஆமென் என்று வாழ்வையே உகந்த ஏற்புடைய காணிக்கையாக செலுத்தியதே இத்திருப்பலி. எந்தக் காணிக்கையும் ஏற்பு அடைய இந்தப் பலியுடன் ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும். எனவே நம்முடைய காணிக்கைகளை அன்னையோடு ஆண்டவர் இயேசுவின் பலியுடன் ஒப்புக்கொடுக்கும்பொழுது அது ஏற்புடைய பலியென உறுதியாய் நம்பலாம். ஏனெனில் இவ்வாறு செய்யும்பொழுது அன்னை நம் ஆண்டவர் வாழ்வின் ஆமென் என நம்முடைய ஆமெனாக மாற்றுகின்றார். ஆமென் என தந்தைக்குப் புகழ் உரைப்பதே நம் வாழ்வு. நாம் எவ்வளவு அழகாக இனிமை ததும்பப் புகழ்ந்தாலும் அதன் பயன் நமக்குப் புலப்படுவதில்லை. ஆனால் ஆண்டவர் இயேசு ஆமென் என்று ஏற்புடை புகழை அர்ப்பணித்துள்ளார். இன்றும் அவரே நம்மில் இறைவனைப் புகழ்கின்றார். அவருடன் நாம் ஆமென் என்கிறபொழுது அந்தப் புகழை நம்முடைய புகழாகச் செலுத்துகின்றோம். எனவே ஆண்டவர் இயேசு நம் சார்பில் தந்தைக்குச் செலுத்தும் புகழை ஆமோதிக்கும் வண்ணம் ஆமென் ஆமென் என்று சொல்கிறோம். (உரோ 1:25; 9:5; 11:36; 16:27; கலா 1:5; பிலி 4:20; Iதிமோ 1:17; 6:16; II தெச 4:18; 1 கொரி 4:11; 5:11). இதுபோன்று ஆசீரும் அருளப்படுகிறது. ஆண்டவர் இயேசுவையன்றி எவரும் ஆசீர் அருள முடியாது. வேறு எவர் ஆசீர்வதித்தாலும் அவர் ஆண்டவர் பெயராலேயே ஆசீர்வதிக்கின்றார். ஆண்டவர் இயேசு ஆசீர் வழங்குவதன் வழியாக நமக்கு அருள் கொடுக்கிறார். எனவே ஆசீர்வதிக்கத் தகுதியுள்ள எவர் ஆசீர்வதித்தாலும் ஆண்டவர் இயேசுவே நம்மை ஆசீர்வதிக்கின்றார். நமக்கு அருள் கொடுக்கின்றார். விண்ணக அணிகலன்களால் அலங்கரிக்கின்றார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் முகமாக ஆமென் என்கிறோம். (மத் 10:11-16; மாற் 6:10-11; லூக் 9:5; 10:5-12). நம்முடைய ஆமென் நம் ஆண்டவருக்கே பணிவிடை செய்கிறோம் என்பதன் வெளிப்பாடு. "உங்களை ஏற்றுக்கொள்கிறவன் என்னை ஏற்றுக்கொள்கிறான். என்னை ஏற்றுக்கொள்கிறவன் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறான். என் சீடர் என்பதற்காக ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறாமல் போகான்" (மத் 10:40-42) என்பதிலிருந்து சீடருக்குச் செய்யும் பணிவிடைகள் ஆண்டவர் இயேசுவுக்குச் செய்யப்படுகின்றன என்பதை நாம் விசுவசித்து ஆமென் சொல்கிறோம். மேலும் செபிக்கும்பொழுது ஆண்டவர் இயேசுவே செபிக்கின்றார் (எபி 5:7). இயேசு ஒருவரே இறைவனுக்கு ஏற்புடைய செபம் ஒப்புக்கொடுக்க இயலும். ஏனெனில் ஆண்டவருடைய செபத்திற்கே இறைவன் இன்முகத்துடன் செவிசாய்க்கின்றார். இன்று எந்தக் குருவானவர் செபித்தாலும் அவரில் ஆண்டவர் இயேசுவே செபிக்கின்றார். அது அந்தக் குருவானவருடைய செபமானாலும் இயேசுவின் செபமாகையால் தந்தையாகிய இறைவன் அதை மிகுந்த கனிவுடன் ஏற்றுக்கொள்கின்றார். அதன் விளைவாக நாம் கேட்பதெல்லாம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை வெளியிடும் முறையில் ஆமென் என்றுரைக்கின்றோம். இது போன்று செபமாலை செபிக்கும்பொழுது அருள் நிறை மரியே செபத்தின் முடிவிலும் இதே ஆமென் சொல்லப்படுகிறது. இங்கு அன்னையின் புகழுக்கும் அவரது வேண்டுதலுக்கும் ஆமென் சொன்னபோது அது கிறிஸ்துவினுடைய செபத்திற்குச் சொல்லப்படும் ஆமென் ஆகும். ஏனெனில் கிறிஸ்துவின் வழியாக செபிக்காத செபமுமில்லை, வழிபடாத வழிபாடுமில்லை; கிறிஸ்துவோடு ஒப்புக் கொடுக்காத திருப்பலியுமில்லை வாழா வாழ்வுமில்லை. இவை அனைத்திலும் அவர் தமது முத்திரையைப் பதித்ததன் அடையாளமாகவே ஆமென் சொல்லியிருக்கின்றார். அவருடைய ஆமென் நம்முடைய வாழ்வின் எல்லா நிலைக்கும் கொண்டு வந்து தந்தையை அன்பு செய்து இறைத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே செபமாலையிலும் ஆமென் சொல்லுகிறோம். முடிவாக செபமாலை இயேசு வழியாக அன்னையோடு நம் வாழ்க்கை முழுவதையும் இறைவனுக்கு இடைவிடாது ஒப்புக்கொடுக்க நாம் சொல்லும் ஆமென் ஆகிறது. ܀܀܀ |