Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  மங்கள வார்த்தைகள்

  அர்ச்.மரியாயே!

   
இங்கு அன்னையை நாம் அர்ச்சிஸ்டவர் என்றழைக்கின்றோம். புனிதர்களும் மனிதர்கள் தான். குறைநிறைகளோடு வாழும் மனிதர்களே மேலான நிலைக்கு உயர்த்தப்படுகிறார்கள். வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து இறை விருப்பத்தை முற்றிலுமாக நிறைவேற்றி, விண்ணரசைத் தக்க வைத்துக் கொண்டவர்கள் புனிதர்கள். இவர்களையும் விட மேலான புனித நிலையை அடைந்தவர் கன்னி மரியா. இங்கு அவர் எந்த நிலையை அடைந்தாரென அறிய வேதாகமத்தின் பேறுபெறுதல் பற்றிய தெளிவு வேண்டும். அப்போது பேறுடையாளாகிய மரியாவின் புனித நிலை நமக்கு விளங்கும்.

"ஏழைகளே! நீங்கள் பேறுபெற்றவர்கள். இப்போது பசியாய் இருப்பவர்களே! நீங்கள் பேறுபெற்றவர்கள். இப்போது அழுபவர்களே! நீங்கள் பேறுபெற்றவர்கள். (லூக்: 6:20-21) என்று லூக்காஸ் தன்னுடைய நற்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்த வரிகள் மரியாளுடைய நன்றிப் பாடலில் உள்ள சில தொடர்களை நினைவூட்டுகின்றன. தாழ்ந்தோரை உயர்த்தினார். பசித்தோரை நலன்களால் நிரப்பினார். தம் அடியாளாகிய இஸ்ராயேலை ஆதரித்தார். தாழ்நிலை நின்ற தம் அடிமையைக் கடைக்கண் நோக்கினார். இதனால் எல்லாத் தலைமுறையினரும் மரியாவைப் பேறுபெற்றவரெனப் போற்றுகின்றனர். (லூக்: 1:46-50)

ஓப்பிடுகையில் மரியாவின் பேற்றிற்குக் காரணம் தெரிய வருகின்றது. அவர் ஏழை எளியவர்களோடு தன்னை இணைத்துக்கொண்டார். ஏழ்மையே அவருடைய புனிதத்திற்கு உரை கல்லாய் இருக்கின்றது. எனவே ஏழையென்றால் யார்? எந்த ஏழை எவ்வாறு பேறுபெற்றார்? எளிமையினால் மரியா எவ்வாறு பேறுபெற்றாரென இவண் காண்போம்.

நம் மனதிலிருக்கும் ஏழை வேதாகமத்தில் ஏழையென அழைக்கப்படவில்லை. அங்குள்ள எபிரேயச் சொற்கள், பொருளாதார ஏழ்மைக்கு இலக்காகும் சொற்களல்ல.
 "ராஸ்" என்ற சொல் எவ்வித தேவையிலிருப்பவரைக் குறிக்கின்றது.
"தால்" என்றால் ஏழைகளின் அன்றாட அனைத்துக் கஸ்ரங்களையும் குறிக்கும். "எபியோன்" நிறைவற்ற குறையுள்ள, குற்றமுள்ள நிலை. 
"அனி" "ஆனா" என்பதும் இறைநெறியில் பயன்படும் சொல்.  பல்வேறு இன்னல் இடுக்கண், இடையூறுகள், சோதனைகள், வேதனைகளில் இறைவனையே தழுவி வாழும் மக்களைக் குறிப்பிடும் சொல். இவர்கள் சமுதாயத்தால் நொறுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டவர்கள். இவர்களுக்கென்று குரல் கொடுக்க யாருமில்லை. இதனால் இறைவனின் துணையையே நம்பி வாழ்பவர்களாகின்றனர்.

எல்லோராலும் கைவிடப்பட்ட காரணத்தாலேயே, இறைவனின் உதவி ஏழைகளைத்தேடி வருகின்றது. காணாமல் போன நாணயமும், ஆடும் காணவில்லை என்ற காரணத்தால், அவர்களின் பார்வையில் சிறப்புப் பெறுகின்றது. இதுபோன்று காணாமல்போன மகன் கண்முன் இல்லாததால், அவனுக்கு அதிக அக்கறை காட்டப்படுகிறது. (லூக்:15:1-32) தனக்கென்று யாரும் இல்லையென்ற உணர்வில் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு திக்கற்றவனாகத் தெருவில் நிற்கின்றான். திக்கற்றவருக்குத் தெய்வமே துணை என்பர். வாழ வகையற்று, தெளிவான வழியற்று நிற்பவருக்குத் தெளிவு காட்ட தெய்வமே முன் வருகின்றார். புனிதமான இறைவனின் தொடர்பு ஏற்படுவதால் பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவதுபோல், இறைவனோடு இணைந்த ஏழையும் புனிதமடைகிறான்.

இவ்வாறு ஏழ்மையில் தோன்றும் நற்பண்புகளால், தம்மையே புனிதமாக்கியவர்களுள் முதல்வராகத் திகழ்பவர் இயேசு. ஏழ்மையாய் பிறந்து ஏழையாய் வாழ்ந்து, ஏழ்மையின் பிடிக்குள் தன்னை உட்படுத்திக் கொண்டு தன்னை மட்டுமன்று எல்லோரையும் புனிதப்படுத்தியுள்ளார் இயேசு. பிறப்பினால் அவர் ஏழையானார். இவ்வுலகில் எத்தனையே ஏழைகள் பிறந்திருக்கின்றனர். எவரும் மாட்டுத் தொழுவில் பிறந்ததாகக் கேள்விப்பட்டதில்லை. இயேசு ஒருவரே அத்தகைய பிறப்பிற்குத் தன்னைத் தள்ளியிருக்கின்றார். (லூக்:2:4-7). இப்பிறவியில் எந்த மனிதரும் அனுபவியாத துன்பங்களை அவர் அனுபவித்துள்ளார்.

ஏழைப்பெற்றோருக்கு மகனாய்ப் பிறந்துள்ளார். இவர் தச்சன் மகன் அல்லவா! இவருடைய தாய் மரியா. செல்வத்தாலோ, செல்வாக்காலோ பெரியவரல்ல, (மத்:13:53-58). வறுமையில் வாடும் தங்கள் வாழ்க்கையை ஒட்டுவதற்கு முடியாமலிருக்க, அறிஞர்களாவது எங்ஙனம்? இவர்களுடன் வாழ்ந்து வறுமையில் வாடிய இயேசு, ஞானம் மிக்கவராய் இருப்பது உலகுக்கு வியப்பாக உள்ளது (அரு:7:46-47).

ஏழையின் தொழிலையே செய்து வந்தார். யூதஇனத்தில் வர்க்கத்தினர் ஆடு மேய்ப்பவர். விவசாயத் தொழில் புரிபவர். இவர்களுக்கும் கீழ் மட்டத்தில் வாழ்பவர், தச்சுத் தொழில் செய்பவர். இவர் தச்சன்தானே. (மாற்:6 :3) என்று ஏளனமாகவும் இழிவாகவும் குறிப்பிடுவதிலிருந்து இத்தொழில் மிகுந்த வருவாய் ஈட்டும் தொழிலாகத் தெரியவில்லை.

புகழ் பெற்ற ஊரினருமல்ல. பிறந்த ஊரை வைத்துப் பெருமை பெறுவர் சிலர். இவருடைய ஊரைப்பற்றிக் குறிப்பிடுவதற்கு ஒன்றுமில்லை. "நல்லது எதுவும் நசரேத்தூரிலிருந்து வரமுடியுமா? என்ற ஐயத்தை எழுப்புகிறார் நத்தானியேல் (அரு:1:46). இந்தக் கூற்றிலிருந்து அது வறுமைப்பட்டு, வளர்ச்சி அடையாது, குற்றங் குறைகள் மலிந்து காணப்பட்ட ஊரெனத் தோன்றுகிறது.

வறுமையை தன் சொத்தாகக் கருதுபவர். தனக்கென்று பணமோ, சொத்தோ சேர்த்து வைக்கவில்லை. அவருடைய தங்குமிடத்தப்பற்றி கேட்பவர்களுக்கு, அவர் கூறிய பதில்: நரிகளுக்கு வளைகள் உண்டு. வானத்துப்பறவைகளுக்கு கூடுகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை. (மத்:8 :20) இல்லாமையே இன்பம் எனக் கருதிய தத்துவர் இவர். பொருளின்றி பெருமகிழ்வுடன் வாழ முடியுமெனக் காட்டியவர் இவர்.

எளிய முறையிலே இவர் பவனி வருபவர். பேரரசர்கள் குதிரைகளிலும், இரதங்களிலும், தேரிலும் பவனி வருவது வழக்கம். ஆனால் இயேசுவோ கழுதைக் குட்டியின் மீது பவனி வருகின்றார். (மத்:21 :1-11, மாற்:11 :1-11, லூக்: 17 :28-38) அமைதியை அறிவிக்கச் செல்பவர் பயன்படுத்தும் வாகனம் இது. எளிமையில்தான் அமைதி குடி கொள்ளும் என்ற கொள்கையின் விளக்கமே இயேசுவின் எகிப்துப் பயணம். (மத்:2 :13-15)

ஏழைகளே இயேசுவின் தோழர்கள். இவர் பாவிகளோடும் ஆயக்காரர்களோடும் விருந்தாடுகின்றார். (மத்: 9:10-13) (மாற்:2:15-17) (லூக்:5:29-32). ஆயக்காரரான சக்கேயுவை அழைத்தார், அவருடன் பேசினார். அவருடைய இல்லத்திற்குச் சென்று அவருடன் விருந்துண்டு மகிழ்ந்தார். (லூக்:19:1-10) விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணுக்கு விடுதலை அளித்தார் (அரு:8:1-11). பாவிகள் ஆயக்காரர்கள் வேறுபட்ட நிலையில் நின்றாலும், அருளற்ற அடிப்படையில் அனைவரும் ஏழைகளே.

எனவே ஏழ்மையைக் கடைப்பிடித்து வெறுமையாக்கினால் தான் அருள் பெற்று புனிதமடைய முடியுமென்றாகிவிட்டது. இவ்வுண்மையை வார்த்தையினால் மட்டுமல்ல, வாழ்க்கையாலும் உண்மையாக்கினார் இயேசு. துவக்கம் முதல் இறுதிவரை, ஏழ்மையின் பாதையில் நடந்து இயேசு புனிதமே உருவானார்.

இந்த எளிய வாழ்வைப் பின்பற்றி அன்னைமரியாவும் அருள் நிறையப் பெற்று புனிதமடைந்துள்ளார்.


மரியா உள்ளத்தில் எளியவராக இருந்தார். கிறிஸ்து செல்வமிக்கவராய் இருந்தும் அதை விடாது பற்றிக் கொண்டிருக்க வேண்டிய ஒன்றாகக் கருதவில்லை. (பிலிப்:2:6) இதுபோல் மரியாள் உலகையே தன்னகத்தே கொண்டிருக்கிற இறைமகனை தன்னுதரத்தில் தங்கியிருந்தார். எல்லாச் செல்வத்தையும் தன்னிடம் வைத்திருந்தாலும், எல்லாம் பெற்றவராகப் பெருமை கொள்ளவில்லை. ஆண்டவர் இயேசுவைப்போல தன்னை ஓர் அடிமையெனத் தாழ்த்தினார். (லூக்: 1:38) அதேநிலையில் இறுதிவரை உறுதியாக நின்று ஆண்டவரின் பார்வையைத் தன்பக்கம் திருப்பினார். எனவே வலிமையிலும் செம்மையிலும் நாட்டம் கொள்ளாது உள்ளத்தில் வறுமையைக் இறைவன்பால் இயல்பான அன்பை வளர்த்தார்.

மரியாவுடைய உள்ளார்ந்த ஏழ்மை, அவருடைய மனதை முழுவதும் இறைவன்பால் திருப்புவதற்குப் பயன்பட்டது.
என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து இதயம் களிகூருகின்றது. (1:47) என்று பாடினார். குழந்தைக்குரிய அவருடைய உள்ளத்திலிருந்து புறப்பட்ட பாடல் இது. "நீர் கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்" என்றபோது குழந்தையின் வாஞ்சையோடு "இது எங்கனம் ஆகும்?" (லூக்:1:34) என்றார். "இதோ ஆண்டவருடைய அடிமை" (லூக்:1:38) என்பதுவும் குழந்தையின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றது. மடியில் கனமென்றால் மனதில் கலக்கம் வரும். அந்தக் கனமே இல்லையென்ற நிலையில், கவலையே கொள்ளாமல் உள்ளத்தில் குழந்தையாக உவப்புடன் ஆண்டவரிடம் திரும்பினார். குழந்தை மன எளிமையுடன் இறைமகன் இயேசுவை எளிதில் பின்பற்றினார். இறைநிகழ்ச்சிகளைக் கொண்டு வந்து மனதை நிரப்பினார். (லூக்:2:19-51) பணமுடையவர் பணவரவைப் பற்றியும், வந்த பணத்தை எப்படிப் பெருக்குவது பற்றியும் எண்ணிக் கொண்டிருப்பர். ஆனால் மரியாவோ அருள் பெற வேண்டி வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் இறைமகனைப் பின்பற்றுவது பற்றித் தியானித்துக் கொண்டிருந்தார். ஆலயத்தினுள் காணிக்கையாக்கவோ, (லூக்: 2:31-32), பாஸ்கா விழாவில் பங்கு பெறுவதற்கோ (2:38-53) கானாவூர் நிகழ்ச்சிக்குச் செல்வதிலோ (அரு: 2:1-11) அல்லது சிலுவை மரணத்திற்குத் தம் திருமகனைக் கையளிக்கும் போதோ (அரு:19:25-28) எல்லா நிகழ்விலும் மரியா இயேசுவைப் பின்பற்றினார்.

எளிமை அவரை அயலாருடன் சரளமாக ஈடுபடத் தூண்டியது. இயேசு பிறந்தவுடன் பணக்காரார் அவரைத் தேடி வரவில்லை. ஏழைகளாகிய இடையர் (லூக்: 2:7-18) சிமியோன் அன்னாள் (2:22-38) கீழ்த்திசை ஞானிகள் தேடி வந்தனர். அப்போஸ்தலரை எளிமையாக இருக்கும் படியே ஆண்டவர் பணித்தார். (மத்10:1-10) எளிமையாக இருந்ததாலே கன்னிமரியா எலிசபேத்தை நாடிச் சென்றார். அவரில்லத்தில் அவருக்குப் பணிவிடை புரிந்தார். எளிமையில் காணப்பட்ட எலிசபேத்தை ஆவியாலும் அருங் கொடைகளாலும் மாமரி மூலம் இறைவன் நிரப்பினார். (லூக்:1:39-45)

அருட்கொடைகள் எலிசபேத்தைப்போல ஏழ்மையாக இருந்த மரியாவையே அதிகம் வந்தடைந்தன. பள்ளத்தை நோக்கியே நீர் பாய்ந்தோடும். பணிவுடையவரையே எல்லோரும் மகிழ்வுடன் வரவேற்பார். ஆண்டவரே பணிவைத்தான் மாதிரியாக வைத்துள்ளார். ஆண்டவரின் மாதிரியைப் பின்பற்றித் தாழ்ச்சியைக் கடைப்பிடித்து ஒழுகியதாலே மரியா அருளால் நிரப்பப்பட்டார். தாழ்நிலை நின்ற தம் அடிமையைக் கடைக்கண் நோக்கினார். லூக்:1:48) ஒவ்வொரு முறை அவர் தன்னைத் தாழ்த்திய பொழுதும், அந்தந்தச் செயலுக்கேற்ற சரியான அருளையே அவருக்கு அளித்தார் இறைவன். இதுபோன்று மென்மேலும் செயல்களைப் பெருக்கி அருளை அதிகரித்தார்.

அதிகதிகமாய் அருளைப் பெற்ற மரியா ஆண்டவருக்குத் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்தார். அந்த அர்ப்பணம் தேவையான அருளை அவருக்குக் கொடுத்தது. "நான் தரும் அருள் உனக்குப் போதும்" (1கொரி:12:9). தேவையான எல்லா அருள் நலன்களையும் பெற்றதால், புனித சின்னப்பர் மென்மேலும் கிறிஸ்து மயமானார். இருந்தாலும், இறந்தாலும் அவருக்கென்றே வாழ்ந்தார். (உரோ: 14:7). இருந்தாலும், இறந்தாலும் இறைபுகழே விளங்கியது (பிலிப்:1:21). மரியாவின் வாழ்வில் இறைவனின் மாட்சிமையே வெளிப்பட்டது. குறிப்பாக, கானாவூர்த் திருமணத்தில் மரியா வழி, இறையாட்சி வெளிப்பட்டது. (அரு: 2:11).

நாம் செபமாலை ஜெபிக்கும் நேரம் அன்னையோடு ஒன்றித்திருக்கின்றோம். அர்ச் மரியாயே எனச் சொல்லும் வேளை மேலே குறிப்பிட்ட அத்தனை பொருளையும் உள்வாங்கிக் கொள்கிறோம். நம்மையே நாம் வெறுமையாக்கி, அன்னை வழியாக எண்ணில்லா அருளைப் பெற்றனுபவிக்கின்றோம். நாமும் அன்னையு டன் புனித நிலைக்கு நாள்தோறும் உயர்கின்றோம்.

நம்மிடை செல்வரும் வறியவரும் இவ்வுயரிய நிலைக்குத் தகுதியாகலாம். ஏனெனில் செல்வந்தர் ஏழையாகவும், ஏழைகள் செல்வந்தராகவும் வாழலாம். செல்வரோ, வறியவரோ ஆவது அவரவர் செல்வத்தின் மீது வைக்கும் பற்றுதலைப் பொறுத்திருக்கின்றது. செல்வத்தின் மீதுதுள்ள பற்று இறைப் பற்றினை விழுங்கிவிடும். செல்வத்தின் மீது பற்றில்லாமை, இறைப்பற்றுதலில் ஊறியிருக்கச் செய்யும். ஏழ்மை இத்தகைய பற்றற்றான் பற்றினைப் பற்றி மக்களைப் புனிதமடையத் துணை புரிகிறது.

மரியாவைப்போல் மரியாவோடு ஏழைகளாய் வாழ்பவர்களாகிய நாம் விண்ணரசில் பங்கு பெறுகின்றோம். (மத்:5:3, லூக்:6:20). பணக்காரன் அரண்மனை முன்பு பட்டிணியாகக் கிடந்த ஏழை இலாசரே, விண்ணில் ஆபிரகாமின் மடியில் இருக்கின்றார். (லூக்:16:19-24). மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஏழையே இறைவனுக்கு ஏற்புடையவன். (யாகப்:2:5). பாவியென ஒதுக்கப்பட்ட ஆயக்காரனே இறைவனுக்கு ஏற்புடையவனாகி வீடு திரும்புகிறான். விண்ணரசில் நுழைகிறான். லூக்:18:9-14)

ஏழைகளே வானக விருந்தில் பங்கு பெறுகின்றனர். எளியோர் உணவை உண்பர். அவர்கள் நிறைவைக் கண்டடைவர். (சங்: 22:26). ஏழைகள் உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் விண்ணக விருந்தில் இடம் பெறுகின்றனர். (லூக்:14:21-24). ஏழையென்ற காரணத்தால் அதுவும் எளிய மரியாவுடன் இணைந்ததனால், அவர்கள் விண்ணக விருந்தில் பங்கு பெறுகின்றனர்.

வறுமையைத் தன் காதலி என்றார் அசிசி பிரான்சிஸ். இவர் ஏழ்மையை நேசித்தே இறைவனுடன் இணைந்தார். இவருக்கு மாதிரி காட்டிய இயேசு ஏழ்மையைத் தேர்ந்தெடுத்தார். அதை இன்முகத்துடன் இறுதிவரை பின்பற்றினார். இதுவே புனிதமடையும் வழியாகக் கற்பித்தார்.

கற்றதைக் கற்றவாறு கடைப்பிடித்து முதற் புனிதையாக பொலிவு பெற்று நின்றார் மரியா. செபமாலையில் அவருடன் இணையும் நாம், அதே எளிமையை இயல்பாகக் கடைப்பிடித்து புனிதராக மாறுகின்றோம். ஏனெனில் நாம் இறைவனின் தாயோடு இணைகின்றோம்.

 
 

வழியிழந்து வருந்துவோரைத் தேற்றும் அன்னையே !
வாழ்க்கைப் பயணம் போகும்போது துணையாய் நின்றவளே!