Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ அருளாளர் ஒஸ்கார் ரொமேரோ ✠(Blessed Oscar Arnulfo Romero)
   
நினைவுத் திருநாள் : மார்ச் 24
 ✠ அருளாளர் ஒஸ்கார் ரொமேரோ ✠(Blessed Oscar Arnulfo Romero)

*பேராயர் மற்றும் மறைசாட்சி :
(Archbishop and martyr)

*பிறப்பு : ஆகஸ்ட் 15, 1917
சியுடேட் பர்ரியோஸ், சேன் மிகுவேல், எல் சல்வெடோர்
(Ciudad Barrios, San Miguel Department, El Salvador)

*இறப்பு : மார்ச் 24, 1980 (வயது 62)
சேன் சல்வெடோர், எல் சல்வெடோர்
(San Salvador, El Salvador)

*அடக்கம் :
தூய இரட்சகர் - மாநகர பேராலயம், சேன் சல்வெடோர், எல் சல்வெடோர்
(Metropolitan Cathedral of the Holy Savior, San Salvador, El Salvador)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூதரன் திருச்சபை
(Lutheranism)

*முக்திபேறு பட்டம் : மே 23, 2015
சேன் சல்வேடோர், எல் சல்வேடோர்
(San Salvador, El Salvador)
கர்தினால் ஆஞ்செலோ அமேட்டோ, (திருத்தந்தை ஃபிரான்சிஸின் பிரதிநிதியாக)
(Cardinal Angelo Amato, Representing Pope Francis)

*பாதுகாவல் :
கிறிஸ்தவ தகவல் தொடர்பாளர்கள் (Christian communicators)
எல் சல்வேடோர் (El Salvador)
அமெரிக்க நாடுகள் (The Americas)
சேன் சல்வேடோர் உயர் மறைமாவட்டம் (Archdiocese of San Salvador)
துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் (Persecuted Christians)
கேரிடாஸ் இண்டர்நேஷனல் (இணை பாதுகாவலர்) (Caritas International (Co-Patron)
(இது, உலகளவில் 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இயங்கும் கத்தோலிக்க நிவாரணம், மேம்பாடு மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் ஆகும்).

அருளாளர் ஒஸ்கார் ரொமேரோ, "எல் சல்வேடோர்" (El Salvador) நாட்டில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் உயர் பதவி வகித்த இறையியலாளரும், "சேன் சல்வேடோர்" (San Salvador) உயர்மறை மாவட்டத்தின் நான்காவது பேராயருமாவார். அவர் வறுமை, சமூக அநீதி, படுகொலைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு எதிராக வெளிப்படையாக பேசிவந்தார்.

1980ம் ஆண்டு, இறை-இரக்க மருத்துவமனையின் (Hospital of Divine Providence) சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றுகையில் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி யார் என்று கண்டுபிடிக்க இயலாத நிலையில், ஐக்கிய நாடுகள் அமைப்பினால் அங்கீகாரமளிக்கப்பட்ட உண்மை கண்டறியும் விசாரணைக் கமிஷன், தீவிர வலதுசாரி அரசியல்வாதி மற்றும் கொலைப் பிரிவுத் தலைவர் "ராபர்டோ டி'அபுய்சன்" (Roberto D'Aubuisson) என்பவர்தான் இப்படுகொலையை நிகழ்த்த உத்தரவிட்டது என்று தீர்ப்பளித்தது.

இவரது முக்திபேறு அருட்பொழிவு நிகழ்வின்போது திருத்தந்தை ஃபிரான்சிஸ் அவர்கள் வெயிட்ட அறிக்கையில், "மிகவும் ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின்பால் அவர் கொண்டிருந்த அக்கறையால், அவரது ஊழியங்கள் மதிப்பு பெற்றன; அவரது பணிகளினால் ஈர்க்கப்பட்ட விடுதலை இறையியல் ஆதரவாளர்கள், அவரை ஒரு கதாநாயகனாக பார்த்தனர். ரொமேரோ, தமது வாழ்க்கை வரலாற்றைப் பொறுத்தவரையில், "விடுதலை இறையியலில் ஆர்வம் காட்டவில்லை", ஆனால் உண்மையாக கத்தோலிக்க போதனைகளையும், விடுதலையையும், ஏழைகளுக்கு தேர்ந்த விருப்பங்களிலும் ஆர்வம் காட்டினார்; உள்நாட்டு சீர்திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகப் புரட்சியை விரும்பினார்; அவருடைய வாழ்க்கையின் முடிவு வரை, அவருடைய ஆன்மீக வாழ்க்கை, ஆன்மிகத்தின் தூய்மையையே அதிகமாக ஈர்த்தது" என்றார்.

1977ம் ஆண்டு, ரொமேரோ பேராயராக நியமனம் செய்யப்பட்டபோது, ஒரு சமூக பழமைவாதி எனக் கருதப்பட்டபோதிலும், அவர் தனது சொந்த நியமனம் முடிந்த சில வாரங்களுக்குப் பிறகு, தமது நண்பரும், சக குருவுமான ரூத்திலோ கிரான்டி படுகொலை செய்யப்பட்டார். அதுவே பின்னர் அவர் ஒரு வெளிப்படையான சமூக ஆர்வலராக வளர காரணமானது எனலாம்.

2010ம் ஆண்டு, "ஐக்கிய தேசிய பொதுக்குழு" (United Nations General Assembly) கூடி, மனித உரிமைகள் பாதுகாப்பிற்கான பேராயர் ரொமேரோவின் பங்கை அங்கீகரிப்பதற்காக, மார்ச் மாதம் 24ம் தேதியை, "மனித உரிமை மீறல்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியம் மற்றும் சத்தியத்திற்கான சர்வதேச தினம்" என்று வலியுறுத்தியது. மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் மனித உரிமை மீறல்களை ரொமேரோ தீவிரமாக கண்டனம் செய்தார். உயிர்களைப் பாதுகாக்கும் கொள்கைகளை பாதுகாத்தார். அனைத்து விதமான வன்முறைகளையும் எதிர்த்த அவர், மனித கௌரவத்தை ஊக்குவித்தார்.

1997ம் ஆண்டு, ரொமேரோவை "கடவுளின் ஊழியர்" (Servant of God) என்று பிரகடணம் செய்த திருத்தந்தை புனிதர் இரண்டாம் ஜான் பவுல் (Pope St. John Paul II), இவரது முக்திபேறு பட்டம் மற்றும் புனிதர் பட்டமளிப்பு நிகழ்வுகளுக்கான நடைமுறைகளை தொடங்கிவைத்தார். இடையில் முடக்கப்பட்ட பணிகள், மீண்டும் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் (Pope Benedict XVI) அவர்களால் 2012ம் ஆண்டு, தொடங்கிவைக்கப்பட்டது. 2015ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம் மூன்றாம் நாளன்று, திருத்தந்தை ஃபிரான்சிஸ் (Pope Francis) அவர்கள் இவரை "மறைசாட்சி" என்று பிரகடணம் செய்தார். இதுவே, அதே வருடம், மே மாதம், 23ம் நாள் நடைபெற்ற முக்திபேறு பட்டமளிப்பு நிகழ்வுக்கு வழிவகுத்தது.

ஆரம்ப வாழ்க்கை :
1917ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ம் நாள், "சேன்டோஸ் ரொமேரோ" (Santos Romero) எனும் தந்தைக்கும், "குவாதலூப் டி ஜீசஸ் கல்டமேஸ்" (Guadalupe de Jsus Galdmez) எனும் தாயாருக்கும் மகனாகப் பிறந்த இவருக்கு 1919ம் ஆண்டு, மே மாதம், 11ம் நாளன்று, அருட்தந்தை "செசிலியோ மொரேல்ஸ்" (Fr. Cecilio Morales) என்பவரால் கத்தோலிக்க திருச்சபையில் திருமுழுக்கு அளிக்கப்பட்டது. அவருக்கு உடன்பிறந்த ஐந்து சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இருந்தனர்.

"ஒஸ்கார் அர்னல்ஃபோ ரொமேரோ ஒய் கல்டமேஸ்" (scar Arnulfo Romero y Galdmez) எனும் இயற்பெயர் கொண்ட இவர், உள்ளூரிலேயே உள்ள பொதுப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர், பதின்மூன்று வயதுவரை தனியார் பள்ளியில் கற்றார். இக்காலகட்டத்தில், இவரது தந்தையார் இவருக்கு தச்சுத் தொழில் பயிற்றுவித்தார். இவரும் பயிற்சியில் குறிப்பிடத்தக்க தேர்ச்சி பெற்றார். ஆனாலும் சிறுவன் ரொமேரோ குருத்துவம் பயில்வதில் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இது, அவரை அறிந்தவர்களை ஆச்சரியப்படுத்தவில்லை.

குருத்துவம் :
தமது பதின்மூன்று வயதில் "சேன் மிகுவேல்" (San Miguel) நகரிலுள்ள இளம் இறையியல் பள்ளியில் (Minor Seminary) சேர்ந்த ரொமேரோ, இடையில் தமது தாயார் நோய்வாய்ப்பட்ட காரணத்தால் மூன்று மாத விடுப்பில் வீடு திரும்பினார். இம்மூன்று மாத காலத்தில், தமது இரண்டு சகோதரர்களுடன் அங்குள்ள தங்க சுரங்கத்தில் வேலை செய்தார். பின்னர், குருகுலம் வந்த இவர், இறையியலில் பட்டம் பெற்றார். பிறகு, "சேன் சல்வெடோர்" (San Salvador) நகரிலுள்ள தேசிய குருத்துவ (National Seminary) கல்லூரியில் இணைந்தார். ரோம் (Rome) நகரிலுள்ள "கிரகோரியன் பல்கலையில்" (Gregorian University) தமது இறையியல் கல்வியை 1941ம் ஆண்டு பூர்த்தி செய்தார். குருத்துவம் பெறுவதற்கான வயதை அடையாத ரொமேரோ, ஒரு வருடம் காத்திருந்து, 1942ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 4ம் நாளன்று ரோம் நகரில், குருத்துவ அருட்பொழிவு பெற்றார். இரண்டாம் உலகப் போர் (World War II) நடந்த காலகட்டமாதலால், பயண கட்டுப்பாடுகளின் காரணமாக, இவரது பெற்றோரால் இவரது குருத்துவ அருட்பொழிவு நிகழ்வில் கலந்துகொள்ள இயலவில்லை.

ரொமேரோ, இறையியலில் ஒரு முனைவர் பட்ட படிப்புக்காக, இத்தாலியிலேயே தங்கினார். 1943ம் ஆண்டு, தமது படிப்பு முடிவதற்கு முன்னரே, இவரது இருபத்தாறு வயதில், இவரை நாடு திரும்புமாறு இவரது ஆயரிடமிருந்து அழைப்பு வந்தது. ரொமேரோ, தம்முடன் முனைவர் பட்ட படிப்பில் ஈடுபட்டிருந்த அருட்தந்தை "வல்லடேர்ஸ்" (Rev. Fr. Valladares) எனும் நல்லதொரு நண்பருடன் தமது பயணத்தை தொடங்கினார். நாடு திரும்பும் வழியில், அவர்களிருவரும் "ஸ்பெயின்" (Spain) மற்றும் "க்யூபா" (Cuba) நாடுகளில் தங்கினர். அவர்கள் "பாசிச இத்தாலியில்" (Fascist Italy) இருந்து வந்திருப்பதாக, அவர்களிருவரும் கியூபா போலீஸால் கைது செய்யப்பட்டனர். தொடர் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டனர். பல மாதங்கள் சிறைகளில் இருந்த காரணத்தால், அருட்தந்தை "வல்லடேர்ஸ்" (Rev. Fr. Valladares) நோய்வாய்ப்பட்டார். அங்கிருந்த "மகா பரிசுத்த மீட்பரின் சபை" குருக்கள் (Redemptorist Priests), அவர்களை ஒரு மருத்துவமனைக்கு மாற்றல் செய்ய உதவினார்கள். மருத்துவமனையில் இருந்த அவர்கள் கியூபா காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு, மெக்ஸிக்கோவுக்கு (Mexico) கடல் பயணம் தொடங்கினர். பின்னர், அங்கிருந்து "எல் சல்வெடோர்" (El Salvador) சென்றனர்.

முதலில், "அனமோரோஸ்" (Anamors) எனும் இடத்தின் பங்குத் தந்தையாக நியமிக்கப்பட்ட ரொமேரோ, சிறிது காலத்தின் பின்னர், அங்கிருந்து "சேன் மிகுவேல்" (San Miguel) சென்றார். அங்கேயே இருபது வருடங்களுக்கும் மேல் பணியாற்றினார். அவர் பல்வேறு திருத்தூது குழுக்களை (Apostolic groups) ஊக்குவித்தார். "சேன் மிகுவேல் பேராலயம்" (San Miguel Cathedral) கட்டுமான பணிகளில் உதவினார். "அமைதியின் அன்னை" (Our Lady of Peace) பக்தியை பரப்பினார். பின்னர் அவர் "சேன் சால்வேடரில்" (San Salvador) உள்ள உள்-மறைமாவட்ட குருகுல அதிபராக நியமிக்கப்பட்டார். ஓயாத பணிகளால் உணர்வு பூர்வமாகவும் உடல்ரீதியாகவும் களைத்துப்போன இவர், 1966ம் ஆண்டு, ஜனவரி மாதம் தியானத்துக்கு சென்றார். அங்கே, ஒப்புரவு அருட்சாதனத்துக்காக ஒரு குருவை சந்திக்க சென்ற அவர், ஒரு மனநல மருத்துவரையும் சந்தித்தார். அவர், இவருக்கு "ஆட்டிப்படைக்கும் நிர்ப்பந்திக்கும் ஆளுமை கோளாறு" (Obsessive-compulsive personality disorder) எனும் நோய் உள்ளதாக கூறினார்.

1966ம் ஆண்டு, "எல் சல்வெடோர்" (El Salvador) நாட்டின் ஆயர் பேரவையின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். உயர்மறை மாவட்ட செய்தி இதழின் இயக்குனராகவும் ஆனார். 1970ம் ஆண்டு, "சேன் சல்வெடோர்" உயர்மறை மாவட்ட (Archdiocese of San Salvador) துணை ஆயராக (Auxiliary Bishop) நியமனம் பெற்றார். 1974ம் ஆண்டு, எளிய கிராமப்புற மறைமாவட்டமான "சேண்டியாகோ டி மரியா" (Diocese of Santiago de Mara) ஆயராக நியமிக்கப்பட்டார்.

1977ம் வருடம், ஃபெப்ரவரி மாதம் 23ம் நாள், "சேன் சல்வெடோர்" உயர்மறை மாவட்ட (Archdiocese of San Salvador) பேராயராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனம் அரசாங்கத்தால் வரவேற்கப்பட்ட அதேவேளை, மார்க்சிச கருத்தியலின் (Marxist ideology) வெளிப்படையான ஆதரவாளர்களான குருக்கள் ஏமாற்றமடைந்தனர். அவரது பழமைவாத புகழ், ஏழைகளுக்கான விடுதலை இறையியல் அர்ப்பணிப்பில் எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று முற்போக்கு குருக்கள் அஞ்சினார்கள்.

படுகொலை :
1980ம் ஆண்டு, மார்ச் மாதம், 23ம் நாள், ரொமேரோ ஆற்றிய மறையுரையில், கிறிஸ்தவர்களை எப்போதுமே சல்வெடோர் படையினர் என்று அழைக்கும் வழக்கமுள்ள அவர், கடவுளின் உயர்மட்ட ஒழுங்கிற்கு கீழ்ப்படியுமாறும், அரசாங்கத்தின் ஒடுக்குமுறை மற்றும் அடிப்படை மனித உரிமை மீறல்களை எதிர்க்க ஒன்றுகூடவும் அறைகூவல் விடுத்தார்.

மார்ச் மாதம் 24ம் தேதி, "ஓபஸ் டேய்" (Opus Dei) என்றழைக்கப்படும் குருக்கள் மற்றும் இறைமக்களின் ஒன்றிய சமூகம் ஏற்பாடு செய்திருந்த நினைவுகூறல் நிகழ்வுகளில் கலந்துகொண்டார். அன்று மாலை, திருச்சபை நடத்தும், புற்றுநோயாளிகளுக்கான "இறை-இரக்க மருத்துவமனையின்" (Hospital of Divine Providence) சிற்றாலயத்தில் ரொமேரோ திருப்பலி நிகழ்த்தினார். மறையுரை நிறைவு செய்த ரொமேரோ, படிக்க உதவும் சாய்வு மேசையிலிருந்து (Lectern) விலகினார். திருப் பலிபீடத்தின் மையத்தில் நிற்பதற்காக சில அடிகள் எடுத்து வைத்தார். ரொமேரோ பேசி முடித்ததும், ஒரு சிகப்பு நிற போக்குவரத்து வண்டி, சிற்றாலயத்துக்கு எதிரே இருந்த நிறுத்தத்தில் வந்து நின்றது. வாகனத்திலிருந்து இறங்கிய துப்பாக்கி ஏந்தியவர்கள், சிற்றாலயத்தினுள்ளே நுழைந்தனர். ரொமேரோவை நோக்கி இரண்டு ரவுண்டுகள் சுட்டனர். ரொமேரோ நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே சாய்ந்தார். வந்த வண்டி அவசரமாக பறந்து சென்றது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா