மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும்
மரணத்தைப்பற்றி பலவிதமாக விளக்குவர்: உடலை விட்டு உயிர் பிரிவதை மரணம் என்றழைப்பர். சில மரணங்களை இயற்கை கரணங்களென அழைக்கிறோம். இவர்கள் இவ்வுலகில் எவ்வளவு காலம் வாழ முடியுமோ அவ்வளவு காலம் வாழ்ந்து விட்டு கண் வரை வாழ்ந்தார். ஆபிரகாமை எடுத்துக் கொண்டால் அவர் 120 வயது வரை வாழ்ந்தார். விசுவாச வாழ்வு வாழ்ந்து விசுவாசத்தின் தந்தையெனப் பெயர் பெற்றார். நல்வாழ்வின் மாதிரியாகி நறுமணங் கமழும் தூய பலியானார்; இறைவனடி சேர்ந்தார். இவருக்கு மரணம் வாழ்வின் முடிவில் வருகிறது. அவரும் அதை அமைதியாகத் தழுவுகிறார். சில மரணங்கள் திடீரென ஏற்படுகின்றன. எதிர்பாராதவாறு திடீரென ஏதாவது விபத்து நடக்கிறது. இதில் இத்தகையோர் உயிரிழக்கின்றனர். நோவா கால வெள்ளத்தில் ஏராளமானவர் உயிரிழந்தனர். சில மரணங்கள் மக்கள்மேல் திணிக்கப்படுகின்றன. இவர்களுடைய உடல் சுகத்துடன் இருக்கிறது. அதற்கு இன்னும் பல காலம் வாழும் ஆற்றல் இருக்கிறது. வியாதியுமில்லை, வருத்தமுமில்லை. எவ்வித நெருக்கடி நிலையுமில்லை. அவருடைய வாழ்வும் குறைகளுக்கு அப்பாற்பட்டிருக்கிறது. ஆயினும் ஒரு பிரிவினர் அவர்மீது குற்றங் காண்கின்றனர். அவர்மீது கல்லெறிந்து கொல்கின்றனர். புனித முடியப்பர் இறைவனுக்கு உகந்த வாழ்வு வாழ்கின்றார். ஆனால் ஆடி அடங்கு முன்னே யூதர்கள் அவரைக் கல்லால் எறிந்து கொல்கின்றனர் (அப்.ப. 7:55-60.) சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். யூதாஸ் மாசற்ற இயேசுவைக் காட்டிக் கொடுத்தேனே என்று சொல்லி மனக் கலக்கமுற்றான். மனச்சான்று அவனை வருந்தி வாட்டியது. பாவத்திற்கு மன்னிப்பு இல்லையென அவநம்பிக்கை கொண்டு தற்கொலை செய்து கொண்டான் (மத் 27:5.) இங்கு மரணம் வேண்டுமென்று வருவிக்கப்படுகிறது. சில மரணங்கள் உயர்ந்த இலட்சியத்திற்காக நிறைவேற்றப்படுகின்றன. விசுவாசத்தைக் கைவிட கட்டாயப்படுத்தப்பட்டபொழுது உயிரைக் கொடுத்து தங்களுடைய விசுவாசத்தைக் காத்தனர். வேத சாட்சிகளின் வாழ்வு இறைவனுக்கு உவப்பு அளிக்கும் காணிக்கையாகப் பலியாக்கப்படுகிறது. அதுவும் தியாகத் தீபமெனச் சுடர்விட்டு எரிகிறது. கொழுந்துவிட்டு இடைவிடாது எரியும் தியாகச் சுடருக்கு இவர்கள் தங்களை எரிபொருளாக்குகின்றனர். சிலர் சமுதாய அளவிலே இறந்தவர்கள், சமுதாயத்தில் வாழ்கின்றவர்கள் சமூக சிந்தனை உடையவர்களாக இருத்தல் வேண்டும். இவர்கள் எல்லா நிகழ்வுகளையும் காண்பார்கள். அதற்கேற்ற எதிர் சொல்லையோ பதில் செயலையோ செய்யமாட்டார்கள். இவர்களுடைய மனதினிலே தெளிவான சமூக சிந்தனைகளும் சமூக மனநிலையும் கிடையாது. சரியான முடிவுகளை எடுத்து முறையான ஈடுபாடு கொள்ளும் திறனற்ற பலவீனர்கள். இதன் விளைவாக இவர்கள் சமுதாயத்தைப் புரையோடச் செய்துவிடுவர். இவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்ன பயன் விளையப்போகிறது? எனவே சமுதாயத்திலே இவர்கள் உயிரோடிருப்பவராகக் கருதப்படமாட்டார்கள். விவிலியத்தில் வாக்களிக்கப்பட்ட கானான் தேசத்தில் வசிக்கவில்லையெனில் அவர்கள் இறந்தவர்கள். இப்புண்ணிய பூமியில்தான் யாவே வாழ்கின்றார். இங்குதான் ஆலயமுள்ளது. இந்த ஆலயத்தில் இறைவன் கொடுத்த திருச்சட்டம் கொலு வீற்றிருக்கிறது. இந்தப் பேழை இறைவனின் பிரசன்னத்தை நினைவூட்டுகிறது. இறைச் சட்டத்தின் உறைவிடமான அரசன் இங்கு வாழ்கிறான். இங்கு வாழ்வோரே உயிருள்ளவர். எனவே பாபிலோனில் எருசலேமின் பாடலைப் பாடவில்லை (சங் 137:1-9) திருச்சட்டத்தை கடைப்பிடிக்காதவர்களும் வாழ்வோருடன் வைத்து எண்ணப்படமாட்டார்கள். இறைவார்த்தையான திருச்சட்டம் உயிருள்ளது (எபி 4:12) எதைச் செய்ய அனுப்பப்படுகிறதோ அதை செய்யாமல் அது திரும்புவதில்லை (இசை. 55:11.) இந்த ஆற்றல்மிக்க வார்த்தையாலேதான் மனிதன் உயிர்வாழ்கிறான் (உபா. 8:3.) இந்த வார்த்தை அல்லது திருச்சட்டங்களினாலே ஐந்நூல் நிரம்பியுள்ளது. இதை அவன் கடைப்பிடிக்காவிட்டால் வாழ்வோருடன் வைத்து அவன் எண்ணப்படமாட்டான். இயேசுவை பின் செல்லாதவர்களும் உயிருள்ளவரென மதிக்கப்படுவதில்லை. இயேசுவைப் பின்செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்து தன் சிலுவையை நாள்தோறும் சுமந்து கொண்டு இயேசுவைப் பின்பற்றவேண்டும் (மத் 16:24.) தன் தாய் தந்தையையோ, மனைவி மக்களையோ, நிலபுலன்களையோ தன் உயிரையோ துறக்காவிடில் இயேசுவை பின்பற்ற முடியாது. தனக்கு மரித்து ஆண்டவர் இயேசுவை பின் செல்லாதவர்கள் மரணமானவர்கள் (லூக் 9:60.) சாவான பாவத்தின்பின் ஒப்புரவு அருட்சாதனம் பெறாததால், திருவிருந்திலே பங்கு பெறாதவர்களும் இறந்தவர்களே. அழைக்கப்பட்டவர்களோ அநேகர், தெரிவுசெய்யப்பட்டவர்களோ வெகு சிலர் (மத் 22:14.) அழைக்கப்பட்டவர்கள் வெளியே தள்ளப்படுவார்கள்; ஏனெனில் "கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து விருந்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபுடன் பந்தியமர்வார்கள். அரசுக்குரியவர்களோ வெளியிருளில் தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் (மத் 8:11-12) இன்று இயேசுவின் விருந்தில் தக்க ஆயத்தத்தோடு பங்கு பெறாதவர்கள் இப்பொழுதே தங்களுக்குத் தாங்களே மரணத்தீர்ப்பு இட்டுக் கொள்கின்றனர். "ஆதலால் எவனாவது இந்த அப்பத்தைத் தகுதியின்றி உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால் ஆண்டவருடைய உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறான். ஆகவே, ஒவ்வொருவனும் தன்னுள்ளத்தை ஆய்ந்தறிந்து, அதன் பின்னரே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருகட்டும். ஏனெனில், அது அவர் உடலென்று உணராமல் உண்டு பருகுபவன் தனக்குத் தீர்ப்பையே உண்டு பருகுகிறான். ஆதலால்தான் உங்களிடையே நலிந்தவரும் நோயுற்றவரும் பலர் உள்ளனர்; மற்றும் பலர் இறந்து போகின்றனர். நம்மை நாமே தீர்ப்பிட்டுக்கொண்டால் (பாவசங்கீர்த்தனத்தில்) தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகமாட்டோம்" (கொரி. 11:27-31) என்கிறார் புனித சின்னப்பர். இந்த மரணங்கள் யாவும் ஆதித்தகப்பனாகிய ஆதாமிடமிருந்து உருவானவை. ஒரே மனிதனால் பாவமும் பாவத்தால் சாவும் இந்த உலகில் நுழைந்தது. பாவத்தின் விளைவால் வாழ்வு வழங்க வரவிருக்கும் ஆதாமுக்கு முன்னடையாளம் முதல் ஆதாம். அவர் செய்த குற்றம் எல்லோருக்கும் தன்டனைத் தீர்ப்பை வருவித்தது. "ஏனெனில் பாவம் கொடுக்கும் கூலி சாவு". இரண்டாம் ஆதாமுடைய முடிவில்லா ஏற்புடைமையோ, கடவுள் கொடுக்கும் அருட்கொடையால் வாழ்வு" (உரோ 6:23). பாவ விடுதலைக்கு வித்திட்ட மரணம் இயேசுவின் சிலுவை மரணம். அவர் ஒரேமுறை சிலுவையில் மரணமானதால் எல்லோருடைய பாவங்களையும் அழித்துவிட்டார். எல்லோரும் இந்த மரணத்தில் பங்கு பெற்றுத்தான் மீட்படைய வேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனும் இந்த மரணத்தில் நான்கு முறை பங்கேற்கின்றான் : 1) சிலுவை மரணம் 2) திருமுழுக்கில் மரணம் 3) ஒவ்வொரு நாளும் மரணம் 4) இறுதி மரணம். இவைகள் உணர்த்தும் உண்மைகளை காண்போம். முதன் முதலில் கல்வாரிச் சிலுவையில் கிறிஸ்து மரணமாகின்றார். இந்தச் சாவினால் எல்லா மனிதரின் பாவங்களையும் கிறிஸ்து அழித்தார். ஆதாம் முதல் உலக முடிவில் பிறக்கப் போகும் கடைசி குழந்தைவரை அனைவரும் கிறிஸ்துவின் சிலுவையில் மரணமாகின்றனர் (உரோ 6:10.) அவருடைய மரணத்தில் பங்கு பெறுவதால், ஏற்கனவே எல்லோருடைய பாவங்களும் அழிக்கப்பட்டு விடும். இது இயல்பாக விசுவாச அளவில் நிறைவேறியுள்ளது. இந்த மரணம் திருமுழுக்கின் வழியாகக் கிறிஸ்தவர்களுக்கு வருகிறது. ஞானஸ்நானத்தின் மூலம் நாம் கிறிஸ்துவோடு கல்லறையில் அடக்கம் பண்ணப்படுகிறோம். அவரோடு கல்லறையிலிருந்து நாம் உயிர்க்கிறோம். இதை நிறைவேற்றவே ஞானஸ்நானம் பெறுபவர் தண்ணீரினுள் அமிழ்த்தப்பட்டார்கள். தண்ணீரினுள் மூழ்கும்போது கல்லறைக்குள் வைக்கப்படுகிறார்கள். தண்ணீரை விட்டு வெளியே வரும்போது கிறிஸ்துவோடு உயிர்த்தெழுகின்றனர் என நினைவூட்டப்பட்டார்கள். இந்த இரண்டாம் மரணத்தில் எல்லாக் கிறிஸ்தவர்களும் பங்கேற்கின்றனர். திருமுழுக்கு பெற்றவர்கள் பாஸ்கா மறைபொருளின் பங்காளிகளாகின்றனர். கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்புகளை தன்னகத்தே கொண்ட பாஸ்கா மறைபொருள் நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்திலும் நடந்தேறும் நிகழ்வு. இந்த நிமிடத்தில் நாம் பாவத்துக்கு மரிக்கிறோம். பரிசுத்த வாழ்விற்கு உயிர்க்கிறோம். நமக்குள் இறக்கிறோம், கிறிஸ்துவுக்குள் உயிர்க்கிறோம். இதையே "ஒவ்வொரு நாளும் நான் மரணத்தை எதிர்கொள்கிறேன்" (Iகொரி 15:31) என்கிறார் புனித சின்னப்பர். இவ்வாறு ஒவ்வொரு நாளும் அந்த நாளின் ஒவ்வொரு முறையும் மரித்து கிறிஸ்துவின் முடிவுறா மரணத்தைத் தொடர்ந்து நிறைவு செய்கிறோம். (கொலோ 1:24.) இன்னும் முடிவுபெறாக் கிறிஸ்துவின் மரணம் இன்றைய பொழுதில் நம்மில் முற்றுப் பெறுகிறது. எங்கெல்லாம் உண்மை பொய்யாக்கப்படுகிறதோ, நீதி மறுக்கப்படுகிறோ, அமைதி குலைக்கப்படுகிறதோ, அங்கு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுகின்றார். அந்த இடத்தில் அன்னைமரி கண்ணீர் உகுத்து கசிந்து உருகி நின்று கொண்டிருக்கின்றார். எங்கெல்லாம் உண்மையையும், நீதியையும், அமைதியையும் நிலைநாட்ட நம்மையே நாம் பலியாக்குகின்றோமோ, அங்கெல்லாம் அன்னை நமக்காக ஆண்டவரிடம் பரிந்து பேசி அருள் பெற்றுத் தருகின்றார். அந்த அருளுதவியுடன் நாம் நம் மத்தியில் கிறிஸ்துவை உயிர்க்கச் செய்கின்றோம். இந்த நடைமுறையில் அன்னையின் அருளுதவியுடன் கிறிஸ்து நம் ஒவ்வொருவர் வாழ்விலும் உயிர்க்கின்றார். இது நிறைவேறும் நேரத்தில் நம் புற உடல் அழிந்த வண்ணமாய் இருக்கிறது. அதே சமயம் நம் உள் மனம் நாளுக்கு நாள் புதுப்பிக்கப்படுகிறது. (IIகொரி 4:16-17.) இது ஒரு தொடர் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. தினமும் நம்முள்ளம் புதுப்பிக்கப்படுமாயின் அகத்தில் ஏற்படும் மாற்றம் புறத்திலும் தோற்றமளிக்கும். நாம் படிப்படியாக மாறிக் கொண்டே இருப்போம். வெளியே பழைய மனிதராகத் தோன்றினாலும் புதுவாழ்வே வாழ்கிறோம். இறுதி மரணம் நம் வாழ்வை வேற்றிடத்திற்கு மாற்றுகிறது. புது வாழ்வில் நாம் கிறிஸ்துவை அணிந்து கொண்டு அவராகவே மாறிக் கொண்டிருக்கிறோம். இம்மாற்றம் மறு உலகிற்கு நம்மை வழிநடத்துகிறது. இத்தொடர் நிகழ்வில் இவ்வுலக மரணம் ஒரு முடிவல்ல. புதுவாழ்வின் தொடக்கமாகின்றது. இவ்வுலக இறப்பு மறுவுலகப் பிறப்பு நம் வாழ்வு அழியாமல் மாற்றம் செய்யப்படுகிறது. கிறிஸ்தவனுக்கு (Vita mutatur, ' non tolitur) சாவில் வாழ்வு மாற்றப்படுகிறதேயன்றி, எடுக்கப்படுவதில்லை என்கிறார் புனித அகுஸ்தினார். இது எவ்வகையான மாற்றமெனத் தெரியாது. இந்த மாற்றம் நிகழும்பொழுது தாயையும் சேயையும் எவரும் எதுவும் பிரிக்க முடியாது. தேவ அன்னை நம்மைத் தம் சொந்தப் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டார். ஒரு பாசப்பிணைப்பால் இணைக்கப்பட்டிருப்பதால் நம்மிடமிருந்து அவர் தம்மைப் பிரித்துக் கொள்ளமாட்டார். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் இறுகப் பிணைக்கப்பட்டவர்கள் இறுதியில் அதுவும் வாழ்வின் முக்கியமான அந்தக் கடைசிக் கட்டத்தில் நம்மை விட்டு ஒருபோதும் பிரியவே மாட்டார். இப்படிப் பிரியாதிருக்கும் படியும், வேற்றுரு பெறும்படியும், விண்ணகத்தில் ஒன்றிணையும்படியும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளுமெனச் செபிக்கின்றோம். ஒரு செபமாலையில் 53 முறை இவ்வாறு வேண்டுகிறோம். வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி ஆமென் என்றுரைக்கின்றோம். |