திரு இருதய ஆண்டவர்க்குச் செபம் | இயேசுவின் மடல் | திரு இருதய ஆண்டவர்க்குச் செபம்-2 |
அமைதியை அனுபவிக்க வந்திருக்கும் அன்பு நெஞ்சங்களே!
உயிர்த்த யேசு சீடர்களிடையே தோன்றி "உங்களுக்கு அமைதி உண்டாகுக" என்று வாழ்த்தினார்!
உள்ளத்திலே அமைதி, உறவுகளிலே அமைதி, குடும்பத்திலே அமைதி என நாம் தேடும் அமைதியை
அனுபவிக்க, இன்று இந்த திருப்பலிக்கு நம்மையும் வரவேற்று வாழ்த்துகிறார்.
அமைதிக்கு அடிப்படைத் தேவை கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை. உயிர்ப்பு அனுபவம் என்பது
ஏதோ இறந்த ஒருவர் உயிர்த்துவிட்டார் என்பதல்ல. மாறாக எங்கும் நிறைந்தவர்
உயிர்த்துவிட்டார். எங்கும் நிறைந்து, இறைமையோடு கலந்து, முற்றிலும் ஒன்றித்து
புதிதாகப் பிறந்த இறை மனித இனத்தை, வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகும். உயிர்ப்பு
என்பது வரலாற்றில் ஒரு அற்புதமான நிகழ்வாகும்.
இயேசு நம்மை நம் குடும்பங்களைப் பார்த்து:
அமைதி உண்டாகுக!
மங்கலம் பெருகுக!
நலம் விளைக!
நன்மை பெருகுக! என்று வாழ்த்தும் திருநாள்.
உயிர்த்த இயேசு அருளிய அந்த அமைதியே, சீடர்களின் உள்மன இருளை அகற்றி உருமாற்றத்தின்
நிச்சயத்தைக் கொடுத்தது. இந்த நிறைவான மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் பாதை இரண்டு.
ஒன்று மன்னிப்பு
மற்றொன்று நம்பிக்கை.
பார்த்தும், தொட்டும் புலன்களுக்கு அடிமையாகி, அடையாளத்தையே எதிர்நோக்கிப்
பழகிப்போன சீடர்களுக்கு, பார்க்காமலேயே பழகவும், தொடாமலேயே உணரவும் கற்றுக்
கொடுக்கிறார் இயேசு. அகக்கண்களின் ஊடே அண்ட சராசரங்களைப் பார்க்க பயிற்சி
அளிக்கிறார். கண்ணைத் தாண்டி, விண்ணைத் தொட விலாவைத் தொட்டுப் பயிற்சி அளிக்கிறார்.
நம்பிக்கையில் வளர நற்போதனைத் தருகிறார்.
ஐயம் தீர்க்கவும், ஆண்டவனில் வளரவும் அருள் தரும் திருப்பலியில், அமைதி தேடி
அலையும் நெஞ்சத்தை தஞ்சமாக்குவோம். அருள்வாய்... அருள்வாய்... யான் விரும்பித்
தேடுகின்ற அமைதி இறைவா... இறைவா... என செபிப்போம்.
இறைவேண்டல்
1. உயிர்த்த இயேசுவுக்கு வல்லமையோடு சான்று பகர எமை அழைக்கும் வல்ல தேவனே!
எம்மை வழிநடத்தும் திருச்சபையை உம்கரம் தருகின்றோம். திருப்பீடப் பணியாளார்கள்
அனைவரும் மக்களின் மிகுதியான நல்லெண்ணத்தைப்
பெற்று, தேவையில் உழல்வோர்
அனைவருக்கும் தங்களிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து, நம்பிக்கையோடு ஆன்மீகத்தில்
ஐயமின்றி மக்களை வளார்தெடுக்க வல்லமை பொழிய வேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்.
2. உலகை வெல்லும் நம்பிக்கையால் எமை நிரப்பும் வல்ல தேவனே!
அன்பு நிறைந்த கட்டளைகளை இதயத்தில் சுமந்து பணி செய்யும்போது இதயம் லேசாகும்
பணியும் ஈடேற்றம் பெறும். இதை உணார்ந்து ஏழை எளிய மக்களின் நம்பிக்கைக் கனவுகள்இ
உயிர்ப்புப் பெருவிழா மகிழ்ச்சியை அனுபவிக்கும் பாதையில் மக்களை வளார்தெடுக்க,
நாடுகளின் தலைவார்களுக்கு வல்லமை பொழிய வேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்.
3. தந்தை உம்மை அனுப்பியது போல எம் அருட்தந்தையர்களை எமக்காய் அனுப்பிய வல்ல தேவனே!
உம்மைக் காணாமல் விசுவாசத்தை சுவாசமாக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் எம்
அருட்தந்தையர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் உமது வாழ்வு
நூலில் இடம் பெற வல்லமை
பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. "இதோ! என் கைகள், இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம்
தவிர்த்து நம்பிக்கைக் கொள்" என எம்மை திடப்படுத்தும் வல்ல தேவனே!
கருத்து வேறுபாடுகளாலும் சந்தேகத்தாலும் மனமுடைந்து போய் தற்கொலையின்
விளிம்பிற்குத் தள்ளப்பட்டு வாழும் கணவன், மனைவி, பிள்ளைகள், நண்பார்கள் என
அனைவரையும் உம் பாதம் தருகின்றோம். வீண் சந்தேகங்களை நீக்கி குடும்பங்களில்
அமைதியையும் ஒற்றுமையையும் அன்பையும் நிலவச் செய்ய வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை
மன்றாடுகிறோம்.
5. காணாமலேயே விசுவசிப்போர் பேறு பெற்றோர் என உணார்த்தும் வல்ல தேவனே!
வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளால், துன்பங்களால் அலைக்கழிக்கப்படும் நாங்கள்
உமது விசுவாசத்தில் வேரூன்ற, அச்சத்தை அகற்ற, நம்பிக்கையில் வளர வல்லமை பொழிய
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனை:
காயம்பட்ட மனிதர்களால் மட்டுமே காயம்பட்ட பிறமனிதர்களையும் குணப்படுத்த முடியும்.
காயம் பட்ட இயேசு, தம் காங்களால் நமது காயங்களை குணப்படுத்தினார். இயேசுவைப் போல
சான்று பகர்ந்தவர்கள் சிலர், நம்மோடு வாழ்ந்துள்ளார்கள். நமது பாசமிகு
மேரிபஸ்தியான், சரத் சீவன் போன்ற அடிகளாரும் இத்தகைய
வரிசையில் இடம் பெற்று, நம்மையும்
இயேசுவுக்காய் வாழத்தூண்டும் சீவன்களாவார்கள்.
நான்காம் ஈழப்போரின் இறுதி கட்டம்.
விதிமுறைகளைப் பொருட்படுத்தாது, இலங்கை இராணுவம் தன் நாட்டு தமிழ்
மக்களை கண்மூடித்தனமாகக் கொன்று
குவித்த நேரம். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் உட்பட, மக்களின்
குடியிருப்புகளை கொத்துக் குண்டுகளாலும், பாஸ்பரஸ் குண்டுகளாலும் அழித்து, மக்களை
கொன்றொழித்தது இலங்கை இராணும். கிடைத்ததை கையில் எடுத்துக்கொண்டு, இடம் விட்டு இடம்
பெயர்ந்து, காடு கழனி கடந்து, இலட்சக் கணக்கான மக்கள் நந்திக்கடல் என்னும்
இடத்தினருகே ஒரு சிறிய நிலப்பரப்பில் பாதுகாப்புத் தேடினார். எனினும் இராணுவம்
பதுங்குக் குழிகளிலும் குண்டு வீசி, மக்களைத் தாக்கி அழித்தது. செஞ்சிலுவை
சங்கமும், பிற மனித நேயக்குழுக்களும் மக்கள் பணி செய்ய அனுமதிக்கப்படாத நிலையில்,
அவர்கள் நடுவில் சில கிறிஸ்தவ அருள்பணியாளார்கள் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் போரின் போக்கு மக்களை கொன்றொழிப்பதிலேயே குறியாயிருப்பதை உணர்ந்த,
யாழ்ப்பாணம் ஆயர் பணியாற்றிய
அருள்பணியாளர்களை பாதுகாப்புக் கருதி, ஆயர் இல்லம் திரும்பி விடப் பணித்தார்.
பணியாற்றிய பலரும் திரும்பிவிட்ட நிலையில் சரத்சீவன்
மரியாம் பிள்ளை என்னும் 42
வயது அருள்பணியாளார், மக்கள் துயர்துடைத்து அருள்பணி ஆற்றுவதை தொடர்ந்து
மேற்கொண்டார். தன் கண்முன்னே தன் மக்கள் கொத்து கொத்தாய் குண்டுகளுக்கு இரையாக
மடிவதையும், குற்றுயிராய் மருத்துவ வசதியின்றி தவிப்பதையும், உடல் உறுப்புகளை
இழந்து வலியால் துடிப்பதையும் கண்டு, இடைவிடாது அவர்களுக்குப் பணியாற்றினார்.
அவரின் இதயத் துடிப்பு இறுதியில் மே 18- 2009 அன்று நின்று போயிற்று.
காயம்படத் தயாராக இருக்கின்ற மனிதர்களால் மட்டுமே காயம்படும் மனிதர்களுக்கு
உழைக்கும் மனமும் இருக்கும். பிறர்நலப் பணிக்காய் நம்மை அர்ப்பணிக்கும்போது
காயங்கள் ஏற்படத்தான் செய்யும். அவைகளை ஏற்கும்போது, வரலாறு மறவாது தனது நாளிதழில்
குறித்து மகிழும்.
கோடைகாலம் கொதிக்கின்ற வெயிலில்,
ஏழை ஒருவன் காலில் செருப்பில்லாமல்
கையில் குடையில்லாமல் நடந்து கொண்டிருந்தான். அந்த பக்கமா குதிரையில் ஒரு
பணக்காரர் கையில் குடையுடனும், காலில் செருப்புடனும் வந்து கொண்டிருந்ததைப்
பார்த்த ஏழை, அவரிடம்
"ஐயா! நான் ஏழை. நெடுந்தூரம் போகவேண்டும். நீர் குதிரையில் தானே போகிறீர்.
செருப்பு எதற்கு! தயவு செய்து
உங்க செருப்பைத் தரக்கூடாதா?" என்று
கேட்க, அவரும் தன் செருப்பை கழட்டி கொடுத்தார்.
"ஐயா! உமக்கு நல்ல குணம்.
குதிரையில் நீர் வேகமாக போய்விடலாம். நான் நடந்துதானே வரணும், அந்த குடையைக்
கொடுத்துதவுங்கள்" என்று ஏழை கேட்க பணக்காரரும்
சரி என்று குடையைக் கொடுத்தார்.
சிறிது நேரம் கழித்து
"ஐயா!
உமக்குதான் எவ்வளவு தாராள குணம்.
என்னால நடக்க முடியல. உங்க குதிரையை தார்றீங்களா?" என்று கேட்க பணக்காரர்
கோபத்துடன் அவனை அதட்டினார். ஏழை உடனே
"என் சந்தேகம் தீர்ந்தது. செருப்பு, குடையை
தந்தவர் குதிரையை கேட்டிருந்தால் தந்திருப்பாரே, கேட்காமல்
போனோமே என்று சாகும்வரை உறக்கம் வராது. இப்ப என் சந்தேகம் தீர்ந்தது"என்றான்.
சந்தேகம் வளர ஆரம்பித்தால் சந்தோஷம் தளர ஆரம்பிக்கும். இளைதாக முள்மரம்
களையாவிட்டால் மரம்
பெரிதாகி வெட்டுவோரின் கைக்கு துன்பம் விளைவிக்கும். சந்தேகம்
முளைக்க ஆரம்பித்தால், களையும் முளைக்க ஆரம்பித்து துன்பத்தைத்தரும்.
"நீ கடவுளுக்கு ஊழியம் புரிந்தால், உனக்கு கைம்மாறு கிடைக்கும். நீ செய்வது
அனைத்திலும் கவனமாயிரு. நீ பெற்ற பயிற்சிக்கு ஏற்றவாறு நல்லொழுக்கம் உடையவனாய் இரு.
உனக்கு பிடிக்காத
எதையும் பிறருக்கு செய்யாதே".
அந்த மேலாளருக்கு சொந்தமான பார்னிச்சர் கடை ஒன்று, மேல்மாடியில் இயங்கிக்
கொண்டிருந்தது. விற்பனையும் அமோகமாக இருந்தது. திடீரென்று மாலை வேளையில் தீப்பற்றி
கடை முழுவதும் எரிந்து, பொருட்கள் அனைத்தும் கருகிப் போய்விட்டன.... மறுநாள் காலை
கடை
வழக்கம் போல இயங்குமா? என சந்தேகப்பட்டவர்களுக்கு கடை இயங்கியது
சந்தோஷமாகப்பட்டது. பார்னிச்சர் கடையில்
பொருட்கள் கருகின. ஆனால் கடை உரிமையாளரின் நம்பிக்கை கருகவில்லை.
நம்பிக்கை தான் குடும்பத்தை வளர்த்தெடுக்கும். அமைதி இருக்கும் இடத்தில் தெய்வம்
குடியிருக்கும். சூழ்நிலைகளை
சரியாகக் கையாளும் மனிதன் மற்றவர்களுக்கு பாடமாக
அமைகிறார்கள்.நம்பிக்கையும் நற்சிந்தனையும் தான் விரும்பியதை சாதிக்க மனதில்
வரிந்து கட்டிக்கொண்டு நிரந்தரமாக நிற்கும்.
அமைதி மனதில் குடியிருந்தால், விரும்பியதை எல்லாம் சாதிக்க முடியும். பழகிக்
கொள்வோம் அமைதியை.
வாழ்க்கையில் நடைபெறும் சில நிகழ்வுகள், நம்மை முற்றிலும் மாற்றி விடுகின்றன.
உயிர்ப்பு நிகழ்வும் சீடர்களின் வாழ்வில் ஒரு
பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது.
அவநம்பிக்கை கொண்டிருந்த திருத்தூதர் தோமா நம்பிக்கைப் பெற்றார். இயேசுவைக்
கண்டு "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" என்று விசுவாச அறிக்கையிட்டார்.
தொடக்கத் திருச்சபையில் வாழ்ந்த நம்பிக்கை கொண்டோர், திருத்தூதரின்
படிப்பினையிலும், நட்புறவிலும், அப்பம் பிடுவதிலும், இறைவேண்டலிலும் உறுதியாய்
நிலைத்திருந்தார்கள். எல்லா உடமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். நல்லெண்ணமும்
சமத்துவம் வளர்ந்தன. திருச்சபையும் எண்ணிக்கையில் பெருகியது.
விசுவாசமும் வாழ்க்கையும் வெவ்வேறு அல்ல. இறைப்பற்று நம்மை இயக்கும்போது,
இறைவாழ்வு நம்மில் நிறையும்போது
தூய வாழ்வு வெளிப்படும்.
இயேசுவைப் போல காயம்படத் தயாராக இருப்போம். உளிதாங்கும் கல்தான் மண் மீது
சிலையாகும்.
ஐயம் தவிர்க்க
தூய ஆவியின் துணையை இடையறாது நாடுவோம்.
மனதில் அமைதியை நிரப்பிக் கொள்ள ஆண்டவன் சந்நிதிக்குள் நுழைவோம்.
நம்பிக்கையில் வளர்வோம் நற்போதனையை வாழ்வாக்குவோம்.