• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மங்கள வார்த்தைகள்

இப்பொழுதும்


மாதாவிடத்தில் செபிக்கும்பொழுது கடந்த காலத்திற்காகவோ எதிர் காலத்திற்காகவோ அல்லாமல் நிகழ்காலத்திற்காக  விண்ணப்பிக்கின்றோம். 'இப்பொழுது' இன்றைய முற்பகலையும் பிற்பகலையும் குறிப்பிடாமல் இந்த நிமிடத் துளியைக் குறிக்கின்றது. இந்த நிமிடத்துளியின் தீர்மானந்தான் ஒரு கோட்டையை அழிக்க வல்லது; ஓராயிரம் மக்களை வாழ்விக்கவும் வல்லது. இதிலிருந்து இன்றைய பொழுது எவ்வளவு சிறப்புமிக்கது என்பது விளங்கும்.

இதே தத்துவத்தையே நம் முன்னோர்கள் பழமொழி வாயிலாகப் படிப்பிக்கின்றனர். "ஒன்றே செய், அதை நன்றே செய், அதுவும் இன்றே செய்". ஏனெனில் கடந்த காலத்தைப் போன்று தொலைவு வேறொன்றுமில்லை; இனி அது நம்மிடம் வராது. நம் எதிர்காலம் நம்பிக்கையில்தான் இருக்கிறது. ஆனால் நிகழ்காலந்தான் நம் கையிலுள்ளது; இக்காலத்தைத்தான் நாம் வாழ முடியும். எனவே கடந்த காலத்தை மறந்து விடுங்கள். எதிர்காலத்தை ஆண்டவர் கையில் விட்டு விடுங்கள். நிகழ்காலத்தையே முழுமையாக வாழுங்கள் என்றனர். இவ்வளவு சிறப்பு இன்றைய பொழுதிற்கு இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அது கடவுளின் காலம். கடவுளிடம் ஓராயிரம் நாள் ஒரு நாளாகவும் ஒரு நாள் ஓராயிரம் நாளாகவும் உளது (IIஇரா3:8.) அதற்கு புனித அகுஸ்தினார் விளக்கமளிக்கின்றார்: கடவுளிடம் எல்லாப்பொழுதும் "இப்பொழுது. அவரிடம் நேற்றும் நாளையும் கிடையாது. எங்கு அசைவுகள் உள்ளனவோ அங்கு காலங்கள் உண்டு, கடவுள் அசைவுககு உட்பட்டவரல்லர்; ஆகையால் அவரிடம் காலம் கிடையாது. காலத்தைக் கடந்த கடவுளின் இப்பொழுதினிலே அவரது வாழ்வை வாழ வேண்டும். அவரது வாழ்வை வாழ அவரது குரலுக்குச் செவிமடுக்க வேண்டும்.

இன்றைய பொழுதில்தான் இறை வார்த்தை வளரும். ஏனெனில் நேற்றும் நாளையும் இன்றைய பொழுதில சங்கமம் ஆகின்றன, இன்றைய மனிதன் நேற்றைய படைப்பு. நாளைய மனிதன் இன்றைய உருவாக்கம். நேற்றைய மீட்பின் வரலாறு இன்றைய மனிதனுக்குப் பாடம் புகட்டுகிறது. இன்றைய அனுபவம் நாளைய மனிதனைத் தீர்மானம் எடுக்க தூண்டுகிறது, அதை மனதிற் கொண்டு நாளைய உலகம் இன்றைய வகுப்பறையில் படைக்கப்படுகின்றது என்றனர். இதைத் தெளிவாகத் தெரிந்தே நாளைய வாழ்விற்கு இன்றே வித்திடக் கேட்கிறார் புனித சின்னப்பர்.

"உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ,
நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ,
விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுக்குரியவை எவையோ,
நற்பண்புடையவை எவையோ, அவற்றைக் கடைப்பிடித்து இப்பொழுது ஒழுகுங்கள். சமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் உங்களோடு இருப்பார்". பிலி 4:8

நம் நல்வாழ்வாழ்வால் கடவுளின் பிரசன்னத்தை நம்மில் நாளை உருவாக்குவதே இன்றைய வாழ்வின் நோக்கம்.

கிறிஸ்துவும் இன்றைய பொழுதைத் தந்தையைத் தன்னில் வாழ வைக்கப் பயன்படுத்தினார். எனது நேரம் என்று பலமுறை சொல்லியுள்ளார்.(அரு. 2:4; 4:21; 7:30; 12:23; 27 :16:32.) இந்நேரம் நற்செய்தியில் 18 முறை காணக் கிடக்கின்றது. இந்நேரம் இப்பொழுதைத்தான் குறிப்பிடுகின்றது. இப்பொழுதில் தந்தையின் திருவுளத்திற்குப் பணிகிறார்.  தன்னை இழக்கின்றார். தந்தையை மகிமைப்படுத்துகின்றார். மனிதரின் மீட்பு நிறைவேறுகிறது. மனிதரை  மீட்டு இறைவனோடு ஒன்றிக்கும் இன்றைய பொழுதே சிறந்ததெனக் கண்டார்.

தாம் கண்டறிந்த கொள்கையைப் உண்மையான "இன்றைக்கு வாழ்" பல உதாரணங்களால் போதித்தார்; இறை மாட்சிக்காக வாழும் பறவைகள் நேற்றைய அல்லது நாளைய தினத்தைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால் அறுவடை செய்து களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதில்லை. இதேபோல கானகத்தின் லீலி மலர்கள் சாலமோனிலும் மிக அழகாக உடுத்துகின்றன. அவைகளும் இன்றைய பொழுதை நன்றாக வாழ்ந்து இறை மாட்சியை எடுத்தியம்புகின்றன (சங் 19.1). இவைகள் யாவும் இன்று இறை மாட்சிக்காக வாழும்போது மனிதன் மட்டும் ஏன் ஏனைய பொழுதைப்பற்றி மிகவும் அங்கலாய்க்க வேண்டும்? இன்றைக்குள்ள கவலைகள் இன்றைக்குப் போதுமெனப் போதித்தார் இயேசு (மத் 6:25-34)

இறைவனோடு இன்றைய பொழுதில் ஒன்றித்து வாழவே செபிக்கக் கற்றுக் கொடுத்தார். நமக்கு எவ்வாறு செபிக்க வேண்டுமென்று தெரியாது. ஆவியானவரே அப்பா! தந்தாய்! (உரோ. 8:15,26) என நம்மில் செபிக்கின்றார். எங்கள் அன்றாட (இன்றைய) உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும் (மத் 6:11) எனச் செபிக்கக் கேட்டார் இயேசு. உணவு என்பது இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவது (அரு. 4:34.) இறைவனின் திருவுளத்தினை மனிதன் நிறைவேற்றும் பொழுது கடவுள் அவனில் குடிகொள்கின்றார் (அரு.14:24) செப வாழ்வில் ஒன்றிக்கின்ற மனிதன் இன்றைய பொழுதில் வழிபாட்டிலும் ஒன்றிக்கின்றான்.

வாழ்வில் நிறைவேறும் ஒன்றிப்பு வழிபாட்டில்தான் ஆரம்பமாகிறது. வழிபாடும் இன்றைய பொழுதைத்தான் வலியுறுத்துகிறது. அன்று மீட்பின் வரலாற்றில் மனிதர்கள் இறைவார்த்தைக்கு எவ்வாறு செவிமடுத்தார்கள், அவர்களில் காணும் குறைபாடுகள் எவை, அவற்றை நிறைவு செய்யும் முறைகள் எவை, எவ்வாறு நல்வாழ்வு வாழலாம், எவ்வாறு இறைவனோடு இணையலாம் என்பனவற்றைச் சிந்தித்துத் தெளிவு பெறுகிறோம். நல்வழிக்கான தீர்மானங்களை நிறைவேற்ற இறையருளை இறைஞ்சுகின்றோம்.

அவ்வாறு இறைவனோடு ஒன்றிக்க நமக்காக இப்பொழுதில் செபிப்பவர்தான் அன்னை மரியா. திருவழிபாட்டில்தான் திருவாழ்வு துவங்குகிறது; முடிவுறுகிறது. திருவழிபாட்டின் மையமும் கொடுமுடியும் நற்கருணைப் பலியே. கல்வாரிப் பலி இங்கு இரத்தம் சிந்தா முறையில் மீள நிகழ்த்தப்படுகிறது.

  நம்முடைய நினைவுகளே நிஜங்களாகுமாயின் இறை மகனின் நினைவு எவ்வளவு உண்மையாகும்?  இங்கு சிலுவைஅடியில் அன்னை நின்று கொண்டிருக்கிறார். இப்பொழுதெனக் குறிப்பிடப்படும் நிமிடத்துளி இதுதான். இதைத்தான் நம் வாழ்வின் நிமிட வாழ்வுக்குக் கொண்டு செல்கிறோம். இங்கு அன்னையைப் பார்த்து இப்பொழுதும் எங்கள் வாழ்வின் ஒவ்வொரு பொழுதிற்கும்  வேண்டிக்கொள்ளும் என்று விண்ணப்பிக்கின்றோம். கானாவூர் திருமண விழாவில் அன்னையின் கருணையை நாம் கண்கூடாகக்
காண்கிறோம்.

  நம்முடைய நற்கருணை விருந்திலும் நமக்காகப் பிரசன்னமாகி இருக்கும் அன்னை பாராமுகமாய் இருப்பாரா? அவர் வேண்டியது கிடைக்கும்வரை ஓய்வதில்லை. இதேபோல் நம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வரை அமைதி அடையமாட்டார். எல்லாக் கொடைகளையும் பெற்றுக்கொடுத்து வாழ்விலும் ஆண்டவரோடும் நம்மை ஒன்றிணைத்து வைப்பார்.

வழிபாட்டில் துவங்கிய ஒன்றிணைப்பை வாழ்வுக்குக் கொண்டு வரவும் அன்னை துணை புரிகின்றார். வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் இறைவனோடு இணைய நம்முடைய முழுக் கவனமும் மறைபொருளில் பதிந்திருக்க மனதைப் பக்குவப்படுத்த அதற்கான தனிப் பயிற்சிகளை வகுத்துள்ளனர். எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமென்றாலும் மனப்பயிற்சி அவசியமாகிறது.

இப்பயிற்சியை செபமாலை நமக்களிக்கிறது. செபமாலையில் நாம் இப்பொழுது வேண்டிக்கொள்ளும் என்று சொல்கிறோம். இடைவிடாமல் செபிக்கிறோம். சொல்வதையே சொல்லிக்கொண்டிருக்கிறோம். மீண்டும் மீண்டும் ஒன்றையே சொல்லிக்கொண்டிருந்தால் குவிந்த புத்தி ஒருநிலைப்படுதல் மூலம் மனமொன்றிய நிலை உருவாகிறது. உடல், உள்ளம் மனம் ஆற்றல் அனைத்தும் ஒரே பொருளில் ஊற்றியிருக்கும் அந்த நிலையை அடைய அன்னையின் வேண்டுதலும் நமக்குண்டு. நமது முயற்சியும் வானக உறுதுணையும் ஒரு சேரக் கிடைக்கும் பொழுது எல்லா வெற்றிகளையும் நாம் குவிக்கலாம். இறுதியில் இயேசுவைப்போல் மரணத்தையும் வென்று விடலாம். ஏனெனில் அவ்வேளையில் நம்முடன் செபிப்பது அன்னை மரியா.
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்