ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

 தவக்காலம் 5ம் ஞாயிறு  

வருடாந்த
ஞாயிறு வாசகம்
     
Sr. Gnanaselvi (india)
கடலுக்குள் பாதை அமைத்தவரை தேடி வந்திருக்கும் அன்புள்ளங்களே!

பொங்கி எழும் நீருக்கு நடுவே பாதை அமைத்தவர், புனிதமற்ற மனிதருக்கு எதிராக நம் வழக்கை விசாரித்து நமக்கு நீதிவழங்கவும், நாம் பெற்றுக்கொண்ட அதே நல்ல தீர்ப்பை நமது வாழ்வில் நடை முறைப்படுத்தவும் தவக்காலத்தின் 5 ஆம் ஞாயிறு வழியாக நம்மை அழைக்கிறார். பெண்களின் அவலநிலைக்கு தீர்ப்புகள் முக்கியமல்ல வாழ்வைக் காட்டும் திசைகள் தான் முக்கியம் என்பதையும் திருப்பலி சுட்டிக் காட்டுகிறது.

நம் தேவன் இயேசு கையும் மெய்யுமாக பிடிபட்ட பாவ மகளை யாரும் தீர்ப்பிடவில்லை நானும் உன்னை தீர்ப்பிடேன் என்று சொல்லி இரக்க உணர்வை இதயத்தில் ததும்பி வழியச் செய்கிறார். குற்ற உணர்வோடு உற்றுப் பார்த்தவர்களின் குற்ற உணர்வை இற்றுப் போகச் செய்கிறார், நமது மிகப் பெரிய தவறுகளைக்கூட மன்னித்து மறந்து நமக்காக புதிய செயல் ஒன்றை செய்து கொண்டிருக்கிறார். வறண்டு போன நம் வாழ்வில் நீரோடை தோன்றச் செய்கிறார்..

இறைவனின் இரக்கத்தைப் பெற்றுக்கொண்ட நாம் நம் அயலாரை அவர்களது சின்னஞ்சிறிய தவறுகளின் நடுவே கையும் மெய்யுமாக பிடித்துவிட்டு என்ன செய்து கொண்டிருக்கிறோம். நமது அயலாரின் வாழ்க்கையை வற்றாத நீரூற்றாக மாற்றுகிறோமா? அல்லது வறண்ட நிலமாக்குகிறோமா?தவறு செய்தவர்களை மன்னித்து புதிய நல் வாழ்வை அளிக்க முன்வருவோமா? பிறருக்கு எதைக் கொடுக்கிறோமோ அதைத் தான் நாமும் பெற்று கொள்கிறோம். இனியதை கொடுத்து இனியதை பெற்றுக் கொள்வோம்.

நம் இறைவன் நமக்காக புதிய செயல் ஒன்றை இந்த திருப்பலியில் செய்கின்றார் இதை அனுபவித்து மகிழ பக்தியோடு திருப்பலியில் பங்கேற்போம்.

 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
 
1.புதுச்செயல் ஒன்றை எங்களுக்காக செய்கின்ற அன்பு தெய்வமே இறைவா! எங்களுக்காக திருச்சபையில் புதிய செயல் ஒன்றைச் செய்து திருச்சபையை கறையின்றி பாதுகாக்க திருச்சபை பணியாளர்களுக்கு அருள் தர வேண்டுமென்று இறiவா உம்மை மன்றாடுகிறோம்.

2.திரிகளை அணைப்பது போல எதிரிகளை அழிப்பவரே எம் இறைவா!
நாடுகளிடையே அமைதி நிலவவும் மக்கள் அனைவரும் உமது புகழை எடுத்தியம்பும் கருவிகளாக வாழவும் போர், தீவிரவாதம், மதக்கலவரம், வன்முறை, இனவேறுபாடு, எல்லைப்போராட்டம் அகலவும் அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.பொங்கி எழும் நீர் நடுவே பாதை அமைத்த இறைவா!
எங்களை ஆன்மீகத்தில் வழி நடத்தும் அருட்தந்தையர்களை, பொங்கி எழும் மகிழ்ச்சிக்கு நடுவே பாதை அமைத்து வழி நடத்திச் செல்ல வேண்டும் என இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.பாழ்நிலத்தில் நீரோடைகளை தோன்றச் செய்யும் இறைவா!
இங்கே கூடி இருக்கின்ற நாங்கள் அனைவரும் எங்கள் பாவங்களை ஏற்றுக் கொள்ளவும் பிறரின் குற்றங்களை மன்னித்து வாழ்க்கையை காட்டும் திசை நோக்கி பயணிக்கும் தீர்ப்புகளைச் சொல்லி எல்லோரும் மன நிம்மதியோடு வாழ அருள் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்

5. புதுச் செயல் ஒன்றை எங்களுக்காக செய்கின்ற அன்பு தெய்வமே!
நீர் செய்யும் புதிய செயலை கண்டுகொள்ள தடையாக இருக்கும் பாவங்களை ஏற்று மனம் வருந்தவும், பிறரின் பாவங்களை மன்னிக்கவும் நல் மனம் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்
 
மறையுரை சிந்தனைகள்

மாம்பழம் ஒன்றைத் திருடிய குற்றத்திற்காகத் தூக்குத் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளி அரசரிடம். தனக்குத் தன் தந்தையிடம் கற்றுக்கொண்ட ஒரு அற்புதமான இரகசியம் தெரியும். இந்ந இரகசியத்தைப் பயன்படுத்தி ஒரு விதையை அல்லது மாங்கொட்டையை நிலத்தில் நட்டால் ஒரே இரவில் அது வளர்ந்து அடுத்த நாளே மாங்கனி தரும் என்றான். இந்த இரகசியத்தைத் தனக்குள்ளுள வைத்துச் சாகப் போவதால், இந்த இரகசியமும் செத்திடுமே என்பதுதான் தனக்குக் கவலை என்றும் அரசரிடம் இந்த இரகசியத்தை வெளியிடத் தயாராக இருப்பதாகவும் கூறினான். இது கேட்டு இன்ப அதிர்ச்சியு காவல் அதிகாரி அவனைத் தூக்கிலிடுவதை நிறுத்தி வைத்து அரசரிடம் குற்றவாளியை அழைத்துச் சென்றான். அரசரும் இரகசியத்தின் அற்புதத்தைக் காண விரும்பினார்.

அத்திருடன் நிலத்தில் குழி பறித்தான். ஒரு மாம்பழக் கொட்டையைக் கையில் வைத்துக்கொண்டு அரசே இக்கொட்டையைத் தனக்குச் சாராத பிறரின் பொருள் எதையும் தன் வாழ் நாளிலேயே எடுத்து கொள்ளாதவர் தான் நடவேண்டும்
; திருடியிருப்பதால் நான் நட முடியாது என்று சொல்லிவிட்டு அரண்மனை அதிகாரி ஒருவரை பார்த்து, 'நீங்கள் நடலாமே' என்றான். எனது இளமைக் காலத்தில் எனக்குச் சேராத ஒரு பொருளை வைத்துகொண்டேன். ஆகவே நான் நட முடியாது என்றார். அங்கு நின்ற வருவாய் அமைச்சரை அணுகி, 'நீங்கள் நடலாமே' என்றான். 'சில நேரங்களில் ஊர் மக்கள் பணத்தை எடுத்திருக்கிறேன் ஆகவே என்னால் முடியாது எனறார். அரசே நீங்களாவது நடலாமே என்றான் சொல்வதற்கு வெட்கமாயிருக்கிறது ஒரு சமயம் என் தந்தைக்குச் சொந்தமான கடிகாரத்தைத் திருடியிருக்கிறேன்' என்று அவரும் சொல்லி கைவிரித்தார். அப்போது அத்திருடன் அனைவரையும். 'நீங்கள் எல்லாரும் பெரிய பெரிய ஆட்கள் இருந்தாலும் இந்தச் சிறிய மாங்கொட்டையை உங்களால் நட முடியவில்லை'. ஆனால் நான் மிக சாமான்யன் பசியைப் பொறுக்க முடியாமல் ஏதோ திருடிவிட்டேன். என்னைத் தூக்கிலிடப் போகிறீர்கள் என்றான். அது கேட்டு அவனை அரசன் மன்னித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
 
விபசாரத்தில் பிடிப்பட்ட பெண்ணைக்க் கல்லால் எறிந்து கொல்லத் தயாராக இருந்த பரிசேயர் சதுசேயரிடம் உங்களில் குற்றம் இல்லாதவர் முதல் கல்லை எறியட்டும் (யோவா.8;.7) என்று கூறி அவர்கள் முகத்தில் கரி பூசி போகச் செய்தார் இயேசு ஆண்டவர். நாம் எல்லாரும் குற்றங்கள் செய்திருக்கிறோம். பிறர் குற்றம் செய்திருப்பது தெரிந்திருந்தால் அவர்களுக்குப் பரிவும் இரக்கமும் காண்பித்து மன்னித்து அவர்கள் திருந்தி வாழ மறு வாய்ப்பு நாம் அளிக்க வேண்டும்

பாவமில்லாதவர் முதல் கல் எறியட்டும் என்று சொன்ன இயேசுவின் இந்தத் தீர்ப்புக்கு எவராலும் பதில் சொல்ல இயலவில்லை.

பிறரைக் குற்றவாளி என சொல்பவனே முதல் குற்றவாளி குற்றங்களை மன்னிப்பவன் இறைவன்

நெருப்பை அணைக்கப் போவதாக தண்ணீர் இல்லாத வாளிகள் சொல்கின்றன.

கடந்த காலக் குற்றங்களை மறந்து புதிய வாழ்வைத் தருபவர் நம் இறைவன்.

முன்பு நடந்தவற்றை மறக்கச் சொல்லும் நம் இறைவன் நமக்காக புதிய செயல் ஒன்றை செய்கின்றார்.

கடவுளின் இரக்கத்துக்கு முன் நம் பாவங்கள் பனியாக மறையும். பாவம் செய்யாதே நானும் தீர்ப்பிடேன். இந்த செய்தியை இன்று நமக்காகவே தருகிறார். நாம் நம் அயலாரில் நம் இரக்கத்தைக் காண்பித்து இதை செய்து மகிழலாம்.

தீர்ப்புகள் விலை பேசப்படும் காலமிது..

நான் செய்தால் சரி ஆனால் நீ செய்தால் தவறு..

நண்பன் செய்தால் சரி எதிரி செய்தால் தவறு.

நண்பனே தவறு செய்தாலும் தவறு தவறுதான். எதிரியே செய்தாலும் சரி சரிதான்..
இப்படி நிலவும் தீர்ப்புகளில் நாம் சொல்லும் தீர்ப்பு எந்த வகை?

பிறரை தீர்ப்பிடுவது கடவுளுக்கே உரித்தான உரிமையை எடுத்துக் கொள்வதாகும்

உலகிலேயே மிக மோசமான செயல் தான் நல்லவனென்றும் பிறர் பாவிகள் என்றும் தீர்ப்பிடுவதேயாகும்.

நம் தவறுகளுக்காக மனம் வருந்துவோம். பிறரின் தவறுகளை மனதார மன்னிப்போம்.


 
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு.

I. எசாயா 43:16-21
II. பிலிப்பியர் 3:8-14
III. யோவான் 8:1-11

சட்டங்களா? சவால்களா?

தவக்காலத்தின் ஐந்தாம் வாரத்தில் இருக்கக்கூடிய நம்மை இன்றைய வாசகங்களின் மூலம் இறைவன் மன்னித்து வாழ, சவால்களை சந்தித்து வாழ அழைக்கின்றார். இன்றைய முதல் வாசகமும் இரண்டாம் வாசகமும் கடந்ததை மறந்து கண்முன் இருக்கும் வாழ்க்கை சவால்களைக் கண்டு வாழ அழைக்கின்றன. நற்செய்தி வாசகத்திலோ இயேசு பாவியான பெண்ணிற்கு மன்னிப்பு அளித்து புது வாழ்விற்கு அழைப்பு விடுத்து அதன் முலம் நாமும் புதுவாழ்வு வாழ அழைக்கின்றார். தவக்காலத்தினை மிகச்சிறப்பான முறையில் அனுசரித்து வாழ்ந்து வரும் நாம், இன்னும் வளர வேண்டிய ஒரு பகுதியாக மன்னிப்பு என்னும் குணம் இருப்பதை நமக்கு எடுத்துரைக்கின்றார். மன்னிப்பு கொடுப்பதும் பெறுவதும் சட்டரீதியாகவா இல்லை சமூக நலன் கருதியா என்று எண்ணியே காலத்தைக் கழித்துவிடுகிறோம். நாம் நம்முடைய வாழ்நாட்களில் சட்டங்களை கடைபிடிப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அன்றாட வாழ்வின் சவால்களான செயல்களுக்குக் கொடுப்பதில்லை. சட்டங்களையும் கொள்கைகளையும் கடைபிடித்து நம்மை நாமே நல்லவர்களாக காட்டிக்கொள்ள முயல்கின்றோமே அன்றி நடைமுறை வாழ்க்கைக்கேற்ற செயல்களில் மாற்றம் ஏற்படுத்த முனைவதில்லை. இன்றைய காலகட்டத்தில் மன்னிப்பு தான் நம் வாழ்வின் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது.
நான் ஒரு கிறிஸ்தவன்/ள் எனவே நான் எனக்கு எதிராக தீமை செய்தவர்களை மன்னிக்க வேண்டும் என்று சட்டதிட்டங்களை எண்ணி பிறரை மன்னிப்போமாயின் அதனால் ஒரு பலனுமில்லை. மீண்டும் பிறரோடு மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புண்டு. அதை ஒரு சவாலாக எண்ணி மன்னித்து மறந்து வாழ்ந்தோமானால் அதுவன்றி இன்பம் வேறில்லை. எவ்வாறு வேரில்லாத செடி விளைச்சல் தருவதில்லையோ அதுபோல சவால்களில்லாத வாழ்வும் தரமான பலன் தருவதில்லை. இப்படிப்பட்டதொரு சவாலான வாழ்வை சட்டங்களால் தொலைத்துவிடாதீர்கள் என எச்சரிக்கின்றார் இயேசு. முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களை யாவே இறைவன் எவ்வாறு வழிநடத்தினார் என்பதை எடுத்துரைத்து அதைவிட மேலாக இன்னும் மேன்மையாக வழிநடத்துவேன் என்கிறார். பழையதை மறந்து விடு புதிய வாழ்வை வாழ். அது சவால் நிறைந்ததாக இருக்கும். இருப்பினும் பழையது போல் இல்லாது புது முறையில் உன்னை வழிநடத்துவேன் என்கிறார். இரண்டாம் வாசகத்திலோ பவுலடியார் தன்னுடைய கடந்த கால வாழ்வை மறந்துவிட்டு புதிய இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றார். இறைவன் தரும் அழைப்பே பரிசு என்னும் இலக்கு என்கிறார். இவர் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக செய்த குற்றத்திற்கு மன்னிப்பு பெற்று புதிய வாழ்வை வாழ்த் தொடங்குகின்றார். அதனால் ஏற்பட்ட அனைத்து சவால்களையும் பொறுமையோடு ஏற்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணிற்கு புதிய வாழ்வு வாழ அழைப்பு விடுப்பது போல நமக்கும் விடுக்கின்றார். நமது குற்றங்களை மன்னித்து நம்மையும் புதிய வாழ்வு வாழ அழைக்கின்றார். இன்றைய நற்செய்தியில் இயேசுவின் செயல்பாடுகளும் அவர் கூறிய வார்த்தைகளும் நமது வாழ்விற்கு விடுக்கும் செய்தி என்ன என்பதை அறிய முற்படுவோம். செபம், செயல், அமைதி, தெளிவு, மரியாதை, அழைப்பு என்னும் ஆறின் அடிப்படையில் நம்மையும் நமது செயல்பாடுகளையும் அலசி ஆராய்வோம்.

தவக்காலத்தின் சிறு சிறு பக்தி மற்றும் தப முயற்சிகளினால் நமது கிறிஸ்தவ விழுமியங்களை பிறருக்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கும் நாம் இயேசுவின் இந்த ஆறு செயல்பாடுகளின் மூலம் அதை மெருகேற்றிக் கொள்ள முயல்வோம். சட்டங்களாக அல்ல வாழ்க்கையை மாற்றும் சவால்களாக.......

செபம்:
இயேசு எப்போதும் செபத்துணையோடு எல்லா செயல்களையும் செய்தார். அதிகாலையில் எழுந்து இறைவனை நோக்கி செபிக்கின்றார். கோவிலுக்கு செல்கின்றார். அதிகாலையில் என்னை நோக்கி கூப்பிடுகிறவன் ஒரு போதும் தளர்ந்து போகான் என்ற இறைவசனத்திற்கு ஏற்ப, தன்னை செபத்தின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்கிறார். எல்லா வேளையிலும் செபமே அவரை இறைத்தந்தையுடன் இணைத்தது. பல அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்ய ஆற்றல் தந்தது. நமது செப வாழ்வு எப்படி இருக்கிறது? இறைவனோடு நம்மை ஐக்கியப்படுத்த காரணியாக அமைகின்றதா? நமது வாழ்விலும் பல அளப்பரிய செயல்களை நம்மால் செய்ய முடிகின்றதா? செபத்தின் துணை கொண்டு ஜெயம் பெற முயல்வோம். சிறு துளி பெரு வெள்ளம். நம் சிறு ஜெபம், தருமே ஜெயம்.

செயல்;
இயேசு சொல்வீரர் மட்டுமல்லர். மாறாக செயல் வீரர். சொன்னதை செய்கின்றவர். வெறும் வாய்ச்சொல்லில் வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு வாழ்ந்து போகும் வாடிக்கை மனிதரல்லர் அவர். எதை சொன்னாரோ அதைச்செய்தவர். இதனாலே அவரைப் பலரும் பின்தொடர்ந்தனர். காலை மாலை மதியம் அதிகாலை இரவு என எல்லா நேரமும் அவரை சுற்றி மனிதர்கள் கூட்டம் . தான் எப்படி வாழ்ந்தாரோ அதன்படி வாழ மக்களுக்கும் போதிக்கின்றார். சிலர் போதனைக்கும் வாழ்க்கைக்கும் முரண்பாடுகள் அதிகம் இருக்கும். இயேசுவுக்கோ இரண்டும் இணைந்தே போகின்றது . அதனால் மக்கள் கூட்டம் வெள்ளமென பாய்ந்து வருகிறது. நமது செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன? வார்த்தைக்கும் வாழ்விற்கும் முரண்பாடுகள் இருக்கின்றனவா? சிந்தனை சொல்லாக, சொல் செயலாக, செயல் பழக்கமாக, பழக்கம் வழக்கமாக, வழக்கம் வாழ்க்கையாக மாற முயற்சிப்போம்.

அமைதி :
அமைதியே பல பிரச்சனைகளுக்கு தீர்வு. பேசவேண்டிய இடத்தில் பேசாமலும் அமைதி காக்க வேண்டிய நேரத்தில் அமைதிகாக்காமலும் இருப்பதாலேயே பல சிக்கல்கள் நமக்கு ஏற்படுகின்றன. இயேசு அதனை சரியாக கையாளுகின்றார். பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் கேட்ட கேள்விகளுக்கு இயேசு எப்படி பதில் சொல்லி இருந்தாலும் அவரை அன்றே விரைவாகக் கொல்லத் திட்டம் தீட்டி இருப்பர். இயேசு அமைதி காக்கின்றார். அவர்கள் தவறை அவர்களே உணர்ந்து கொள்ள வழி செய்கின்றார். தன்னை காயப்படுத்தியவரை விட்டு விட்டு மௌனமாக விலகிச்செல்பவரே உண்மையான பக்குவ நிலையை அடைந்தவர். இயேசு பக்குவனிலையை அடைந்தவர் . நாம் எப்படி? அமைதி காக்கின்றோமா? எப்போது எந்த நேரத்தில் ? நமது அமைதியினால் பிரச்சனை முடிவடைகின்றதா? இல்லை விரிவடைகின்றதா?

தெளிவு
இயேசுவின் பேச்சில் தெளிவு இருக்கின்றது. உள்ளத் தூய்மையோடு இருப்பவர்களின் வார்த்தைகள் எப்போதும் தெளிவாக இருக்கும் . அவர்கள் கூற நினைப்பதை தெளிவாக பிறருக்கு எடுத்துரைத்து விடுவார்கள். மனதில் குழப்பமும் சலனமும் இருப்பவர்களால் தாங்கள் நினைப்பதை பிறருக்கு எடுத்துரைக்கவும் முடியாது. பிறர் கூறுவதற்கு கவனமும் செலுத்த முடியாது. ஆனால் இயேசுவின் வார்த்தைகள் தெளிவாகவும் ஆழமாகவும் வெளிப்படுகின்றன. உங்களில் பாவம் இல்லாதவர் இவர் மேல் முதல் கல் எறியட்டும் என்கிறார். பாவமே இல்லாதவன் இந்த உலகில் யாருமே இல்லை இறைமகனைத் தவிர. இயேசுவின் அந்த வார்த்தையினால் கவரப்பட்டவர்கள், கலங்கடிக்கப்பட்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக அந்த இடத்தை விட்டு நகர்கின்றனர். நமது பேச்சில் தெளிவு இருக்கின்றதா? சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் இயேசுவின் பண்பு நம்மிலும் துளிர் விட அருள் வேண்டுவோம்.

மரியாதை :
இயேசு பாவியான அப்பெண்ணிற்கு உரிய மரியாதையை கொடுக்கின்றார். விபச்சாரி என்று கடுமையாக அனைவர் முன்னிலையிலும் விமர்சிக்கப்பட்டவரை அம்மா என்று அழைக்கின்றார், அம்மா, யாரும் உம்மைத் தீர்ப்பிடவில்லையா ? நானும் தீர்ப்பு அளிக்கவில்லை நீர் போகலாம் என்கின்றார். தனது கண்ணியமான வார்த்தைகளின் மூலம் பாவிகளின் மனதிலும் இடம் பிடிக்கின்றார். மரியாதை கொடுக்கப்பட வேண்டியவர்களுக்கு மரியாதை கொடுக்கின்றார். பிறர் குற்றவாளி என்று தீர்ப்பிட்டாலும், தன்னுடைய மனதிற்கு எது எப்படி தோன்றுகின்றதோ அதன்படி செயல்படுகின்றார். பெண்களுக்கு உரிய மாண்பையும் மதிப்பையும் கொடுக்கின்றார். நாம் எப்படி பிறரை தீர்ப்பிடுகின்றோம்.? மற்றவர் கூறும் வார்த்தைகளை வைத்தா? பிறர் நல்லவர் கெட்டவர் என்ற கணிப்பு நமக்கு எதைப் பொறுத்து ஏற்படுகின்றது?

அழைப்பு :
இயேசு தன்னை பின்பற்ற விரும்பும் அனைவருக்கும் அழைப்புவிடுக்கின்றார். பாவியான பெண்ணுக்கும் அழைப்பு விடுக்கின்றார். இனிப்பாவம் செய்யாதே என்று கூறி புதியவாழ்விற்கு அழைக்கின்றார். பழைய வாழ்வை மறந்து கண்முன் இருக்கும் புதிய வாழ்வை வாழ் என அழைக்கின்றார். இந்த அழைப்பு நமக்கும் பொருந்தும். நமது பழைய இருண்ட வாழ்வை விட்டு புதிய ஒளி மயமான வாழ்வை வாழ அழைக்கப்படுகின்றோம். இந்த அழைப்பு நமக்கு ஒவ்வொரு நாளும் கொடுக்கப்படுகின்றது. அழைப்பை பயனுள்ள முறையில் பயன்படுத்தி வாழ முற்படுவோம்.

இவ்வாறாக இயேசுவின் இந்த ஆறு செயல்பாடுகளும் நமது இன்றைய வாழ்வின் சவால்களாக இருக்கின்றன. இவை அனைத்தையும் செயல்படுத்துவது எளிது ஆனால் அதை சரியாக பயன்படுத்தி வெற்றி காண்பது என்பது அரிது. சட்டதிட்டங்களுக்காக நாம் அதை கடைபிடித்தோமானால் அது நம் வாழ்க்கைக்கு எந்த வித பயனும்தராது. மாறாக அதை ஊக்கம் தரும் சவாலாக எண்ணி செயல்பட்டோமானால் வெற்றி நம் பக்கம். வாழ நினைப்பவனுக்கு வானம் கூட வாயிற்படி தான் . நாம் வாழ பிறந்தவர்கள் இயேசுவுக்காக இயேசுவைப் போல ... என்ற எண்ணத்தொடு செயல்படுவோம். நமது செபம், செயல், அமைதி, தெளிவு, மரியாதை, அழைப்பு இவற்றில் கவனம் செலுத்தி சவாலான வாழ்வை எதிர் கொள்வோம். மன்னிக்கும் தேவன் நமது பாவங்களை மன்னித்து நமக்கு அருள் நிறைந்த வாழ்வைத் தருவாராக. இறைவனின் அருளும் ஆசீரும் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.
மறையுரைச்சிந்தனை  - சகோ. செல்வராணி Osm

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு

தீர்ப்பிடாதே.......

இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள். அதிகாலை காபி குடித்தபடி சன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.
பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள். அந்த அம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்.
கணவனும் பார்த்தான் ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை. தினமும் அவர்கள் எழுந்து காபி குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி
சொல்லிக் கொண்டேயிருந்தாள். திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து, உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த, மனைவி சொன்னாள்.... அப்பாடா இப்போது அந்தம்மமா துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா ....? இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா...? என்று தெரியவில்லை. இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன.
கணவன் அமைதியாகச் சொன்னான். இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு சன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்.... என்று. இப்படித்தான் பலமுறை நடக்கின்றன. நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன. ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை. அடுத்தவரிடம் உள்ள குறைகளை உடனடியாக நாம் கவனித்து விடுகிறோம்.

அடுத்தவர் குறைகளைக் காண்பதில் உள்ள ஆர்வத்தை நாம் நம் குறைகளை காண்பதிலும் வைத்துக்கொண்டால் இந்த உலகில் தீமை இருக்க முடியுமா? அடுத்தவர் குறைகளைக் காண்பதில் தான் நமக்கு எத்தனை அக்கறை? எத்தனை வேகம்? அந்த நேரத்தில் நம் கவனிப்பு எத்தனை கூர்மை பெற்று விடுகின்றது. ஆனால் நம் விஷயம் என்று வரும் போது அதெல்லாம் காணாமல் போய் விடுகிறது. குறை கூறுபவர்கள் நோக்கத்தில் குறைகாண ஆரம்பித்து விடுகிறோம். இப்படிப்பட்ட சுபாபம் நம்மிடம் இருக்கும் வரை நாம் குறைகளை நீக்கிக்கொள்ளவோ, திருந்தவோ வாய்ப்பே இல்லை. அடுத்தவர் திருந்தி பெரிதாக நமக்கு எதுவும் ஆகப் போவதில்லை மாறாக குறைகளை நீக்கிக் கொண்டு நாம் திருந்தினால் நம் வாழ்கையில் அடையும் பயன்கள் ஏராளமானவை. மேலும் நாம் நம் குறைகளை நீக்கிக்கொண்டு சிறப்பாக வாழும்போது... அடுத்தவர்கள் நம்மைப் பார்த்து மாற, உத்வேகத்தை ஏற்படுத்தும் வண்ணம் நல்ல உதாரணமாகவும் இருக்கலாம். குறையுள்ள மற்றவர்களும் நல்வழிக்கு மாற வாய்ப்புண்டு. எனவே விமர்சனம் தவிர்த்து நல்ல உதாரணமாக இருந்து வழிகாட்டுவோம்..!

தவக்காலம் ஐந்தாவது வாரத்தில் இருக்கும் நாம், மற்றவரின் குற்றங்களை காணாது , நமது குறைகளைக் களைந்து, பாவ வாழ்க்கையை விட்டு விலகி தூய வாழ்க்கை வாழ அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு பாவியான பெண்னை மன்னித்து, புதுவாழ்வு வாழ அழைப்பு விடுக்கிறார். விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணை பரிசேயர்களும், சதுசேயர்களும் சட்டதின் அடிப்படையில் கல்லால் எறிந்து தண்டிக்கப்பட வேண்டும் என்று இயேசுவிடம் வாதாடுகின்றனர். ஆனால் இயேசுவோ, "சட்டத்துக்காக மனிதன் அல்ல, மனிதனுக்காகவே சட்டம்", என்பதை பரிசேயர் கூட்டத்துக்கு உணர்த்தும் வகையில், பாவியான பெண்ணை மனதார மன்னித்து, மாற்றுவாழ்க்கை வாழ, அழைப்பு விடுக்கிறார். மாற்றுவாழ்க்கை என்றால் மறுவாழ்வு, புதுவாழ்வு என்பது பொருள். இத் தவக்காலத்தில் இருக்கும் நமக்கு, இயேசு இரண்டு கோணத்தில் சிந்திக்க அழைப்பு விடுக்கிறார். ஒன்று புது வாழ்வு, மற்றொன்று அமைதி வாழ்வு.

1. புதுவாழ்வு:
வழக்கமாக நாம் செய்யும் செயல் அல்லது தொழில் இவற்றிலிருந்து சற்று மாற்றம் பெற்று, இன்னும் கொஞ்சம் அதிகமான முயற்சியோடும், மாற்றுச் சிந்தனையோடும் புதிய பாதையில் பயணிப்பது தான் புதுவாழ்வு. இயேசு பாவியான பெண்ணுக்குத் தண்டனை கொடுக்க வில்லை. மாறாக பரிவுகாட்டி புது வாழ்வு வாழச் சொல்லி அனுப்பு விடுகிறார். அந்தப் பெண் பாவ வாழ்க்கை நிலையிலிருந்து விலகி , புதுவாழ்வு வாழத் தொடங்கினாள். இருள் நிறைந்த வாழ்க்கையிலிருந்து விலகி, ஒளி நிறைந்த வாழ்க்கையில் பயணித்தாள். மன நிம்மதியற்ற நிலையிலிருந்து விலகி, நிம்மதியான வாழ்க்கை வாழத்தொடங்கினாள். அந்த பெண்ணின் வாழ்வே முற்றிலும் மாறிப் போனது இயேசுவின் வார்த்தையால்.

நாமும் நமது பழைய வாழ்க்கை நிலையிலிருந்து விலகி, புதிய பாதையில் பயணிக்க இத்தவக்காலம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. தீய சிந்தனைகளிலிருந்து விலக வேண்டும், போட்டி பொறாமையிலிருந்து விலக வேண்டும், பாவ வாழ்க்கையிலிருந்து விலக வேண்டும், பிறரை குறை சொல்லுவதிலிருந்து ஒதுங்க வேண்டும். இப்படி நாம் தீய நிலையிலிருந்து விலகி, புதிய வாழ்க்கை வாழும் போது நமது வாழ்வு அர்த்தம் பெருகிறது. மற்றவரை‌ தீர்ப்பிடாத நம் வாழ்வு திருத்தம் பெறுகிறது.

2. அமைதி வாழ்வு
மனிதன் அதிகமாக விரும்புவது அமைதியான நிம்மதியான வாழ்க்கையைத் தான். அமைதியை இழந்தவர்கள் அல்லல் படுகிறார்கள். அமைதியை தேடுகிறவர்கள் நிம்மதி அடைகிறார்கள். மன அமைதிக்கு இரண்டு வழிகள் ஒன்று "விட்டு விடுங்கள், மற்றொன்று விட்டுக் கொடுங்கள்". விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண்ணை, பரிசேயர்களும், சதுசேயர்களும் இயேசுவிடம் விட்டு விட்டார்கள். உங்களில் பாவம் செய்யாதவர் முதலில் அப்பெண்மேல் கல் எறியட்டும் என்று இயேசு கூறிய வார்த்தையால், அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த கற்களை , ஒருவர் பின் ஒருவராக கீழே போட்டார்கள். அங்கே அமைதி நிலவியது. கொடூரம் நிறைந்த மூர்க்கத்தனமான மனநிலையில் வந்திருந்த அவர்கள் மனம் அமைதியடைந்து. நானும் தீர்ப்பு அளிக்கவில்லை, இனி பாவம் செய்யாதே..! . போ.... என்று இயேசு கூறியதும்... குற்றவுணர்வோடு கூனிக் குறுகி வந்திருந்த அந்த பெண்ணின் மனம் அமைதியடைந்தது.

நம் மனசாட்சிக்கு எதிராக செயல்படும் போதெல்லாம் நாம் மன நிம்மதியை இழக்கிறோம். பிறரின் குறைகளை காணும் போதும், பிறரை குற்றவாளிகாக தீர்ப்பிடும் போதும் நாம் நம்முடைய மன நிம்மதியை இழக்கிறோம். இயேசுவின் அருகில் செல்லும் போதும், அவரின் வார்த்தைகளை கேட்டுக்கும் போதும் நம்மால் மன அமைதியுடன் வாழ் முடியும்.

ஆகவே மற்றவர்களை குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்காமலும், நமது தீய வாழ்க்கை நெறியிலிருந்து விலகி, புதிய பாதையில் பயணிக்கும் போதும் , இயேசு தரும் உண்மையான அமைதியை அனுபவிக்க முடியும். அதற்கான அருளை இத்தவக்காலத்தில் வேண்டுவோம். ஆண்டவர் இயேசுவின் அன்பும் , அமைதியும் என்றும் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துவதாக ஆமென்.
 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி.

தவக்காலத்தின் 5-ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்:-
எசாயா 43:16-21
பிலிப்பியர் 3:8-14
யோவான் 8:1-11



தொடர்ந்து ஓடு!

'ஓடிக்கொண்டே அல்லது நடந்துகொண்டே இருக்கும் நாம் ஒரு கட்டத்தில் செல்ல முடியாதவாறு சாலை அடைக்கப்பட்டிருந்தால்' அந்த இடத்தை 'முட்டுச் சந்து' என்று அழைக்கிறோம். ஆங்கிலத்தில் 'டெட் என்ட்.' அதற்குப் பின் அங்கே பாதை இல்லை. இரண்டே வழிதான் இப்போது: ஒன்று, அங்கேயே நின்று விடுவது, அல்லது வந்த வழி திரும்புவது. அல்லது ஒருவேளை ரொம்பவும் ஆபத்தான நேரத்தில் நாம் முட்டுச் சந்தில் இருக்கிற மதிலை உடைத்து அல்லது தாண்டி அந்தப் பக்கம் தப்புவோம்.

இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் இப்படி 'டெட் என்டில்' (முட்டுச் சந்தில்) சிக்கிக்கொண்ட மூன்று பேரைப் பார்க்கிறோம்: முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள், இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், நற்செய்தி வாசகத்தில் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண். இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவின் அடிமைத்தனம் என்ற வழியற்ற பாதையில் இருக்கின்றனர். பவுல் தன்னுடைய யூத முதன்மைகள் என்னும் வழியற்ற பாதையில் இருக்கின்றார். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் கல்லால் அடிபட்டு மரணம் என்ற வழியற்ற பாதையில் இருக்கின்றார். இவர்கள் மூவருக்கும் இரண்டு தீர்வுகள்: ஒன்று. இருக்குமிடத்திலேயே இருப்பது. இரண்டு, வந்த பாதை திரும்புவது. ஆனால், இந்த இரண்டு தீர்வுகளையும் தாண்டி மூன்றாவது ஒரு தீர்வைத் தருகின்றார் இறைவன்: அதுதான், 'தொடர்ந்து ஓடு!' என்பது. 'தொடர்ந்து ஓடு!' என்ற சொன்ன இறைவன், சொன்னதோடு அல்லாமல், புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்து இந்த மூவரும் தொடர்ந்து பயணிக்க வழிசெய்கின்றார். ஆக, இறைவனைப் பொருத்தவரையில் 'என்ட்' என்பது ஒரு 'பென்ட்' மட்டுமே என்று நமக்கு ஒரே வரியில் அறிவுறுத்துகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

முதல் வாசகத்தில் (காண். எசா 43:16-21) பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக்கிடந்த இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் எசாயா வழியாக ஆறுதலின் செய்தியைத் தருகின்றார் ஆண்டவராகிய கடவுள். கடவுள் இஸ்ரயேலருக்குத் தான் செய்த அரும்பெரும் செயல்களை முதலில் நினைவுறுத்துகின்றார்: 'கடலுக்குள் வழியை அமைத்தவரும், பொங்கியெழும் நீர் நடுவே பாதை அமைத்தவரும், தேர்களையும், குதிரைகளையும், படைவீரரையும், வலிமைமிக்கோரையும் ஒன்றாகக் கூட்டி வந்தவரும், அவர்கள் எழாதவாறு விழச் செய்து, திரிகளை அணைப்பதுபோல அணைத்தவருமான ஆண்டவர்' - இவ்வாறாக, அவர்களின் செங்கடலைக் கடத்தல் நிகழ்வில் அவர் செய்த அரும்பெரும் செயல்களைப் பட்டியலிடுகின்றார் இறைவன். விடுதலைப் பயண நூல் 14ல் நாம் இந்நிகழ்வை வாசிக்கின்றோம். முன்னால் கடல், பின்னால் எகிப்தியர், எந்தப் பக்கம் சென்றாலும் மரணம் என்று அவர்கள் பாதை மூடிக்கிடந்த வேளையில், கடலில் பாதையை உருவாக்குகின்றார் கடவுள். 'அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்! இன்று ஆண்டவர்தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைப் செயலைப் பாருங்கள். இன்று நீங்கள் காணும் எகிப்தியரை இனிமேல் என்றும் காணப்போவதில்லை. ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார். நீங்கள் சும்மா இருங்கள்!' (விப 14:13-14) என்கிறார் ஆண்டவராகிய கடவுள். இங்கே தண்ணீர் இஸ்ரயேல் மக்களுக்கு வாழ்வாகவும், எகிப்தியருக்கு அழிவாகவும் மாறுகின்றது. பழையதை நினைவுபடுத்தும் கடவுள், உடனே, 'முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள். முற்கால நிகழ்ச்சி பற்றி சிந்திக்காதிருங்கள். இதோ! புதுச்செயல் ஒன்றைச் செய்கிறேன்' என்கிறார். முற்காலத்தை நினைவுபடுத்தும் கடவுள் ஏன் முற்காலத்தை மறக்கச் சொல்கின்றார். இங்கே முற்காலம் என்பது 'செங்கடல் நிகழ்வையும்' குறிக்கலாம். 'பாபிலோனிய அடிமைத்தன நிகழ்வையும்' குறிக்கலாம். இரண்டாவதைக் குறிப்பதாக நாம் எடுத்துக்கொள்வோம். அடிமைத்தனத்தில் இருந்த மக்கள் தாங்கள் அந்த நிலைக்கு அழைத்து வரப்பட்டதன் வடு மிகவும் ஆழமாகவே இருந்தது. அதை நினைத்துக்கொண்டிருந்த அவர்கள் தங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும், கடவுளால்கூட ஒன்றும் செய்ய முடியாது என்றும் நினைத்துக்கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் கடவுள் 'புதுச்செயலை' வாக்களிக்கின்றார். அங்கே அழிவின் காரணியாக இருந்த தண்ணீர் இங்கே வாழ்வின் காரணியாக மாறுகிறது. தண்ணீர் என்ற உருவகத்தை வைத்து, 'பாலை நிலைத்தில் பாதையும் பாழ்வெளியில் நீரோடையும் உருவாகும்' என்றும், 'இம்மக்களுக்கு அந்நீரைக் குடிக்கக் கொடுப்பேன்' என்றும் சொல்கிறார் கடவுள்.

ஆக, பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்த மக்கள் தங்களுக்கென ஒரு இனிய கடந்த காலம் இருந்தாலும், நிகழ்காலத்தின் துன்பத்தால் எதிர்காலம் பற்றிய கலக்கத்தி;ல் இருக்கிறார்கள். இவர்களுக்கு, கடவுள் புதிய பாதையை உருவாக்கித் தருவதாக வாக்களித்து இவர்களின் பயணத்தில் இவர்கள் தொடர்ந்து ஓடுமாறு பணிக்கிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (பிலி 3:8-14), பவுல் வாழ்வில் நடந்த மிகப் பெரிய மாற்றத்தை வாசிக்கின்றோம். பவுல் தன்னுடைய முந்தைய வாழ்வை (காண். 3:4-6) விடுத்து புதிய வாழ்வுக்குப் பயணமாகிறார். எட்டாம் நாளில் விருத்தசேதனம் பெற்றவன், இஸ்ரயேல் இனத்தவன், பென்யமின் குலத்தவன், எபிரேயன், பரிசேயன் என்று தன்னுடைய சமய மற்றும் சமூக அடையாளங்களைக் குறித்துப் பெருமை பாராட்டும் பவுல், தொடர்ந்து, 'கிறிஸ்துவின் பொருட்டு எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன்' என்கிறார். மேலும், தன்னுடைய இலக்காக, 'கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புவதை' நிர்ணயித்துக்கொள்கின்றார். இந்நோக்கம் நிறைவேற, 'கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு, பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன்' என்கிறார். பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமடலில், 'பந்தயத்திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிசு பெறுபவர் ஒருவரே. எனவே, பரிசு பெறுவதற்காக நீங்களும் ஓடுங்கள்' (காண். 1 கொரி 9:24) என அறிவுறுத்துகிறார்.

ஆக, தான் எல்லா அடையாளங்களையும் இழந்துவிட்டதால் பாதை அடைக்கப்பட்ட பவுல், தொடர்ந்து ஓடுவதற்குக் காரணம் அவர் முன் இருந்த கிறிஸ்துவின் வல்லமை என்னும் இலக்கு. பழைய பாதையிலிருந்து விலகுகின்ற பவுல் புதிய பாதையாம் கிறிஸ்துவில் தொடர்ந்து ஓடுகின்றார். பாதை முடிந்தது என்ற நினைத்த அவருக்குப் புதிய பாதை கிறிஸ்துவில் விடிகின்றது. இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 8:1-11) யோவான் நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கிறது. பல ஓவியர்களின் ஓவியங்களில், இயக்குநர்களின் திரைப்படங்களில் முதன்மையான இடம் பெற்றிருக்கும் 'விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசுவிடம் கொண்டுவரும் காட்சி' (யோவா 7:53-8:11) பல விவிலிய மொழிபெயர்ப்புகளில் அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும்.இந்த நற்செய்திப் பகுதி பல முக்கியமான பிரதிகளில் காணப்படவில்லை. அல்லது சில முக்கியமற்ற பிரதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. இந்த நிகழ்வை யோவான் நற்செய்தியின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்வது சிரமமாக இருந்தாலும், 'வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள். நீதியோடு தீர்ப்பளியுங்கள்' (யோவா 7:24) என்ற இயேசுவின் போதனையின் விளக்கவுரையாகவும், 'நீங்கள் உலகப்போக்கின்படி தீர்ப்பு அளிக்கிறீர்கள். நான் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை' (8:15) என்ற வார்த்தைகளின் சுருக்கமாகவும் உள்ளது இந்நிகழ்வு.

இந்நற்செய்திப் பகுதியை கதையாடல் ஆய்வு என்ற அடிப்படையில் ஐந்து உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) தொடக்கச் சூழல் (8:1), (ஆ) இறுக்கம் (8:2-6), (இ) திருப்பம் (8:7), (ஈ) தளர்வு (8:8-11அ), மற்றும் (உ) இறுதிச் சூழல் (8:11ஆ). ஒலிவ மலையில் இரவு முழுவதும் இருந்த இயேசு பொழுது விடிந்ததும் கோவிலுக்கு வருகின்றார். ஆக, இந்நிகழ்வு நடக்கும் நேரம் அதிகாலை. இடம் கோவில். அதிகாலையில் நிகழ்வு நடப்பதால், அதற்கு முந்தைய இரவில் இந்தப் பெண் விபச்சாரம் செய்து பிடிப்பட்டிருக்கலாம். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசுவிடம் கொண்டுவருகின்றனர் மறைநூல் அறிஞரும் பரிசேயரும். பெண் இங்கே இருக்கிறார்? கூட இருந்த ஆண் எங்கே? என்பதுதான் முதல் கேள்வி. இரண்டாம் கேள்வி. இயேசு, 'போதகரே' என யோவான் நற்செய்தியில் இங்கு மட்டுமே அழைக்கப்படுகின்றார் (காண். மத் 8:19, மாற் 9:17, லூக் 3:12). இது இயேசுவை மரியாதையாக விளிக்கும் சொல் அல்ல இங்கு. அவரது போதனையைக் கிண்டல் செய்யும் விதமாக 'போதகரே' என அழைக்கின்றனர். 'இப்படிப்பட்டவர்களை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்று மோசே சட்டம் சொல்கிறது.' மோசே சட்டம் சாட்சிகளோடுதான் ஒரு குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது (காண் இச 17:6, 19:15). ஆனால் இங்கே சாட்சிகள் இல்லை. குற்றச்சாட்டு மட்டுமே இருக்கிறது. மேலும், மோசேயின் சட்டத்திலும், இயேசுவின் காலத்தில் புழக்கத்தில் இருந்த மிஷ்னாவின் சட்டத்திலும், விபச்சாரம் செய்யும் ஆண்தான் தண்டிக்கப்படுகிறார் (காண். லேவி 20:10, இச 22:22). ஆக, இங்கே வந்திருப்பவர்களின் நோக்கம் சட்டத்திற்கு கீழ்ப்படிதலின் அடிப்படையில் அல்ல. 'இயேசுவின் மேல் குற்றம் சுமத்த' அந்தப் பெண்ணைப் பயன்படுத்துகிறார்கள் இவர்கள். 'கல்லால் எறிந்து கொல்லுங்கள்' என்று இயேசு சொன்னால், இயேசு உரோமைச் சட்டத்திற்கு எதிராக செயல்படுபவரகவும், அல்லது கருணையற்ற ரபியாகவும் மாறிவிடுவார். ஏனெனில், இயேசுவின் சமகாலத்தில் கொலை தண்டனை விதிப்பது என்பது உரோமை அரசுக்கும் மட்டும் உரியது என்று இருந்தது. 'கல் எறிந்து கொல்ல வேண்டாம்' என்று சொன்னார் அவர் மோசேயின் சட்டத்தை மீறியவராகக் கருதப்படுவார்.' இயேசு இவர்களின் கேள்வியைத் தவிர்ப்பதற்காக குனிந்து தரையில் எழுதுகின்றார். அவர் தரையில் அவர்களுடைய பாவங்களை எழுதினார் என்று சிலர் சொல்வார்கள். அதனால்தான் என்னவோ, 'பதில் சொல்லும்!' என்று அவரை அவசரப்படுத்துகின்றனர். தீர்ப்பிடுமாறு கூட்டி வந்தவர்களை இப்போது இயேசு கூண்டில் ஏற்றுகின்றார்.'உங்களில் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்!' என்று சொல்லிவிட்டு, மீண்டும் தரையில் எழுதத் தொடங்குகிறார். எல்லாரும் போகின்றனர்.இயேசுவும் அப்பெண்ணும் அங்கே நின்றுகொண்டிருக்கின்றனர். இப்போது இயேசுவே பேச்சைத் தொடங்குகின்றார். 'அம்மா, அவர்கள் எங்கே? உன்னை யாரும் தீர்ப்பிடவில்லையா?' 'இல்லை' என்கிறார் பெண். 'நானும் தீர்ப்பளிக்கவில்லை. நீர் போகலாம். இனி பாவம் செய்யாதீர்' என பெண்ணிடம் இயேசு சொல்வதுடன் நிறைவடைகிறது நிகழ்வு.

அவர்கள், 'இவள்' என்று சொன்னவரை, இயேசு, 'அம்மா' என மரியாதையுடன் அழைக்கிறார். இந்த ஒற்றைச் சொல்லிலேயே அவர் அவருக்குப் புதுவாழ்வு தந்துவிடுகின்றார். அத்தோடு நில்லாமல், 'இனி பாவம் செய்யாதீர்!' என அறிவுறுத்துகின்றார். ஆக, 'பாதை ஒரு முறை அடைக்கப்பட்டுவிட்டது. நான் உமக்கு புதிய பாதை ஒன்றைத் தொடங்குகிறேன். மீண்டும் பாவம் செய்து அதை அடைத்துவிடாதீர்!' என்று சொல்லி அனுப்புகிறார் இயேசு. தன் வாழ்வுப் பாதையில் அவர் தொடர்ந்து ஓடுமாறு பணிக்கிறார் இயேசு.

இவ்வாறாக, இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களுக்குப் புதிய பாதையை அமைத்தும், இரண்டாம் வாசகத்தில் புதிய இலக்கை பவுலுக்குத் தந்தும், நற்செய்தி வாசகத்தில் பெண்ணுக்கு மன்னிப்பு அளித்தும், இவர்கள் தொடர்ந்து ஓடுமாறு செய்கின்றார் இறைவன்.

இன்று நம் வாழ்வில் நாம் எதிர்கொள்கின்ற பாதை முடிவுற்ற நிலைகள் எவை? அவற்றைக் கடந்து நாம் எப்படி ஓடுவது? மூன்று வழிகளைச் சொல்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

1. கடந்ததை மறந்துவிடுவது
மூன்று வாசகங்களிலும் இந்தச் சொல்லாடல் நேரிடையாகவும் மறைமுகமாகவும் வருகிறது. அடிமைத்தனம் என்னும் கசப்பான அனுபவத்தை மறக்கச் சொல்லி அழைக்கிறது முதல் வாசகம். சமய, சமூக அடையாளங்களை மறக்கச் சொல்கிறது இரண்டாம் வாசகம். பாவ வாழ்வை மறக்கச் சொல்கிறது நற்செய்தி வாசகம். 'மறத்தல்' நம் வாழ்வில் மிக முக்கியமான ஒன்று. நம் குழந்தைப் பருவம் தொடங்கி இன்றுவரை நடந்தவை எல்லாம் நமக்கு நினைவில் இருந்தால் நாம் பைத்தியமாகிவிடுவோம். நம் மூளை எதை வைத்துக்கொள்ள வேண்டுமோ அதை வைத்துவிட்டு மற்றதை மறந்துவிடுகிறது. கடந்த காலத்தில் நம்முடைய மனத்தைக் கட்டியிருக்கும்போது நம்மால் முன்னேறிச் செல்ல முடியவில்லை. அதாவது, யானையைச் சிறிய சங்கிலியால் கட்டுவதுபோல. யானை மிகவும் பலம் வாய்ந்தது. ஆனால், அதை எப்படி பாகானால் சிறிய சங்கிலியைக் கொண்டு கட்ட முடிகிறது? குட்டியாக இருக்கும்போதே யானைக்குக் கட்டப்படும் சங்கிலி அதனால் உடைக்க முடியாததாக இருக்கிறது. ஆக, 'என்னால் உடைக்க முடியாது' என்ற கடந்த கால அனுபவம் யானைக்கு ஆழமாக மூளையில் பதிந்துவிடுவதால், இறுதிவரை அது சங்கிலியை உடைக்கும் முயற்சியில் ஈடுபடுவதே இல்லை. கடந்த காலத்தை மறக்கும்போது கடந்த காலம் நம்மில் விதைத்த எதிர்மறை எண்ணங்கள், உணர்வுகள், அனுபவங்கள் ஆகியவற்றை மறக்க வேண்டும்.

2. இலக்கு நிர்ணயம்
பழையதை மறந்துவிட்டால் மட்டும் போதுமா? புதியது நோக்கி நகர வேண்டும். இல்லை என்றால் நாம் அப்படியே தேங்கி விடுவோம். புதியது என்பது புதிய இலக்கு. பவுல் தன் பழையதை மறக்க புதியது ஒன்றோடு தன்னை இணைத்துக்கொள்கிறார். 100 மீட்டர் ஓட்டத்தில் அல்லது உயரம் தாண்டுதல் அல்லது நீளம் தாண்டுதலில் பங்கேற்பது போல. விளையாட்டு வீரர் தன் 'உந்தியக்கப் பலகையை' மறப்பதோடல்லாமல் இலக்கை மனத்தில் கொண்டால்தான் வெற்றி பெற முடியும். நம் வாழ்க்கை வழியற்ற பாதையை அடைந்துவிட்டால், அதையும் தாண்டி நம்முடைய இலக்கைப் பார்க்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆக, அடுத்தடுத்த என்று இலக்கு மாறிக்கொண்டே இருக்க வேண்டும். புதிய இலக்குகள் நமக்கு புதிய வேகத்தைத் தரும். திடீரென்று வேலை பறிபோய்விட்டதா. உடனடியாக, ஓய்வு நேரத்தை எப்படி பயன்படுத்துவது? என்ற இலக்கு வேண்டும். உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டதா. அதை ஓய்வுக்கான வாய்ப்பாக பயன்படுத்தி அடுத்துச் செய்ய வேண்டிய வேலைகளைத்திட்டமிட வேண்டும். ஆக, 'டெட் என்ட்' என்பது நமக்கு அன்றாடம் வரலாம். ஓடிக்கொண்டே இருக்கும் நமக்கு எதிரே சுவர் வந்துவிட்டதால் வருத்தப்பட வேண்டுமா? இல்லை. அந்தச் சுவரில் ஓவியம் வரையக் கற்கலாமே! அப்படிக் கற்றால், தடையே நமக்கு இலக்காக மாறிவிடும்.

3. வாழ்க்கையைப் பற்றிய பார்வையை அகலமாக்குவது
மற்றவர்கள் அந்தப் பெண்ணின் பழைய வாழ்வைப் பார்த்தார்கள். ஆனால், இயேசுவோ அவளின் புதிய வாழ்வைப் பார்க்கிறார். பார்வை அகலமாகும்போது பாதை இன்னும் விரிவாகும். நம்மால் தொடர்ந்து ஓட முடியும். இங்கே இயேசு, தீர்ப்பிட வந்தவர்களின் பார்வையையும் அகலமாக்குகின்றார். பெண்ணின் பார்வையையும் அகலமாக்குகிறார். வாழ்வில் அனைத்தையும் அனைவரையும் சிறு சிறு புள்ளிகளாக இணைத்துப் பார்க்கிற ஒருவரால்தான் வாழ்வு என்னும் முழு ஓவியத்தைப் பார்க்க முடியும். இயேசுவால் பார்க்க முடிகிறது அப்படி. இயேசுவின் பார்வை நமக்கு இருந்தால் நம்மாலும் அது முடியும்.

இறுதியாக,
இன்று 'டெட் என்ட்' - பாதை முடிவு - வந்தே தீரும். நம் தனிப்பட்ட வாழ்வில், உடல்நலத்தில், உறவுநிலைகளில், பணியில், படிப்பில். இப்படி பாதை அடைக்கப்பட்டது என்று எண்ணியவர்கள் எல்லாம் - புனித அகுஸ்தினார், நம் அப்பா, அம்மா - நெடும் பயணம் கடந்து சென்றார்கள். முடிந்துவிட்ட பாதையில் அமர்ந்து கண்ணீர் வடிக்கவில்லை. ஏனெனில், அவர்களுக்குத் தெரியும் - அவரோடு கைகோர்க்கும்போது முடிவு என்பது விடிவு என்று.

 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
தவக்காலத்தின் 5-ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்:-
எசாயா 43:16-21
பிலிப்பியர் 3:8-14
யோவான் 8:1-11



இனிப் பாவம் செய்யாதீர்!
தீயவர் திருந்த வாய்ப்புத் தாருங்கள்:


ஆற்றங்கரையோரமாய் இருந்த அந்தத் துறவியைப் பார்க்க கூட்டம் அலைமோதும். அன்றைய நாளில் அவரைப் பார்க்க பலரும் வந்திருந்தனர். அவர்களோடு ஒரு தீயவனும் வந்திருந்தான். துறவி மற்ற எல்லாரையும் விட்டுவிட்டு, முதலில் அந்தத் தீயவனைத் தன்னிடம் அழைத்து, அவனோடு சிறிதுநேரம் பேசிவிட்டு அனுப்பி வைத்தார்.

இச்செயல் மற்றவருக்குத் துறவியின்மீது சினத்தை வரவழைத்தது. அவர்கள் துறவியிடம், "இத்தனை பேரும் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்க, எங்களையெல்லாம் விட்டுவிட்டு, ஒரு பாவிக்கு முதலிடம் கொடுக்கிறீர்களே! இது ஓர வஞ்சனையாக இல்லையா?" என்று அவரை மெல்லக் கடிந்து கொண்டார்கள். அதற்குத் துறவி அவர்களிடம், "நீங்கள் நல்லவர்கள். அதனால் இதுபோன்ற நற்செயல்களில் அடிக்கடி ஈடுபட உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். அத்தீயவனுக்கு மனம்மாற வேண்டும் என்ற எண்ணம் எப்போதாவதுதான் ஏற்படும், அப்போது அவனுக்கு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதுதானே முறை!" என்று புன்னைகையோடு பதில் கூறினார்.

ஆம், தீயவர்கள் மனம்மாறுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவேண்டும். அதுதான் நல்லது. இன்றைய நற்செய்தியில் இயேசு விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணுக்கு மனம்மாறுவதற்கு வைப்பினை ஏற்படுத்தித் தருகின்றார். இயேசுவின் இத்தகைய செயலும், தவக் காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு என்ன செய்தியைத் தருகின்றது என்று சிந்திப்போம்.

பாவத்தில் விழுந்துகிடக்கும் மக்கள்:

கடவுளின் சாயலைத் தாங்கியிருக்கும் நாம் (தொநூ 1:26), கடவுளைப் போன்று தூயவர்களாக இருக்க வேண்டும் (லேவி 19:2); ஆனால், நாம் நம்முடைய மனித பலவீனத்தால் பாவத்தில் விழுந்து கிடக்கின்றோம்.

இன்றைய நற்செய்தியில் விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணைப் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவிடம் கொண்டு வருவது பற்றி நாம் வாசிக்கின்றோம். விபசாரத்தில் பிடிபட்ட அந்தப் பெண் தன்னுடைய குடும்பச் சூழ்நிலை காரணமாகவோ அல்லது தனது மனித பலவீனத்தாலோ அத்தகையதொரு தொழிலில் ஈடுபட்டிருக்கலாம். அதற்காக அவரை மட்டும் பாவி என்று முத்திரை குத்திவிட முடியாது. "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" என்று இயேசு சொன்னபிறகு, முதியோர் தொடங்கி, ஒருவர் பின் ஒருவராக அங்கிருந்து சென்றதை வைத்துப் பார்க்கும்போது, ஒவ்வொருவரும் பாவிதான் என்று சொல்லலாம்.

இப்படிச் சூழ்நிலையின் காரணமாகவும், மனித பலவீனத்தாலும் பாவம் செய்பவர்களைக் கடவுள் அப்படியே ஒதுக்கிடுவதில்லை. மாறாகக் கடவுள் அவர்கள் மனம்மாறுவதற்கு வாய்ப்புத் தருகின்றார். அதனால்தான் விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணிடம், "இனிப் பாவம் செய்யாதீர்" என்று கூறி, இயேசு அவர் மனம்மாறுவதற்கு வாய்ப்புத் தருகின்றார். இயேசு இவ்வாறு செய்வதன் மூலம், "தீயோர் சாகவேண்டுமென்பது என் விருப்பம் அன்று; ஆனால், அத்தீயோர் தம் வழியினின்று திரும்பி, வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்" (எசே 33:11) என்ற வார்த்தைக்கு அர்த்தம் தருகின்றார்.

பாவத்தை விட்டுவிலகிய பவுல்:

தீயவர் தம் வழியினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதுதான் கடவுளின் விருப்பம். இவ்வார்த்தைகளுக்கு மிகப்பெரிய சான்றாய் இருப்பவர் பவுல்.

ஒரு காலத்தில் திருஅவையைத் துன்புறுத்தியதன் மூலம் கிறிஸ்துவைத் துன்புறுத்தியவர் பவுல். இவரைக் கிறிஸ்து தண்டித்திருக்கலாம். ஆனால், கிறிஸ்து பவுலை அப்படிச் செய்யாமல், அவர் திருந்துவதற்கு வாய்ப்புத் தருகின்றார். அந்த வாய்ப்பினைக் கிறிஸ்து, பவுலின் தமஸ்கு நகர் நோக்கிய பயணத்தில் தருகின்றார். பவுலும் அந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொண்டு, கிறிஸ்துவுக்காக தன் உயிரையும் தர முன் வருகின்றார்.

பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல், "கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு, மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகின்றேன்" என்கின்றார். கிறிஸ்தவரகளைத் துன்புறுத்தியதன் மூலம், கிறிஸ்துவைத் துன்புறுத்திய பவுல், கிறிஸ்துவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம் என்று சொல்வது எவ்வளவு பெரிய மாற்றம்! இத்தகைய மாற்றம் அவரிடம் ஏற்பட்டதற்குக் காரணம், கிறிஸ்து அவருக்கு மனம்மாறுவதற்கு வாய்ப்புக் கொடுத்ததாலேயே ஆகும் என்று உறுதியாகச் சொல்லாம். இதையடுத்து, அவர் சொல்லும், "கடந்ததை மறந்துவிட்டு, இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன்' என்ற வார்த்தைகளும் மிகவும் கவனிக்கத் தக்கவை.

ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதால் 'பாவி'யாக வாழ்ந்த பவுல், கடந்ததை மறந்துவிட்டு, இலக்கை நோக்கி அல்லது கிறிஸ்துவை நோக்கி ஓடினார் எனில், நாம் ஒவ்வொருவரும் கடந்ததை மறந்துவிட்டு, கடந்ததை விட்டுவிட்டு இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓட வேண்டும். அவ்வாறு நாம் இயேசுவை நோக்கி, ஓடினோம் என்றால், அவர் அதற்குரிய பரிசனைத் தருவார். அப்பரிசு எத்தகையது என்று சிந்திப்போம்.

பாழ்நிலத்தில் நீரோடை தோன்றும்:

கடவுள் கொடுத்த கட்டளையைக் கடைப்பிடிக்காததால், பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட யூதா நாட்டினர், அங்கே பன்மடங்கு தண்டனை பெற்றனர். அதன்பிறகு கடவுள் அவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அழைத்து வந்தார். இந்நிலையில் கடவுள் இறைவாக்கினர் எசாயா வாயிலாக, "முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்; முற்கால நிகழ்ச்சியைப் பற்றிச் சிந்திக்காதிருங்கள்" என்று சொல்லிவிட்டு, "புதுச் செயல் ஒன்றை நான் செய்கிறேன்" என்கிறார்.

கடவுள் செய்யும் புதுச் செயல் என்பது பாழ்வெளியிலும் பாழ்நிலத்திலும் நீரோடைகள் தோன்றச் செய்வது. இஸ்ரயேல் நாடு வறண்ட நிலப்பரப்பைக் கொண்டது. அங்கே தண்ணீர் என்பதே அதிசயம்தான். இத்தகைய சூழ்நிலையில் கடவுள் அவர்களிடம் நீரோடைகள் தோன்றச் செய்வேன் என்று வாக்களிக்கின்றார். இந்த நீரோடையை வாழ்வளிக்கும் தண்ணீரான இயேசுவோடு (யோவா 4:14, 7:38) நாம் தொடர்பு படுத்திப் பார்க்கலாம்.

ஆம், யாரெல்லாம் முன்பு நடந்ததை மறந்துவிட்டு, அல்லது முன்பு செய்ததை விட்டுவிட்டுப் பவுலைப் போன்று இலக்கை நோக்கி ஓடுகின்றார்களோ அவர்களது வறண்ட உள்ளத்தில், நிலைவாழ்வளிக்கும் இயேசு பொங்கி எழுவார். ஆதலால், நாம் செய்ய வேண்டியதெல்லாம், பாவத்தை விட்டுவிட்டு, இலக்கை நோக்கி ஓடுவதுதான்.

கடவுள் தமது அளவற்ற இரக்கத்தாலும் பேரன்பினாலும் நாம் மனம் மாறுவதற்கு வாய்ப்புத் தந்துகொண்டே இருக்கின்றார். எனவே, நாம் பாவத்தை விட்டுவிட்டு, இயேசுவை நோக்கி, நடைபோட்டு, அவர் தரும் ஆசியைப் பெறுவோம்.

சிந்தனைக்கு:

'பழைய பாவ வாழ்க்கையிலிருந்து மனம்மாறாமல், ஒருவர் புதிய வாழ்க்கையைத் தொடங்க முடியாது' என்பார் புனித அகுஸ்தின். எனவே, நாம் பாவத்திலிருந்து மனம்மாறி, புதியதொரு வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


மறையுரைச் சிந்தனை: அருள்பணி மரிய அந்தோணி பாளையங்கோட்டை

 
 தீர்ப்பிடாது வாழ்வோம்
ஓர் ஊரில் ஞானி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவரிடத்தில் ஒருவன் வந்து, குருவே என்னுடைய பாவங்களை எல்லாம் மன்னித்தருள்க என்று கெஞ்சிக் கேட்டான். அதற்கு அவர், முதலில் நீ என்ன பாவம் செய்தாய் என்று சொல், அதன்பிறகு அது மன்னிக்கக்கூடிய குற்றமா? இல்லையா? என்று சொல்கிறேன் என்றார். அவன், ஐயா! நான் இந்த ஊரில் இருக்கக்கூடிய எல்லா மனிதர்களைப் பற்றியும் தீர்ப்பிட்டுக் கொண்டும், அவதூறு பேசிக்கொண்டும் இருப்பேன். இதுதான் நான் செய்த மிகப்பெரிய பாவம் என்றான்.

எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுவிட்டு குரு அவனிடம், முதலில் நீ போய் உன்னுடைய வீட்டில் இருக்கக்கூடிய தலையணையை எடுத்துக்கொண்டுவந்து, அதிலுள்ள பஞ்சை எல்லாம் தெருவில் வைத்து, காற்றில் பறக்கவிட வேண்டும். அதன் பின்னர் வந்து என்னைப் பார் என்றார். அவனும் தன்னுடைய வீட்டிற்குச் சென்று தலையணை எடுத்துவந்து, அதிலுள்ள பஞ்சை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, குருவிடம் திரும்பி வந்தான்.

குருவே! நீங்கள் சொன்னது போன்று நான் எல்லாவற்றையும் செய்துவிட்டேன், இப்போது என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டதுதானே! என்றான். அதற்கு அவர், பஞ்சைக் காற்றில் பறக்கவிட்டால் உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று யார் சொன்னது?. இப்போது மீண்டுமாக நீ போய், காற்றில் பரந்த பஞ்சை எல்லாம் சேகரித்துக்கொண்டு வா என்றார். அவனும் போய் காற்றில் பரந்த பஞ்சை திரும்ப சேகரிக்கச் தொடங்கினான். அவனால் எல்லாற்றையும் சேகரிக்க முடியவில்லை. அது அவனுக்குக் கடினமாக இருந்தது. இதனால் அவன் வருத்தத்தோடு திரும்பிவந்து, குருவிடம் தன்னுடைய தோல்வியை ஒத்துக்கொண்டான்.

அப்போது ஞானி அவனிடம், காற்றில் பரந்த பஞ்சை மீண்டுமாக சேகரிப்பது கஷ்டம்தானே, அதுபோன்றுதான் இதுவரைக்கும் நீ பரப்பிய அவதூறுகளை, தவறான தீர்ப்பிடல்களைத் திரும்பப் பெறவதும். ஆதலால் உன்னுடைய குற்றங்களை மன்னிக்கவே முடியாது என்று சொல்லி அங்கிருந்து அவனை திரும்பிப் போகச் சொன்னார். ஒருவரைப் பற்றி நாம் பரப்பும் அவதூறு, தவறான தீர்ப்பிடல்கள் எல்லாம் எந்தளவுக்கு கொடியது என்பதால்தான், அப்படிப்பட்ட குற்றம் மன்னிக்க முடியாது என்றார் அவர்.

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு இன்றைய நாள் வாசகங்கள் தீர்ப்பிடாது வாழவோம் என்றதொரு அழைப்பைத் தருகிறது. இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசுவை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதற்காக பாவத்தில் பிடிப்பட்ட பெண் ஒருவரை மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்கள் அவரிடம் கொண்டுவருகிறார்கள். ஆனால் இயேசு அவர்களின் தீய எண்ணத்தை அறிந்துகொண்டு உங்களில் பாவம் செய்யாதவர் இப்பெண்ணின் மீது முதலில் கல் எறியட்டும் என்று சொல்கிறார். உடனே சிறுவர் தொடங்கி, பெரியவர் வரை யாவருமே அவ்விடத்திலிருந்து களைந்துபோய்விடுகின்றனர். அதன்பிறகு இயேசு அப்பெண்ணைப் பார்த்து, நானும் உன்னைத் தீர்ப்பிடேன், இனிமேல் பாவம் செய்யாதீர் என்று சொல்லி அனுப்புகிறார்.

இங்கே ஒருவரைப் பற்றித் தீர்ப்பிட, கடவுளைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை என்று ஆண்டவர் இயேசு மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறார். மனிதர்களாகிய நாம் ஒருவரைப் பற்றிய முழுமையாகத் தெரியாமலே தீர்ப்பிடுகிறோம். இன்னும் சில நேரங்களில் நம்முடைய தவறை மறைப்பதற்காக பிறரைத் தீர்ப்பிடுகிறோம். பிறருடைய தவறைப் பெரிதுபடுத்துகிறோம். அதனால் ஆண்டவர் இயேசு கூறுகிறார், பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள், அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள் என்று (மத் 7:1). இயேசு தொடர்ந்து சொல்வார், உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? என்று.

ஆதலால் பிறரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கும் முன்னால் நாம் தீர்ப்பளிக்கத் தகுதியானவர்கள்தானா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். விபசாரித்தில் பிடிபட்ட பெண்ணை ஆண்டவர் இயேசு தீர்ப்பிட்டிருக்கலாம். ஏனென்றால் அவர் பாவமற்றவர். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக அப்பெண்மணியை, அவளுடைய பாவங்களை மன்னித்து, இனிமேல் பாவம் செய்யாதே என்று சொல்லி அனுப்பிக்கிறார்.

ஆம், தீயோர் அழிவுற வேண்டும், கெட்டு மடியவேண்டும் என்பதல்ல, மாறாக அவர்கள் மனம்மாற வேண்டும் என்பதுதான் கடவுளின் மேலான விரும்பாக இருக்கிறது. இதைதான் நாம் விவிலியத்தின் பல இடங்களில் குறிப்பாக எசேக்கியல் 33:11 ல் வாசிக்கின்றோம்.

நம் கடவுள் நமது அழிவில் மகிழ்கின்ற கடவுள் அல்ல, மாறாக நாம் அனைவரும் வாழவேண்டும் என்று விரும்புகின்ற கடவுள்.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் நாத்திக அலை பரவியிருந்த நேரம் அது. அப்போது ஓரிடத்தில் சமய பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சமய சொற்பொழிவு நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் திடிரென்று கூட்டத்திலிருந்து எழுந்த ஒருவன், கடவுள் என்பது ஒரு கற்பனை, கடவுள் என்று ஒருவர் இந்த உலகத்தில் இல்லவே இல்லை. கடவுளை நம்புகிறவன் முட்டாள். ஒருவேளை கடவுள் இந்த உலகில் இருக்கிறார் என்று சொன்னால், அவர் என்னை மூன்று நிமிடத்திற்குள் அடித்துக் கொல்லட்டும் என்று திரண்டிருந்த கூட்டத்தினர் முன்பாகச் சவால் விட்டான். இதைப் பார்த்து மக்கள் வியப்படைந்தனர்.

ஒரு நிமிடம் ஆனது, இரண்டு நிமிடம் ஆனது, மூன்று நிமிடமும் ஆனது. ஆனால் அவன் அப்படியே உயிரோடு இருந்தான். உடனே அவன் மக்கள் கூட்டத்தைப் பார்த்து, பார்த்தீர்களா! கடவுள் இல்லை என்பது இப்போது நிரூபணம் ஆகிவிட்டது. கடவுள் ஒருவேளை இருந்திருந்தால் நான் இந்நேரம் இறந்திருப்பேனே! என்று கூட்டத்தைப் பார்த்து ஏளனமாகப் சிரித்தான். மக்களும் அவனுடைய பேச்சை நம்ப ஆரம்பித்தார்கள். இதனால் கூட்டத்தில் மிகப்பெரிய குழப்பமே ஏற்பட்டது

அப்போது அங்கே இருந்த இட்டிவரா என்ற சாது மக்கள் கூட்டத்தைப் பார்த்து, கடவுள் தந்தையும், தாயுமானார். இன்னும் சொல்லப்போனால் நம் தந்தை தாயைவிட நம்மீது மேலான அன்புகொண்டிருப்பவர், அப்படிப்பட்ட கடவுள் நாம் அழிவுறவேண்டும் என்று விரும்புவாரா?. ஒருபோதும் இல்லை. கடவுள் நம்மைக் காப்பாவரே அன்றி, அழிப்பவர் அல்ல என்று முடித்தார்.

திரண்டிருந்த மக்கள்கூட்டம் இதைக் கேட்டு கடவுள் உண்மையிலே இருக்கிறார் என்று நம்பத் தொடங்கினார்கள்.

ஆம், நம் கடவுள் நாம் அழிவுறவேண்டும் என்று அல்ல, மாறாக வாழவேன்றும் என்று விரும்புகிறார். அதனால் இயேசு விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை பாவி என்று தீர்ப்பிடாமல், அவளை மனதார மன்னித்து, அவள் புதிய ஒரு வாழ்க்கை வாழ வழிவகுக்கின்றார்.

இன்றைய நாள் வாசகங்கள் நமக்குத் தரும் அடுத்த சிந்தனை. நாம் நமது கடந்தகால வாழ்வை மறந்துவிட்டு, புதியதொரு வாழ்க்கை வாழவேண்டும் என்பதுதான். எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் கூறுகிறார், முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்; முற்கால நிகழ்ச்சி பற்றிச் சிந்திக்காதீர்கள்; இதோ புதுச்செயல் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றிவிட்டது என்று கூறுகிறார். இன்றைய இரண்டாம் வாசகத்திலும்கூட பவுல் பிலிப்பியருக்கு எழுதுகிறபோது கூறுகிறார், கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதை கண்முன் கொண்டு, பரிசு பெறவேண்டிய இலக்கை நோக்கி தொடர்ந்து ஓடுகிறேன் என்று.

ஆகையால் இந்த தவக்காலத்தில் நமது கடந்தகால - பாவமான வாழ்வை -முற்றிலுமாக மறந்துவிடுவோம். புதியதொரு வாழ்க்கை வாழ முயற்சி எடுப்போம். ஏனென்றால் கடவுள் நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்துவிட்டார், நம்மை தூய, மாசற்றவர்களாக மாற்றிவிட்டார்.

முதல் உலகப்போரின்போது இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்தவர் லீயோட் ஜார்ஜ் என்பவர். ஒருநாள் அவர் தன்னுடைய நண்பரோடு வீட்டுக்குப் பின்பக்கம் இருக்கக்கூடிய கோல்ப் மைதானத்தில் கோல்ப் ஆடிவிட்டு, புல்வெளி மைதானத்தின் கதவைக் கடந்துவந்தார். அவருக்குப் பின்னால் வந்த நண்பர் கதவை மூடாமலே விட்டுவிட்டார்.

அதைக் கவனித்த பிரதமர், திரும்பி வந்து கதவை அடைத்துவிட்டு, கதவைக் கடந்து வந்துவிட்டால், அதை அடைத்துவிடுவது எனது பழக்கம் என்று சொல்லிவிட்டுச் சொன்னார், உங்களுக்கு மனநிம்மதி வேண்டுமெனில் உங்களுக்குப் பின்னால் உள்ள கதவை மூடிவிடுங்கள்; உங்களது கவலைகளை அங்கேயே விட்டுவிடுங்கள்; கடந்ததைத் தொடாதீர்கள்; நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் என்று சொல்லி முடித்தார்.

ஆம், நாம் ஒவ்வொருவரும் நமது கடந்த கால வாழ்க்கையை மறந்துவிட்டு, புதியதொரு வாழ்க்கை வாழ முயற்சி எடுப்போம். அதுவே இந்தத் தவக்காலத்தில் இறைவன் தரும் அழைப்பு.

கடந்த காலம் என்பது கனவு; எதிகாலம் என்பது கற்பனை; இன்று நன்றாக வாழ்ந்தால் ஒவ்வொரு கடந்த நாளும் சந்தோசக் கனவாகும், நாளைய நம்பிக்கையை கற்பனையாக்கும். இன்றைய நாளை மட்டும் பாருங்கள், இன்று மட்டுமே வாழுங்கள் என்பார் காளிதாசர் என்ற மகான். ஆண்டவர் இயேசுகூட நாளைக்காக கவலைப்படாதீர். ஏனெனில் நாளைய வழி பிறக்கும் என்று இந்த நாளில் வாழச் சொல்வார் (மத் 6:34).

ஆகவே இந்த தவக்காலத்தில் நாம் நமது கடந்த கால வாழ்வை மறப்போம். புதியதொரு வாழ்க்கை வாழ முயற்சிப்போம். குறிப்பாக பிறரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பிடும் மனநிலையிலிருந்து மனம் மாறுவோம். இறைவனின் அளவு கடந்த அன்பை உணர்ந்து, இறைவழியில் நடப்போம். இறையருளை நாமும் நிறைவாய் பெறுவோம்.

எனவே தீர்ப்பிடாது வாழ்வோம். இறைவன் தரும் அருளை நிறைவாய் பெறுவோம்.
 இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
 தவக்காலத்தின் 5-ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்:-
எசாயா 43:16-21
பிலிப்பியர் 3:8-14
யோவான் 8:1-11


உங்களில் பாவமில்லாதவர் முதல் கல்லை எறியட்டும்" என்று இயேசு சொல்லி முடிந்தவுடன் வானத்தில் இருந்து ஒரு கல் விழுந்தது என்று வேடிக்கையாகச் சொல்வது உண்டு. ஏனெனில் கடவுள் ஒருவர்தான் நல்லவர், பரிசுத்தர். பிறரைத் தீர்ப்பிடுவதற்கு கடவுள் ஒருவர்தான் தகுதியானவர் என்ற செய்தி இன்றைய நற்செய்தியிலே வழங்கப்படுகிறது.

இன்றைய நற்செய்திக்கு வாருங்கள். இயேசுவின் முன்பாக விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் கூனிக் குறுகிப் போய் நிற்கும் காட்சி. தங்களை நீதிமான்களாக நல்லவர்களாகக் கருதிக் கொண்ட பரிசேயர் மறைநூல் அறிஞர் மறுபுறம் நிற்கின்றனர். நடுவே இயேசு தரையில் ஏதோ எழுதுவது போன்ற காட்சியில் அமர்ந்திருக்கிறார். இந்தக் காட்சியை இன்று நடப்பது போல கண்முன் கொண்டு வாருங்கள்.

பெண்ணின் விபச்சாரம் என்ற பாவமானது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் பரிசேயர், மறைநூல் அறிஞர்களின் பாவங்களோ யாருக்கும் வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆனால் உள்ளங்களை ஆய்ந்தறிகின்ற கடவுளின் மகனாம் இயேசுவுக்கு இந்தப் பரிசேயர், மறைநூல் அறிஞர்களின் பாவங்கள் நன்றாகத் தெரியும். உங்களில் பாவமில்லாதவன் முதல் கல்லை எறியட்டும் என்று சொன்னதின் மூலம் சங்கப் பரிவாரங்களாகிய பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் விபச்சாரத்தில் பிடிபட்டப் பெண்ணை விட பெரிய பாவிகள் என்பதை இயேசு தெளிவாகக் காட்டுகிறார்.

பரிசேயர், மறைநூல் அறிஞர்களின் பாவங்கள் யாவை?

முதல் குற்றம், பிறரின் குற்றங்களைப் பெரிதுபடுத்தி தங்களின் குற்றங்களை மூடி மறைக்க முயற்சி செய்தது. ஊதாரி மைந்தன் உவமையில் வரும் மூத்த மகன் (லூக். 15:25), ஆலயத்தில் செபித்த பரிசேயர் (லூக். 18:9-14) இவர்களைப்போல, பிறரது குறைகளையும், குற்றங்களையும் மட்டுமே பேசித் தங்களை நல்லவர்களாக நீதிமான்களாகக் காட்ட முனைந்தனர்.

ஒரு கணவனுக்குத் தன் மனைவியின் காது வர வர மந்தமாகிக் கொண்டு வருவது போல் தோன்றியது. ஒரு தடவை தன் மனைவி சமைத்துக் கொண்டிருந்தபோது அவளுக்குத் தெரியாத வகையில் பின்புறமாக 10 அடி தூரத்தில் நின்று நான் பேசுவது கேட்கிறதா என்று மெதுவாகக் கேட்டான். பதில் இல்லை. 5 அடி தூரத்தில் நின்று கேட்டான். பதில் இல்லை . இறுதியாக ஒரடி தூரத்தில் நின்று நான் பேசுவது கேட்கிறதா என்று கேட்டான். அதற்கு மனைவி, நீங்கள் ஏற்கனவே இரு முறை கேட்ட கேள்விக்குச் சொன்ன பதிலையே இப்போதும் சொல்கிறேன் - நன்றாகவே கேட்கிறது என்றாள். பார்த்தீர்களா? காது மந்தம் மனைவிக்கு அல்ல. கணவனுக்குத்தான். இந்தக் கணவனைப் போலத்தான் இந்தப் பரிசேயக் கூட்டம். இன்றைய உலகில் உள்ள பரிசேயர் கூட்டமும் பிறரின் குறைகளை மிகைப்படுத்திப் பேசித் தங்கள் குற்றங்களை மறைப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். பிறர் பெயர் கெட்டாலும் பரவாயில்லை தாங்கள் நல்லவர்கள் என்று பிறர் நினைக்க வேண்டும் என்று செயல்படுகிறார்கள்.

இரண்டாவதாக பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் திட்டமிட்டு சூழ்ச்சி செய்து பிறரைக் கெடுக்க, அழிக்க நினைப்பவர்கள். பரிசேயர் விபச்சாரப் பெண்ணை இயேசுவிடம் கொண்டு வந்தது பாவத்தின் மீது இருந்த வெறுப்பின் காரணமாகவோ, சட்டத்தின் மீது இருந்த பிடிப்பின் காரணமாகவோ அல்ல. இயேசுவிடம் ஏதாவது குற்றம் கண்டுபிடிக்கப் பரிசேயர் வகுத்த சூழ்ச்சி அது. மோசே சட்டப்படி வேசித்தனம் செய்தவர் கல்லால் எறியப்பட்டு கொல்லப்பட வேண்டும். ஆனால் யூதர்களோ உரோமையருக்கு அடிமையாக இருந்ததால், உரோமையரின் சட்டம் இதை அனுமதிக்கவில்லை. இத்தகைய மரணத் தண்டனையை உரோமைச் சட்டம் தடை செய்து இருந்தது. எனவே யூதச் சட்டத்தை ஆதரித்தார் என்றால் உரோமைக்கு எதிரியாக்கிவிடலாம். யூதச் சட்டத்திற்கு மதிப்புக் கொடுக்கவில்லையென்றால் யூதச் சட்டத்தை எதிர்ப்பவர் என்று இயேசுவைச் சிக்க வைக்க நினைத்த கூட்டம்தான் இந்தப் பரிசேயர் கூட்டம்.

அண்மையில் நமது பாரத நாட்டிலே அரியானா மாநிலத்திலே செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக, புனிதப் பசுவைப் பங்கப்படுத்தினார்கள் என்று கூறி மதவெறியர்கள் ஐந்து தலித் சகோதரர்களைக் கொலை செய்தார்களே, இதுதான் திட்டமிட்டு அடிக்கத் துடிக்கும் பரிசேயத்தனம்.

மூன்றாவதாக சட்டத்தைக் கையிலே எடுத்துக்கொண்டு பரிசேயர்கள் மக்களின் வாழ்வை வளப்படுத்துவதற்குப் பதிலாக மக்களை ஒடுக்கவும், குற்றம் கண்டு பிடிக்கவும் பயன் படுத்தினார்கள். ஓய்வுச் சட்டங்கள், தூய்மை முறைச் சட்டங்கள், ஒழுக்க நெறிச் சட்டங்கள் முதலியவற்றால் மக்களின் வாழ்வில் சுமையை ஏற்றினார்களேயொழிய அவர்களின் வாழ்வுக்கு வளமை கொண்டு வரவில்லை. எனவேதான் இயேசு சொன்னார்: சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் வைக்கிறார்கள் (மத். 23:4) என்று. இதுதான் நம் நாட்டில் நடக்கும் தடாச் சட்டம், பொடாச் சட்டம், எஸ்மா சட்டம், கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம். இப்படிச் சட்டங்களை இயற்றி எளியவரை ஒடுக்கி, பதவிக்காரர், பணம் படைத்தோர், அரசியல்வாதிகள் இன்று சட்டத்தில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.

1) ஆனால் இயேசு இத்தகைய அநியாயச் சட்டங்களைத் தூக்கி எறிந்தவர்.

2) இயேசு பரிசேயர்களின் பாவங்களை நன்றாக அறிந்து தெரிந்து இருந்தாலும் அவர் தீர்ப்பிடவில்லை. விபச்சாரப் பெண்ணை மன்னித்ததுபோல் மன்னிக்கத் தயாராக இருந்தார். உங்களில் பாவமில்லாதவர் முதல் கல்லை எறியட்டும் என்று இயேசு குறிப்பிட்டதோ தாங்கள் மறைத்து வைத்திருக்கும் குற்றங்களை ஏற்று மனம் திரும்பி வர வேண்டும் என்பதற்காகவே. ஆனால் பரிசேயர்களோ அதைச் செய்யவில்லை. அடடா! இதுவரை மற்றவர்ளைத்தான் பாவி என்று பார்த்தோம். அந்தப் பட்டியலில் நம்மையும் அல்லவா சேர்த்துவிட்டார் என்று சொல்லி கையில் இருந்த கல்லைக் கீழே போட்டார்களே தவிர மனம் மாறி இயேசுவிடம் வராது ஓடிவிட்டார்கள்.

கூனிக் குறுகி நின்ற பெண்ணைப் பார்த்து, நிபந்தனையற்ற இரக்கத்தோடும் அன்போடும் சொல்கிறார் இயேசு: உன் பாவங்கள்
மன்னிக்கப்பட்டன. நான் உன்னைத் தீர்ப்பிடவில்லை, சமாதானமாகப் போ. இனி பாவம் செய்யாதே என்றார் (யோவா. 8:11).
இன்று இயேசு உன்னைப் பார்த்துச் சொல்கிறார்.
1) உன்னை யாரும் தீர்ப்பிடவில்லையா?
2) பாவம் இல்லாதவர் பிறர் மீது முதல் கல்லை எறியட்டும்.
3) இயேசு மனமாற்றத்திற்கு அழைக்கிறார். பாவிப் பெண் பெற்ற மன்னிப்பைப் பெற நீ தயாராக இருக்கிறாயா? ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெறு. இயேசுவை மன்னிக்கும் தேவனாகக் காண்பாய்.

அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
 
 மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
தவக்காலத்தின் 5-ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்:-
எசாயா 43:16-21
பிலிப்பியர் 3:8-14
யோவான் 8:1-11



இயேசு நமது பாவங்களை மன்னித்துவிடுவார்

நமது ஆண்டவராம் இயேசு கிறிஸ்து பாவத்தை வெறுக்கின்றார். ஆனால் எந்தப் பாவியையும் அவர் வெறுப்பதில்லை.
அந்தப் பெற்றோருக்கு அவன் ஒரே மகன், அவன் ஒரே பிள்ளை . ஒரே மகன் என்பதால் அவனை கண்ணே மணியே என்று நாளும் போற்றி வளர்த்தார்கள். அவன் வளர்பிறை போல் வளர்ந்தான். வளர்ந்தவன் அவனது பெற்றோர் சம்பாதித்த செல்வத்தைத் தவறாகப் பயன்படுத்தினான்.

தவறான நண்பர்கள் சேர்ந்தார்கள். தவறான பழக்கவழக்கங்கள் அவனை ஒட்டிக்கொண்டன. கண் போன போக்கிலே அவன் மனம் போனது ; மனம் போன போக்கிலே அவன் கால் போனது.

பெற்றோர் இப்படித்தான் வாழவேண்டும் என்றார்கள். ஆனால் கல்மனம் படைத்த மகனுக்கு அவர்கள் கூறியது பிடிக்கவில்லை . சிற்பிகளான அவனது பெற்றோரை விட்டு அவன் ஒரு நாள் ஓடிப்போனான். ஓடிப்போகும் போது வீட்டில் இருந்த பணம் அனைத்தையும் எடுத்துச் சென்றுவிட்டான்.

அவன் வீட்டைவிட்டுச் சென்ற நாளிலிருந்து அவனுடைய பெற்றோர் சரியாக உண்ணவும் இல்லை, உறங்கவும் இல்லை. என்றாவது ஒரு நாள் மகன் திரும்பி வருவான் என்று கண்விழித்துக் காத்திருந்தார்கள். அவன் திரும்பி வரவேயில்லை.

ஒரு நாள் தகப்பன் தன் வயதான மனைவியை விட்டுவிட்டு ஒரு வயதான குதிரை மீது ஏறி மகனைத் தேடிச்சென்றார். ஓடிப்போன மகன் தீய வழியில் பணத்தை, சொத்தை செலவழித்துவிட்டு தனிமரமாக நின்றான். அவனை விட்டு அவன் நண்பர்கள் ஓடிவிட்டனர்.

அதன்பிறகு அவன் தீய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள பணம் தேவைப்பட்டதால் திருட்டுத் தொழிலில் இறங்கினான்; பெரும் வழிப்பறித் திருடனானான்.

தந்தை மகனைத் தேடுவதை நிறுத்தவில்லை. 10 ஆண்டுகள் தொடர்ந்து தேடினார். அன்று பெரிய காட்டின் வழியாகப் பயணம் செய்யவேண்டிய சூழ்நிலை.

நடுக்காடு! இரவு நேரம் எங்கிருந்தோ குரலொலி ஒன்று கேட்டது. டேய், உன் பயணத்தை நிறுத்து. அந்த தகப்பன் நின்றார். ஒரு முரட்டுத் திருடன் ஓடி வந்தான். அந்தத் திருடன் அந்த தகப்பனைப் பிடித்து, உன்னிடமிருக்கும் பணத்தை எடு என்றான். அந்த தகப்பனோ, என்னிடம் ஏது பணம்? நான் ஓர் ஏழை. சாப்பிடாமல் என் பயணத்தைத் தொடர்ந்து வருகின்றேன் என்றார். அந்தத் திருடனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. பணம் இல்லாத நீ பிணமாவதுதான் நல்லது என்று சொல்லிவிட்டு அந்தத் தகப்பனை வெட்டுவதற்கு அரிவாளை எடுத்து, தனது இடது கையை ஓங்கினான். அப்போது அந்தத் தகப்பனுக்கு ஒரு சந்தேகம்! என்ன சந்தேகம்? காணாமல் போன அவருடைய மகன் இடது கை பழக்கமுடையவன். ஆகவே அந்தத் திருடனைப் பார்த்து, தகப்பன், சற்றுப் பொறு , என் தலையை வெட்டுவதற்கு முன் நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விழைகின்றேன் என்றார். அதற்கு அந்தத் திருடன், என்ன சொல்ல விரும்புகின்றாய்? சீக்கிரம் சொல் என்றான். தகப்பன், நீ யார்? என்றார். அதற்கு அந்தத் திருடன், நான் யாராக இருந்தால் என்ன? முதலில் நீ யார்? என்று சொல் என்றான். அந்தத் தகப்பனோ, நான் காணாமல் போன மகனைத் தேடி அலையும் தகப்பன் என்றார். உடனே திருடன் அவன் முன்னே நிற்பது யார் என்பதை அறிந்து கொண்டான். தகப்பனின் காலில் விழுந்து, அப்பா நீங்கள் தேடும் அந்த மகன் நான் தான். நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளமாட்டீர்களா? என்னைத்தான் நீங்கள் தேடிவந்திருக்கிறீர்கள் என்றான்.

பிரிந்தவர் கூடினர்! தந்தையும் மகனும் வீட்டிற்கு வந்தனர்!

இந்தக் கதையில் வந்த தகப்பனைப் போன்றவர்தான் நம் ஆண்டவராம் இயேசு.

பாவம் என்பதற்கு திருட்டு என்ற பொருளும் உண்டு.

இயேசு ஒரு திருடரைத் தேடி எரிகோ நகருக்குச் சென்றார். இன்னொரு திருடனைத் தேடி கல்வாரி மலைக்குச் சென்றார்.

முதல் திருடரை இயேசு ஒரு மரத்தின் மீது சந்தித்தார். லூக் 19:1-10 முடிய உள்ள பகுதி : சக்கேயு என்னும் குள்ள மனிதர் ஒருவர் எரிகோ என்னும் நகரிலே வாழ்ந்து வந்தார். அவர் குள்ளனாகவும் பாவியாகவும் இருந்ததால் ஒரு மரத்தின் மீது அமர்ந்து இயேசுவைப் பார்க்க நினைத்தார். தன்னைப் பார்க்க நினைத்தவரைப் பார்த்தார் இயேசு. அந்த மரத்திலிருந்த சக்கேயு அருகில் நின்று, இழந்து போனதை தேடி மீட்கவே நான் வந்தேன் என்று சொல்லி, அவரை மரத்தை விட்டு கீழே இறங்கச் சொன்னார். உன் பாவத்தை உடனே கைவிடு என்றார்.

அழகான பாவ அறிக்கையில் சக்கேயு சொன்னது என்ன? ஆண்டவரே என் உடைமையில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகின்றேன் ; நான் யார் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகின்றேன் என்றார். சக்கேயு ஒரு பாவி; அவரை இயேசு மன்னிக்கின்றார்.

கல்வாரியிலே ஒரு திருடன். லூக் 23:38-43 முடிய உள்ள பகுதி. இரண்டு திருடர்களில் ஒருவன், நாம் துன்பப்படுவது முறையே என்று சொல்லிவிட்டு மனம் மாறி இயேசுவைப் பார்த்து, என்னை ஏற்றுக்கொள்ளும் என்றான். உடனே இயேசு அவன் பாவத்தை மன்னித்தார்.

இன்றைய நற்செய்தியிலே யோவா 8:1-8 - இல் ஒரு பாவியின் மனம் இயேசுவைத் தேடுகின்றது. அவர் ஒரு திருடி. தன் அழகை வைத்து எத்தனையோ பேரின் தூய மனத்தைத் திருடியவர்! ஆனால் இயேசு அவரை மன்னித்துவிடுகின்றார்.

இந்த உலகத்திலே சிலர் தங்களுடைய பாவங்களை மறைத்து மற்றவர்களுடைய குற்றங்களைக் கண்டுபிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் பதவியை, பட்டத்தை, பணத்தை, பரிசை பிறரிடமிருந்து கவர்ந்துகொள்கின்றார்கள்.

சிலர் நல்ல பெயரைக் கவர்ந்துகொள்கின்றார்கள்!
சிலர் நீதியைக் கவர்ந்துகொள்கின்றார்கள்!
சிலர் நேர்மையைக் கவர்ந்துகொள்கின்றார்கள்!
சிலர் மகிழ்ச்சியைக் கவர்ந்துகொள்கின்றார்கள்!
சில சின்னப் பிள்ளைகள் முறுக்கைத் திருடி இருப்பார்கள்; கெட்டி உருண்டையைத் திருடி இருப்பார்கள் ; பென்சிலைத் திருடி இருப்பார்கள் ; பேனாவைத் திருடி இருப்பார்கள்.

ஓர் அப்பாகிட்ட வாத்தியார், உங்கள் பையன் தினமும் பென்சிலைத் திருடிகிட்டு வீட்டுக்கு வர்றான் அப்படின்னாரு. அதற்கு அந்த அப்பா, மகனைப் பார்த்து, நான் தினமும் ஆபீஸ்ஸிலிருந்து பேனாவைத் திருடிக்கிட்டு வர்றேனே! அது பத்தாதா? என்றார். நாம் எல்லாருமே பாவிகள்தான்.

நற்கருணை உருவிலே நம்மைத் தேடிவரும் இயேசுவின் பாதத்திலே விழுந்து, சுவாமி நான் பாவி என்போம்.

முதல் வாசகம் கூறுவது போல நடந்ததை மறந்துவிட்டு, இரண்டாம் வாசகம் கூறுவது போல கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதி வாழ்வில் தொடர்ந்து முன்னேறுவோம். இயேசு அப்போது நமது பாவங்களையெல்லாம் மன்னித்து தமது பிள்ளைகளாக நம்மை ஏற்றுக்கொள்வார்.

மேலும் அறிவோம் :

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை ; கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு (குறள் : 290).
பொருள்: களவு செய்வோர்க்கு உயிரோடு வாழும் நிலையும் விரைவில் தவறிப்போகும்! கள்வை உள்ளத்தாலும் நினைத்துப் பாராதவர்க்குத் தேவருலகு ஆகிய வானகம் தவறாது கிடைக்கும்.

மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்
குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 
 மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
தவக்காலத்தின் 5-ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்:-
எசாயா 43:16-21
பிலிப்பியர் 3:8-14
யோவான் 8:1-11



ஒரு மாணவன் ஒழுங்காகப் படிப்பதில்லை . ஆசிரியர் அவன் ஏன் ஒழுங்காகப் படிப்பதில்லை ? என்று கேட்டதற்கு அவன், "சார்! என் அப்பாவும் அம்மாவும் இரவும் பகலும் சண்டை போடுகின்றனர். எனவே, என்னால் படிக்க முடியலை" என்றான், "யாருடா உன் அப்பா?" என்று ஆசிரியர் கேட்டதற்கு அவன், "அதைப் பற்றித் தான் சார் ஒவ்வொருநாளும் சண்டை நடக்கிறது" என்றான்.

சில தம்பதியருடைய தவறா னே நடத்தையால் அவர்களுடைய வாழ்க்கை மட்டுமல்ல, அவர்களுடைய பிள்ளைகளின் வாழ்வும் பாதிக்கப்படுகிறது. எனவே தான் விபசாரத்தைத் தடை செய்துள்ளார் கடவுள்,
"விபசாரம் செய்யாதே" {இச 5:18) என்றும், "பிறர் மனைவியைக் காமுறாதே" (இச 5:21) என்றும் கடவுள் கட்டளை கொடுத்தார். ஒருவர் உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் விபசாரம் செய்யக்கூடாது. (ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தில் ஏற்கெனவே பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று" (மத் 5:27) என்று கிறிஸ்து தமது மலைப்பொழிவில் கூறியுள்ளார்.

பிறருடைய மனைவியை விரும்பி நோக்காதிருப்பதுவே ஓர் ஆணுக்கு ஆண்மை (வலிமை), அறம் மற்றும் நிறை ஒழுக்கமும் ஆகும் (குறள் 148). ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதுதான் இல்லற நெறி, ஒருத்தனின் உள்ளத்தில் ஒருத்தி மட்டும் இருக்க வேண்டும். அதை விடுத்து, "நினைவெல்லாம் நித்யா, மனமெல்லாம் மல்லிகா, உடலெல்லாம் உஷா. ஆயுளெல்லம் ஆஷா, பகலெல்லாம் பாமா, இரவெல்லாம் இரம்யா " என்று ஆறுபே கரை வைத்திருக்கக்கூடாது. அவ்வாறே ஒரு பெண்ணின் உள்ளத்திலும் ஓர் ஆண் மட்டுமே இருக்க வேண்டும்.

ஓர் ஆசிரியர் மாணவர்களிடம், "கண்ணகி மதுரையை தீயினால் சுட்டு எரித்தாள். இதிலிருந்து என்ன தெரிகிறது?" என்றார். மாணவர்கள், "சார்! கண்ணகி காலத்தில் தீயணைக்கும் படை இல்லை என்பது தெரிகிறது " என்றார்கள்! கணவனையே கண்கண்ட தெய்வமாகத் தொழும் பெண். "மழை பெய்யட்டும்" என்றால் மழை பெய்யும் (குறள் 55), கற்பு நெறி பெண்ணுக்கு அணிகலனும் அரணுமாகும்.

ஆனால், இன்றைய நற்செய்தியில் ஒரு பெண் வருகிறார். அவர் விபசார குற்றத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவர். மோசேயின் சட்டப்படி. விபசாரக் குற்றத்தில் ஈடுபட்ட ஆண்-பெண் ஆகிய இருவருமே கொலை செய்யப்பட வேண்டும் (லேவி 20:10). பரிசேயரும் மறைநூல் அறிஞரும் விபசாரம் செய்த ஆணை விட்டுவிட்டு, பெண்ணை மட்டும் இயேசுவிடம் கொண்டுவந்து அவரின் தீர்ப்பை எதிர்பார்த்து கையில் கற்களுடன் காத்திருக்கின்றனர். இயேசுவோ மோசேயின் சட்டம் சரியில்லை என்றோ அல்லது அப்பெண் விபசாரம் செய்யவில்லை என்றோ கூறவில்லை, மாறாக, மக்கள் கூட்டத்திடம், "உங்களுள் பாவம் இல்லாதவர் இப்பெணமேல் கல் எறியட்டும்" என்கிறார். எல்லாரும், பெரியவர் முதலாக சிறியவர் ஈறாக, கற்களைக் கீழே போட்டுவிட்டு தலையைக் கீழே போட்டுக்கொண்டு வீடு திரும்புகின்றனர். அத்தனை பேரும், தங்கள் கண்ணிலிருந்த மரக்கட்டயைப் பார்க்காமல், அப்பெண்ணின் கண்ணிலிருந்த துரும்பை எடுக்க முற்பட்ட வெளிவேடக்காரர்கள் (மத் 7:3). தமக்கு முன்பாகக் கூனிக்குறுகி நின்ற அப்பெண்ணைப் பார்த்து கிறிஸ்து. "இனி பாவம் செய்யாதீர்" (யோவா 8:10) என்கிறார். யூதர்கள் அப்பெண்ணுக்கு விதிக்கத் துடித்த மரண தண்டனையை, இயேசு ஆயுள் தண்டனையாக மாற்றி எழுதுகிறார்.

மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிய ஓர் அறிஞர் அதற்கான காரணத்தைப் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார், "மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் வாழ்க்கைப் புத்தகத்தில் ஒரு சில பக்கங்கள் கிழித்து எறியப்படுகின்றன. அப்பக்கங்களைத் திருத்திப் புதிய பதிப்பை வெளியிடும் வாய்ப்பு அவருக்கு மறுக்கப்படுகிறது." ஆழமான அழகான சிந்தனை முத்து!

பாவிகளின் அழிவை அல்ல, அவர்கள் மனம்மாறி வாழ்வதையே கடவுள் விரும்புகிறார் (எசே 18:23). "தவறு என்பது தவறிச் செய்வது; தப்பு என்பது தெரிந்து செய்வது; தவறு செய்தவன் வருந்தி ஆகணும்; தப்பு செய்தவன் திருந்தப் பார்க்கணும்" (திரைப்படப் பாடல்).

ஒருமுறை நாம் திருந்திய பின், மறுபடியும் நமது பழைய பாவ வாழ்வை நினைக்கக்கூடாது. கடவுள் நமது பாவங்களை எல்லாம் ஆழ்கடலில் எறிந்துவிட்டார். கடவுள் நம் பாவங்களை கணிப்பொறியில் ஏற்றுபவர் அல்லர். இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் கூறுவதென்ன? "முன்பு நடந்தவற்றை மாறந்துவிடுங்கள்; முற்கால முயற்சி பற்றிச் சிந்திக்காதீர்கள். இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்" (எசா 43:18-19). இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார், "கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு, பரிசு பெறவேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன்" (பிலி 3:13-14).

ஒரு புண் ஆறிவிட்டது: அதன் மேல் புறத்தோல் காய்ந்துவிட்டது. ஆனால் மறுமடியும் அப்புண்ணைக் கீறிவிட்டுக் காயத்தைப் புதுப்பிப்பது முட்டாள் தனமாகும். நமது பழைய பாவங்களை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவுபடுத்தி நம்மிடம் குற்றப்பழி உணர்வை என்றும் பசுமையாக வைத்திருக்கும்படி அலகை முயற்சி எடுக்கிறது. அலகையின் வேலை என்ன? அல்லும் பகலும் கடவுளின் மக்கள்மீது குற்றம் சுமத்துகிறது (திவெ 12:10). கிறிஸ்துவின் வேலை என்ன? அல்லும் பகலும் கடவுளிடம் நமக்காகப் பரிந்து பேசுகிறார் (எபி 7:25). நமது பாவக் கடன் பத்திரத்தைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்துவிட்டார் (கொலோ 2:14),

"நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தாலும், கடவுள் திருமுன் நம் உள்ளத்தை அமைதிப்படுத்த முடியும். ஏனெனில் கடவுள் நம் மனச்சான்றைவிட மேலானவர்" (1 யோவா 3:20). எனவே, பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிட்டு, புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்வோம் (எபே 4:22-33).
தவக்காலத்தின் இறுதிக் கட்டத்திலுள்ள நமக்குக் கிறிஸ்து கூறுவது: "உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டன; இனி பாவம் செய்யாதீர்கள்."
தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 
 திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
தவக்காலத்தின் 5-ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்:-
எசாயா 43:16-21
பிலிப்பியர் 3:8-14
யோவான் 8:1-11


இயேசுவின் நிமிர்ந்த பார்வை

"அக்கினிப் பிரவேசம்" - இது ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை.
கல்லூரியில் படிக்கும் இளம்பெண் பேருந்துக்காகக் காத்து நிற்கிறாள். இருட்டிவிட்டது. இடியுடன் கூடிய மழைவேறு. ஒரு வழியாக பேருந்து வருகிறது; ஆனால் நிற்காமல் போய் விடுகிறது! தனியே தவிக்கிறாள்.

படகுக்கார் ஒன்று வந்து உரசுவதுபோல் பக்கத்தில் நிற்கிறது. ஓட்டி வந்த இளைஞன் கதவைத் திறந்து விடுகிறான். செய்வது இன்னதென்று அறியாமலேயே காருக்குள் நுழைகிறாள். ஒரு பங்களா முன் கார் நிற்கும்போதுதான் ஒருவாறு அவளுக்குப் புரிகிறது - புலியின் பிடியில் புள்ளி மானாகிவிட்ட அவளது கற்பு சூறையாடப்படுகிறது.

அழுகையோடும் இனமறியா மனஉளைச்சலோடும் நடந்தவை யெல்லாம் ஒன்றுவிடாமல் தன் தாயிடம் ஒப்பிக்கிறாள். அதிர்ச்சிதான்! ஆனால் யார் குற்றவாளி? நடந்தவையெல்லாம் கெட்ட கனவாக மறக்கச் சொல்லி வெந்நீரால் மக்களைக் குளிப்பாட்டுகிறாள். ''நீ சுத்தமாயிட்டே... உன் மனத்தை எவனும் கொடுக்கவில்லையே! உடல் தானே கெட்டது. கழுவி விட்டேன்" என்று தாய் தனக்குள் முணுமுணுத்துக் கொள்கிறாள்.

இதுதான் அக்கினிப் பிரவேசம்!

கற்பு என்பது மனத்தளவில் தான். "ஒரு பெண்ணை இச்சையோடு நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கனவே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தாயிற்று" (மத். 5:28). மிக முக்கியம் மனநிலை.

விபச்சாரச் செயலுக்குப் பொறுப்பேற்கும் பல புறசக்திகள்வறுமை, அறியாமை, வன்முறை, பாலியல் ஆகியவை. ஆனால் விபச்சார எண்ணத்துக்கு அவரவரே பொறுப்பேற்க வேண்டும். உள்ளத்தின் நிறைவால் வாய் பேசும். மனத்தில் எதை அசைபோடுகிறோமோ, அதுவே நம்மையும் அறியாமல் வெளிப்படுகிறது. நம் மனம் அசைபோடும் அழுக்குகளை வைத்தே நாம் பிறரையும் எடை போடுகிறோம். பாலியல் தொடர்பாவை பற்றிச் சொல்லவே வேண்டாம். அவல் கிடைத்த மாதிரி.

தவறு செய்வதற்குச் சூழ்நிலையை உருவாக்கிவிட்டு தவறியவனைத் தண்டிப்பதற்குத் தயாராகும் சமூகம், சட்டத்திற்குள் தன்னை - தனது பொறுப்பற்ற தன்மையை மறைத்துப் பாதுகாத்துக் கொள்கிறது.

உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, அதை மீட்க வந்தவர் இயேசு (யோ. 3:17). நம் கவனத்தை ஈர்ப்பது இயேசு அந்தப் பெண்ணைத் தீர்ப்பிடவில்லை என்பது மட்டுமல்ல. தீர்ப்பிட வந்தவர் எவரையும் தீர்ப்பிடவில்லை என்பதுதான். ''உங்களில் குற்றமில்லாதவன் முதற்கல்லை எறியட்டும். தீர்ப்பிட வேண்டும் என்று வந்தவர்களுக்குத் தீர்ப்பிட வாய்ப்பளிக்கிறார். ஆனால் தீர்ப்பிடத் தகுதியற்றவர்கள் என்று அவர்களை உணர வைத்ததுதான் இயேசு நிகழ்த்திய மாபெரும் அற்புதம்.

நாம் அனைவரும் பாவிகள். (1 யோ. 18). ''என் இதயத்தைத் தூய தாக்கிவிட்டேன். நான் பாவம் நீக்கப் பெற்றுத் தூய்மையாய் இருப்பவன் என்று யாரால் சொல்லக் கூடும்?" நீதிமொழிகள் 20:9 விடும் சவால் இது!

"நல்லவர்கள் எல்லோரும் வெள்ளையாகவும் தீயவர்கள் எல்லோரும் கருப்பாகவும் கடவுளின் படைப்பில் இருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் நாம் எப்படி இருப்போம்?" என்று ஆசிரியர் கேட்க ஒரு மாணவன் சொன்னானாம்: 'வரிக்குதிரை போல இருப்போம் வரி வரியா கோடு கோடா கருப்பும் வெள்ளையுமாகக் கலந்து". அறிவார்ந்த பதில்! எந்த மனிதனும் முழுமையாக நல்லவனுமில்லை. முழுமையாகக் கெட்டவனுமில்லை.

தன்னிலை உணர்ந்தவர்களாய் நாமும் ''கடந்ததை மறந்துவிட்டு முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்" (பிலி 3:13-14)

"நானும் தீர்ப்பிடேன் - இனிப் பாவம் செய்யாதே". எவ்வளவு பொருத்தமான பதில்! இது அவளுக்குப் பாவம் செய்யக் கொடுக்கப்பட்ட அனுமதிச் சீட்டு அன்று, மறுவாழ்வு தந்த மாமருந்து!

பாவிகள் எல்லோரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்பது இயேசுவின் புதிய சட்டம்.

நேற்றையப் பொழுதை இறை இரக்கத்துக்கு விட்டுவிடு
இன்றையப் பொழுதை இறையன்பில் செலவிடு
நாளையப் பொழுதை இறை நம்பிக்கையில் விடியவிடு.
திருவுரைத் தேனடை
அருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
 
 மறையுரை முத்துக்கள் புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌ பெங்களூர்
 
இறைவாக்குப் பயணம் அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட் ‌ பெங்களூர்
 
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
 
சிந்தனைப் பயணம். திரு சின்னப்பன் டிசில்வா. வெலிங்டன் - ஊட்டி
தவக்காலத்தின் 5-ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்:-
எசாயா 43:16-21
பிலிப்பியர் 3:8-14
யோவான் 8:1-11


தண்டனையும்.... தகுதியும்.

இயேசுவோடு என்னோடு இணைந்திருக்கும் அன்பு உள்ளங்களுக்கு , கடந்த வாரம் திருந்திய மனிதர்களாக நாம் வாழ வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறிய திருஅவை இந்தவாரம் தவறுகளில் மத்தியில் வாழ்க்கை சந்தையில் குற்றவாளி என்ற தீர்ப்பு பெற்ற ஒருவரை இறைவனின் கருணையோடு கையாளுவது எப்படி என்பதை சிந்திக்க அழைக்கின்றது.

இரத்த உறவினால் உரிமை குடிமகன் ஆன திருந்திய மைந்தனுக்கு இறைவனின் இரக்கமும் கருணையும் வாய்ப்பு தந்தது. இன்று நற்செய்தியில் முன்னிறுத்தப்படும் தனிமனித வாழ்க்கையில் தவறு செய்த ஒரு பெண்ணிற்கு வாழ்க்கை மீண்டும் புதுப்பொலிவோடு எப்படி கிடைக்க முடியும் - என்பதை இறை இயேசுவின் செயல்பாடுகள் வழியாக நற்செய்தி விளக்குகின்றது. இயேசுவின் அளப்பரிய அன்பும் மன்னிப்பும் - கருணையும் மீட்பு பெற்ற மறு வாழ்வை மீண்டும் மலரச் செய்வதைக் காணலாம். அப்படிப்பட்ட மாண்பு உள்ள இறை இயேசுவின் செயல்பாட்டினை இங்கே சற்று கவனிப்போம்.

ஆண்டவர் இயேசு ஒலிவ மலையில் இரவு முழுவதும் தங்கியிருந்துவிட்டு அதிகாலையில் ஆலயத்திற்கு வந்தார் என்று யோவான் குறிப்பிடுகின்றார்.

ஒரு பொழுது முழுவதும் இறைவனோடு இணைந்து, மகிழ்ந்திருந்த இயேசு, அவரைத் தேடி வரும் மக்களுக்கு அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து அளிக்க ஆலயத்திற்குள் வருகின்றார். ஆலயத்திற்கு வரும் அனைவருக்கும் தேவைகள் குறைபாடுகள் இருப்பது இன்றைய வாழ்க்கையில் அல்ல, அன்றும் சகஜமாக இருந்தது. நம் ஆண்டவர் இயேசுவும் மறுப்பின்றி மக்களை அரவணைத்து நல்லவைகளை கற்பித்தார் என்று நற்செய்தி மீண்டும் நினைவு படுத்துகின்றது.

இப்படிப்பட்ட சூழலில் மக்கள் சூழ்ந்திருக்க அதுவும் ஆலயத்தினுள் இயேசு அமர்ந்திருக்க யூத பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் கையும் களவுமாக பிடிபட்ட, தனி வாழ்க்கையில் குற்றம் செய்த ஒரு பெண்ணை இயேசுவின முன் முன்னிலைப்படுத்தி; அவள் செய்த குற்றத்திற்கு திருச்சட்டம் கூறும் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டிய தண்டனையையும் எடுத்துரைக்கின்றனர். இதில் கவனிக்க வேண்டியது, ஏற்கனவே மக்கள் கூட்டம் கேட்கும்ம்படி இயேசு பகிர்ந்த செய்திகளை கேட்க மனமின்றி மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் மீண்டும் மீண்டும் தாங்கள் கூறுவதை கேட்கும் விதமாக பாவம் செய்த பெண்ணிற்கு தீர்ப்பு கூறும்படி இயேசுவிடம் உரக்கக் கூறினார்.

இந்த "கேட்க" என்ற தமிழ் வார்த்தைக்கு இரண்டு நிலைகள் உண்டு ஒன்று நாம் கூறுவதை பிறர் கேட்பது. இரண்டாவது பிறர் கூறுவதை நாம் கேட்பது . .இன்றைய வாழ்க்கையில் அனேகமாக சந்தேகங்களுக்கும், தோல்விகளுக்கும், இழப்புகளுக்கும் காரணம் இந்த கேட்க என்ற வார்த்தையை இந்த யூத பெரியவர்களைப் போல் ஒருவழிப் பாதையில் பிறரை கேட்கச் செய்ய வேண்டும் என்று நாம் பயன் படுத்துவதுதான்.

நம்மிடமிருந்து கடவுள் கேட்க வேண்டும் என்பதில் நாம் மிகவும் திண்ணமாக உறுதியாக; ஒருவழிப்பாதை பயணமாக நமது விண்ணப்பங்கள் என்ற இந்த வாகனத்தில் கடவுளை நோக்கி பயணித்த வண்ணம் இருக்கின்றோம். அதே வேளையில் கேட்க என்ற அதே வார்த்தைக்கு உள்ள இருவழிப்பாதை யின் மற்றொரு பக்கமான- கடவுளிடமிருந்து வரும் வாழ்வு தரும் வார்த்தைகளையும் வழிமுறைகளையும் கேட்க நமக்கு விருப்பம் உள்ளதா என்பது யோசிக்க வேண்டிய ஒன்று.

ஒரு கை தட்டினால் ஓசை வராது அதேவேளை இரு கை தட்டினால் ஓசை வரும். இருபக்கமும் இரண்டு காது உள்ளவர்களாக , முழுமையாக கேட்கச் செவியுள்ளவனாக கேட்கும் போது மட்டும்தான் கடவுளின் வார்த்தையோடு நமது வார்த்தையும் இணைந்து ஒலிக்கும் ஓசை மீட்பின் ஓசையாக இருக்கும் என்பதை நாம் மறந்து விடுகின்றோம்

ஆக யூத மத பெரியவர்களின் தவிர்க்க இயலாத ஒரு வழி ஓசையை இயேசு கேட்டதால் வேறுவழியின்றி பாவம் செய்ததால் தண்டிக்கப்பட வேண்டும் என நிறுத்தப்பட்ட அந்த பெண்ணைத் தண்டித்திட , உங்களில் பாவம் செய்யாதவர்கள் முன் வாருங்கள் என்று வழிமொழிகிறார். இவர் என்ன கூறுவார்..? எப்படி செயல்படுவார் .? இவருடைய இக்கட்டான இந்த நிலையில் திருச்சட்டம் பெரிதா..? அல்லது அவருடைய மனிதநேயம் பெரிதா..? எதை இவர் கையில் எடுப்பார் என்று ஆவலோடு யோசித்த யூத பெரியவர்களுக்கு இயேசுவின் அழைப்பு கேள்விக்குறியாய் நின்றது. அடுத்து யோவான் நற்செய்தியில் - இதைக்கேட்ட பெரியோர் முதல் சிறியோர் வரை ஒவ்வொருவராய் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றனர் என்று முடிவதை வாசிக்கலாம்.

தண்டனை என்பது , அன்று மனித சமுதாயத்திற்கு ஆளுமை கொண்ட மனிதர்களால் தரப்பட்ட சில வாழ்க்கை நெறிமுறைகள். மடிந்து போக வேண்டும் என்பது இறைவனின் விருப்பம் அல்ல இதைத்தான் கடந்த வார திருந்திய மைந்தன் என்ற உண்மை நமக்கு நினைவுபடுத்தியது. இந்த வாரம் நம் முன் நிறுத்தப்பட்ட தண்டனைக்குரிய பெண்ணுக்கு மரணதண்டனை சரியா?.. தவறா..? என்பதல்ல கேள்வி?. இந்த பெண்ணுக்கு வாழ்வு தர வேண்டுமா ? வேண்டாமா ? என்பதே இயேசு நமக்கு தரும் கேள்வி. இடரல் யாரிடமிருந்து வருகிறதோ அவர்களுக்கு அய்யோ கேடு என்றும் , மேலும் நல்ல கனி கொடா மரங்களின் கீழ் கோடாரி வைக்கப்படும் எனவும் இயேசு எச்சரிக்கின்றார்

சிந்தனைப் பயணம். திரு சின்னப்பன் டிசில்வா. வெலிங்டன் - ஊட்டி
 
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின், குழித்துறை மறைமாவட்டம்.
தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு

எசாயா 43: 16-21
பிலிப்பியர் 3: 8-14
யோவான் 8: 1-11


புதிதாய் பிறப்போம்

இறைஇயேசுவின் அன்பர்களே!

கருணையற்ற, அநீதமான ஒரு சமூகத்தில் காருண்ய கடவுளின் இரக்கச் செயல் வெளிப்படுவதையும், பாலைப் போல் ஈரமற்ற இறுகிப்போன இதயங்கள் மத்தியில் இனிய கருணையாலும், மன்னிப்பாலும் பாவியான பெண்ணை மாண்புடன் நடத்துவதையும், அவளை புதிதாய் பிறப்பித்ததையும் வழிபாடு சுட்டுகிறது.

💠 மன்னித்து மாண்போடு வழி நடத்தும்போது அவர்கள் ஆண்டவரின் அளப்பெரிய அன்பை சுவைத்து மகிழ்வார்கள்.

தி பா 34:8
"ஆண்டவர் எத்துணை இனியவர் என்பதை சுவைத்துப் பாருங்கள்" என்று அறிவுறுத்துகிறது. அவ்வாறு சுவைத்து, அனுபவித்த ஒரு பெண்ணின் புத்தாக்க அனுபவமே இன்றைய நற்செய்தி, இன்றைய வழிபாடு.

நிகழ்வு :

இருபத்தேழு (27) ஆண்டுகால சிறைவாசம், போராட்டத்திற்கு பிறகு, கருப்பின மக்களின் தலைவராகிய திருமிகு. நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதி ஆனார். ஒரு நாள் உயர்நிலை அதிகாரிகளோடு ஒரு நட்சத்திர விடுதிக்கு இரவு உணவருந்தச் சென்றார். உணவு அறைக்குள் செல்லும் போது அங்கு வேறு ஒரு குடும்பம் ஒரு மேசையில் உணவுக்காகக் காத்திருந்தது. அந்த நேரத்தில் அங்கிருந்த அந்த மனிதன் நெல்சன் மண்டேலாவை எதிர்பார்க்கவில்லை. அவரைக் கண்டதும் சற்று அதிர்ச்சி அடைந்தான். சற்று நேரத்தில் அவனுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் உணவு வந்தது. அவனால் உணவை உண்ண முடியவில்லை. உணவையே பார்த்துக் கொண்டிருந்தான். இன்னும் சற்று நேரத்தில் திருமிகு. நெல்சன் மண்டேலா குழுவினருக்கும் உணவு வந்தது .உணவை சுவைக்கத் துவங்கிய போது ஒருவர் சொன்னார் மாண்புமிகு அதிபர் அவர்களே, அருகில் அமர்ந்திருக்கும் அந்த நபருக்கு உடல்நிலை சரியில்லை போலிருக்கிறது, உடல் நடுங்குகிறது என்று,

திருமிகு நெல்சன் மண்டேலா சொன்னார், உடலுக்கு ஒன்றும் இல்லை, இவர், நான் சிறையில் இருந்த நாட்களில் அதிகமாய் என்னை துன்புறுத்திய சிறை அதிகாரி. நான் தாகத்திற்கு தண்ணீர் கேட்டால் தண்ணீருக்குப் பதில் என் தலையில் சிறுநீர் பாய்ச்சியவர். நான் இப்போது நாட்டு அதிபர். நான் அவரை அவருடைய வாழ்நாளில் சந்திப்பதற்கான வாய்ப்பு வராது என்று நினைத்திருப்பார். ஒருவேளை நான் அவரை இனங்கண்டு தண்டனை வழங்கி விடுவேனோ என்று அஞ்சுகிறார், என்றவர் எழுந்து, அவர் அருகில் சென்று அவரை அணைத்து முத்தமிட்டார். அந்த மனிதன் சொன்னார்

"நான் என் வாழ்நாளில் கடவுளின் மன்னிக்கும் அன்பை சுவைத்த தருணம்" இது என்று, *"கிறிஸ்துவின் மன்னிக்கும் அன்பே என்னை வழிநடத்தியது" என்றார் மண்டேலா. "அந்த மனிதன் புதிய மனிதராய் பிறப்பெடுத்து கடந்து போனான்."

💠இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் மாபெரும் புரட்சி செய்கிறார் - இறையனுபவம் வழி.
💠அதிகாரத்தின் முன் தங்களை நீதிமான்களாக காட்டிக் கொண்டவர் சிலரை நீங்கள் குற்றவாளிகள் என உணரச் செய்கிறார்.
💠சட்டத்தை விட மனிதன் பெரியவன், தண்டனையைவிட மன்னிக்கும் அன்பு உயர்வானது, பழியைவிட பரிவு சிறந்தது என்று ஆண்டவர் இயேசு பணி வாழ்வால் எடுத்துரைத்தார்.

யோவான் 8:4 "விபச்சாரத்தில் கையும், மெய்யுமாகப் பிடிபட்டவர்" - என்று ஆண்டவர் இயேசு முன்பு நிறுத்துகின்றனர் ஒரு பெண்ணை.
♦️கையும் மெய்யும் எனும் போது விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆண் மகனையும் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆணாதிக்க யூத சமூகம் அதைச் செய்யவில்லை.
♦️இந்தப் பெண்ணை மோசே சட்டப்படி கல்லால் எறியப்பட வேண்டும். நீர் என்ன சொல்கிறீர்? இயேசு எதை எப்படிச் சொன்னாலும் அவர்கள் குறை கூறுவர்.

கல்லறியச் சொன்னால் - அன்பை, இரக்கத்தை, மன்னிப்பை, பரிவைப் போதித்தாய். ஆனால் நீ அதை நடைமுறைப் படுத்தவில்லை என்பர்.
அவளை விடுவிக்க சொன்னால் - நம் முன்னோர் நெறியை, மோசேயின் வழிமுறைகளை, சட்டத்தை, பாரம்பரியத்தை, மரபுகளை உடைத்தெறிகிறான். இவன் திமிர் பிடித்தவன், கலகக்காரன் என்பர்.

1 சாமுவேல் 16:7
"மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பது இல்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவரோ அகத்தைப் பார்க்கிறார்." ஆண்டவர் அவர்களின் தீமையான, கபட, சூழ்ச்சியான, வஞ்சகம், சூது நிறைந்த மற்றும் பழிவாங்கும் எண்ணத்தை அறிகிறார்.

🔶அவர்களோடு உரையாடுவது வீண். அவர்கள் எண்ணங்கள் நேர்மையாய் இல்லை என்பதை உணர்ந்த இயேசு தரையில் எழுதுகிறார். ஒருவேளை அவளை அழைத்து வந்தவர்களின் பாவங்களை தரையில் எழுதியிருக்கலாம். உங்களுடைய அழுக்கான, பாவம் நிறைந்த, மறைக்கப்பட்ட வாழ்வில் எத்தனை எத்தனை பாவங்கள் நிறைந்து இருக்கிறது என்பதை விரலால் தரையில் எழுதியிருக்கலாம். 🔶சட்டத்தால், சூழ்ச்சியால் சாதிக்க நினைத்தவர்கள், அப்பெண்ணைப் பாவியாக கருதி தங்களை நீதிமானக்கியவர்கள் அவரை விடாமல் கேட்டுக் கொண்டிருந்ததால்,

செப்பனியா 3:15 "ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார் உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்" என்ற வார்த்தைக்கு ஏற்ப அவருடைய தண்டனையையும் அவருடைய பகைவர்களையும் விலகும்படிச் செய்தார். எனவேதான் சொன்னார்,

யோவான் 8:7
"உங்களுள் பாவம் இல்லாதோர் முதலில் இப்பெண் மேல் கல்லெறியட்டும்" என்று அங்கு அவளை இழுத்து வந்தவர்களில் ஒருவர் கூட நீதிமான் இல்லை, பாவம் அற்றவன் இல்லை. அவளை பழிசுமத்தியவர் எல்லோருமே அநியாயக்காரர்களும், பாவிகளும் தான்.

நீதியை வளைப்பது, எளியோரை வாட்டுவது, ஒடுக்கப்பட்டோரை சிதைப்பது பாவம். எனவேதான் உங்களுள் பாவம் செய்யாதவர் முதல் கல்லை எறிக என்றார். அங்கிருந்தவர் எவனும் நான் பாவம் செய்யவில்லை என்று சொல்ல முடியாது.

1 யோவான் 1:8 "பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வோம் உண்மையும் நம்மிடம் இராது" ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள் அவர்களுக்கு விழுந்த பேரிடி. கடவுள் ஞானத்தோடு பதில் கொடுத்தாலும் தரையில் அவர்களின் முகத்திரையைக் கிழித்து எழுதியதாலும் ஒருவர் பின் ஒருவராக எல்லாரும் அமைதியாய் கலைந்து சென்றனர். தனிமையில் நின்ற அப்பெண்ணை, அன்பொழுக, கனிவோடு நோக்குகிறார்.

எசாயா 55:7 "அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்" என்பதற்கிணங்கவும்

செப்பனியா 3:18 "உனது துன்பத்தை அகற்றிவிட்டேன் ஆகவே இனி நீ இழிவடையமாட்டாய்"
என்ற இறைவார்த்தை செயலாக்கம் பெறும்படி "அம்மா" என்று பரிவோடும், கனிவோடும் நடத்துகிறார். பாவம் செய்தவர்களை இயேசு கனிவோடு நடத்துகிறார் என்று புரியக்கூடாது. மாறாக பரிசேயர்களின் வெளிவேட வாழ்வை கண்டித்த இயேசு அப்பெண்ணிடம்
யோவான் 8:11 - இல் "நீர் போகலாம் இனி பாவம் செய்யாதீர்" என்று கண்டித்து வழியனுப்புவதைப் பார்க்கின்றோம்.

யோவான் 5: 1-16 பகுதியில் 38 ஆண்டுகள் பெத்சதா பகுதியில் மூடமாய் கிடந்தவனுக்கு வாழ்வு கொடுத்த பின் இயேசு அவரிடம் ,
யோவான் 5: 14 "இதைவிட கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனி பாவம் செய்யாதீர்." என கண்டிப்புடன் வழியனுப்புவதை யோவான் வழி அறிகிறோம்.
🔶அப்படியானால் இயேசு பாவியை வெறுக்கவில்லை பாவத்தை வெறுக்கிறார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் புதிதாய் பிறப்பெடுத்த புனித பவுலின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகிறார்.
🔶"நான் யூதன், பரிசேயன், விருத்தசேதனம் செய்தவன், பென்யமின் குலத்தவன், சட்டம் பயின்றவன், அதிகாரம் படைத்தவன் என்று பெருமைப்பட்டுக் கிறிஸ்தவத்தை அழிக்க பயணப்பட்ட சவுல், பவுலாய் மாறியபின்

பிலி 3:8
"கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாக கருதுகிறேன்." என்ற நிலைப்பாடு, புது வாழ்வின் அடையாளமாய் அமைந்தது. இயேசுவை சுவைக்கிறவர்கள், அனுபவிக்கிறவர்கள் புது வாழ்வுக்குக் கடந்து போவார்கள்.

நம் வாழ்வை ஆய்வு செய்வோம். நம்முடைய பெருமை பேசி நம்மை உயர்ந்தவர்களாகவும், பிறரை தாழ்ந்தவர்களாகவும் காட்டிக் கொள்ளும் நிலையை மாற்றுவோம்.

💠நான் எல்லாவற்றிலும் நீதியாக இருக்கிறேன் என்று பிறரை அநீதர்களாகத் தீர்ப்பிடும் பிலாத்துவின் மனநிலையை அழிந்தொழிப்போம்!

💠என்னுடைய அந்தஸ்து, அதிகாரத்தால் பிறருடைய மானுட மாண்பு சிதைகிற அளவிற்கு நடந்துகொள்ளும் கடினமான இதயத்தை நம்மிடம் இருந்து மாற்றுவோம்.

💠தற்புகழ்ச்சி, இறுமாப்பு, தன்னலம், தீங்கு நினைப்பது, பிறருக்கு எரிச்சல் ஊட்டுவது என்ற பண்புகளைக் களைவோம்!

ஏசாயா 3 : 18 '"முன்பு நடந்தவற்றை மறந்து விடுங்கள்" முற்கால நிகழ்ச்சி பற்றி சிந்திக்காதீருங்கள், இந்த எசாயாவின் அறிவுறுத்தல் படி

⭐நாம் புதிதாய் பிறப்போம். நாம் புதிதாய் பிறக்கும் போது எசாயா அறிவுறுத்துவது போல பாழ்வெளி நீரோடையாகவும், காட்டுக்கோழி, குள்ளநரி, தீக்கோழி போன்றவை நம்மைப் புகழ்ந்து பெருமைப்படுத்துபவையாகவும், பாலை நிலம் குடிப்பதற்குரிய சுவையான நீரை தருவதாகவும் அமையும். எனவே
⭐நாம் நம்மை புத்தாக்கத்திற்கு உட்படுத்துவோம்!
⭐நாம் புதிதாய் பிறக்கும் போது ஆண்டவரின் அன்புக்கும், பரிவிற்கும், மன்னிப்பிற்க்கும், பாசத்திற்கும் உரியவராகின்றோம்!

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின், குழித்துறை மறைமாவட்டம்.
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ