Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 தூய பாத்திமா அன்னை

                                               வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் அன்னை

      பாத்திமா மாதாவின் முதல் காட்சி தினமான மே 13-ஐ நோக்கி.........
 
ஏற்கனவே நாம் பாத்திமா மாதாவின் நூறாவது ஆண்டில் இருக்கிறோம். அதிலும் நாம் இப்போது மாதாவின் முதல் காட்சி தினமான மே-13 ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறோம். எப்படியெல்லாம் அந்த நாளை நாம் நெருங்கலாம், ஜெபிக்கலாம், புனிதப்படுத்தலாம். தூய தமதிருத்துவத்திற்கும், நாம் தூய மாதாவிற்கும் மகிமையும், மகிழ்ச்சியும் அளிக்கும் நாளாக எப்படி மே-13 ஐ சிறப்பிக்கலாம். சில ஆலோசனைகள்:

1. நாம் ஒவ்வொருவரும் தினமும் குறைந்தது 153 மணிகள் ஜெபமாலையாவது கட்டாயம் ஜெபிக்க வேண்டும்..

2. ஒவ்வொரு பங்கிலும் உள்ள அன்பியங்கள் எல்லாம் சேர்ந்து மே-13 அன்று ஒவ்வொரு 53 மணிகளாக ஒப்புக்கொடுத்தால் அன்றைய தினம் முழுவதும் ஜெபமாலைகளால் நிறையும். நம் உள்ளமும் அன்னையின் உள்ளமும் நிறையும்.

3. ஒவ்வொரு பங்கிலும் அன்றைய தினம் குறைந்தது 500 மணிகள் ஜெபமாலை ஒப்புக்கொடுக்கலாம்.

4. இந்த 2017 ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் 13-தேதி 500 மணிகள் ஒப்புக்கொடுக்கலாம் (வாழும் ஜெபமாலை இயக்கத்தினர் ஒவ்வொரு மாதமும் 13-ம் தேதி ஒப்புக்கொடுத்து வருகிறார்கள்)

5. ஒவ்வொரு பங்கிலும் அன்பியங்கள் குடும்ப ஜெபமாலையை ஊக்குவிக்கலாம். அவர்கள் அதற்கு தூண்டு கோலாக செயல்படலாம். அவர்களும் தங்கள் அன்பியத்தில் வாரம் ஒரு முறையாவது சேர்ந்து ஐம்பத்து மூன்று மணி ஜெபமாலை ஒப்புக்கொடுக்கலாம்.

6. பங்குத்தந்தையர்கள் ஜெபமாலை பக்தி முயற்சிகளை அதிகப்படுத்துவது, ஜெபம், தவம், பரிகாரம் மற்றும் நம் அன்புத்தாய் பாத்திமாவில் நம்மிடம் கேட்ட விசயங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தல். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற காரியங்களை செய்யலாம்.

7. மாதாவின் மாசற்ற இருதய பக்தியை பரப்புதல் (குருக்கள், அருட்சகோதரிகள் மற்றும் பொது நிலையினர் தனித்தனியாக அல்லது சேர்ந்தும் இப்பக்தி முயற்சியை பரப்பலாம்)

8. முதல் வெள்ளி, முதல் சனி பக்தி அனுசரித்தல் அவற்றை பற்றிய விழிப்புணர்வை அன்பியங்கள் மூலமாக கடைப்பிடித்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

9. மாதாவின் மாசற்ற இருதயத்தின் வெற்றிக்காக ஒறுத்தல் முயற்சிகள் மற்றும் தவங்கள் செய்தல். நம்முடைய அன்றாட சிலுவைகளை மாதாவின் பாவிகள் மனம் திரும்ப மற்றும் மாதாவின் மாசற்ற இருதயத்தின் வெற்றிக்காக ஒப்புக்கொடுக்கலாம்.

10. கிடைக்கும் ஓய்வு நேரங்களில் எல்லாம் பத்து பத்து மணிகளாவது ஜெபமாலை ஜெபித்து புண்ணியங்களை சம்பாதித்தல் மற்றும் அன்னையின் வெற்றிக்காக ஒப்புக்கொடுத்தல் ( குறைந்தது பத்து மணிகளாவது மாதாவின் வெற்றிக்காக தினமும் ஒப்புக்கொடுத்தல்)

11. திவ்ய நற்கருணை நாதரை அதிகமாக நேசித்தல். தினமும் ஆலயம் சென்று திவ்ய நற்கருணை நாதரை சந்தித்தல். அதிகமாக திவ்ய பலிபூசையில் பங்கேற்றல்.

12. திவ்ய நற்கருணை நாதர் முன்னால் இருந்து ஜெபமாலை ஜெபித்தல். இயேசு தெய்வத்தின் திருஇருதய பக்தி முயற்சிகளை கடைபிடித்தல் மற்றும் பரப்புதல்.

13. திவ்ய நற்கருணை நாதருக்கு எந்த அவசங்கையும் நேராமல் பார்த்துக்கொள்ளுதல். வேறு இடங்களில் நடப்பதை அறிந்தால் அதற்காக நாம் பரிகாரம் செய்தல். திவ்ய நற்கருணை நாதரை முழுமையாக நேசித்து, பக்தியாக ஆராதித்து, தகுதியான உள்ளத்தோடு அவரை உட்கொண்டு அவரோடு ஒரு பதினைந்து நிமிடங்களாவது செலவழித்தல்.

இன்னும் இன்னும் எத்தனையோ ஜெபங்களில், வழிபாடுகளில், பரிகாரங்களில் தமதிருத்துவத்தையும் மாதாவையும் மகிமைப்படுத்தலாம்; மகிழ்ச்சிப்படுத்தலாம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!