ர் orizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

கிறீஸ்து பிறப்பு விழா நவநாள்

 

                                ஒரு சொல்........!
 

அன்னைமரியின் அன்புச் செல்வங்களே!

கிறீஸ்து பிறப்பு விழா நவநாள் என்னும் இச்சிறிய கையேட்டினை கிறீஸ்து பிறப்பு விழாப் பரிசாக உங்களுக்கு அளிக்கின்றேன். இந்நவநாள் செபம் திருப்பலியின்போது மட்டுமல்லாமல், தேவநற்கருணை ஆசீர்வாதத்தின்போதும், பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நவநாள் செபத்தை செபித்து வாழ நீவிர் தலைப்பட்டால், இவ்வாண்டின் கிறீஸ்து பிறப்பு விழாவை சீரிய முறையில் கொண்டாட நீங்கள் ஆயத்தமாகிவிட்டீர்கள் என்பது திண்ணம்.

2000 ஆண்டுகட்கு முன் இறைமகன் கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தபோது, அவருக்கென ஓர்  இடமில்லை. இவ்வுலகம் அவர் வருகையைப்பற்றி அறிந்துகொள்ள ஆர்வமின்றி வாளாவிருந்தது. ஆனால் இவ்வாண்டின் கிறிஸ்துவிழாவின்போது, 2000ஆண்டுகட்குமுன், இருந்த நிலையில் நீங்கள் இருக்கக்கூடாது.

எனவே இக்கையேடு கிறீஸ்து பிறப்பு விழாவை நீங்கள் நன்முறையில் சிறப்பிக்க உங்களை ஆயத்தப்படுத்துவதோடு, இறைக்குழந்தை பாலன் இயேசுவிடம் உங்களை இட்டுச் செல்ல பெரிதும் துணைபுரியும் என்பது என் துணிபு.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் குழந்தை இயேசுவின் இனிய ஆசீர் கிட்ட இறைஞ்சும்......
 
                                                          அன்னை மரியில் உங்கள்
  
                                                                    அ. மனையில் ச.ச.

 
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
                                                               இறைவாக்கினர்களின் பாடல்
                                                                                   அழைப்பு

முதல்வர்: தேவராஐன் வருவார். வாரும் ஆராதிப்போம்.
எல்:            தேவராஐன் வருவார். வாரும் ஆராதிப்போம்.

1. சீயோனே அகமகிழ்வாய். எருசலேம் மகளே பூரிப்படைவாய். இதோ, ஆண்டவர்  வருவார். அந்நாளில் பேரொளி வீசும். மலைகள் இன்பம் துளிர்க்கும். குன்றுகள் பாலும் தேனும் பொழியும். ஏனெனில் மாபெரும் தீர்க்கதரிசி வருவார். அவர்  ஜெருசலேமைச் சீராக்குவார். (தேவராஐன்)

2. இதோ, தாவீதின் குலத்தினின்று மனுதேவன் வருவார். அவர்  சிம்மாசனம் ஏறுவதைக் காண்பீர். அந்நாள் நீங்கள் ஆனந்தம் கொள்வீர். (தேவராஐன்)

3. இதோ, நம் காவலரான ஆண்டவர்  வருவார். அவர்  சிரமதில் முடி சூடிய இஸ்ராயேலின் இராஐன். ஒரு கடல் முதல் மறுகடல்வரை, பூமியின் ஒரு கோடி முதல் மறுகோடி வரை யாவையும் அடக்கி அரசு ஆளுவார். (தேவராஐன்)

4. இதோ, ஆண்டவர்  தோன்றுவார். அவர்  சொல்லோ பொய்யாகாது. அவர்  தாமதம் செய்தாலும் எதிர் பாருங்கள். ஏனெனில் தாமதிக்காமல் வருவார். (தேவராஐன்)

5. அன்று ஆட்டுத்தோல் மீது பெய்த மழைபோல் ஆண்டவர்  இறங்குவார். அந்நாளில் நீதியும் சமாதானமும் செழிக்கும். பூமி ஆளும் வேந்தர்  எல்லோரும் அவரை வணங்குவர். மாந்தர்  எல்லோரும் போற்றி சேவிப்பர். (தேவராஐன்)

6. நமக்கெனப் பாலன் பிறப்பார். அவரை வல்ல தேவன் என்பர். தம்முடைய தந்தை தாவீதின் சிம்மாசனம் ஏறி அவர்  செங்கோல் செலுத்துவர். அவரது வல்லபத்தை அவர்  தோளிலே காண்பீர். (தேவராஐன்)

7. உன்னத கடவுளின் நகரமான பெத்லகேமே, உன்னிடமிருந்தே இஸ்ராயேலின் அதிபர்  எழுந்தருளுவார். அவர்  வருகை நித்திய நாட்களின் துவக்கத்திலிருந்தது போல் ஆகும். அவரை உலகெல்லாம் போற்றிப் புகழும். அவர்  வருங்கால் நம் நாட்டில் சமாதானமே நிலைக்கும். (தேவராஐன்)

டிசெம்பர்  24, இயேசுநாதரின் பிறப்புக்கு முந்தின நாளில் தொடர்ந்து பாடிவேண்டியது.

8. நாளை பூமியில் பாவம் அழிந்தே தீரும். உலக மீட்பர்  நம்மை அரசாளுவார்  பாரீர். (தேவராஐன்)

9. அருகில் தேவன் வந்துள்ளார்.

10. வாரும் ஆராதிப்போமே!

====================
திருப்பலி ஆரம்பம்
====================
குரு:  தந்தை மகன் தூய ஆவியின்........ஆண்டவரே இரக்கமாயிரும்
குரு: சபை மன்றாட்டு

டிசெம்பர்  16
ஆண்டவரே விரைந்து வாரும். தாமதம் செய்யாதேயும். உமது தெய்வீக வல்லபத்தின் உதவியை எங்களுக்குத் தந்து, இரக்கத்தை நம்பி உள்ளவர் களை உமது அன்பான வருகையினால் தேறுதல் அடையச் செய்தருளும். பிதாவாகிய இறைவனோடு பரிசுத்த ஆவியாரின் ஐக்கியத்தில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், எம் திருமகனுமாகிய இயேசுக்கிறீஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்.

டிசெம்பர்  17
இறைவா, மனுக்குலத்தைப் படைத்தவரும் மீட்டவரும் நீரே. என்றும் கன்னியான மரியாளின் உதரத்தில் உம்முடைய வார்த்தையானவர்  மனுவுரு எடுக்கத் திருவுளம் கொண்டீர். எங்கள் மன்றாட்டுக்களைத் தயவாய் ஏற்றருளும். எங்கள் மனித இயல்பில் பங்கு கொள்ளும் உம் திருமகன் தம் தெய்வீக இயல்பில் நாங்களும் பங்கு பெறச் செய்வீராக! உம்மோடு பரிசுத்த ஆவியாரின் ஐக்கியத்தில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், எம் திருமகனுமாகிய இயேசுக்கிறீஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்.

டிசெம்பர்  18
எல்லாம் வல்ல இறைவா!
பழைய அடிமைத்தனத்தின் பாவச்சுமை எங்களை அழுத்துகின்றது. எனவே நாங்கள் எதிர் பார்த்திருக்கும் உம் ஒரே திருமகனின் புதுப்பிறப்பினால் எங்களை மீட்டருள்வீராக! உம்மோடு பரிசுத்த ஆவியாரின் ஐக்கியத்தில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், எம் திருமகனுமாகிய இயேசுக்கிறீஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்.

டிசெம்பர்  19
இறைவா, புனித மரியாளின் திருக்கனியை, உமது மாட்சிமையின் சுடரொளியை, உலகுக்கு உருவான இந்த அரிய மறை உண்மையை, முழுவிசுவாசத்துடன் என்றும் கொண்டாட எங்களுக்கு அருள்வீராக! உம்மோடு பரிசுத்த ஆவியாரின் ஐக்கியத்தில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், எம் திருமகனுமாகிய இயேசுக்கிறீஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்.


டிசெம்பர்  20
இறைவா, வானவர்  தூதுரைக்க மாசற்ற கன்னிமரி சொல்லற்கரிய உம் வார் த்தையானவரை ஏற்றுக்கொண்டாள். இதனால் அவள் இறைவன் உறையும் இல்லமாகி பரிசுத்த ஆவியின் ஒளியால் நிரம்பப் பெற்றாள். ஆகவே நாங்கள் அவருடைய முன்மாதிகையைப் பின்பற்றுவோம் உம்மோடு பரிசுத்த ஆவியாரின் ஐக்கியத்தில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், எம் திருமகனுமாகிய இயேசுக்கிறீஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்.

டிசெம்பர்  21
ஆண்டவரே, உம்முடைய மக்களின் மன்றாட்டுக்களுக்கு கனிவாய் செவிசாய்த்தருளும்.
உம் ஒரே திருமகன் மனுவுருவானதைக் குறித்து மகிழ்கின்ற நாங்கள், அவர்  தம் மகிமையில் வரும்போது, முடிவில்லா வாழ்வைப் பரிசாகக் கொள்ளும்பேறு பெறுவோமாக. உம்மோடு பரிசுத்த ஆவியாரின் ஐக்கியத்தில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், எம் திருமகனுமாகிய இயேசுக்கிறீஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்.

டிசெம்பர்  22
இறைவா மரணதண்டனைக்குள்ளான மனிதனைக் கண்ணுற்ற நீர், உம் ஒரே திருமகனின் வருகையால் அவனை மீட்கத் திருவுளம் கொண்டீர். அவர்  மனுவுருவானதைப் பற்றி ஆர்வத்துடன் விசுவசிக்கிற நாங்கள், மீட்பராகிய அவருடன் தோழமை கொள்ளத் தகுதி பெறுவோமாக. உம்மோடு பரிசுத்த ஆவியாரின் ஐக்கியத்தில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் எம் திருமகனுமாகிய இயேசுக்கிறீஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்.

டிசெம்பர்  23
எல்லாம் வல்ல நித்திய இறைவா, உம் திருமகன் மனிதனாய் பிறக்க இருப்பதை அறிந்திருக்கும் நாங்கள் உம்மை வேண்டுகின்றோம். கன்னிமரியிடமிருந்து மனுவுருவாகி எம்மிடையே குடிகொள்ளத் திருவிளமான வார்த்தையானவர்  தகுதியற்ற ஊழியர்களாகிய எங்களுக்கு பரிவிரக்கம் காட்டுவாராக. உம்மோடு பரிசுத்த ஆவியாரின் ஐக்கியத்தில், இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், எம் திருமகனுமாகிய இயேசுக்கிறீஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்.

டிசெம்பர்  24

ஆண்டவராகிய இயேசுவே, உம்மை வேண்டுகிறோம் விரைந்து வாரும். காலம் தாழ்த்தாதேயும். உமது பரிவிரக்கத்தில் நம்பிக்கை கொண்டுள்ள உம் மக்கள் உமது வருகையால் ஆறுதலும், ஆதரவும் பெறுவார்களாக. உம்மோடு பரிசுத்த ஆவியாரின் ஐக்கியத்தில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், எம் திருமகனுமாகிய இயேசுக்கிறீஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.


முதல் வாசகம்: (பழைய ஏற்பாட்டிலிருந்து)

டிசெம்பர்  16 இசை: 35:1-4
டிசெம்பர்  17 இசை: 40:3-5
டிசெம்பர்  18 இசை: 09:1-6
டிசெம்பர்  19 இசை: 11:1-6,9
டிசெம்பர்  20 இசை: 61:1-4
டிசெம்பர்  21 இசை: 60:1-5
டிசெம்பர்  22 இசை: 02:2-3
டிசெம்பர்  23 இசை: 40:9-11
டிசெம்பர்  24 இசை: 07-13-14


தியானப்பாடல்:

1. வானமே மகிழ்வாய். பூமியே பூரிப்படைவாய். மலைகளே! ஆனந்தம் கொள்வீர்

2. மலைகள் இன்பம் பொழிவதாக. குன்றுகள் நீதியைத் தருவதாக.

3. ஏனெனில் வருவார் நம் ஆண்டவர் தம் எளியோர்மேல் இரக்கம் கொள்வார்.

4. வானங்களே! மேல் நின்று நீதிமானைப்போல் பெய்யுங்கள். மேகங்களும்
     நீதிமானைப் பொழிக! மாநிலம் திறந்து மீட்பரைப் பிறக்கச் செய்க!

5. ஆண்டவா! எங்களை நினைவு கூரும். உமது மீட்புடன் எம்மைக் காண வாரும்.

6. ஆண்டவா! எங்கள்மேல் கருணை காட்டி எம்மை ஈடேற்றும் சுவாமி.

7. உலகாளும் செம்மறிப்புருவையே பாலைவனப் பாறையினின்று சீயோன் மகளின்
     மலைக்கனுப்பிடும் சுவாமி.

8. வல்லபக் கடவுளாகிய ஆண்டவரே! எம்மை விடுவிக்க வாரும். உம்
  திருமுகத்தைக் காட்டும். நாங்கள் ஈடேற்றம் அடைவோம்.

9. வாரும் ஆண்டவா! அமைதியில் எம்மைக்காண உத்தம உள்ளமுடன் உம்மைக்
   கண்டு களிப்போம்.

10. பூவுலகில் உம் திருவழிகளையும், எல்லா நாட்டினர் மத்தியில் உமது
      இரட்சிப்பையும் கண்டறிவோம்.

11. வாரும் உமது வல்லமை எல்லாம் கொண்டு எம்மை மீட்டுக் காத்திடும் சுவாமி.

12. ஆண்டவா காலதாமதம் செய்யாமல் வாரும்.  உம் மக்களின் பாவக்கட்ட
   விழ்த்துத் தாரும்.

13. வானைப் பிளந்து எந்நாள் எந்நாள் இறங்கி வருவீரோ, உம் கனி முகத்தைக்
     கண்டாலோ, மலைகளும் உருகிப்பாயுமே.

14. வானோர்க்கு மேல் வீற்றிருக்கும் தேவா! வாரும் உம் முகத்தை எமக்கு
     காண்பித்தருள்வீரே.

15. தந்தை, தனையன், தூய ஆவியானவர் மூவருக்குமே புகழ் உண்டாவதாக.

16. ஆதியில் இருந்ததுபோல் இன்றும் என்றும் முடிவில்லாக் காலமும்
      உண்டாவதாக.


தேவநற்கருணை ஸ்தாபகம் - நற்கருணைப்பாடல் அல்லது திருப்பலி - அல்லேலுயா.

(நற்செய்தி வாசகம்)



டிசெம்பர்  16 மத்தேயு 21:28-32
டிசெம்பர்  17 மத்தேயு 1:1-17
டிசெம்பர்  18 மத்தேயு 1:18-24
டிசெம்பர்  19 மத்தேயு 1:5-25
டிசெம்பர்  20 மத்தேயு 1:26-38
டிசெம்பர்  21 மத்தேயு 1:39-45
டிசெம்பர்  22 மத்தேயு 1:46-56
டிசெம்பர்  23 மத்தேயு 1:57-66
டிசெம்பர்  24 மத்தேயு 7:67-69


மறையுரை



விசுவாசிகள் மன்றாட்டு 1

குரு: அன்பார்ந்த சகோதரரே, அன்று கன்னியின் திருவயிற்றில் தம் ஒரே மகன் பிறக்கத் திருவுளமான இறைவன், இன்று நம் உள்ளங்களில் அவரைப் பிறக்கச் செய்யுமாறு உருக்கமாய் இறைஞ்சுவோமாக.

1. இறைவா உம் திருமகனின் பிறப்பினால் நாங்கள் பெரிதும் பயனடைவதற்கு, எங்கள் உள்ளங்களைப் பயன்படுத்தும்படியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: வாரும் ஆண்டவராகிய கிறிஸ்துவே வாரும்.

2. எல்லாம் வல்ல இறைவா!  உண்மையான மனமாற்றைத்தையும், தவ உணர்வையும் எங்கள் உள்ளங்களில் தூண்டி எழுப்பும்படியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: வாரும் ஆண்டவராகிய கிறிஸ்துவே வாரும்.

3. அமைதியின் இறைவா! உலகம் முழுமையிலும் அமைதி நிலவிட. பிணி நீங்கிட, பஞ்சம் பறந்திட தீமை ஒழிந்திட அருள் புரியுமாறு உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: வாரும் ஆண்டவராகிய கிறிஸ்துவே வாரும்.

4. இறைவா! எளியோர் நற்செய்தி கேட்டிட, உள்ளம் உடைந்தோர் மன ஆறுதல் பெற்றிட, சிறைப்பட்டோர் விடுதலை அடைந்திட வரம் அருளுமாறு உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: வாரும் ஆண்டவராகிய கிறிஸ்துவே வாரும்.

5. இறைவா! உலக மக்கள் யாவரும் உம் திருமகனையே தங்கள் ஆண்டவராகவும், மீட்பராகவும் ஏற்றுக்கொள்ளும்படியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: வாரும் ஆண்டவராகிய கிறிஸ்துவே வாரும்.


(நமது விண்ணப்பங்களை மௌனமாக எடுத்துரைப்போம்.)
(நம் வானகத்தந்தையை நோக்கி ஜெபிப்போம். - பரலோகத்தில் இருக்கிற...)


குரு: உம் அடியார்களாகிய நாங்கள் அனைவரும் எங்கள் வாழ்வின் இன்பங்களிலும், துன்பங்களிலும் விவேகமுள்ள கன்னியரைப்போல் விழித்திருந்து, உம் திருமகன் இயேசுவை வரவேற்கும்படியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்: ஆமென்.


விசுவாசிகள் மன்றாட்டு- 2

குரு: அன்பார்ந்த சகோதரரே, ஆண்டவருடைய வருகைக்காகக் காத்திருந்து தயார் செய்யும் நாம், நம் மன்றாட்டுக்களை பரமதந்தையிடம் சமர்ப்பித்து உருக்கமுடன் மன்றாடுவோமாக.

1. எங்கள் பரிசுத்ததந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவரும் இந்த திருவருகைக்காலத்தில் ஆண்டவருடைய வழிகளை ஆயத்தப்படுத்தி, தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை அவருடைய வருகைக்குத் தயார் செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. எல்லோரும் மனந்திரும்பவேண்டுமென்று ஆண்டவர் பொறுமையாக இருக்கிறார் என்பதை உணர்ந்து, கிறிஸ்தவ மக்கள் அனைவரும் மனம் மாறி, பரிசுத்த நடத்தையிலும், இறைப்பற்றிலும் சிறந்து விளங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஆண்டவர் வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவர் தம் பாதைகளைச் செம்மைப்படுத்துங்கள் என்ற புனித திருமுழுக்கு யோவானின் குரலொலியைக் கேட்டு, நாங்கள் எங்கள் ஆன்மாவைப் புனிதப்படுத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. மேடு போன்று இருக்கின்ற அகங்காரத்தை அகற்றி, குழிகள் போன்று இருக்கின்ற குறைகளை நீக்கி, கோணலான வாழ்க்கையை நேர்படுத்தி ஆண்டவரின் வருகைக்கு நாங்கள் நன்கு தயார் வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

(நமது விண்ணப்பங்களை மௌனமாக எடுத்துரைப்போம்.)
விண்ணரசின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கும் நாம் பணிந்து பணிந்து சொல்லுவோம்.- பரலோகத்தில் இருக்கிற...)



குரு: எல்லாம் வல்ல நித்திய இறைவா, உமது திருமகனின் வருகைக்கு எங்கள் ஆன்மாவை ஆயத்தப்படுத்தி, அவர் தரவிருக்கும் வரங்களை அதிகமாய் பெற வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்: ஆமென்.




விசுவாசிகள் மன்றாட்டு -3

குரு: அன்பார்ந்த சகோதரரே! நம் ஆண்டவராகிய யேசுக்கிறிதுவின் வருகையை நாம் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். அவர் எளியோர்க்கு நற்செய்தி அறிவிக்கவும், உள்ளம் உடைந்தவர்களைக் குணமாக்கவும் இவ்வுலகத்திற்கு வந்தார். அவ்வாறே இக்காலத்திலும் வறுமையுற்றோர்க்கெல்லாம் மீட்பளிக்குமாறு அவரது வருகைக்காக உருக்கமுடன் மன்றாடுவோம்.

எல்: வாரும் ஆண்டவராகிய இயேசுவே வாரும்.

1. நமது திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவரையும், ஆண்டவர் தம் அருட் கொடைகளால் நிரப்பிட எழுந்தருளி வர வேண்டுமென்று மன்றாடுவோம்.
எல்: வாரும் ஆண்டவராகிய இயேசுவே வாரும்.

2. நம்மை ஆள்வோர் அனைவரும் பொது நலம் பேணுமாறு அவர்களின் உள்ளங்களைத் திருத்திட எழுந்தருளி வர வேண்டுமென்று மன்றாடுவோம்.
எல்: வாரும் ஆண்டவராகிய இயேசுவே வாரும்.

3. மக்களின் பிணிகளை அகற்றி, பசியைப் போக்கி, துன்பம் அனைத்தையும் துடைத்திட எழுந்தருளி வர வேண்டுமென்று மன்றாடுவோம்.
எல்: வாரும் ஆண்டவராகிய இயேசுவே வாரும்.

(நமது விண்ணப்பங்களை மௌனமாக எடுத்துரைப்போம்.)
நம் விண்ணப்பங்களை இரக்கம் மிகுந்த நம் மீட்பரின் சொற்களில் செபிப்போம். பரலோகத்தில் இருக்கிற...


குரு: எல்லாம் வல்ல நித்திய இறைவா! அனைவரையும் மீட்கிற நீர் எவரும் அழிவுற விரும்புவதில்லை. உம் மக்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்தருளும். உமது பராமரிப்பினால் உலகில் சமாதானம் நிலவுவதாக. உமது திருச்சபையும் அமைதியுடன் வாழ்ந்து பக்தியில் சிறந்தோங்குவதாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்: ஆமென்.


விசுவாசிகள் மன்றாட்டு - 4

குரு: அன்பார்ந்த சகோதர்களே! மெசியாவாகிய கிறிஸ்துவை உலகிற்கு அனுப்பி, நம்மை மீட்டு, நம்மை மகிழ்வித்த அன்புத் தந்தையிடம் நம் மன்றாட்டுக்களை சமர்ப்பிப்போம்.
எல்: வாரும் ஆண்டவராகிய இயேசுவே வாரும்.

1. எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவரும், தூய திருமுழுக்கு யோவானைப்போல் கிறிஸ்துவின் வழிகாட்டிகளாக அமைய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: வாரும் ஆண்டவராகிய இயேசுவே வாரும்.

2. ஆண்டவரே! கிறிஸ்துவ மக்களனைவரும் செபத்தில் நிலைத்திருந்து, உமக்கு நன்றி கூறி மகிழ்ச்சியோடு வாழ்ந்து, தங்கள் உடல் மனம் முழுவதையும் குற்றமின்றிக் காக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: வாரும் ஆண்டவராகிய இயேசுவே வாரும்.


3. ஆண்டவரே! கிறிஸ்துவின் வருகையானது நோயாளிகளுக்கு உடல் நலத்தையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், எல்லோருக்கு மீட்புச் செய்தியையும் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: வாரும் ஆண்டவராகிய இயேசுவே வாரும்.


(நமது விண்ணப்பங்களை மௌனமாக எடுத்துரைப்போம்.)
நம் விண்ணப்பங்களுக்கு அஸ்திவாரமிட்டு நம் மீட்பர் தந்த செபம்செபிப்போம். பரலோகத்தில் இருக்கிற...


குரு: எல்லாம் வல்ல நித்திய இறைவா! உண்மையான மகிழ்ச்சியைத் தாரும் தந்தையே, வரவிருக்கும் கிறிஸ்மஸ் விழாவை பெரும் மகிழ்வோடு கொண்டாட வேண்டிய தூய உள்ளத்தைத் தருமாறு எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்: ஆமென்.



விசுவாசிகள் மன்றாட்டு - 5

குரு: அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! கிறிஸ்மஸ் பெருவிழாவைக் கொண்டாடப்போகும் நாம், தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பி, தந்தையிடம் நம் மன்றாட்டுக்களை சமர்ப்பிப்போமாக.

1. எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார்கள் அனைவரும், உலக மீட்பரின் வருகையை எல்லோருக்கும் அறிவிக்க வேண்டிய அருளைத் தருமாறு உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. ஆண்டவரே! வியாதி, வறுமை, வருத்தம் ஆகியவைகளால் வாடுவோர் அனைவரும், கிறிஸ்துவின் வருகையால் உடல் நலமும், மன ஆறுதலும் பெறவேண்டுமென்று மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


3. ஆண்டவரே! இளைஞர், இளம் பெண்களும், சிறுவர், சிறுமிகளும் கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாட அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

(நமது விண்ணப்பங்களை மௌனமாக எடுத்துரைப்போம்.)
நம் விண்ணப்பங்களுக்கு அஸ்திவாரமிட்டு நம் மீட்பர் தந்த செபம் செபிப்போம். பரலோகத்தில் இருக்கிற...


குரு: எல்லாம் வல்ல நித்திய இறைவா! உண்மையான மகிழ்ச்சியைத் தாரும் தந்தையே, வரவிருக்கும் கிறிஸ்மஸ் விழாவை பெரும் மகிழ்வோடு கொண்டாட வேண்டிய தூய உள்ளத்தைத் தருமாறு எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்: ஆமென்.




விசுவாசிகள் மன்றாட்டு - 6

குரு: அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! கிறிஸ்மஸ் பெருவிழாவைக் கொண்டாடப்போகும் நாம், தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பி, தந்தையிடம் நம் மன்றாட்டுக்களை சமர்ப்பிப்போமாக.
எல்: வாரும் ஆண்டவரே தாமதம் செய்யாதேயும்.

1. உமது திருச்சபை உலகெங்கும் பரவும்படியாகவும், எல்லா மக்களும் ஒரே மந்தையில் சேரும்படியாகவும்...
எல்: வாரும் ஆண்டவரே தாமதம் செய்யாதேயும்.

2. நாட்டை ஆள்பவர்களும், நாட்டு மக்களும் போர் பூசல்களிலிருந்து விலகும் படிணாகவும், அமைதியின் அரசர் அனைவரையும் ஆட்கொள்ளும் படியாகவும்....
எல்: வாரும் ஆண்டவரே தாமதம் செய்யாதேயும்.

3. உலகின் மாந்தர் அனைவருக்கும் நற்செய்தியை அறிவிக்கும்படியாகவும், ஏழைகளும, வறியவரும், அனாதைகளும், நோயாளிகளும் ஆறுதல் பெறும் படியாகவும்..
எல்: வாரும் ஆண்டவரே தாமதம் செய்யாதேயும்.

4. உமது முதல் வருகையை நினைவு கூருகின்ற நாங்கள் அனைவரும், உமது விண்ணக வருகைக்காக எம்மைத் தகுந்த விதமாகத் தயாரிக்க அருள்புரியும்படியாகவும்...
எல்: வாரும் ஆண்டவரே தாமதம் செய்யாதேயும்.


(நமது விண்ணப்பங்களை மௌனமாக எடுத்துரைப்போம்.)
நம் விண்ணப்பங்களுக்கு அஸ்திவாரமிட்டு நம் மீட்பர் தந்த செபம் செபிப்போம். பரலோகத்தில் இருக்கிற....


குரு: எல்லாம் வல்ல நித்திய இறைவா! உண்மையான மகிழ்ச்சியைத் தாரும் தந்தையே, வரவிருக்கும் கிறிஸ்மஸ் விழாவை பெரும் மகிழ்வோடு கொண்டாட வேண்டிய தூய உள்ளத்தைத் தருமாறு எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்: ஆமென்.


விசுவாசிகள் மன்றாட்டு 7

குரு: அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! நம் ஆண்டவராகிய யேசுக்கிறிதுவின் வருகையை நாம் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். அவர் எளியோர்க்கு நற்செய்தி அறிவிக்க இவ்வுலகத்திற்கு வந்தார். அவ்வாறே இக்காலத்திலும் வறுமையுற்றோர்க் கெல்லாம் மீட்பளிக்குமாறு அவரது இரக்கத்தை உருக்கமுடன் வேண்டுவோமாக.

1. உமது திருச்சபையில் எழுந்தருளி அதை என்றும் காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. உமது பாதுகாவலினால் இக்காலத்தில் உலகமெங்கும் அமைதி நிலவவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. உமது இரக்கப்பெருக்கினால் மக்களின் பிணிகளை அகற்றி, பசியைப் போக்கி இடர் அனைத்தையும் தவிர்க்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. மக்களின் முன்னிலையில் உமது அன்பின் மெய்யான சாட்சிகளாய் நாங்கள் விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


(நமது விண்ணப்பங்களை மௌனமாக எடுத்துரைப்போம்.)
நம் விண்ணப்பங்களுக்கு அஸ்திவாரமிட்டு நம் மீட்பர் தந்த செபம் செபிப்போம். பரலோகத்தில் இருக்கிற...



குரு: எல்லாம் வல்ல நித்திய இறைவா! உம் திருமகன் மனிதனாய் பிறக்க இருப்பதை அறிந்துள்ள நாங்கள் தாழ்மையுடன் உம்மை வேண்டுகின்றோம். கன்னிமரியிடமிருந்து மனுவுருவாகி எம்மிடையே குடிகொள்ளத் திருவிளமான வார் த்தை தகுதியற்ற ஊழியர்களாகிய எங்களுக்கு பரிவிரக்கம் காட்டுவாராக. உம்மோடு பரிசுத்த ஆவியாரின் ஐக்கியத்தில், இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், எம் திருமகனுமாகிய இயேசுக்கிறீஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.



விசுவாசிகள் மன்றாட்டு - 8

குரு: அன்பின் இறைவா! வழிமேல் விழி வைத்து உமது வருகைக்கு தயார் செய்யும் முறையில் நாங்கள் உம்மிடம் கேட்கும் வரங்களையும், மன்றாட்டுக்களையும் அருள்கூர்ந்து கொடுக்க உம்மிடம் இப்போது வேண்டுகிறோம்.

1. எம் திருத்தந்தையையும், மறைஆயர் குழுவினர் குருக்கள், துறவியர் அனைவரையும் உம் அருட் கொடைகளால் நிரப்ப வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. எங்களை ஆள்வோர், பொதுநலம் பேணுமாறு அவர்களின் உள்ளங்களை உம்திருவுளத்திற்கேற்ற வழியில் நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


3. அநியாயமாய் துன்பத்திற்கு உள்ளாகி அவதிப்படுவோரைத் தேவரீர் கருணையுடன் விடுவிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. தேவரீர் வரும்போது நாங்கள் கண்விழித்துக் காத்திருப்பதை நீர் காண வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


(நமது விண்ணப்பங்களை மௌனமாக எடுத்துரைப்போம்.)
நம் விண்ணப்பங்களுக்கு அஸ்திவாரமிட்டு நம் மீட்பர் தந்த செபம் செபிப்போம். பரலோகத்தில் இருக்கிற...


குரு: எல்லாம் வல்ல நித்திய இறைவா! உம் திருமகன் மனிதனாய் பிறக்க இருப்பதை அறிந்துள்ள நாங்கள் தாழ்மையுடன் உம்மை வேண்டுகின்றோம். கன்னிமரியிடமிருந்து மனுவுருவாகி எம்மிடையே குடிகொள்ளத் திருவிளமான வார் த்தை தகுதியற்ற ஊழியர்களாகிய எங்களுக்கு பரிவிரக்கம் காட்டுவாராக. உம்மோடு பரிசுத்த ஆவியாரின் ஐக்கியத்தில், இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், எம் திருமகனுமாகிய இயேசுக்கிறீஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


விசுவாசிகள் மன்றாட்டு 9

குரு: அன்பின் இறைவா! வழிமேல் விழி வைத்து உமது வருகையை எதிர்பார்க்கும் பிள்ளைகள் நாங்கள், உமது வருகைக்கு தயார் செய்யும் முறையில் நாங்கள் உம்மிடம் கேட்கும் வரங்களையும், மன்றாட்டுக்களையும் அருள்கூர்ந்து கொடுக்க உம்மிடம் இப்போது வேண்டுகிறோம்.

1. எல்லாம் வல்ல இறைவா! இவ்வுலகில் பயணம் செய்யும் திருச்சபை, உமது வருகைக்கு தன்னைத் தகுந்த முறையில் தயார் செய்ய உதவி செய்யும்படியாக மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. திருச்சபையின் தலைவராகிய இறைவா! எங்கள் பரிசுத்த தந்தை, மறைஆயர்கள், குருக்கள், மற்றும் ஞான அதிகாரிகள் எங்களை உமது வருகைக்கு தயார் செய்வதில் அதிக ஆர்வத்துடனும், மன உறுதியுடனும் பணி புரிய அருளுமாறு உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. கைவிடப்பட்போரின் ஆறுதலான இறைவா! ஏழைகளும், அனாதைகளும், கைவிடப்பட்டோரும், எளியவரும் உமது இரக்கத்தையும், அருளையும் பெற்றிட, தங்கள் வாழ்க்கையில் உம்மை என்றுமே பின்பற்ற அவர்களுக்கு வேண்டிய ஆதரவும், அன்பும் கொடுக்கும்படியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. அனைத்துலகின் இறைவா! இங்குள்ள நாங்கள் அனைவரும், எங்கள் அயலாருக்கு குறிப்பாகத் தாழ்நிலையில் உள்ளோருக்கு உதவி செய்வதில்தான் உண்மையான அன்பு அடங்கியுள்ளது என்பதை உணரும்படியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

(நமது விண்ணப்பங்களை மௌனமாக எடுத்துரைப்போம்.)
நம் விண்ணப்பங்களுக்கு அஸ்திவாரமிட்டு நம் மீட்பர் தந்த செபம் செபிப்போம். பரலோகத்தில் இருக்கிற


குரு: ஆண்டவரே விரைந்து வாரும் தாமதம் செய்யாதேயும். உமது தெய்வீக வல்லபத்தின் உதவியை எங்களுக்குத் தந்து, உமது இரக்கத்தை நம்பி உள்ளவர்கள் உமது வருகையின் ஆறுதலினால் தேறுதல் அடையச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறீஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

  காணிக்கைப்பாடல் அல்லது மாண்புயர்
          Antiphons for Magnificat




டிசெம்பர்  16

இதோ ராஐன் வருவார், பூமியின் நாதன். நம் அடிமை முகத்தடியை அவரே நீக்கிடுவார்.

டிசெம்பர்  17
ஓ ஞானமே! உன்னதரின் வாயினின்று வெளியாகி, கோடியினின்று கோடியைத் தொட்டு, வன்மையோடும், இனிதோடும் எல்லாம் சீராய் அமைத்தாய். வாராய். விவேகத்தின் வழியை எமக்குக் கற்றுத் தாராய்.

டிசெம்பர்  18
ஓ ஆண்டவரே! இஸ்ராயேல் வீட்டின் ராஐனே, சுவாலை விட்டெரிந்த முட்செடியில் மோயீசனுக்கோர் நாள் சீனாயில் கற்பனை ஈந்தாய். வாராய், கரத்தை நீட்டியே எங்களை மீட்டுத் தாராய்.


டிசெம்பர்  19
ஓ யெஸ்சேயின் வேரே! மாந்தருக்கோர் அடையாளமே, பூவேந்தர் உன்முன்னால் அடக்குவார் நாவை. பாரோர் யாரும் வேண்டுவார் உன்னை. வாராய் எம்மை அன்போடு மீளாய். தாமதம் வேண்டாமே.

டிசெம்பர்  20
ஓ தாவீதின் திறவு கோலே! இஸ்ராயேலின் வீட்டின் செங்கோலே, நீ திறக்க, மூட எவருமில்லை. நீ மூட, திறக்க எவருமில்லை. வாராய். சாவின் நிழலிலும் இருளிலும் வாழ்வோரைக் கட்டவிழ்த்து சிறையினின்று வெளியேற்றிக் காராய்.

டிசெம்பர்  21
ஓ உதயமே! நித்ய ஒளிச் சுடரே! நீதியின் சூரியனே! வாராய். சாவின் இருளிலும், நிழலிலும் வாழ்வோர் மீது ஒளியை வீசுவாய்.

டிசெம்பர்  22
உலகாள் வேந்தே! மானிடரின் அலாதி அன்பே. வாழ்வின் மூலைக்கல்லே. ஈரையும் ஒன்று செய்வோனேஇ வாராய். மண்ணின்று உருவான மானிடனை ஈடேற்றாய்.

டிசெம்பர்  23
ஓ எம்மானுவேலே! சட்ட கர்த்தா, எம் கோவே. பாரால் எதிர்பார்க்கப்பட்டோனே. அனைவரின் இருள் மீட்போனே, வாராய். மீட்டெம்மைக் காராய். ஆண்டவா, எங்கள் தேவா.

டிசெம்பர்  24
வானின்று ஆதவன் எழுந்தகால், ராயேஸ்வரன், மஞ்சம் நீங்கி ஏகும் மணாளனைப்போல், பிதாவினின்று புறப்படக் காண்பீர்.

========================
தேவதாயின் புகழ்க் கீதம்
========================
என் ஆன்மா ஆண்டவரை மகிமைப்படுத்துகின்றது
என் மீட்பராம் இறைவனிடம் என் மனம் மகிழ்கின்றது

தன்னடிமை தாழ்மையினை அவர் கருணைக்கண் கொண்டதினால்
இதோ எல்லாத் தலை முறைகளும் என்னைப் பாக்கியவதி என்பார்;

ஏனெனில் வல்லபமுள்ளவர் எனக்குப் பெரியன புரிந்தார்;
அவர் பெயர் புனிதமானதாம்

அவருடைய கிருபையும் தலை முறை தலை முறையாய்
அவருக்குப் பயந்து நடப்போர்க்கே

தன் கரத்தின் வலிமை காட்டி
இருதய சிந்தனையில் கர்வமுள்ளோரைச் சிதறடித்தார்;

வல்லபமே உள்ளோரை அவர் இருக்கையில் இருந்து தள்ளி
தாழ்ந்தோரை உயர்த்தினார்;

பசித்தேதான் இருப்பவரை அவர் நன்மைகளால் நிரப்பி
தனவான்களை வெறுமையாக அனுப்பினார்;

தன் கிருபையை நினைவு கூர்ந்து
தம் தாசராம் இஸ்ராயேலைக் காத்திட்டார்;

நம் அரும் பிதாப்பிதாக்களாம் ஆபிரகாமுக்கும்
ஊழியுள்ள காலம் அவரது வித்துக்கும் அவர்
தந்த வாக்குறுதி அதுவேயாம்

பிதாவுக்கும் சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும்
ஸ்தோத்திரம் உண்டாவதாக

ஆதியிலிருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும்
என்றென்றும் இருப்பதாக. ஆமேன்


மாண்புயர்

1. சருவேசுரா, இந்த வியப்புக்குரிய திரு அருட்சாதனத்திலே உம்முடைய திருப்பாடுகளின் நினைவை எங்களுக்கு விட்டுச் சென்றீர். உமது திருவுடல், திரு இரத்தம் இவற்றின் மறைபொருளை வணங்கும் நாங்கள் உம் மீட்பின் பலனை இடைவிடாமல் அனுபவிக்க அருள் புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.

2. இறைவா உமது திருமகனின் பாஸ்கா மறைபொருள் வழியாக மானிடரின் மீட்பு பணியை நிறைவேற்றினீர். இத்திருவருட்சாதனத்தின் மூலம் அவருடைய மரணத்தையும், உயிர்ப்பையும் விசுவாச அறிக்கையிடும் நாங்கள், உமது மீட்பின் பணியை இடைவிடாது உணரச் செய்தருளும். ஆண்டவராகிய இயேசுக்கிறீஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்.

3. இறைவா! எமது திருமகன் கிறிஸ்துவை மானிடரின் தலைமைக் குருவாக நியமித்தீர். உமது நன்மைத்தனத்தினால் அவர் தமது திரு இரக்கத்தால் தமக்கு சொந்தமாக்கிக் கொண்ட மக்கள், அவர் மரணத்திருப்பலியில் பங்கு கொண்டு அவரின் திருப்பலியில் பங்கு கொண்டு அவரின் சிலுவை, உயிர்ப்பு இவைகளினால் ஆச்சரியத்துக்குரிய ஆன்மீக வலிமையைப் பெற அருள் புரியும். இவற்றை எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறீஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

4. ஆண்டவராகிய இயேசுவே! நற்கருணையை திருவருட்சாதனமாகவும், ஒற்றுமையின் சின்னமாகவும், சிநேகத்தின் பிணைப்பாகவும் ஏற்படுத்தினீரே. உமது திருச்சபைக்கு உம் அன்பின் கொடையை அளித்தருளும். பிரிந்துள்ள மக்களை இப்பலிப்பீடத்தைச் சுற்றி ஒன்று சேர்த்தருளும் என்றென்றும் வாழ்ந்து இறைவனிடம் ஆட்சி செய்கின்றவர் நீரே.

===========
பாடல்கள்
===========

கருணைக்கடலே வா
கருணைக்கடலே வா துதித்த தயாபரா வா
சுருதி மறையோர்க்கு சுடரொளியே வா

ஆதோனாயி ஆனந்தமே
ஆவலுடன் காத்திருக்கும்
அடிமைகளைச் சந்திக்க

எம்மானுவேல் இயேசுநாதா
எங்கள் பாவ தோசம் தீர
ஏன் இன்னும் தாமதமே

பேய்மாய்க்கு பாவவழிப்
பீடையினால் வாடும் உந்தன்
பிள்ளைகளின் மேலிரங்கி



எழுந்திடாய் உலகமே

எழுந்திடாய் உலகமே இருளில் நின்றெழுந்திடாய்
குழந்தையாம் இயேசுவின் அருள் ஒளி கண்டிடாய்
எழுந்திடாய் உலகமே எழுந்திடாயோ

நடுநிசி வேளையில் நடுங்கும் குளிரினில்
பயமிகுதனிமையில் பாலகள் அழுகின்றார் .

வண்ணப் பொலிவாம் வானவர்  பாடிட
எண்ணரும் இசையிலே இன்கீதம் எழுந்திட
மன்னவர்  மன்னனை மாண்புடன் மடியினில்
தன்னலம் கருதாத் தாய்மரி ஏந்திட

குளிரின் கொடுமை மேனியை வாட்டிட
இருளின் ஆட்சி தலைவிரித்தாடிட
ஓளியாம் திருமகன் குழந்தை வடிவினில்
அழியா இன்பம் அளித்திடும் பாலகன்


உருவில்லா இறைவனானார்

உருவில்லா இறைவனானார். இன்று
மரியின் மடியில் மகனானார்.

ஆயிரம் ஆண்டுகள் காத்திருந்தார் - மக்கள்
மாபரன் வருகையைப் பார்த்திருந்தார்
வந்தது அவருக்கு நற்செய்தி (2) இன்று
மீட்பர் பிறந்த அருஞ்செய்தி

விண்ணகத் தூதர்கள் கூடி வந்தார் - அன்று
இறைமகன் பிறப்பைக் கூற வந்தார்
மகிமை விண்ணில் இறைவனுக்கு (2) இன்று
அமைதி மண்ணில் நல்லோர்க்கு


கன்னி ஈன்ற செல்வமே

ஆஆரோ ஆ.ரி.ரோ.ஆ.ரா.ரோ
ஆ.ஆரோ.ஆரிரோ..ஆராரோ
கன்னி ஈன்ற செல்வமே - இம்
மண்ணில் வந்த தெய்வமே
கண்ணே மணியே அமுதமே
என் பொன்னே தேனே இன்பமே
எண்ணமேவும் வண்ணமே
என்னைத்தேடி வந்ததேன்
ஆரரோ ஆராரோ ஆர் ரோ ஆராரோ - (2)

எங்கும் நிறைந்த இறைவன் நீ
நங்கை உதரம் ஒடுங்கினாய்
ஞாலம் காக்கும் நாதன் நீ
சீலக்கரத்தில் அடங்கினாய்
தாயுன் பிள்ளை அல்லவா
சேயாய் மாறும் விந்தையேன்
ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ - (2)

வல்லதேவன் வார் த்தை நீ
வாயில்லாத சிசுவானாய் (2
ஆற்றல் அனைத்தின் ஊற்று நீ
அன்னை துணையை நாடினாய்
இன்ப வாழ்வின் மையம் நீ
துன்ப வாழ்வைத் தேர் ந்ததேன்
ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ - (2)


திருவருகைக்கால செபங்கள்

1. அருள் நிறைந்த மரியே! நீர் திருமகனுக்கு மாதாவாக குறிக்கப்பட்ட நேரம் ஆசீர்வதிக்கப்பட்டதென்று எல்லோரும் ஆண்டவருக்குத் தோத்திரம் பண்ணுவோம். (பர10 அருள் 1பிதா)

2. அருள் நிறைந்த மரியே! நீர் உம் உறவினளான எலிசபேத்தைச் சந்தித்த நேரம் ஆசீர்வதிக்கப்பட்டதே. எல்லா தலைமுறையினரும் உம்மைப் பேறுடையாள் என்று போற்றி ஆண்டவருக்குத் தோத்திரம் பண்ணக்கடவோம். (பர10 அருள் 1பிதா)

3. அருள் நிறைந்த மரியே! நீர் உமது திருமகனைப் பெற்ற நேரம் ஆசீர்வதிக்கப்பட்டது என்று எல்லோரும் ஆண்டவருக்குத் தோத்திரம் பண்ணக்கடவோம். (பர10 அருள் 1பிதா)

4. அருள் நிறைந்த மரியே! நீர் உமது திருமகனை முதல்முறை கட்டி அரவணைத்த நேரம் ஆசீர்வதிக்கப்பட்டது என்று எல்லோரும் ஆண்டவருக்குத் தோத்திரம் பண்ணக்கடவோம். (பர10 அருள் 1பிதா)

5. அருள் நிறைந்த மரியே! நீர் உமது திருமகனுக்கு அமுதூட்டிய நேரம் ஆசீர்வதிக்கப்பட்டது என்று எல்லோரும் ஆண்டவருக்குத் தோத்திரம் பண்ணக்கடவோம். (பர10 அருள் 1பிதா)


கிறிஸ்மஸ் செபம்

அன்புத் தந்தையே இறைவா! நாங்கள் உம் திருமகன் இயேசுவின் மனித அவதாரத்தின் மறை உண்மையை முழுமையாகப் புரிந்து கொள்ளச் செய்தருளும். இதனால் நாங்கள் வானதூதர்களின் புகழ்பாடலிலும், இடையர்களின் மகிழ்ச்சியிலும், ஞானிகளின் ஆராதனையிலும் பங்கு பெறுவோமாக!

பகைமையின் கதவுகளை அடைத்துவிட்டு அன்பின் கதவுகளை உலகமெங்கும் திறந்துவிடச் செய்தருளும். நாங்கள் அன்பாக அளிக்கும் கொடைகளும், வாழ்த்துக்களும், அன்பினையும் நல்லெண்ணத்தையும் கொண்டிருப்பனவாக. குழந்தை இயேசு கொண்டுவரும் அருள் வரங்களால் தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். தூய்மையான இதயத்துடன் மகிழ்ச்சியாக இருக்க எங்களுக்கு கற்பித்தருளும். கிறிஸ்து பிறப்பின் காலை வேளையில் உமது பிள்ளைகள் என்ற மகிழ்ச்சியால் எங்களை நிரப்பியருளும். கிறிஸ்து பிறப்பின் மாலை வேளையில் நன்றி நிறைந்த நினைவுடனும், மன்னித்தோம், மன்னிப்பைப் பெற்றோம் என்ற உணர்வுடன் எங்களை உறங்கச் செய்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறீஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

என் ஆன்மா

என் ஆன்மா ஆண்டவரை மகிமைப்படுத்துகின்றது
என் மீட்பராம் இறைவனிடம் என் மனம் மகிழ்கின்றது

தன்னடிமை தாழ்மையினை அவர் கருணைக்கண் கொண்டதினால்
இதோ எல்லாத் தலை முறைகளும் என்னைப் பாக்கியவதி என்பார்;

ஏனெனில் வல்லபமுள்ளவர் எனக்குப் பெரியன புரிந்தார்;
அவர் பெயர் புனிதமானதாம்

அவருடைய கிருபையும் தலை முறை தலை முறையாய்
அவருக்குப் பயந்து நடப்போர்க்கே

தன் கரத்தின் வலிமை காட்டி
இருதய சிந்தனையில் கர்வமுள்ளோரைச் சிதறடித்தார்;

வல்லபமே உள்ளோரை அவர் இருக்கையில் இருந்து தள்ளி
தாழ்ந்தோரை உயர்த்தினார்;

பசித்தேதான் இருப்பவரை அவர் நன்மைகளால் நிரப்பி
தனவான்களை வெறுமையாக அனுப்பினார்;

தன் கிருபையை நினைவு கூர்ந்து
தம் தாசராம் இஸ்ராயேலைக் காத்திட்டார்;

நம் அரும் பிதாப்பிதாக்களாம் ஆபிரகாமுக்கும்
ஊழியுள்ள காலம் அவரது வித்துக்கும் அவர்
தந்த வாக்குறுதி அதுவேயாம்

பிதாவுக்கும் சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும்
ஸ்தோத்திரம் உண்டாவதாக

ஆதியிலிருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும்
என்றென்றும் இருப்பதாக. ஆமேன்

 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா