Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 சிலுவை பாதை

   
 தந்தை மகன் தூயஆவியாரின் பெயரால் ஆமென்.

இந்த தவகாலத்தின் இறை மகன் இயேசுவின் பாடுகளை தியானித்து
தற்பெருமை சீற்றம் காமவெறி பேராசை பெருந்தீனி பொறாமை சோம்பல் ஆகிய தலையான பாவங்களை வெறுத்து பிறருக்கும் குறிப்பாக, ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும் உதவும் நல்ல பண்பினை பெற்று வாழ தாய் திருச்சபை நம்மை அழைக்கின்றது.

நம்பிக்கை அறிக்க
...............................
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த! எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். இவர் தூய ஆவியால் கருவுற்று தூய கன்னிமரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு இறந்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகம் சென்று எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார். தூய ஆவியாரை நம்புகிறேன். தூய கத்தோலிக்கத் திருச்சபயையும் நம்புகிறேன் புனிதர்களுடைய சமூக உறவையும் நம்புகிறேன் பாவமன்னிப்பை நம்புகிறேன். உடலின் உயிர்ப்பை நம்புகிறேன். நிலை வாழ்வை நம்புகிறேன். ஆமென்.
...................................
இயேசு கற்றுத்தந்த இறைவேண்டல்
..................................
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.ஆமென்
..................................
மங்கள வார்த்தை மன்றாட்டு
.....................................
அருள்மிகப் பெற்ற மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே.
பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
தூய மரியே இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.

இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின்
பாதையில் ........தியனிப்போம்...

...........................................
முதலாம் நிலை
........................................
ஆண்டவர் இயேசு சிலுவைச் சாவிற்குத் தீர்ப்பிடப்படுகின்றார்

"உண்மையை எடுத்துரைப்பதே என் பணி இதற்காகவே நான் பிறந்தேன். " (யோவான்18:37).

"நானும் தீர்ப்பிடமாட்டேன்" என்றவர் தீர்ப்பிடப்படுகிறார் - அநீதி அலங்கரிக்கப்பட்டு உண்மை ஊமை யாவதால் விரும்பத் தகாதவர்கள் செய்வதெல்லாம் தவறென்று நிரூபிக்கப்படும் பொய்யான உலகில் வாழுகின்றோம்.

செபம்
உண்மைக்குச் சாட்சி பகரவந்த உத்தமரே! எமது வாழ்வில் எவரையும் தவறாக மதிப்பிடாது உண்மைக்கு மட்டும் துணை நின்று உமது பிள்ளைகளாக வாழ்ந்திட அருள்தாரும் - ஆமென்.
.............................................

இரண்டாம் நிலை:

................................................
ஆண்டவர் இயேசு சிலுவையைத் தாமே சுமக்கின்றார்

"இயேசு சிலுவையைத் தாமே சுமந்து கொண்டு மண்டை ஓடு என்னுமிடத்திற்குச் சென்றார். ". (யோவான் 19:17)

எவருக்குமே சுமையாக இருந்திராத நமதாண்டவர் இயேசு எங்களது பாவங்களின் சுமை தாங்கியாக தன்னை மாற்றுகின்றார் - நாம் எப்போது சுமை தாங்கிகளாக மாறப்போகின்றோம்? சுமக்கிறவனுக்குத்தான் சுமையின் பாரம் தெரியும்.

செபம்
அவமானத்தின் சின்னமான சிலுவை சுமந்த அன்பு இயேசுவே! எமது வாழ்வின் சுமைகளை அடுத்தவரில் சுமத்தி இன்பம் கானாது மற்றவர்களுக்கு சுமைதாங்கி களாக செயல்பட எங்களை வழிநடத்தியருளும் - ஆமென்.
.............................................

மூன்றாம் நிலை :
..............................................
ஆண்டவர் இயேசு முதன்முறையாக கீழே விழுகிறார்.

"..தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப்பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். (மத்தேயு 10:39)

முடவர்களை நடக்கச் செய்தவர் - பார்வையற்ற வர்களைப் பார்க்கச் செய்தவர் சிலுவை சுமக்க முடியாது கீழேகிறார் - பாவத்தின் மோகத்தில் விழுந்த எங்களைக் காப்பாற்ற ஆண்டவர் இயேசுவும் தடுக்கி விழுந்தாரா?

செபம்
எமது பாவச்சுமைகளால் கீழே தடுக்கி விழுந்த இயேசுவே! எமது கொடூரமான இரக்கமற்ற பாவங்களில் நாம் தவறி விழுவதனால் உம்மிலே பெலனடைந்து புதுவாழ்விற்குள் எழுந்து நடக்க வரமருளும் - ஆமென்.
............................................

நான்காம் நிலை :
............................................
ஆண்டவர் இயேசு தமது அன்னை மரியாவைச் சந்திக்கிறார்

"மகிழ்ச்சியோடு நான் அவர்களைப் பேணி வளர்த்தேன். ஆனால் அழுகையோடும் துயரத்தோடும் அனுப்பி வைத்தேன். (பாரூக் 4:11)

ஒவ்வொரு தாயும் தனது பிள்ளையின் ஆற்றல் - திறமை - வலிமை அனைத்தையும் முன்கூட்டியே அறிந்தவள் - தனது அன்பு மகனின் உயிர் ஊசலாடும் நிலையில் "வென்று வா" என மௌனமாக ஆறுதல் சொல்லி மரி அன்னை வழியனுப்பி வைக்கின்றார்கள்.

செபம்
அன்னை மரியாவின் அன்பான புத்திரனே! தங்களது கருவறைகளையே கல்லறைகளாக மாற்றும் எமது நவீனகாலத் தாய்மார் தமக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ள தாய்மைப் பேற்றிற்கு மதிப்பளித்து வாழ்ந்திட வரமருளும் - ஆமென்.
.......................................
ஐந்தாம் நிலை :
......................................
ஆண்டவர் இயேசுவின் சிலுவையை சுமக்க சீமோன் உதவுகிறார்

"மக்கள் பார்க்கவேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள். (மத்தேயு 25:36)

சரித்திரம் படைக்கப் பாடுபடுவோர் பலர் - வழியோரச் சீமோன் தனக்கே புரியாத நிலையில் சரித்திரம் படைக்கிறார் - யாருக்கு யார் உதவுவது? சிலுவை சுமந்த இயேசுவுக்கு உதவும் சீமோனின் கரங்களாக எப்போது மாறப்போகின்றோம்?

செபம்
உதவும் கரமான அன்பான இயேசுவே! நாம் அடுத்தவரது துன்பத்திலும் துயரத்திலும் உரிமையோடு பங்கெடுக்கும் உண்மை மனிதர்களாக - பிறரது துன்பத்தில் உதவக்கூடிய மனித மாண்புடன் வாழும் நல்ல உள்ளத்தை தாரும் - ஆமென்.
.........................................

ஆறாம் நிலை:
..........................................
ஆண்டவர் இயேசுவின் முகத்தை வெரோணிக்கா துடைக்கிறாள்

"நோயுற்று நலிந்தார். காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார். அவர் இழிவுபடுத்தப்பட்டார். அவரை நாம் மதிக்கவில்லை" (ஏசாயா 53:3)

உலகின் பல பாகங்கள் கொடிய வெப்பத்தால் வரண்டதுபோல - பலகோடி மனித உள்ளங்களும் இரக்கம் என்ற குளிர்ச்சியின்றி வரண்டுவிட்டது - அநியாயச் செயல்களால் இரத்தம் சிந்தும் ஒவ்வொரு முகத்திலும் ஆண்டவர் இயேசுவே காணப்படுகின்றார் - துணிந்த வீரப்பெண் வரோணிக்காவாக எப்போது மாறப்போகின்றோம்?

செபம்
துன்புறுவோரின் சகோதரனான இயேசுவே! அதிகாரம் - ஆணவம் - வறட்டுக் கௌரவம் எனப்படும் ஆதிக்க வறட்சியில் சிக்குண்டு இரத்தம் சிந்தி துடிதுடித்து மாண்டு போகும் அப்பாவிகளுக்கு உதவும் நல்ல மனச்சாட்சியுள்ள வரோனிக்காவாக எங்களை மாற்றியருளும் - ஆமென்
............................................

ஏழாம் நிலை:
........................................
ஆண்டவர் இயேசு இரண்டாம் முறையாக இயேசு கீழே விழுகிறார்

எங்கிருந்து எனக்கு உதவி வரும்? விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும். அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார் (திருப்பா121:3)

மானிட மகன் இரண்டாந் தடவையாக மீண்டும் குப்புற விழுகின்றார் - சிலுவை சுமந்து நடக்கும் பாதை தூரமானதால் தடுக்கி விழுந்தாரா? அல்லது பாவம் என்ற படுகுழியில் விழுந்த மனிதன் எழும்ப முடியாது தடுமாறுகிறானே என்ற கவலையா?

செபம்
தடுமாறி விழுந்தாலும் தலைநிமிர்ந்தெழுந்த இயேசுவே! தேவரீரைப் பின்பற்றும் எமது இலட்சியப் பயணத்தில் வெள்ளம்போல் சாத்தான் வந்தாலும் சோதனைகளில் விழுந்துவிடாது உம்மையே நோக்கி நடக்க எமக்குப்பெலனாக இருந்தருளும்- ஆமென்
.............................................
எட்டாம் நிலை :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
ஆண்டவர் இயேசு எருசலேம் பெண்களுக்கு ஆறுதல் கூறுகிறார்

இதோ ஒருகாலம் வரும். அப்போது மலடிகள் பேறுபெற்றோரென்றும் பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறு பெற்றோர் என்றும் சொல்வார்கள் .(லூக்கா 23:29)

ஆண்கள் சிறைப்பட்டு - படுகொலை செய்யப்படும் நிலை - குடும்பத்தைக் காப்பாற்ற பெண்களது கற்பே விலைபேசப்படுவதால் ஓலமிட்டு அழமுடியாத நிலை - கண்ணீர்க் கதையாகி ஓலமிடும் சகோதரிகளின் அவலக்குரல் அர்த்தமற்றதா?

செபம்
பெண்மையைப் போற்றி மதித்த தயாபரனே! சமூக நீதிக்காகவும் - தமது மக்களது சுதந்திரத்திற்காகவும் ஓங்கிக் குரல் கொடுக்கும் ஒவ்வொரு சகோதரியையும் பாதுகாத்துப் பராமரித்து வழிநடத்தியருளும் - ஆமென்.
......................................
ஒன்பதாம் நிலை:
.......................................
ஆண்டவர் இயேசு மூன்றாம் முறை குப்புற விழுகிறார்

"கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் (யோவான் 12:25)

அற்புதங்களையும் - ஆறுதலையும் பெற்றவர்கள் தலை குப்புற விழப்போவதனைக் காணச் சகிக்காது புழுதியிலே முகத்தைப் புதைத்தாரா? - எமது பாவவாழ்விலிருந்து நாம் மீண்டெழும் போது ஆண்டவர் இயேசுவைக் கைகொடுத்து எழுப்பி விடுகின்றோம்.

செபம்
இலட்சியத்தின் நாயகனே! என் பாவத்தின் பாரத்தைத் தாங்காது நான் தடுக்கி விழும் வேளையில் கரம் பிடித்து தூக்கியெடுத்து வழிநடத்தியருளும் - ஆமென்.
.............................................
பத்தாம் நிலை :
.............................................
ஆண்டவர் இயேசுவின் ஆடைகளை உரிகிறார்கள்

" நான் அவமானம் அடையேன். என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன். இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன். (ஏசாயா 51:7)

ஆதி மனிதன் பச்சைமரத்தின் இலைகளால் மானத்தைக் காத்துக் கொண்டான் - இன்றைய மனிதன் பிரிவினை சபைகளை நாடுவதும் ஆன்மாவில் நிர்வாண நிலைதானே? ஆடைகளைச் சீர் செய்து உடலின் மானத்தைக் காப்பாற்றலாம் - ஆன்மாவில் நிர்வாணியானால் எதனைச் சீர் செய்வது?

செபம்
ஆடைகளைக் கழைந்த வேளையிலும் இலட்சிய வாழ்வில் அவமானப்படாத இயேசுவே! எமது வாழ்வில் வேதனைகள் ஏற்பட்டாலும் அன்னையாம் திருச்சபையில் நாம் வைத்துள்ள விசுவாசத்தை அற்ப சொற்ப சலுகைகளுக்காக இழந்து எமது ஆன்மாவில் நிர்வான நிலையை அடையாதிருக்க எம்மை வழிநடத்தியருளும்.
.............................................
பதினோராம் நிலை :
.............................................
இயேசுவை சிலுவையில் அறைகிறார்கள்

நம்மை நலமாக்கும் தண்டனை அவர்மேல் விழுந்தது. அவருடைய காயங்களால் நாம் குணமடைந்தோம் (எசயா53 :5)

சிறு கல் நமது காலில் இடித்தாலும் எவ்வளவு வேதனையை அனுபவிக்கிறோம் - இயேசுவின் கைகளிலும் - கால்களிலும் ஆணிகளை அடித்து சிலுவை மரத்தோடு இணைத்தபோது எவ்வளவு கொடிய துன்பத்தை அனுபவித்திருப்பார்? யாருக்காக ? உனக்காக !.. .. .. எனக்காக! .. .. நமக்காகத்தானே ?

செபம்
அன்பு இயேசுவே எனக்காகவே நீர் காயப்பட்டீர்; அடித்து நொறுக்கப்பட்டீர். உமது காயங்களால், தளும்புகளால் நாங்கள் சுகம் பெற்றுக் கொண்டோம் என்ற உண்மையை உணர்ந்து கொண்டு செயல் பட அருள் தாரும்.
...........................................
பன்னிரண்டாம் நிலை
............................................
ஆண்டவர் இயேசு சிலுவையில் உயிர்விடுகிறார்

இயேசு "தந்தையே உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" என்று உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார் (மத்தேயு 27:50)

இருண்ட துன்பத்தில் சிக்குண்டு மிகவும் கேவலமான சிலுவைச் சாவை ஏற்றதன் மூலம் இதற்கு மேல் துன்புற இடமில்லை என்று நிரூபித்து எமக்கு அன்பையும் நம்பிக்கையையும் அள்ளித் தந்தார்.

செபம்
அன்புக்கும் நீதிக்கும் பிறப்பிடமான இயேசுவே! உழுத நிலம்போல உருக்குலைந்து சிலுவையில் தொங்குகிறீர்.-.தேவரீரது சிலுவைச் சாவின் மூலம் துன்புறும் அனைத்து மக்களுடனும் அவர்கள் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக நன்றி தகப்பனே - ஆமேன்
............................................
பதின்மூ
ன்றாம் நிலை;
.............................................
அன்னை மரியின் மடியில் ஆண்டவர் இயேசு

அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார்கள் (யோவான்.19:42)

குழந்தையாக மடியில் புரண்டு விளையாடியவரது உயிரற்ற உடலை மடியில் தாங்கி அன்னை மரியா வேதனைப்படுகிறாள். அன்னையின் முகம் அமைதியின் சோகத்தில் துடிக்கிறது..தனது கடந்த கால நிகழ்வுகளை அன்னை அசைபோட்டுப் பார்க்கிறாள்..

செபம்

அநீதியையும் துன்பத்தையும் எதிர்கொள்ள துணிவும் மனத்தைரியமும் அவசியம் என்பதனைப் புரிந்து கொள்ளாது பலர் வசதிக்காகவும் - பதவிக்காகவும் புரிந்தும் புரியாதது போல நடிக்கிறார்கள் - பாதிக்கப்பட்ட எமது மக்களின் முழுமையான சுகந்திரத்தை வென்றெடுக்க துணிவும் மனத்தைரியமும் தந்தருளும் - ஆமென்
........................................

பதின்நான்காம் நிலை
.........................................
ஆண்டவர் இயேசுவின் திருவுடல் அடக்கம் செய்யப்படல்

அவரது உடலை இறக்கி மெல்லிய துணியால் சுற்றிப் பாறையில் குடைந்திருந்த கல்லறையில் வைத்தார்கள். அதற்கு முன்பு யாரையும் அதில் அடக்கம் செய்த தில்லை. (லூக்கா 23 :53) எமது பாவங்களுக்காக கேவலமாகக் கைது செய்யப்பட்ட போது ஏன் எவரும் எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை? ஆண்டவர் இயேசுவின் பாடுபட்ட உருவத்தின் முன் மார்பில் அடித்து அழுவது பிந்திய ஞானோதயம் அல்லவா?

செபம்
பூமி அழியப்போவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் - விண்ணரசு நெருங்குவதாக நற்செய்தி கூறுகின்றது. நிலையற்ற இவ்வுலக வாழ்வின் அழிவை சிந்திக்கத் தவறுகிறோம்.  நற்செய்தி கூறும் செய்திக்கு நாம் கவனமாகக் காதுகொடுத்து வரவிருக்கும் அழிவிலிருந்து எம்மைப் பாதுகாத்திட அருள்புரியும் - ஆமேன் ! இயேசுவுக்கே. புகழ் !

 

                            
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்