|
|
|
|
மிக மிக முக்கியமானது. நரகக் காட்சியில் பயம் கொள்ள வேண்டாம்.
எப்பேற்பட்ட பாவியையும் ஆண்டவர் இயேசு மன்னிக்கத் தயாராக
இருக்கிறார்.(இசையாஸ்59:1). பாவத்திற்காக மனம் வருந்தி
மன்னிப்பு ( நல்ல பாவசங்கீர்த்தனம்) கேட்டு பரிகாரம் செய்தால்
எப்பேற்பட்ட பாவியும் மோட்சம் செல்ல முடியும். அன்று நல்ல
கள்வன் தன் சிலுவையை பரிகாரமாக ஏற்றுக்கொண்டதால் நம் நாதர்
இயேசுவிடம் வேண்டியதற்கு இயேசு தந்த பரிசு
"நீ இன்றே என்னோடு
வான வீட்டில் இருப்பாய்" என்பதுதான்.
எத்தனையோ எளிய பக்தி முயற்சிகள் உள்ளன. கவலை வேண்டாம். ஆனால் கடவுள் என்னை மன்னிக்கவே மாட்டார் என்று யாரும் நினைக்க
வேண்டாம் யூதாசைப்போன்று. தன் தவறை உணர்ந்து மன்னிப்புக்கேட்டு
இயேசுவில் வாழ்வோம் புனித
இராயப்பரைப் போன்று.
நாம் அனைவரும் மனம் திரும்ப வேண்டும்.மற்றவர்களையும் நம் தவ
ஜெபத்தால் மனதிருப்ப வேண்டும் என்பதற்காகவே கீழே உள்ள பகுதியை
வெளியிடுகிறோம்.
1917-ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி பாத்திமாவில் அன்னையின்
மூன்றாம் காட்சி நடைபெற்ற நாள்.
(முக்கியமான பகுதிகளை மட்டும் எடுத்து தருகிறோம்)
மூன்று குழந்தைகளும் உலகத்தை விட்டு பிரிக்கப்பட்டவர்கள்போல்
பரவச நிலையை அடைந்தார்கள். தேவ அன்னையின் காட்சியைக் கண்டார்கள்.
வழக்கம்போல்,
"உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்" என்று
கேட்டாள் லூசியா.
"அடுத்த மாதம் 13-ம் நாளில் இங்கு வர வேண்டும். உலகிற்கு
சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளவும், யுத்தம் முடிவடையவும்,
தேவதாயின் மகிமைக்காக ஜெபமாலையைத் தினமும் தொடர்ந்து சொல்லி
வாருங்கள். எனென்றால் தேவ தாய் மட்டுமே இவற்றைப் பெற்றுத் தர
முடியும் என்றார்கள் தேவ அன்னை.
"அம்மா நீங்கள் யார் என்று எங்களுக்குச் சொல்லுங்கள். நீங்கள்
எங்களுக்கு காணப்படுகிறீர்கள் என்று எல்லோரும் நம்பும்படியாக
ஒரு புதுமையைச் செய்யுங்கள்" என்றால் லூசியா.
"இங்கு மாதந்தோறும் தொடர்ந்து வாருங்கள். அக்டோபர் மாதம் நான்
யார் என்றும் என்ன விரும்புகிறேன் என்றும் என்றும் சொல்வேன்.
எல்லோரும் நம்பும்படி ஒரு புதுமையையும் செய்வேன்
" என்று
கூறினார்கள் அன்னை.
இக்காட்சியில் மிக முக்கியமாக லூசியாவுக்கு உணர்த்தப்பட்டது
யாதெனில், ஆண்டு முழுவதும் கடவுளின் அருள் வரங்களைப்
பெற்றுக்கொள்வதற்கு தினமும் ஜெபமாலை செய்யவேண்டும் என்பதே.
மீண்டும் நம் அன்னை அம்மூன்று குழந்தைகளையும் பார்த்து
: "பாவிகளுக்காக உங்களைப் பலியாக்குங்கள். அடிக்கடி, குறிப்பாக
நீங்கள் ஏதாவது ஒரு பரித்தியாகம் செய்யும் போது,
"ஓ சேசுவே உமது அன்பிற்காகவும், பாவிகள்
மனதிரும்புவதற்காகவும், மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு எதிராக
செய்யப்படும் பாவங்களுக்கு பரிகாரமாகவும் இதைச் செய்கிறேன்
என்று சொல்லுங்கள்" என்றார்கள்.
இந்தக் கடைசி வார்த்தைகளைச் கூறியபடி நமதன்னை முந்தைய இரண்டு
மாதங்களிலும் செய்ததுபோல தன் கரங்களை விரித்தார்கள்.
அவற்றிலிருந்து பாய்ந்த ஒளி பூமியை பிளந்ததுபோல் காணப்பட்டது. அங்கே ஒரு நெருப்புக்கடலை நாங்கள் கண்டோம். அந்நெருப்பினுள் பசாசுக்களும், ஆன்மாக்களும் அமிழ்த்தப்பட்டிருந்தனர். அவர்கள் பழுக்கச்சிவந்து ஊடுறுவிப் பார்க்கக்கூடிய தணல்போல் இருந்தனர்.
மானிட வடிவத்தில் சிலர் கறுப்பாக அல்லது பித்தளை நிறமாக
இருந்தனர். மேகம்போல் புகையுடன் அவர்கள் உள்ளிருந்தே பீறிட்டு
வந்த நெருப்புச் சுவாலைகளால் அங்குமிங்குமாக வீசப்பட்டனர். பெருந்தீயிலிருந்து சிதறும் நெறுப்புப் பொறிகளைப் போல பாரமோ நடு நிலையோ இல்லாமல்
எப்பக்கமும் விழுந்தனர். வேதனையாலும் எல்லாவற்றையும்
இழந்துவிட்ட துயரத்தாலும் அவர்கள் அழுத சத்தம் எங்களுக்கு
பயங்கரத்தை உண்டாக்கியதால் நாங்கள் அச்சத்தால் நடுங்கினோம்.
( இந்தக் காட்சிதான், ஜனங்கள் கேட்டதாக சொல்லுகிறபடி என்னைச்
சத்தமாக கத்தும்படி செய்திருக்க வேண்டும்)
பசாசுகள் அகோர, அரோசிகமான இனந்தெறியாத மிருகங்கள் போலும்
ஊடுறுவிப்பார்க்கக் கூடிய எரியும் நிலக்கரி போலும்
மற்றவர்களிடமிருந்து பிரித்தறியக்கூடியவர்களாகயிருந்தன.
பயம்
மேலிட்டு உதவி தேடுவது போல் நாங்கள் நம் அன்னையை நோக்கி கண்களை
உயர்த்தினோம். அவர்கள் எங்களைப் பார்த்து அன்புடனும் ஆனால்
துயரத்தோடு இவ்வாறு கூறினார்கள்.
"பரிதாபத்திற்குறிய பாவிகளின் ஆன்மாக்கள் செல்லும் நரகத்தை
நீங்கள் கண்டீர்கள். அவர்களைக் காப்பாற்ற உலகில் என் மாசற்ற
இருதயத்தின் மீது பக்தியை ஏற்படுத்த கடவுள் விரும்புகிறார்.
நான் உங்களிடம் கூறுவதை நீங்கள் செய்தால் அநேக ஆன்மாக்கள்
காப்பாற்றப்படுவார்கள். சமாதானமும் நிலவும் இந்த யுத்தமும்
முடிவடையும்.
ஆனால் மனிதர்கள் சர்வேசுவரனை நோகச்செய்வதை நிறுத்தாவிட்டால்
இன்னொரு இதைவிட கொடிய யுத்தம் 11-ம் பத்திநாதர் காலத்தில்
ஆரம்பிக்கும்.
இனந்தெறியாத ஒரு ஒளியால் ஓர் இரவு வெளிச்சம் பெறுவதை நீங்கள்
காணும்போது, உலகத்தின் பழிபாவங்களுக்காக யுத்தத்தாலும்,
பசியாலும், திருச்சபைக்கும், பாப்பரசருக்கும் எதிரான
கலாபனையாலும், உலகைக் கடவுள் தண்டிக்கப்போகிறார் என்பதற்கு
அவர் கொடுக்கும் அடையாளம் அதுவே என அறிந்து கொள்ளுங்கள்.
இதைத் தடுத்து நிறுத்த, ரஷ்யாவை என் மாசற்ற இருதயத்திற்க்கு
ஒப்புக்கொடுக்க வேண்டுமென்றும்,
முதல் சனிக்கிழமைகளில் பரிகார நன்மை வாங்க வேண்டுமென்றும் கேட்க
வருவேன். என் விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டால் ரஷ்யா
மனந்திரும்பும். சமாதானம் நிலவும். இல்லாவிட்டால் ரஷ்யா தன்
தப்பறைகளை உலகமெங்கும் பரப்பும்.
யுத்தங்களையும், திருச்சபைக்கெதிரான கலாபங்களையும் எழுப்பி விடும். நல்லவர்கள் கொல்லப்படுவார்கள். பாப்பரசர் அதிக துன்பங்களை அனுபவிக்க
நேரிடும். பல நாடுகள் இல்லாமல் அழிக்கப்படும்.
ஆனால் இறுதியில் என் மாசில்லா இருதயம் வெற்றி பெறும். பாப்பரசர் ரஷ்யாவை எனக்கு ஒப்புக்கொடுப்பார். அது மனந்திரும்பும். உலகிற்கு சமாதன காலம் கொடுக்கப்படும்.
போர்த்துக்கல்லில் விசுவாச சத்தியம் எப்போதும்
காப்பாற்றப்படும்.. இதை யாருக்கும் சொல்ல வேண்டாம். பிரான்சிஸிடம் சொல்லலாம்.
நீங்கள் ஜெபமாலை சொல்லும்போது,
"ஓ என் சேசுவே! எங்களை
மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும். எல்லா
ஆன்மாக்களையும், விசேசமாய் யார் அதிக தேவையிலிருக்கிறார்களோ,
அவர்களையும் மோட்சத்திற்கு அழைத்தருளும்" என்று சொலுங்கள்.
இத்துடன் நம் அன்னை இன்னொரு இரகசியத்தையும் கூறினார்கள். அது இன்றுவரை யாருக்கும் வெளியிடப்படவில்லை.
மாமரி அன்னை இவ்வளவும் பேசி முடிய அங்கு தனியான அமைதி நிலவியது. குழந்தைகளும் சற்று நேரம் எதையும் பேசவில்லை. மக்கள் கூட்டத்திலிருந்து ஒரு
சிறு சத்தம் முதலாய் கேட்கவில்லை. காற்றின் ஓசை கூட
இல்லாதிருதது.
"உங்களுக்கு வேறு ஏதாவது நான் செய்ய விரும்புகிறீர்களா?" என்று லூசியா கேட்டாள். இறுதியாக
"இன்று இதற்கு மேல் நான்
ஒன்றும் விரும்பவில்லை" என்று கூறிய மாமரி, அக்குழந்தைகளை
மிகவும் அன்புடன் நோக்கியபின் வழக்கம்போல
"கீழ்த்திசை
நோக்கிச்சென்று, அளப்பறிய விண்வெளியின் தொலைவில் மறைந்தார்கள்.
நம் ஜெப தவத்தால் மனம் திருந்துவோம்-மனம் திருப்புவோம்.
|
|