Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  மங்கள வார்த்தைகள்

 திருவயிற்றின் கனியும் ஆசீர் பெற்றதே

                        முன்னையதைப்போல இதுவும் அன்னைக்கே புகழாஞ்சலி செலுத்துகின்றது. எவ்வாறெனில், ஆண்டவரின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்ணொருத்தி தன்னை அறியாமலே உம்மைத் தாங்கிய வயிறும், நீர் பாலுண்ட கொங்கைகளும் பேறு பெற்றவையே! என்ற இந்த வார்த்தையினால் அன்னையைப் புகழ்கின்றாள். (லூக்: 11:27-28)

இந்தப் புகழ்மொழி திருவயிற்றின் கனியான வார்த்தையைப் போற்றுவதுபோல தோன்றினாலும், அன்னைக்கே பெருமை சேர்க்கின்றது. இத் தொடர் லூக்: 11:27-28 வசனத்துடன் இணைந்து, நம் எண்ணத் திரையில் நிறுத்துவது: உடன்படிக்கையின் பேழையினுள் வைக்கப்பட்டிருந்த இறைவார்த்தையென அழைக்கப்படும் பத்துக் கட்டளையே. இவ்வார்த்தைகளே உடன்படிக்கைப் பேழையையும், அதைத் தாங்கிய ஆலயத்தையும் புனிதப்படுத்தின. இறைவார்த்தை எருசலேம் தேவாலயத்தைப் புனிதப்படுத்தியதுபோல், கன்னிமரியாவையும் புனிதப்படுத்தியதால், அவர் காலமெல்லாம் தூங்கும் ஆலயமானார். எப்படி அவர் ஆலயமானார்? என்ன சொல்லி அவரைப் புகழ்கிறோம்? அப்பொழுது நாம் என்னவாக மாறுகிறோம்?

இஸ்ராயேல் மக்களின் வாழ்க்கையில் முதலிடம் பெற்று விளங்குவது உடன்படிக்கை. உடன்படிக்கையின் உட்கூறுகளே பத்துக்கட்டளைகள். (யாத்:19:20). இந்தப் பேழையை அவர்கள் எங்கு பயணம் சென்றாலும் தங்களுடன் எடுத்துச் செல்வார்கள் (யோசு:3:3). விடுதலைப் பயணத்தின்போதும் இந்தப் பேழையை எடுத்துச் சென்றிருக்கின்றனர் (எண்:1:51). போர்க்களத்திற்கு இதை எடுத்துச் சென்று வெற்றிகளைக் குவித்துள்ளனர் (யோசு:6:1-25). அவர்கள் எவ்விடத்தில் தங்கினாலும், அவ்விடத்தில் அவர்கள் கூடாரம் அமைத்து, அதன் மையப்பகுதியில் இப்பேழையைக் கொலுவேற்றி வைப்பர். இதுவே இறைவன் அவர்கள் மத்தியில் வாழ்கின்றார் என்பதற்கு அடையாளம். இப்பேழையின் முன்பே இஸ்ராயேல் இறைவனை வழிபட்டனர்.(யாத்:33:7-11)

இந்தக் கூடாரம் நாளடைவில் வளர்ந்து எல்லாப் பகுதிகளையும் உள்ளடக்கிய சிறந்த தேவாலயத்தின் அடிப்படை அமைப்பைக் கொண்டிருந்தது. இக்கூடாரத்துள்ளே அமர்ந்தவாறு மோயீசன் இறைமக்களுக்கு ஆலோசனை வழங்கி வந்தார்.(யாத்:33:7-11, எண்:11:24, ஆதி:12:4-10, 14:10) தங்கள் தேவையில் இறைவனின் திருவுளம் என்னவென அறிய விரும்பும் மக்கள் மோயீசனிடம் வருவர். அவரும் உடன்படிக்கைப்பேழையின் முன் அமர்ந்து யூரிம் தும்மிம் முறைப்படி இறைத்திருவுளம் எதுவென மக்களுக்கு அறிவிப்பார். (யாத்:28:30, லேவி:8:8, இசை:33:8, 1சாமு:28:6, எண்:27:21). இவை நடைபெறும்பொழுது மேகம் கூடாரத்தின்மீது வந்து நிற்கும். (யாத்: 33:7-11). எனவே கூடாரம், அதன்மேலுள்ள மேகம், அதன் உள்ளேயுள்ள இறைவார்த்தை அடங்கியுள்ள பேழை முதலானவைகளே நமக்கு ஓர் ஆலயச் சூழ்நிலையை நினைவுபடுத்துகின்றன.

இந்தக் கூடார அடித்தள அமைப்பை முன்மாதிரியாக வைத்தே சாலமோன் அரசர் எருசலேம் தேவாலயத்தைக் கட்டினார் (யாத்:40:1-33). சிறந்த கலைஞர்களைக் கொண்டு மிக அழகிய ஆலயமாக அதை மிளிரச் செய்தார். அதனுள் அமைந்துள்ள தூயகத்தில் கெரூபீம்களை அமைத்து ஆண்டவருடைய பிரசன்னம் அஞ்சுதற்குரியதெனக் காண்பித்தார். வழிபாட்டிற்கென அதை அர்ப்பணிக்கையில் மேகம் அதன்மேல் நின்று நிழலிட்டது. நிழலிட்டமேகம் ஆலயத்துள் இறங்கி, அங்கே வார்த்தையின் மூலம் அமைந்திருந்த இறைப் பிரசன்னத்தை உறுதிப்படுத்தியது. இவ்வாறு மனிதனால் கட்டப்பட்ட சாதாரண கட்டிடம், கடவுள் வாழும் சிறந்த ஆலய வடிவத்தைப் பெற்றது. கி.மு. 587 ல் இதே ஆலயம் பபிலோனிய அரசன் நெபுகொதொசேனாசரால் தரைமட்டமாக்கப்பட்டது. (2அர:25:1-7). ஆனால் ஆண்டவர் பிரசன்னம் அவர்களிடமிருந்து அகற்றப்படவில்லை. அது உடைக்கப்பட்ட ஆலயத்திலிருந்து வெளியேறி மக்களுக்கு வருகின்றது. இதன் பயனாக குறுகிய சிறிய ஆலயவட்டம் விரிவடைகின்றது. இப்பொழுது புண்ணியபூமி முழுவதும் ஆலயமானது. மக்கள் அனைவரின் வாழ்க்கை முறையே அதனுள் நடைபெறும் வழிபாடானது. மக்களின் செயல்பாடுகள் திருச்சடங்குகளென்றால், மக்களே இறைபிரசன்னத்தின் அடையாளமாயினர். அவர்களின் உயிரோடு உயிராக இணைந்திருப்பவரே இறைவன். மக்களே ஆலயமென்ற புதிய கோட்பாட்டை வனவாச இறைவாக்கினர்கள் தம்மக்களுக்கு படிப்படியாக அறிவுறுத்தினர்.

இதை ஒரு புதிய கொள்கையென ஏற்றுக் கொள்வதற்கில்லை. ஏற்கனவே விடுதலை யாத்திரையின்போது, தாங்களே ஆலயமென இஸ்ராயேல் மக்கள் அறிந்திருந்தனர். அவர்கள் தங்கள் பயணத்தின்போது வார்த்தை அடங்கிய பேழையைத் தூக்கிக் கொண்டு பயணித்தனர். அது அவர்களுக்கு உயிருள்ள கடவுளின் பிரசன்னம். பகலில் வெய்யிலின் கொடுமையால் பயணம் கடினமாகும்பொழுது, அதை எளிதாக்க மேகம் அவர்களுக்குக் குடைபிடித்தது. தன்னுடைய பிரசன்னத்தால் அவர்களுடைய பயணத்தை எளிதாக்கிய மேகம், பேழை வழியான இறைபிரசன்னத்தை மேலும் உறுதிப்படுத்தியது. எனவே மேகம் பேழையாகவும், இறைமக்கள் ஆலயமெனவும் அன்றே உணரப்பட்டது.


இந்தப் பின்னணியிலேயே நாம் மரியாவை ஓர் ஆலயமென அழைக்கின்றோம். கபிரியேல் தூதனின் மங்கள வார்த்தையை இதோ ஆண்டவரின் அடிமை லூக்:1:38) என்று சொல்லி மரியா ஏற்றுக்கொண்டார். அவருடைய உள்ளத்தில் உயரிய பீடம் அமைத்து, புண்ணியங்களால் அலங்கரித்து, செபங்களால் மென்மேலும் புனிதப்படுத்தினார். அந்தக் காட்சியின் மாட்சியினுள் உயிருள்ள, உயிரூட்டும் வார்த்தையை ஏற்றி வைத்தார். அவருள் உறையும், உயிரளிக்கும் வார்த்தை அவரைப் புனிதப்படுத்திக்கொண்டேயிருந்தது. இந்த அர்ச்சிப்பை அன்றைய மேகம்போல் இன்றைய நிழலிட்ட ஆவி உறுதிப்படுத்தியது. இந்த ஆவியின் நிழலிடுதல், அதாவது வார்த்தை கருவறையில் உருவாதல், மரியாவை ஆலயமெனக் கோடிட்டு காட்டியது. எனவே வயிற்றின் கனியென்னும்பொழுது கீழ்வருமாறு மரியாவைப் புகழ்கின்றோம்.

கருவிலே உருவான ஆலயமே என அன்னை மரியாளைப் புகழ்கின்றோம். கன்னி மரியா மாசற்றவர். கருவிலே மாசின்றி உருவானவர். தனிப்பட்ட சலுகை வழி அருள் பெற்றாரென திருச்சபை பறைசாற்றியது. மரியாவும் லூர்து நகரில் பெர்ணதேத்துக்கு காட்சியளித்தார். நாமே அமல உற்பவம் என தம்மைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளார். எனவே தோன்றும் பொழுதே மாசில்லாக் கன்னியாகத் தோன்றிய கன்னிமரியா, தூய ஆவிவழி ஆலயமாக அர்ச்சிக்கப்படுகிறார்.

தூய ஆவியின் ஆலயமே வாழ்க என வாழ்த்துகின்றோம். திருமுழுக்கின்போது நாம் திருப்பொழிவால் புனிதப்படுத்தப்படுகின்றோம். அப்பொழுது நாம் கடவுளின் ஆலயமாக மாற்றப்படுகின்றோம். தூய ஆவி அங்கே வந்து குடி கொள்கிறார். இப்பொழிவு கிறிஸ்துவின் அருள் பொழிவிலிருந்து தோன்றியதே. அவர் கன்னியின் வயிற்றில் கருவாக உருவாகும்போதே, அருள்பொழிவேற்றார். இதையே தூதுவர் தூய ஆவி உன்மீது இறங்கி வருவார், உன்னதரின் வல்லமை உம்மேல் நிழலிடும், இதனால் அக்குழந்தை கடவுளின் மகன் எனப்படும் என்று அறிவித்தார். ஆவியின் ஆற்றலால் புனிதமடைந்த அன்னை, வார்த்தையின் வல்லமையினாலும் ஆலயமெனத் திகழ்ந்தார்.

வார்த்தையின் உறைவிடமான ஆலயமே என அன்னையைப் போற்றுகிறோம். வார்த்தையை உச்சரித்ததும், கோதுமை அப்பம் ஆண்டவர் இயேசுவின் உடலாக மாறுகின்றது. அந்த அப்பத்தினுள் மறைந்து வாழும் ஆண்டவர் இயேசுவை, நாம் நற்கருணைப் பேழையினுள் வைக்கின்றோம். அந்தப் பேழையைப் பெற்றிருந்தது எவ்வாறு ஆலயமாகத் திகழ்கின்றதோ, அவ்வாறே உடலெடுக்க வந்த வார்த்தையைத் தாங்கியதால் அன்னமாமரி ஆலயமானார். வார்த்தையின் பிரசன்னத்தால் வடிவமைக்கப்பட்ட கன்னிமாமரி, இறை மாட்சியின் ஆலயமாகும் தகுதிபெற்றார்.

இறைமாட்சியைத் தாங்கும் பேறுபெற்ற ஆலயமே என அன்னையை வாழ்த்துகின்றோம். வார்த்தை மனுவுருவான மறைபொருளை விளக்கும் பொழுது, வல்லுனர்கள்: அவர் தமது கூடாரத்தை மனிதரிடையே அமைத்தார். அவர் தம் விண்ணக மாட்சியை மண்ணகத்தில் மனிதர் மத்தியில் மிளிரச் செய்தாறென்றனர். புனித அருளப்பரின் வாசகம் இதை விளக்குகின்றது. (வார்த்தை மனுவுருவானார். நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சிமையை நாங்கள் கண்டோம். தந்தையிடமிருந்து அவர் பெற்ற இம்மாட்சி, ஒரே பேறான அவருக்கு ஏற்ற மாட்சிமையே. (அரு:1:14)

இந்த மாட்சியைக் கண்டனுபவித்த இராயப்பருடன் இணைந்து நாம் இருப்பது எத்துணை இன்பம் எனச் சொல்ல முடியும். அவருடைய கண்களால் இங்கு நாம் இறைமாட்சிமையைக் காணலாம். கதிரவனிலும் மேலான ஒளி, தூய வெண்பனியிலும் தூய வெண்ணிற ஆடை, இதுவரை எவருமே கண்டிராத அழகிய மாட்சி (மத்:17:1-8, மாற்:9:2-8, லூக்:9:28-36). இங்குதான் வானதூதர் கால்களையும், கண்களையும் மறைத்துக் கொள்கின்றனர். தூயவர் தூயவர் என இடைவிடாது போற்றிப் புகழ்கின்றனர்.(இசை:6:1-6). சம்மனசுகளும் மண்டியிட்டு ஆராதிக்கும் இந்தப் பீடத்தில்தான் புகழ்ச்சிப்பலி அனுதினமும் ஒப்புக்கொடுக்கப்படுகின்றது.

இப்பீடத்தில்தான் அன்னை மாமரி என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகிறதென புகழ்ச்சிப்பலி ஒப்புக் கொடுத்தார். நீ பீடத்தின்மேல் காணிக்கை செலுத்த வரும்போது, உன் சகோதரனுக்கு உன்மேல் மனத்தாங்கல் இருப்பதாக அங்கே நினைவுற்றால், அங்கேயே பீடத்தின்முன் உனது காணிக்கையை வைத்துவிட்டு, முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்து கொள். பின்னர் வந்து உன் காணிக்கையைச் செலுத்து. (மத்:5:23-24). நாம் செலுத்தும் புகழ்ச்சியையும், தூய ஆவியின் செபத்துடன் இணைத்தார். நம்மைத் தம்முடன் இணைத்து நம்மை இறைவனோடு இணைத்தார்.

இறைவனோடு இணைந்த அன்னையே வாழ்க என்கிறோம். மரியாவுடைய இதயப்பீடத்தில்தான் இந்த ஒன்றிப்பு நிகழ்கின்றது. தந்தாய் நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன். (அரு:17:21). தேவாலயத்தில் காணாமல் போனபொழுது அவர் இறைத்தந்தையோடு ஒன்றித்து விட்டார். கிறிஸ்துவோடு மரியா ஐக்கியமாகி விட்டார். இறைவனில் நிகழும் இணையற்ற இந்தச் சங்கமம் மரியாவின் உள்ளமென்னும் ஆலயத்தில் அமைந்த அன்புப்பீடத்தில் நடைபெறுகின்றது. அவருக்கு மட்டுமன்றி செபமாலையில் அவருடன் இணைந்த அனைவருடைய ஆலயப்பீடங்களிலும் இந்த ஒன்றிப்பு நிகழ்கின்றது.

மனித உள்ளங்களே! அன்னையின் இதயத்திற்கு இணையான ஆலயங்களாக விளங்கவேண்டும். நீங்கள் கடவுளின் ஆலயம் என்பதும் கடவுளின் ஆவி உங்களில்  குடிகொண்டிருக்கிறார் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?  (1கொரி:3:16) உங்களுடைய உடல் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்களுக்குள் குடிகொண்டிருக்கும் அந்த ஆவியைக் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்டீர்கள் (1கொரி:6:19). தூய ஆவி நம்முள் குடிகொண்டிருப்பதால், நாம் ஒவ்வொருவருமே ஆலயமாய் விளங்குகின்றோம்.

ஆலயங்களாகிய நாம் திருச்சபையுடன் இணைந்து அன்னையைச் சிறந்த ஆலயம் எனப் புகழ்கின்றோம்.  கருவிலே ஆலயம், தூய ஆவியின் ஆலயம், வார்த்தையின் மாட்சி விளங்கும் ஆலயமென அன்னையைப் புகழ்கிறோம். யாரை இடைவிடாது புகழ்கின்றோமோ, அவரைப் பின்பற்றுகிறோம். அப்பொழுது நாம் ஒவ்வொருவரும் அன்னையைப் போல சிறந்த ஆலயமாகின்றோம். வானதூதரும் வணங்கும் இயேசுவை நம் இதயப் பீடத்திலே புகழ்ச்சிப் பலியாக ஒப்புக் கொடுக்கின்றோம். கிறிஸ்துவுடன் அன்னியோன்னிய உறவு கொண்டு, இறைவனில் இணைகின்றோம். இவையனைத்தும் செபமாலைப் பக்தியில் செபிக்கும்போது நடக்கின்றது.
 
 

அம்மா அம்மா மரியே! தூய ஆவியின் ஓவியம் நீயே! !
அருளே நிறைந்த தாயே!!! எங்கள்அனைவர்க்கும் நீ அடைக்கல மாதாவே!!!!