Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மங்கள வார்த்தைகள்

பெண்களுக்குள் ஆசீர்  பெற்றவர்


இந்தத் தலைப்பே நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஒன்றாக உள்ளது. ஏனெனில் யுதர்கள் முகமதியர்களைப்போல் பெண்களுக்கு பொதுவான முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. எருசலேம் தேவாலத்தின் உள்ளேயும் பெண்களுக்கு இடமில்லை, பொதுவழிபாட்டிலும் பெண்கள் பங்கேற்பது கிடையாது. இப்படிப்பட்ட சூழலில் பெண்களுக்குள் "ஆசீர் பெற்றவர்" என அழைக்கப்படுவது ஆச்சரியமாக உள்ள து.

மரியா ஆசீர் பெற்றவர் என அறிய முதலில் ஆசீரைப்பற்றி அறிய வேண்டும். ஆசீரைப்பற்றிய கிரேக்க வார்த்தையான "எயு லேகோமினோஸ்": புகழ்ச்சிக்குரியவர், வாழ்த்தப்பட, பாராட்டப்பட வேண்டியவர், ஆசீர் பெற்றவர் என்றும், "மக்காரியோஸ்": என்றும் வார்த்தை மகிழ்ச்சி நிறைந்தவர், போற்றுதற்குரியவர், பேறுடையார், விண்ணகப் பரிசைப்பெறத் தகுதியுடையவர் என்று பொருள்படும். மரியா இந்த இரு பேற்றிற்கும் தகுதியுடையவர். எனினும் எலிசபேத் கூறிய "ஆசீர் பெற்றவர்" என்பதன் விளக்கத்தைக் கண்டறிவோம்.

பழைய ஆகமத்தில் இரு பெண்மணிகள் ஆசீர் பெற்றவர் என அழைக்கப்படுகின்றனர்.
"நீ பெண்களுள் பேறுபெற்றவள்! கூடாரம் வாழ் பெண்களுள் பேறுபெற்றவள்" (நீதிபதி: 5:24) என யோவேல் புகழ்கின்றார்.
"மகளே! உலகிலுள்ள எல்லாப் பெண்களையும் விட நீ உன்னத கடவுளின் ஆசீர் பெற்றவள், அவரே நம் பகைவர்களின் தலைவனது தலையை வெட்டி வீழுத்தி, உன்னை வழிநடத்தியிருக்கின்றார். (
யூதித்: 13:23) என யூதித் போற்றப்படுகின்றார்.
இவர்கள் இருவரும் பகைவர்களிடமிருந்து இஸ்ராயேலே விடுவித்துள்ளதால் ஆசீர்பெற்றவர்கள்.

இதுபோன்று மரியாவும் இறைமக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தாலும், வேறு காரணங்களுக்காகவும் "ஆசீர் பெற்றவர்" என அழைக்கப்படுகின்றார்.
அவர் இறைவார்த்தையைக்
 
அ)  கேட்டார்.
ஆ) விசுவசித்தார்.
இ)  கீழ்ப்படிந்தார்.
ஈ)   மனதிற்கு கொண்டு வந்தார் அல்லது நினைத்தார்.
உ)  தியானித்தார்.
ஊ) தொடர்ந்து வார்த்தையைக் கடைப்பிடித்து ஒழுகினார் அல்லது பிரமாணிக்கமாயிருந்தார்.
       இவற்றை முறையே இங்கு காண்போம்.

அ) கேட்டார்
கேட்பதென்பது இறைவார்த்தைக்கு செவிமடுப்பதாகும். அதாவது வார்த்தையின் பொருள் உணர்ந்து, அது அறிவுறுத்தும் இறைத் திருவுளத்தை முழுமனதுடனும், பக்குவத்துடனும் ஏற்று நடப்பதாகும். இவ்வாறு இறை வார்த்தையை அல்லது வாழ்க்கைக்கு கொண்டு வருவது, விதைப்பவன் உவமையில் நான்கு வகையெனக் கூறப்படுகின்றது.
1) வழியோரம்
2) பாறை
3) முட்புதர்
4) நன்னிலத்தில் விழுந்த விதை




1. வழியோரம்
விதையை வழியோரம் போடுவதுபோல ஒரு சிலர் வார்த்தையைக் கேட்கின்றனர். அவர்கள் உள்ளத்திலிருந்து வார்த்தைகள் உடனே வெளியேற்றப்பட்டு விடுகின்றன. வார்த்தைகளைக் கேட்டு சிந்தித்து, சீரிய செம்மனத்தால் இருத்தும் மனப்பக்குவமில்லாததால், அவர்கள் உள்ளத்தில் அது இடம் பிடிக்க முடியவில்லை. இதுபோன்ற பண்படாத உள்ளத்தைக் கொண்ட வழியோரம் மரியாவல்ல.

2. பாறை
இதயத்தைப் பாறையாய் வைத்துக் கொண்டு சிலர் வார்த்தைக்குச் செவி கொடுக்கின்றனர். உடனடியாக முளைத்து மலரும் விதை போல, வார்த்தை அவர்களை மகிழ்விக்கின்றது, ஆனால் அன்பு நிறைந்த ஆணிவேருள்ள வார்த்தை, அன்பில்லாத கல்லான கனத்த இதயத்தில் வேரூன்ற முடியாமல் உலர்ந்து போகின்றது. இருப்பினும் சில விதைகள் பாறைக்குள்ளும் முளைத்து வளர முடியும். ஆனால் இங்கு பாறையாக இருப்பது மனித இதயம்.  அவன் அனுமதியின்றி அவனுடைய சுதந்திரப் பாறையைத் துளைக்கமுடியாது. கல்லையும் கரையவைக்க கசிந்துருகும் மரியாவின் இதயம் இதற்கும் ஒப்பாகாது.

3. முட்புதர்
சிலர் வார்த்தையை முட்புதர் போல வரவேற்கின்றனர். உள்ளங்களில் கவலைகள், உறுத்தல்கள், பிடிப்புக்கள், கைவிடமுடியாத பழக்கங்கள், பாவப்பிடிப்பிலுள்ள ஆள் தொடர்புகள் இன்னும் எத்தனையோ சங்கிலிகளுக்குள் மாட்டிக் கொண்டு, விடுபட முடியாமல் தவிக்கும் மக்களிடம் வார்த்தை சிக்குகிறது. இவ்வகையான மனஅழுத்தங்கள் வாழ்க்கையை நசுக்கிப் போடுகின்றன. இதுபோன்ற குழப்பங்களுக்கும் நெருக்குதல்களுக்கும் உட்பட்டு மரியா வார்த்தையை ஏற்கவில்லை.

4. நன்னிலத்தில் விழுந்த விதை
நிலவளமும், நீர் வளமும் நிறைந்த பொன்விளைம். பூமி ஒருமேனியல்ல, இருமேனி விலைச்சல் தரும். இதுபோல மரியா பண்பாட்டில் செறிந்து, கலாச்சாரத்தில் நிறைந்து நாகரீகத்தில் மிளிர்ந்தார். மனித நேயங்களுக்கு முதலிடம் கொடுத்து வாழ்வின் சிறந்த மதிப்பீடுகளைக் கட்டிக் காத்தார். உயர்ந்த இலட்சியத்தை அடையும்வரை ஒயாது விடாமுயற்சி செய்தவர். இதன் பயனாக முதிர்ச்சியடைந்து நூறுமடங்கு பலன்தரும் பக்குவப்பட்ட உள்ளம் கொண்டிருந்தார். இதற்கு துணை நின்றது அவரது விசுவாசம்.



ஆ) விசுவசித்தார்

 மரியா ஆசீர் பெற்றவர் என அறிக்கையிட உதவியது அவருடைய விசுவாசம். ஓவ்வொரு வார்த்தையினு ள்ளும்  உறைந்து அதைச் செயல்படத் தூண்டுவது இறைவன். (எரே:1:12) அவரே அவ்வார்த்தையை வயலின் விதைபோல, தானாக வளர்ந்து தானாக வளர்ந்து பயன்தரச் செய்கிறார்.(மா:4:28). அவர் விரும்பியதை விரும்பியவாறு நிறைவேற்றாமல், மீண்டும் அவரிடம் திரும்ப விடமாட்டார்.(இசை: 55:11). இவ்வாறு அவருடைய வாக்குகள் அனைத்தும் நிறைவேறும் என்று விசுவசித்து மரியா பேறுடையவரானார் (லூக்:1:45)

எவ்வாறெனில்:
புனித இராயப்பருடன் இணைந்து ஆண்டவரே! நாங்கள் யாரிடம் செல்வோம்? உயிர் தரும் வார்த்தை உம்மிடம் தானே உள்ளன(அரு:6:69) என்கிறார்.


புனித சின்னப்பர் போல இன்பத்திலும், துன்பத்திலும், சோதனையிலும், வேதனையிலும் "நான் யாரை விசுவசிக்கிறேன்" என எனக்குத் தெரியும்" (தீமொ:1:12) என்பார்.


நூற்றுவர் தலைவனுடன் நின்று "ஒரு வார்த்தை சொன்னால் போதும், என் ஊழியன் குணமடைவான்" (மத்:8:8) என்று நமக்காகச் செபித்து விசுவாசத்தின் சிறந்த மாதிரியானார்.

மாதிரி விசுவாசத்தின் அளவு என்னவென்று மறைநூல் வெளிப்படுத்துகின்றது. கடுகளவேயானாலும் மரியாவின் விசுவாசம் (மாற்:11:23) (லூக்:16:17) (மத்:17:20) கடுகு மணிபோல முளைத்து வளர்ந்து, எல்லாப் பறவைகளுக்கும் தங்குவதற்கு இடமளிக்கும் அளவிற்கு பரந்து விரிந்து விடுகின்றது. (மத்: 13:32-33). இவ்வாறு வளருந் தருவாயிலுள்ள கடுகளவு விசுவாசமே மலைகளைப் பெயர்க்கின்றது. இந்த வளர்ந்த முதிர்ச்சியடைந்த விசுவாசமே (1கொரி:13:2) நாம் மரியாவிடம் காண்கிறோம்.


இ) கீழ்ப்படிந்தார்

கீழ்ப்படிதலுக்குச் சிறந்த மாதிரிகையாக மறைநூல், ஆபிரகாமை நம் கண்முன் நிறுத்துகின்றது. அவர் இறை வார்த்தையை முன்னிட்டு தம்முடைய நாடு, குடும்பம், உற்றார், உறவினர், தம் இலக்குகள் யாவையும் துறந்து தன் ஒரே மகன் ஈசாக்கை பலியாக்கத் துணிந்தார். குலத்தந்தையின் மாதிரி (உரோ:4:1) உயர் குணமெனக் கடைப்பிடித்த மரியா, முதன்முதலில் தன் பெற்றோருக்கு கீழ்ப்படிகின்றார். தன் குலக் கொழுந்தான ஆபிரகாமின் கீழ்ப்படிதலின் மாதிரிகையை பின்பற்றிய மரியா, தன் குடும்பப் பாரம்பரியத்தை இயேசுக்கு கற்றுக்கொடுத்ததுதான் "அவர் அவர்களுக்குப் பணிந்திருந்தார்" என்று இயேசுவைக் கூறுவது.

இதுபோன்று அரசு விடுக்கும் மரியா கீழ்ப்படிந்தார். கடவுளிடமிருந்து புறப்படாத அதிகாரமில்லை (உரோ:13:1) என அவர் நம்பி வந்தார். அதனாலேதான் நிறை கர்ப்பிணியாக இருந்தபோதும், செசார் அரசன் விடுத்த கணக்கெடுப்பின் சட்டத்திற்குப் பணிந்து பெத்தலேகெம் சென்றார் (லூக்:2:4-5).  சமயப் பாரம்பரியத்திற்கும் அவர் கீழ்ப்படிந்தார்.  தலைப்பேறான எந்த ஆணும் மோயீசனின் சட்டப்படி விருத்தசேதனம் செய்து கொள்ளவேண்டும். (லேவி:12:1-8) ஏனெனில் அக்குழந்தை கடவுளின் உரிமையாகும். தம்முடைய தாய் மறைவான யூதக்கடமையை நிறைவேற்ற, எருசலேம் தேவாலயத்திற்கு குழந்தையைத் தூக்கிச் சென்றார். (லூக்:2:21-28).  எல்லாக் குழந்தைகளையும்போல, தம் குழந்தையையும் சடங்கு முறைப்படி விருத்த சேதனம் செய்து தம் கீழ்ப்படிதலை உணர்த்தினார்.

சமூக ஒழுங்குகளையும் அவர் ஒருபோதும் கைவிட்டதில்லை. எருசலேம் தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சமூகக் கொண்டாட்டமாகிய பாஸ்கா விழாவிற்கு, சூசையும் மரியும் தவறாமல் வருகை தந்துள்ளனர். (லூக்:2:41). இதனால் அவர் சமூகக் கட்டுக்கோப்புக்கும் கீழ்ப்படிகின்றார் என்பது தெளிவாகின்றது.

இவ்வாறு வார்த்தை வழிநடக்க எல்லாவற்றிற்கும் தம்மை உட்படுத்திய அவர், தம் குறிக்கோளையும் வார்த்தைக்காக விட்டுக் கொடுக்கிறார். இவ்வாறு  கீழ்ப்படிதலினால் சிறந்த பெண்மணியாகத் திகழும் அவரைத் தேடி வார்த்தை வருகின்றது. நீர் கருவுற்று ஓர் ஆண்மகனைப் பெற்றெடுக்க வேண்டுமென அறிவிக்கின்றது. அதற்கு அவர் "நான் கணவனை அறியேனே, அதாவது மணஉறவு கொள்ள மாட்டேனே, இது என்னுடைய கொள்ளையல்லவா" எனப் பதிலிறுக்கின்றார். எனினும் இறைவல்லமையால் இயேசுவைப் பெற்றெடுப்பாரென நம்பித் தெளிவு பெறுகின்றார். இறுதியாக "இதோ ஆண்டவருடைய அடிமை" எனத் தாய்மைப்பேற்றை அளிக்கும் வார்த்தைக்கு தம் கீழ்ப்படிதலை வெளியிடுகின்றார்.


ஈ) மனதிற்கு கொண்டு வந்தார் அல்லது நினைத்தார்.

மரியா மனதிற்கு கொண்டு வந்த வார்த்தை எதுவென இவண் ஆராய்ந்தறிவது நன்மை பயக்கும்.
 கிரேக்க அறிஞர்கள் வார்த்தையை ஓர் அருவப் பொருள் என்கின்றனர். புலன்களுக்கு எட்டாத அறிவுபூர்வமான சிந்தனைக்கு மட்டுமே தோன்றக் கூடியது வார்த்தை.  சிந்தனைக்கு விழுந்தாகும் வார்த்தை, கடந்து நிற்கும் கடவுளின் வெளிப்பாடு. ஏனெனில் ஒப்புயர்வற்ற அரியதொரு அருவப்பொருளாகிய கடவுளிடமிருந்தே புறப்படுகின்றது. இவ்வருவப் பொருள் புலன்களுக்குப் புறப்படும் பருப்பொருளாக வடிவெடுத்துள்ளது. இவ்வாறு வடிவெடுத்த வார்த்தை அருவப்பொருள், பருப்பொருள் இரண்டிற்குமுள்ள இடைவெளியை நிரப்புகின்றது.

இம்மறையுண்மையை தெளிவுபடுத்துகின்றார் நற்செய்தியாளர் புனித அருளப்பர். அதாவது வானினின்று வந்த வார்த்தையும், மனுவுருவான கிறிஸ்துவும் ஒன்று என விளக்குகிறார்.. "ஆதியிலே வார்த்தை இருந்தார்.  அவ்வார்த்தை கடவுளோடிருந்தார். அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார். அவர் வழியாகவே அனைத்தும் உண்டாயின. உண்டானதெதுவும் அவராலேயன்றி உண்டாகவில்லை. அவருள் உயிர் இருந்தது. வார்த்தை  மனுவுருவானார் (அதாவது உடலைப் போர்த்திக் கொண்டார். மனிதனானார்) நம்மிடையை குடி கொண்டார். (1:1-5,14)


மனிதனாகி நம்மோடு நமது வாழ்வை வாழ்ந்து அதன் பயனாகப் படைத்த வரலாறு அனைத்துமே நற்செய்தியென விவரிக்கின்றார் மாற்கு நற்செய்தியாளர்(1:1). தாம் எழுதியதனைத்தையும் நற்செய்தியெ ன்றழைத்தால், அவருடைய புத்தகம் முழுவதுமே நற்செய்தி. இயேசுவின் வரலாறு அடங்கிய புத்தகம் நற்செய்தியானால், அவருடைய  வாழ்வின் நிகழ்வுகள் ஒவ்வொன்றுமே நற்செய்தி. ஓவ்வொரு நிகழ்வும் நற்சைய்தியாக முடிவுமென்றால் அதில் உரைக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் நற்செய்தி. எனவே வார்த்தையான கிறிஸ்துதான் நற்செய்தி. எனவே நற்செய்திதான் கிறிஸ்துவான வார்த்தை.

 மரியா பழைய ஆகம நிகழ்வுகளையும், அவற்றை நிறைவு செய்யும் புதிய ஆகம நிகழ்வுகளையும் தம் மனதிற்குக் கொண்டு வந்தார். அந்நிகழ்வுகளின் மையமாக இருப்பவர் மனுமகனான இயேசு.  பழையதில் அவர் மறைந்து இருக்கின்றார். புதியதில் அவர் வெளிப்படுகின்றார். ஆகவே பழைய ஆகம நிகழ்வனைத்தையும் கிறிஸ்துவை முன்னிட்டு நினைவு கூர்ந்தார். அவற்றினுள் உறையும் கிறிஸ்துவை முயற்சி செய்து கண்டுணர்வார்.

எனவே மரியா வார்த்தையை மீண்டும், மீண்டும் மனதிற்கு கொண்டுவரும்போது, கிறிஸ்துவையே மனதில் பதிப்பதாக  உணர்ந்தார். இந்த வார்த்தையான கிறிஸ்துவை பேச்சிலும், மூச்சிலும், உயிரிலும், உயிரணுவிலும் கலந்திடச் செய்தார். வார்த்தையின் நிகழ்வுகள் சராசரி மனிதனுக்குத் தேவையான நிகழ்வுகள்.  அவைகள் கிறிஸ்துவில் நிகழ்ந்தன.  இந்நிகழ்வுகள் மரியாவின் மனதில் கணனியில்     
(கம்ப்யுட்டரில்) பதிவதுபோல பதிந்தன.  வாழ்வின் புதிய சூழ்நிலை என்ற விசை, எண்ணமாகிய கணனியைத் தட்டுகையில், வாழ்வின் புதிய நடைமுறை அவரின் எண்ணத்திரையில் தோன்றும்.

உ) தியானித்தார்.

மனதில் சேமித்து வைத்தவை இயல்பாக தியானம் என்னும் புதிய சூழலுக்குள் புகுகின்றன. பல்வேறு இடங்களில் தின்ற புல்லைப் பசு தனியாக அமர்ந்து அசைபோடுவதுபோல, பல இடங்கிலிருந்து நடந்த நிகழ்வுகளிலிருந்து சேமித்த வார்த்தைகளை, மரியா மெய்மறந்து சிந்தித்துக் கொண்டிருந்ததே தியானம். இந்த வார்த்தைகளைத் தியானிக்கத் தியானிக்க நிறை மகிழ்வடைந்தார். அந்த மகிழ்விலும் தெவிட்டா இனிமையைச் சுவைத்தனுபவிப்பார்.

ஒரு நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் அதில் பங்கு பெறுபவர்கள் அதிகம் அனுபவிக்க முடிகிறது. ஆனால் பார்வையாளர்கள் அதிகம் அனுபவிப்பார்கள். உதாரணமாக கிரிக்கட் விளையாடில் பங்கேற்பவர்களை விட பார்வையாளர்கள் அதிகம் இரசிக்கிறார்கள். அதனால் எவ்வளவு பணம் செலவு செய்தும் பார்க்கச் செல்கின்றனர். எனவே மகிழ்வு மனதில் அன்றி செயலில் இல்லை.

மரியாவுக்கும் நிகழ்வைவிட நினைவுதான் அதிக மகிழ்வளித்தது. அதன் காரணமாகவே மறைநிகழ்வுகளை மனதில் கொண்டு வந்து எண்ணி எண்ணி மகிழ்ந்தார். மகிழ்வுக்குக் காரணம் பார்வையாளர் பங்கேற்பவராக மாறுவதாகும். ஒரு வகையில் அவர்கள் நிகழ்வின் பாத்திரங்களாகவே மாறி அவர்களுடன் ஒன்றிணைந்து விடுகின்றனர். இதனால் பார்வையாளர் பங்கேற்பவரைவிட அதிகம் இன்பம் அனுபவிக்கின்றனர். இந்தக் கண்ணோட்டத்தில் மரியா மறைநிகழ்வுகளில் அதிக இன்பம் அனுபவித்தார்.

நிகழ்வுகளை அனுபவித்து இன்புறும் வேளையில் தனக்கென புதிய பாதையும் படைத்தார். எலிசபேத்தின் வாழ்க்கையை தன் மனதிற்கு கொண்டு வந்தார். குழந்தையின்றி வாடும் அவர்களுடைய தவிப்பை உணர்கின்றார். அவளுடைய இடத்தில் தன்னை நிறுத்துகின்றார். அவரோ பிள்ளை வேண்டுமென்கிறார் ஆனால் பலகாலமாக பிள்ளை கிடைக்கவில்லை. இவரோ வேண்டாமென்கிறார், ஆனால் உடனே பிள்ளை கிடைக்கின்றது. வருந்தி வேண்டியதன் பலனாய் கிடைத்த குழந்தையை எலிசபேத் இறைவாக்குரைக்க அனுப்புகிறார். இவரோ தன் பிள்ளையை உலக மீட்புக்காக அனுப்புகிறாள். இருவரும் நன்றிக் கீதம் பாடுகின்றனர். மரியாவின் பாடல் எல்லா மக்களின் நன்றியுணர்வுக்கும் வடிவம் கொடுத்தது. (1சாமு: 1:1-2,11)

இதுபோன்று விவிலிய நிகழ்வு ஒவ்வொன்றும் மரியாவின் மனதை ஆட்கொண்டது. உள்ளத்தைப் பண்படுத்தியது. வாழ்வுக்கு வடிவமைத்தது. நடத்தையை நெறிப்படுத்தியது. தியானிக்கப்பட்ட விவிலிய வார்த்தை வாழ்விலே ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. தியான வழி புதுப்படைப்பாகத் தம்மை மாற்றிக் கொண்ட அவர் தினமும் தம்மைப் புதுப்பிக்க, தவறாமல் வார்த்தை வழி நடந்தார்.

ஊ)  தொடர்ந்து வார்த்தையைக் கடைப்பிடித்து ஒழுகினார்

புதுப்புது அர்த்தங்களுடன் தோன்றிய வார்த்தையையே அவர் தம் கோட்பாடாகக் கொள்கிறார். மீட்பின் வரலாற்றில் அவர் தம் பங்கு என்னவென்று அவரது உள் மனது தெரிவித்தது. அதன் ஒளியிலே அவர் தனக்கென்று ஒரு வழியைப் பின்பற்ற ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்டார். அந்தத் தீர்மானம் அவருடைய வாழ்விற்கும் வழிகாட்டி. அது அவருடைய புரட்சிக் கீதத்தில் வெளிப்படுகின்றது. தாழ்நிலை நின்ற தம் அடிமையைக் கடைக்கண் நோக்கினார். இறைவனின் அடிமை என்ற இந்த விருது வாக்கே, அவருடைய வாழ்வின் வழிமுறையானது. இந்த விருதை கல்வாரி மட்டுமன்றி வாழ்நாள் கடைசி மூச்சுவரை கடைப்பிடித்தார். இதுபோன்ற கொள்கைக்காக வாழ்ந்து மரித்து மாதிரி காட்டியவர்களே, வரலாற்றின் போக்கை மாற்றியுள்ளனர். பேசிய வார்த்தை காற்றில் பறந்துவிடும். எழுதிய வார்த்தை ஏட்டில் மறைந்துவிடும். மாதிரி வாழ்க்கை மக்களால் எடுத்துச் சொல்லப்படும் என்பது பழமொழி. இதற்கேற்ப மரியாவின் மாதிரியை பலர் கடைப்பிடித்தனர்.

மரியாவின் வாழ்வும் வழிபாடும் வெவ்வேறல்ல. வாழ்வே வழிபாடு, வழிபாடே வாழ்வு. வழிபாட்டில் தொடங்கும் புரட்சிதான் நிலையான மாற்றத்தைத் தோற்றுவிக்கும். மரியா தன் இல்லத்தையே கோவிலாக்கி வாழ்வையே வழிபாடாக்கியுள்ளார். "தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்." என்ற கூற்றுக்கிணங்க அவரை இறைவன் எல்லா மக்களுக்கும் மேலாக மட்டுமல்ல, எல்லாத் தலைமுறைக்கும் மேலாக உயர்த்தினார். ஒருவர் உயர்த்தப்பட்டால் மற்றொருவர் வீழ்த்தப்படுவார். அதுபோல தாழ்வில் உயர்ந்த  மரியா செருக்குற்றவரைச் சிதறடித்து விட்டு, மற்றெல்லோரையும் உயர்வடையச் செய்துகொண்டே இருக்கிறார். மறையுண்மைகளைச் சிந்தித்து தியானித்தார். தியானத்தின் பயனாகப் பெற்ற மறைபொருளை வாழ்வோடு வாழ்வாக இணைத்தார். அவ்வார்த்தையே வயிற்றின் கனியானது.

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!