Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

பாத்திமா

                                            பாத்திமாவில் அன்னையின் அழைப்பு    

   our lady of fatima  - 1917 - 2017
 1916ஆம் ஆண்டு வசந்தக் காலத்தில், ஐரோப்பாவில் பகையும் புகையும் சூழ்ந்து முதல் உலகப் போர் நடைப்பெற்று வந்த நேரம். ஐரோப்பியக் கண்டத்தின் தென்மேற்குக் கடற்கரை ஒட்டிய போர்ச்சுக்கல் நாட்டின் பாத்திமா என்ற சிற்றூரின் வயல்வெளிகளில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த லூசியா சாந்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ ஆகியோருக்கு மூன்று சிறுவர்களுக்கு அன்னை மாமரிதாய் தோன்றி, உலக அமைதிக்கு தேவையான சில செய்திகைளை வெளிப்படுத்தினார். அந்த்த் திருக்காட்சி நிகழ்வுகளின் நூறாவது ஆண்டுக் கொண்டாடப்படும் இவ்வேளையில் அன்னை மரியாவின் செய்திகைளை இன்றைய உலகம் மீண்டும் அலசிப்பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

அன்னை வெளிப்படுத்திய மூன்று இரகசியங்கள் நிறைவேறிவிட்ட நிலையில் அன்னை உலகமக்களுக்கு விடுத்த செய்திகளையும், அவற்றில் நமக்குள்ள கடமைகளையும் நாம் புரிந்து கொள்ளதல் அவசியமாகிறது. அன்னை கொடுத்த காட்சிகள் அனைத்திலும் அவர் விடுத்த வேண்டுகோள்:
"தவம்,
செபமாலைச் செபித்தல்,
அன்னையின் மாசற்ற இதயப் பக்தி."


1 தவம்:- "மக்கள் தங்கள் பாவ வாழ்க்கை முறைகளிலிருந்து திருத்தி வாழ வேண்டும், அவர்கள் தங்கள் பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர்கள் பாவங்களால் இறைவனைப் புண்படுத்தியது போதும். மேலும் அவரை வருத்தும் செயல்களை மனிதர்கள் நிறுத்தாவிடில் இதனை விடக் கேடானது நிகழும். எனவே பாவங்களுக்கு பரிகாரமாகத் தவம் செய்ய வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார் அன்னை. இதன்படி முதல் உலகப்போர் 1918 ஆண்டு முடிவிற்கு வந்தது. 1938 ஜனவரி 25-ஆம் நாள் அன்னை முன்னறிவித்த பேரொளி ஒளி, வானில் தோன்றி, பூமியின் வட அரைக்கோளம் முழுவதும் ஒளிர்ந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் மூண்டது. மீண்டும் மாபெரும் உயிர்சேதங்களும், பொருள்சேதங்களும் ஏற்பட்டன.

2 செபமாலை:- பாவங்களுக்காகப் பரிகாரம் செய்ய வேண்டும் என்று மூன்று பிள்ளைகளுக்கும் அன்னை சொன்ன அதே வேளையில், செபமாலைச் செபிக்கவும் அழைப்பு விடுத்தார். அன்னை காட்சிக் கொடுத்த ஆறுமுறைகளிலும் உலக அமைதிக்காகச் செபமாலை ஒரு கருவியாக தினசரி பயன்படுத்த வேண்டும் என்று மொழிந்தார். முதல் உலகப்போர் முடியும் வரை செபமாலையைத் தியானித்துச் செபமாலை அன்னைக்குக் காணிக்கையாக ஒப்புகொடுக்கப் பணித்தார். ஆனால் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் முடிந்தலும் உலகத்தில் போர்களும் பயங்கரவாதமும் மாறிமாறி ஒரு சூழற்சியாக நடைப்பெற்றுக் கொண்டே தான் இருக்கின்றது. அவைகள் இன்னும் முடிவுக்கு வர இல்லை.

3. அன்னையின் மாசற்ற இருதயப் பக்தி:- 1917 ஆம் ஆண்டு ஜூலை மாதம் காட்சிக் கொடுத்த அன்னை லூசியாவிடம் " ஜெசிந்தாவும், பிரான்சிஸ்கோவும் விரைவில் விண்ணகம் வந்துவிடுவார்கள். ஆனால் நீ மட்டும் உலகில் சிறிதுக் காலம் இருந்து இருக்க வேண்டும். மக்கள் என்னைப் பற்றி அறியவும், என்னை அன்பு செய்யவும் உன்னை ஒரு கருவியாக இயேசு தேர்ந்தெடுக்க விரும்புகிறார். என் மாசற்ற இருதயப் பக்தியை உலகம் முழுவதும் உருவாக்க விரும்புகிறார்" என்று கூறினார். இந்த மாசற்ற இருதயப் பக்கதியைப் பற்றி 1917ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் பல தடவை லூசியாவிடம் எடுத்துக் கூறியுள்ளார் அன்னை மாமரித்தாய். ரஷ்யா மனந்திருந்த அன்னை செபமாலைச் செபிக்கவும், ரஷ்யாவை அன்னையின் மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கவும் அன்னைக் கேட்டுக்கொண்டார்.

இதன்படி 1942ம் ஆண்டுத் திருத்தந்தை 12ம் பயஸ் முதலில் உலகத்தையும், 1952 ஜூலை 7ஆம் தேதி "சாக்ரோ வெர்ஜெந்தே அன்னோ" (
Sacro Vergente Anno) என்ற தனது திருத்தூது மடல் வழியாக ரஷ்யாவையும் மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு அர்ப்பணித்தார். 1984ல் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் உலகத்தை மீண்டும் மரியாயின் மாசற்ற இதயத்துக்கு அர்ப்பணித்தார். 1990களில் ரஷ்யா கம்யூனிசக் கொள்கைகளில் இருந்து மனந்திரும்பியது.

அன்னை அறிவித்த மூன்று இரகசியங்கள் நிறைவேறியது. 1917 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி அன்னை முன்னறிவித்தபடி நடைபெற்ற அதியங்களை, 70ஆயிரம் மக்கள் கண்டு அன்னையால் ஈர்க்கப்பட்டன. திருஅவையும் பல்வேறு ஆய்வுகளுக்குப் பின் அன்னையின் காட்சியளித்த நிகழ்வுகளை ஏற்றுக்கொண்டது. பாத்திமா அன்னையின் மாசற்ற இதயப் பக்தி முயற்சிகளும் உலகெங்கும் பரவியது.

அன்னை கூறியபடி ஜெசிந்தாவும், பிரான்சிஸ்கோவும் சிறு வயதிலேயே இறந்துவிட, லூசியா பல ஆண்டுகள் உயிரோடு இருந்து, திருக்காட்சிகளுக்கு சாட்சியாக வாழ்ந்து, தனது 97ஆம் வயதில் 2005 ஆம் ஆண்டுப் பிப்ரவரி மாதம் 13ம் தேதி இறைவனடிச் சேர்ந்தார்.

அதுபோலவே 1981 மே 13ஆம் தேதி பாத்திமா அன்னையின் திருக்காட்சி நாளன்று, அலி ஆக்கா என்ற துருக்கிய இளைஞனால் துப்பாக்கியால் சுடப்பட்ட திருத்தந்தை 2ம் ஜான் பால் அந்த நேரத்தில் அன்னையின் கரங்களால் தான் பாதுகாக்கப்பட்டதை உணர்ந்ததாக அவர் கூறினார்..... திருத்தந்தை துப்பாக்கியால் சுடப்பட்ட இந்தச் சம்பவம், பாத்திமாவின் மூன்றாவது இரகசியத்தின் நிறைவேறுதலாகக் கருதப்படுகிறது.

தன் வாக்குறுதியை நிறைவேற்றி அன்னை நமக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறார் என்பதை மறவாமல், அவர் விடுத்த அழைப்பை ஏற்று, நம் வாழ்நாள் முழுவதும் உலக அமைதிக்கும், அன்னையின் மாசற்ற இருதயத்தின் மகிமைக்காகவும் செபமாலைச் செபிப்போம். பலன் அடைவோம்.

புனித பாத்திமா அன்னையே! உமது பரிந்துரையால் உலகில் சமாதானம் நிலைக்கட்டும்! எங்கள் வாழ்வு மலரட்டும்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!