குழந்தைகள் திருமுழுக்கு
சரிதானா???
ஏழு
திருவருட்சாதனங்களில் ஒன்று திருமுழுக்கு. கத்தோலிக்கத்
திருச்சபையில் பெரும்பாலும் குழந்தைகளாக இருக்கும்போதே
திருமுழுக்கு கொடுக்கப்படுகிறது. இப்பழக்கமானது இன்று பிற
சபையினரால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. இதற்கும் அவர்கள்
திருவிவிலியத்தை ஆதாரமாகக் காட்டுவார்கள்.
-*
இயேசு திருமுழுக்குப் பெறுகிறார். உடனே தன் பணிவாழ்வைத்
துவங்குகிறார். அப்போது அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது (லூக்:3:23).
அதுவும் யோர்தான் ஆற்றில் யோவானிடம் முழுக்கு
ஞானஸ்நானம்
பெற்றுக் கொள்கிறார்.
-*
முப்பது வயதில்
இயேசு ஞானஸ்நானம் பெற்றிருக்க, கத்தோலிக்கராகிய
நீங்கள்
குழந்தைகளுக்கு அறியாத பருவத்தில் திருமுழுக்கு
கொடுக்கிறீர்களே, இது சரிதானா?
-* இயேசு முழுக்கு ஞானஸ்நானம் பெற்றிருக்க, அவரது சீடர்கள்
என்று
சொல்லிக் கொள்ளும் கத்தோலிக்கராகிய நீங்கள்
தலையில் சிறிதளவு
தண்ணீர் மட்டும் ஊற்றி ஞானஸ்நானம் கொடுக்கிறீர்களே,
இது எப்படி
சரியாகும்?
-* உங்கள்
கொண்டாத்திற்காக ஏன் குழந்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள்?
-* இயேசுவைப் போல செயல்படுவதுதானே அவரது சீடர்களுக்கு அழகு.
அப்படியானால், அவரைப் போலவே பெரியவர்களான பின்பு
திருமுழுக்கு
பெறுவதும், அதுவும் முழுக்கு ஞானஸ்நானம் பெறுவதும்தானே
பொருத்தமானதாக
இருக்கும்!
-*
என்ன நடக்கிறது என்றே தெரியாத போது, அக்கொண்டாட்டத்தினால்
திருமுழுக்கு
பெறும்
குழந்தைக்கு என்ன பயன்? முழுக்கு
ஞானஸ்நானம்
பெற்றவர்கள் மட்டுமே இரட்சிக்கப்படுவார்கள் என்பது அவர்களது வாதம்.
திருவிவிலித்தின் அடிப்படையில் இப்படிப்பட்ட வாதங்களை
முன்வைக்கும் போது, நம்மவர்கள் வழக்கம் போல்
குழம்பிவிடுகிறார்கள். எப்படி பதிலளிப்பது என்பது
தெரியாதது மட்டுமல்ல, பல்வேறு சஞ்சலங்களுக்கும்
ஆளாகிறார்கள். காலம் காலமாக நாம் கடைபிடிக்கும் குழந்தைகள்
திருமுழுக்கு தவறானதாக இருக்குமோ? என்ற சந்தேகம்
நம்மவர்களுக்கு வருகிறது. அப்படியானால், நாம்
இரட்சிக்கப்படவில்லையோ? நமக்கு மோட்சம் கிடைக்காதோ?
திருவிவிலியத்திற்கு எதிராகச் செயல்படுகிறோமோ? என்றெல்லாம்
பயந்து புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.
குழந்தைகள்
திருமுழுக்கை எப்படி புரிந்து கொள்வது? அதைக் குறித்து
கேள்வி எழுப்புபவர்களுக்கு எப்படி பதிலளிப்பது?
திருமுழுக்கு கொடுக்க வேண்டும் என்பது இயேசுவின் கடைசிக்
கட்டளை. விண்ணகம் செல்வதற்கு முன்னதாக தன்
திருத்தூதர்களிடம், 'நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் என்
சீடராக்குங்கள்: தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால்
திருமுழுக்குக் கொடுங்கள்" (மத் 28:20) என்கிறார்.
இதில்கூட ஒரு சிறு குழப்பம் வர வாய்ப்புள்ளது.
சீடராக்கிய
பின் திருமுழுக்குக் கொடுப்பதா? அல்லது திருமுழுக்குக்
கொடுத்து சீடராக்குவதா? அதாவது, சீடருக்கு திருமுழுக்கா?
அல்லது திருமுழுக்கினால் சீடரா? இன்னும் தெளிவாகச் சொல்ல
வேண்டுமெனில், விசுவாசத்தின் அடையாளம் திருமுழுக்கா?
அல்லது விசுவாசத்தின் தொடக்கம் திருமுழுக்கா?
இக்கட்டளையை சற்று புரிந்து கொள்ள
முயற்சி செய்வோம்.
இதுவரை இயேசு நேரடியாக நற்செய்திப்
பணியை செய்து வந்தார். அவ்வப்பொழுது சீடர்களையும்
நற்செய்திப் பணிக்கு அனுப்பி வைத்து ஏற்கனவே அவர்களுக்கு
பயிற்சியும் கொடுத்திருந்தார். இப்பொழுது அவர் அவர்களை
விட்டு உடல் ரீதியாக பிரிகின்ற நேரம். எனவே, தனது
நற்செய்திப் பணியை முழு நேரப் பணியாகச் சீடர்களிடம்
ஒப்படைக்கிறார். இனிமேல் உலகிலுள்ள அனைத்து இனத்தவரையும்
இயேசுவின் சீடர்களாக மாற்றுவது திருத்தூதர்களின் தலையாயப்
பணி. இதற்காகவே அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள் (மாற்கு
3:14-15).
இயேசுவின் இக்கட்டளையை வார்த்தைக்கு
வார்த்தை அப்படியே எடுத்துக் கொண்டால், கிறிஸ்துவை
அறியாதவர்களுக்கு மட்டுமே நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.
இயேசுவின் சீடர்களாக மாற்றுவதற்காகத்தான் நற்செய்தி
பறைசாற்றப்பட வேண்டும். ஏற்கனவே இயேசுவின் சீடர்களாக
மாறியவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பது தேவையில்லாத ஒன்று
மட்டுமல்ல, அது அவரின் கட்டளைக்கு எதிரானதாகக்கூட
மாறிவிடும். அப்படியானால், இன்று நடத்தப்படும் பேரின்ப
பெருவிழாக்களையும், நற்செய்திக் கூட்டங்களையும் எப்படி
புரிந்து கொள்வது? ஏனெனில், அக்கூட்டங்களுக்கு வருபவர்கள்
ஏற்கனவே இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களாயிற்றே! அவர்கள்
ஏற்கனவே திருமுழுக்குப் பெற்றவர்களாயிற்றே! அப்படியானால்
எதற்கு இந்த நற்செய்திக் கூட்டங்கள்? ஏன் இந்த பேரின்பப்
பெருவிழாக்கள்?
இது இயேசுவின் போதனைக்கு எதிரானது என்று
சபையினர் சொல்வார்களா?
இயேசுவின் கட்டளையின் அடிப்படையில்
பார்க்கும் போது, நற்செய்தி அறிவிப்பதும்,
திருமுழுக்கு கொடுப்பதும் ஒன்றோடு ஒன்று பின்னிப்
பிணைந்தது. தொடக்கத் திருச்சபையில் குழந்தைகளுக்கு
திருமுழுக்குக் கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.
திருச்சபை அப்பொழுதுதான் பரவ ஆரம்பித்திருந்தது.
பெரியவர்கள் மனம் மாறினார்கள், திருமுழுக்குப் பெற்றார்கள்.
நாளடைவில் கிறிஸ்தவக் குடும்பங்கள் பெருகவே,
குழந்தைகளுக்கு திருமுழுக்குக் கொடுத்து அவர்களின் விசுவாச
வாழ்வைப் பெற்றோர்கள் துவக்கி வைத்தார்கள். அதே வேளையில்
பெரியவர்களுக்கு திருமுழுக்கு கொடுக்கக் கூடாது என்ற தடையை
திருச்சபை ஒருபோதும் விதித்ததில்லை. நற்செய்தியை ஏற்றுக்
கொள்கிற பெரியவர்களுக்கும், கத்தோலிக்கத் திருச்சபையில்
திருமுழுக்குக் கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே நற்செய்தியை
ஏற்றுக் கொண்ட பெற்றோர்களும், பெரியவர்களுக்கும் தங்கள்
குழந்தைகளுக்கு திருமுழுக்கு கேட்கும் போதும் திருமுழுக்கு
வழங்கப்படுகிறது. இருப்பினும், குழந்தைகளாக இருக்கும் போதே
திருமுழுக்குக் கொடுப்பதை கத்தோலிக்கத் திருச்சபையானது
ஊக்குவிக்கிறது.
ஏன்? குழந்தை வளர்ந்த பிறகு
கொடுத்தால், குடியா முழுகப் போகிறது என ஒருவேளை யாராவது
கேட்கலாம். என்ன பதில் சொல்வது?
முதலில் வாதத்திற்காக எடுத்துக்
கொள்வோம். இயேசுவைப் போல் பெரியவரான பின்புதான்
ஒருவர் திருமுழுக்குப் பெற வேண்டுமெனில், அதுவும் முழுக்கு
ஞானஸ்நானம்தான் பெற வேண்டுமெனில், இயேசுவைப் போல யோர்தான்
ஆற்றில்தான் திருமுழுக்குப் பெற வேண்டும். அதை மட்டும் ஏன்
விட்டு வைக்க வேண்டும்? யோர்தான் ஆற்றில்தான் எல்லோரும்
திருமுழுக்குப் பெற வேண்டுமெனில், அது சாத்தியப்படுமா?
இரண்டாவதாக,
குழந்தைகள் திருமுழுக்கைத் திருச்சபை ஊக்குவித்தாலும்,
பெரியவர்கள் திருமுழுக்கை அது தடை செய்யவில்லை. இன்றும்கூட
பெரியவர்கள் மனம் மாறி, மதம் மாறி திருச்சபைக்கு வருகிறபோது அவர்களுக்குத் திருமுழுக்கு கொடுக்கப்படுகிறது. அதைப்
போலவே, முழுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கும் திருச்சபையில்
தடையில்லை. போதுமான தண்ணீர், தேவையான இடம் போன்ற நடைமுறைச்
சிக்கல்கள் காரணமாகவே அதை செயல்படுத்துவதில்லை.
மூன்றாவதாக, இயேசு யோவானிடம்
பெற்ற திருமுழுக்கு வேறு, அவர் தன் சீடர்களுக்கு
கட்டளையிட்ட திருமுழுக்கு வேறு. இரண்டிற்கும் பெயர்
மட்டும்தான் ஒன்றே தவிர, அவைகளின் பொருள் முற்றிலும்
வேறுபட்டது. அடிப்படையில் யூதர்களுக்கு திருமுழுக்கு
தேவையில்லை. பழைய ஏற்பாட்டில் எந்த ஒரு யூதனும்
திருமுழுக்குப் பெற்றதாக குறிப்பு இல்லை. ஒரு யூதனாக யூதச்
சமூதாயத்தில் வாழ்வதற்கு விருத்தசேதனம் ஒன்றே போதுமானது.
யூதர்கள் என்பதற்கு விவிலியத்தின் அடிப்படையில்
விருத்தசேதனம் மட்டுமே அடிப்படை அடையாளம். ஒவ்வொரு யூத ஆண்
மகனும் விருச்சசேதனம் செய்து கொள்ள வேண்டும் என்பதும்,
அவ்வாறு விருத்தசேதனம் செய்யாத பட்சத்தில் அவர்கள் யூத
சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்பதும்,
கடவுள் ஆபிரகாமுக்கு கொடுத்த கட்டளை (தொநூ 17:10,14).
இது இப்படியிருக்க, காலப் போக்கில் யூதரல்லாத பிற இனத்தைச்
சார்ந்தவர்கள் யூத சமயத்திற்கு வருகிற போது அவர்கள்
தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள திருமுழுக்குப் பெற
வேண்டியிருந்தது. விருத்தசேதனமும் செய்ய வேண்டியிருந்தது.
இவ்வாறு, பிற இனத்தவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட
திருமுழுக்கு என்னும் தூய்மைச் சடங்கு, யோவானின் காலத்தில்
மனமாற்றத்தின் அடையாளமாக மாறியது. பிற இனத்தவர்க்குக்
கொடுக்கப்பட்ட திருமுழுக்கு யூதர்களுக்கும்
கொடுக்கப்பட்டது. பலதரப்பட்ட யூத மக்கள் தங்கள் பாவங்களை
அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்கு
பெற்றதை நற்செய்தியில் வாசிக்கிறோம் (மத் 3:5-6).
இங்கும்கூட உண்மையான மனமாற்றம்
இல்லாமலேயே தாங்கள் மனம் மாறிவிட்டதாக தங்களைக் காட்டிக்
கொண்டு, திருமுழுக்குப் பெற வந்த பரிசேயர்களையும்
சதுசேயர்களையும் யோவான் சாடுவதையும் நற்செய்தி நமக்கு
எடுத்துரைக்கிறது (மத் 3:7-10). மத் 3:6ன் படி, யோர்தான்
ஆற்றுக்கு வந்தவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு
திருமுழுக்கு பெற்று வந்தார்கள். அதே வேளையில், மத் 3:11ல்
"நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருழுக்குக்
கொடுக்கிறேன்" என்று யோவான் சொல்கிறார். இங்குகூட
மனமாற்றத்தின் அடையாளம் திருமுழுக்கா? அல்லது
மனமாற்றத்திற்காக திருமுழுக்கா? என்ற குழப்பம்
ஏற்படுகிறதல்லவா!
இருப்பினும், யோவான் மிகத் தெளிவாகக்
குறிப்பிடுகிறார்: "நீங்கள் மனம் மாறுவதற்காக நான்
தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின்
ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய
மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை.
அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத்
திருமுழுக்குக் கொடுப்பார்" (மத் 3:11). இதிலிருந்தே
தெளிவாகத் தெரிகிறதல்லவா, யோவான் கொடுத்த வந்த
திருமுழுக்கு வேறு, இயேசு கொடுக்கவிருந்த திருமுழுக்கு
வேறு என்பது.
இயேசு திருமுழுக்கு கொடுத்ததாகவும், எல்லோரும் அவரிடம்
செல்வதாகவும் யோவானின் சீடர்கள் அவரிடம் முறையிடுகிறார்கள் (யோவா 3:26). இயேசு தூய ஆவியால்
திருமுழுக்குக் கொடுப்பார் என்று யோவான்
முன்னறிவித்திருந்தாலும், அவர் திருமுழுக்குக் கொடுத்துக்
கொண்டிருந்ததாக வாசித்தாலும், அவர் எப்படி திருமுழுக்கு
கொடுத்தார்? யாருக்குக் கொடுத்தார்? போன்ற விவரங்கள் புதிய
ஏற்பாட்டில் இல்லை. எனவே, இயேசுவின் தூய ஆவி
திருமுழுக்கிற்கும், யோவானின் தண்ணீர் திருமுழுக்கிற்கும்
அவைகளை நிறைவேற்றும் முறையில் என்ன வேறுபாடு என்பதை,
திருவிவிலியம் சுட்டிக்காட்டவில்லை. இப்படியிருக்க,
யோவானைப் போல்தான் முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்
என்று வாதிடுவது எப்படி சரியாகும்? அது இயேசுவின் முந்திய
காலத்திற்கல்லவா நம்மை இட்டுச் செல்லும்!
தலையில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி திருமுழுக்குக் கொடுப்பது
எப்படி சரியாகும்? என்று யாராவது கேட்கலாம்.
உடலை
தூய்மைப்படுத்துவதற்காக திருமுழுக்கில் நாம் தண்ணீரைப்
பயன்படுத்துவதில்லை. அப்படியிருந்தால் உடல் முழுவதும்
தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று வாதிடுவது சரியாக இருக்கும்.
ஆனால், மனமாற்றத்தையும் விசுவாசத்தையும், உள்ளத்
தூய்மையையும் குறிக்கும் அடையாளமாகத்தான், தண்ணீர்
திருமுழுக்கில் பயன்படுத்தப்படுகிறது. எனவே, ஒரு குடம்
தண்ணீர் ஊற்றுவதும் ஒன்றுதான், ஒரு துளி தண்ணீர்
பயன்படுத்துவதும் ஒன்றுதான். எதற்காக தண்ணீர்
பயன்படுத்தப்படுகிறது என்பதன் பொருள் தெரியாத
காரணத்தினாலேயே, பிற சபையினர் முழுக்கு ஞானஸ்நானம்தான்
சரியென்று தப்பாக வாதிடுகிறார்கள்.
'குளித்துவிட்டவர் தம்
காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர்
தூய்மையாகி விடுவார்" (யோவா 13:10) என்று இயேசுவே
சொல்லியிருக்கிறார்.
நம்பிக்கை கொண்டவர்கள் அதனை வெளிப்படையாக
அறிக்கையிடுவதற்கான ஓர் அடையாளம் திருமுழுக்கு. இயேசுவில்
கொண்ட விசுவாசம் திருமுழுக்கு பெற ஒருவரைத் தூண்டுகிறது.
எவ்வாறு யூதர்கள் இறைவனில் கொண்ட நம்பிக்கையின் அடையாளமாக
விருத்தசேதனம் செய்து கொண்டார்களோ, அதைப் போல கிறிஸ்துவில்
விசுவாசம் கொண்டவர்கள், அதன் அடையாளமாக திருமுழுக்குப்
பெறுகிறார்கள். குழந்தைகளைப் பொறுத்தவரையில், அவர்கள்
ஏற்கனவே தூய்மையாக இருக்கிறார்கள். அவர்கள் அத்தூய்மையில்
தொடர்ந்து நிலைத்திருக்கவும், அவர்களை விசுவாசத்தில்
வளர்த்தெடுக்கவும் பெற்றோர்கள் வாக்குறுதி கொடுக்கிறார்கள்.
அவ்வாக்குறுதியை நம்பியே திருச்சபையானது குழந்தைகளுக்கு
திருமுழுக்குக் கொடுக்கிறது.
குழந்தை
வளர்ந்து தனக்கு என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ளும்
நிலையை அடைந்த பிறகு திருமுழுக்குக் கொடுக்கலாமே?
அப்பொழுதுதான் அந்த குழந்தைக்கு அதனால் பயன் உண்டு என்று
பிறசபையினர் வாதிடலாம்.
இயேசுவுக்கு எட்டாம் நாள் விருத்தசேதனம் செய்யப்படுகிறது (லூக்
2:21). அவர் நாற்பதாம் நாளில் எருசலேம் தேவாலயத்தில்
ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படுகிறார் (லூக் 2:22-24). அவர்
சிறுவனாக இருக்கும் போதே ஒவ்வொரு ஆண்டும் பாஸ்கா
விழாவினைக் கொண்டாட பெற்றோர்கள் அவரை எருசலேமுக்கு
அழைத்துச் செல்கிறார்கள் (லூக் 2:41-42).
அறியாத
பருவத்தில் இயேசுவுக்கு இவ்வாறு செய்வதால் அவருக்கு என்ன
பயன் என்று சபையைச் சார்ந்தவர்கள் யாராவது கேள்வி
எழுப்புவார்களா?
நடைமுறை வாழ்க்கையைப் புரிந்து கொள்பவர்கள்; குழந்தைகள்
திருமுழுக்கையும் புரிந்து கொள்வார்கள்.
குழந்தை கேட்ட
பிறகுதான் எதையும் செய்ய வேண்டும் என்று எந்த பொறுப்புள்ள
பெற்றோரும் காத்திருப்பதில்லை.
ஒரு குழந்தைக்கு உணவு
கொடுப்பதற்கோ, ஆடை அணிவதற்கோ, பள்ளியில் சேர்ப்பதற்கோ,
அக்குழந்தை தானாகவே விரும்பிக் கேட்கும்வரை யாரும்
காத்திருப்பதில்லை.
உண்மை பேச வேண்டும், பொய் பேசக் கூடாது
போன்ற உயர்ந்த நெறிகளை சொல்லிக் கொடுக்க, பிள்ளைகள்
வளர்ந்து, அவர்களுக்கு புரிந்து கொள்ளும் திறன் வந்த பிறகு
சொல்லிக் கொடுக்கலாம் என்று பொறுப்புள்ள எந்தப் பெற்றோரும்
கையைக் கட்டிக் கொண்டு இருக்க மாட்டார்கள்.
பிறருக்கு உதவி
செய்ய வேண்டும், பகிர்ந்து வாழ வேண்டும் என்னும் நல்ல
பழக்க வழக்கங்களை, குழந்தைகள் புரிந்து கொள்ளும்
மனப்பக்குவத்தைப் பெற்ற பின்னர்தான் சொல்லிக் கொடுப்பேன்
என்று எந்தப் பெற்றோரும் அடம் பிடிப்பதில்லை.
நல்லது எது,
கெட்டது எது என்று பகுத்தறியும் ஞானம் வந்த பிறகுதான்,
அவைகளைப் பற்றி குழந்தைகளுக்குச் சொல்லித் தருவேன் என்று
எந்த நல்ல பெற்றோரும் உறுதிமொழி எடுப்பதில்லை. அப்படி
செய்தால், அவர்கள் பெற்றோர்களே இல்லை.
நல்ல பண்புகள்
தங்கள் குழந்தைகளின் வாழ்வில் இயல்பாகவே இருக்க வேண்டும்
என்று விரும்பும் பொறுப்புள்ள நல்ல பெற்றோர்கள், அதாவது
எது தங்கள் குழந்தைகளுக்கு நல்லது என்று அவர்கள்
நினைக்கிறார்களோ, அவற்றை குழந்தைகள் அறியாத பருவத்திலேயே
அவர்களது இதயத்தில் விதைக்கிறார்கள்.
இந்த நடைமுறை குழந்தை திருமுழுக்கிற்கும் பொருந்தும். எனது
விசுவாசத்தில் என்னுடைய குழந்தையும் வளர வேண்டும் என்று
பெற்றோர் தீர்மானிப்பதும், அதை அவர்கள் செயல்படுத்துவதும்
தவறு என்று எப்படி சொல்ல முடியும்?
விசுவாசத்தில் குழந்தைகளை வளர்க்க
வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தைக்கு என்ன பெயர் வைக்க
வேண்டும் என்று தீர்மானிக்க பெற்றோர்களுக்கு எப்படி
உரிமையும் கடமையும் இருக்கிறதோ, அதைப் போலவே
குழந்தைகளுக்கு விசுவாசத்தை விதைக்கவும், அவ்விசுவாசத்தில்
குழந்தைகளை வளர்த்தெடுக்கவும், அவர்களுக்கு உரிமையும்
கடமையும் உண்டு. உடல் சார்ந்த, அறிவு சார்ந்த காரியங்களைக்
குழந்தைகளுக்கு அறியாத பருவத்திலேயே பெற்றோர்கள்
நிறைவேற்றுவதை ஏற்றுக் கொள்பவர்கள், சமயம் மற்றும்
ஆன்மீகக் காரியங்கள் என்று வரும் போது மட்டும் கேள்வி
எழுப்புவது
இரட்டை வேடமல்லவா? வாழ்வின் எதார்த்தத்தைப்
புரிந்து கொள்ளாதவர்களே குழந்தைகள் திருமுழுக்குக்
குறித்து கேள்வி எழுப்புவார்கள்.
திருமுழுக்கு என்பது ஓர் அர்ப்பண
விழா. திருமுழுக்கினால் ஒரு குழந்தைக்கு நான்கு
பயன்கள் கிடைப்பதாக மறைக்கல்வி வகுப்பில் படிக்கிறோம்:
1. அக்குழந்தையின் ஜென்ம பாவம்
கழுவப்படுகிறது.
2. கடவுளின் குழந்தையாகிறது.
3. திருச்சபையின் உறுப்பினராகிறது.
4. தூய ஆவியானவரைப் பெறுகிறது.
ஆனால், அடிப்படையில் திருமுழுக்குக் கொடுப்பதற்கு
முன்னரும் ஒரு குழந்தை கடவுளின் குழந்தைதான். படைப்பது,
பராமரிப்பது, பாதுகாப்பது போன்றவை கடவுளுக்கே உரிய பணிகள்.
அதே வேளையில், கடவுள் இப்பணிகளை மனிதர்கள் மூலமாக,
குறிப்பாக பெற்றோர்கள் மூலமாகச் செய்கிறார். எனவேதான்
பெற்றோரைக் 'கண் கண்ட தெய்வங்கள்" என்கிறோம்.
கடவுள் தனது சாயலிலும் உருவிலும்
மனிதரைப் படைத்ததாக திருவிவிலியத்தில் (தொநூ 1:26-27)
வாசிக்கிறோம்.
எது கடவுளின் சாயல்? பொதுவாக ஒருவரைப்
பார்த்து,
"இவர் அவருடைய அப்பா (அம்மா) சாயலிலே
இருக்கிறார்" என்று சொல்லும் போது, அப்பாவின் உருவத்தில்
அல்லது குணத்தில் ஒத்திருப்பதையே குறிப்பிடுகிறோம்.
கடவுளுக்கு உருவம் இல்லை.
எனவே, கடவுளின் சாயல் என்று
சொல்லும் போது அவரது உருவத்தை ஒத்திருப்பதாக பொருள் கொள்ள
முடியாது. கடவுளின் சாயல் என்பது அவரது குணத்தையும்,
இயல்பையும் குறித்துக் காட்டுகிறது.
"கடவுள் அன்பாய்
இருக்கிறார்" என்று யோவான் (1யோவா 4:8,16) கூறுகிறார்.
ஆகவே, கடவுளின் சாயலில் மனிதன் படைக்கப்பட்டான் என்று
சொல்லும்போது, அன்பின் சாயலில் அவன்
படைக்கப்பட்டிருக்கிறான் என்பது பொருள்.
இன்றும் ஒவ்வொரு குழந்தையும் அன்பினால்தான் பிறக்கிறது.
கணவன் மனைவியை அன்பு செய்கிறான். மனைவி கணவனை அன்பு
செய்கிறாள். இருவரும் சேர்ந்து தங்களின் உண்மையான அன்பை
எவ்வித தடங்கலுமின்றி முழுமையாகக் கொண்டாடுகின்றனர். அதே
வேளையில், ஒரு குழந்தை கருவாவதற்கு தம்பதியரின் அன்புக்
கொண்டாட்டம் மட்டுமே போதுமானது அல்ல. அப்படியிருந்தால்
அன்பைக் கொண்டாடும் எல்லா தம்பதியினருக்கும் குழந்தைப்
பாக்கியம் கிடைத்திருக்க வேண்டும். அவர்கள் இருவரின்
அன்பையும் கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும். தம்பதியினருடைய
அன்பின் கொண்டாட்டமும் கடவுளின் ஆசீர்வாதமும் இணைந்ததுதான்
ஒரு குழந்தை.
எனவே, ஒவ்வொரு குழந்தையும் அன்பின் சாயல். இறை ஆசீரின்
அடையாளம். இறைவன் அப்பெற்றோர்கள் மீது வைத்திருக்கிற
நம்பிக்கையின் வெளிப்பாடு. தனது பணிகளான படைத்தல்,
பராமரித்தல், பாதுகாத்தல் போன்றவற்றை இத்தம்பதியரிடத்தில்
ஒப்படைத்தால் அவர்கள் அவற்றை சரியாகச் செய்வார்கள் என்று
இறைவன் நம்புவதாலேயே, குழந்தைப் பாக்கியத்தை அவர்களுக்குக்
கொடுக்கிறார். எனவே, கணவன் மனைவி மூலம் ஒரு குழந்தை
பிறந்தாலும், அக்குழந்தை அடிப்படையில் இறைவனின் குழந்தையே.
எனவேதான் மேலே குறிப்பிட்டோம்,
திருமுழுக்குப் பெறும் முன்னரும்
ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் குழந்தையே என்று.
ஒருவேளை பெற்றோர்கள் அக்குழந்தையை இறைவன் விரும்பும்
விதத்தில் வளர்க்காத போது, அது அக்குழந்தைக்கு எதிராகச்
செய்யப்படும் பாவம் மட்டுமல்ல. அது இறைவன் அவர்கள் மீது
வைத்துள்ள நம்பிக்கைக்கு எதிரான பாவம். சுருங்கக் கூறின்,
அது இறைவனுக்கு எதிரான நம்பிக்கைத் துரோகம்.
தங்கள் குழந்தை இறைவனுக்குச்
சொந்தமானது என்று அறிக்கையிடவும், அதனைக் கடவுளுக்கு உகந்த
குழந்தையாக வளர்ப்போம் என்று உறுதி கூறவும், அப்பணியை
எவ்வளவு சீக்கிரம் தொடங்க முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில்
தொடங்கிவிடுகிறோம் என்று தங்களது விருப்பத்தினையும்
அர்ப்பணத்தினையும் வெளிப்படுத்துவதே குழந்தை திருமுழுக்கு.
திருமுழுக்குக் கொடுப்பதற்காகக் குழந்தையைக் கொண்டு வரும்
போது, முதலில், பெற்றோர்கள் இறைவனுக்கு நன்றி
செலுத்துகின்றார்கள். இறைவன் தங்கள் மீது வைத்துள்ள
நம்பிக்கைக்காக, தங்களுக்குத் தந்திருக்கிற குழந்தை
என்னும் உன்னதக் கொடைக்காக இறைவனுக்கு நன்றி
செலுத்துகின்றார்கள். எனவே, ஒவ்வொரு திருமுழுக்கும் ஒரு
நன்றியின் விழா.
அடுத்ததாக, தாங்கள் யார்
என்பதையும் தங்களின் பொறுப்பு என்ன என்பதையும் பெற்றோர்கள்
உணர்ந்து அறிக்கையிடுகிறார்கள். கடவுளின் அன்பின் சாயலாம்
இக்குழந்தையை இவ்வுலகிற்கு கொண்டு வருவதற்காக, இறைவனால்
தேர்ந்தெடுக்கப்பட்ட வெறுமனே உயிருள்ள கருவிகளே
பெற்றோர்கள். இறைவனின் பெயரால் குழந்தையை பராமரிக்க
வேண்டியதும் பாதுகாக்க வேண்டியதும் அவர்களது கடமையும்
பொறுப்பும் ஆகும். அடிப்படையில் எந்தவொரு குழந்தையும்
இறைவனுக்குச் சொந்தமானதே.
எனவே,
"இறைவா! நீர் எங்களிடம்
ஒப்படைத்திருக்கிற இக்குழந்தையை உமது அருளின்றி, எங்களால்
நீர் விரும்பியவாறு வளர்க்கவோ, உருவாக்கவோ முடியாது. எனவே,
நீர் தந்த இக்குழந்தையை உமக்கே அர்ப்பணிக்கிறோம். இது
உமக்கே சொந்தம். நாங்கள் பெற்றோர்களுக்குரிய கடமையைச்
சரிவரச் செய்யவும், உமது திருவுளத்திற்கு ஏற்ப
இக்குழந்தையை வளர்க்கவும், உமது ஆசீரை நிறைவாகத் தாரும்"
என்று தன்னிலை உணர்ந்து, இறைவனுக்கு தங்களையும்
குழந்தைகளையும் அர்ப்பணிக்கும் விழாவே திருமுழுக்குத்
திருவிழா. 'உமது விருப்பத்திற்கு ஏற்றபடி இக்குழந்தையை
வளர்ப்போம்" என்று இறைவனுக்கு வாக்குறுதி கொடுத்து
பெற்றோர்களாகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் விழா
திருமுழுக்குத் திருவிழா.
திருமுழுக்குக் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும்
கத்தோலிக்கப் பெற்றோர்களுக்குப் பிறந்த ஒவ்வொரு
குழந்தையும் கத்தோலிக்கத் திருச்சபைக்குச் சொந்தமானதே. ஒரு
குழந்தை பிறந்தவுடன் அதன் பெற்றோர்களுக்கு யார் யாரெல்லாம்
சொந்தமோ, அவர்களெல்லாம் இயல்பாகவே அக்குழந்தைக்கும்
சொந்தக்காரர்கள் ஆகிவிடுகிறார்கள். இதற்கென்று எந்த
சடங்கும், சம்பிரதாயமும் தேவையில்லை. பெற்றோர்களின்
குடும்பத்தில் ஒரு உறுப்பினராக அக்குழந்தை மாறிவிடுகிறது.
திருச்சபை என்பதும் அப்பெற்றோர்கள் உறுப்பினர்களாக உள்ள
ஒரு பெரிய குடும்பமே. எனவே, இயல்பாகவே ஒரு குழந்தை பிறந்த
உடனேயே, அப்பெற்றோர்கள் உறுப்பினர்களாக உள்ள திருச்சபை
என்னும் பெரிய குடும்பத்தின் உறுப்பினராக மாறிவிடுகிறது.
அப்படியானால், ஏன் இந்த திருமுழுக்குக் கொண்டாட்டம்? இரத்த
உறவினால் அமைந்துள்ள சிறிய குடும்பத்திற்கு இக்குழந்தை
பிறந்தது தெரியும். ஆனால், திருச்சபை என்னும் பெரிய
குடும்பத்திற்கு அக்குழந்தை பிறந்திருப்பதும், புதிய
உறுப்பினராக வந்திருப்பதும் என்பதும் எப்படித் தெரியும்?
ஆக, திருச்சபை என்னும் பெரிய
குடும்பத்திற்கு அதன் உறுப்பினராகப் பிறந்துள்ள குழந்தையை
அறிமுகப்படுத்தும் விழாதான் திருமுழுக்கு விழா.
திருச்சபையும் தனது குடும்பத்தில் ஒரு குழந்தை
பிறந்துள்ளதைக் குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறது.
திருமுழுக்கிற்குப் பின்னால் அக்குழந்தையின் பெயர்,
திருச்சபையில் உறுப்பினர் பதிவேட்டில் (Baptism
Register) சேர்க்கப்படுகிறது.
எனவேதான், ஒவ்வொரு திருமுழுக்கும் இறைமக்கள் முன்னிலையில்
ஆலயத்தில் பகிரங்கமாகக் கொண்டாடப்படுகிறது. இதை ஒரு
குழந்தையாக இருக்கும் போதே செய்வதுதானே பொருத்தமாக
இருக்கும்!
பெற்றோர்களின் விசுவாசத்தை அடிப்படையாக வைத்தே
குழந்தைகளுக்கு திருச்சபையானது திருமுழுக்குக் கொடுக்கிறது. எனவேதான், திருமுழுக்குக் கொண்டாட்டத்தின்போது
பெற்றோர்களும் பெரியோர்களும் தங்கள் விசுவாசத்தை
அறிக்கையிடுகிறார்கள். சாத்தானையும், அதன் செயல்களையும்
விட்டுவிடுவதாகச் சத்தியம் செய்கிறார்கள். பெற்றோர்கள்
போதாதென்று ஞானப் பெற்றோர்களும் திருமுழுக்கின்போது ஒரு
குழந்தைக்குக் கிடைக்கப் பெறுகிறார்கள்.
ஒரு குழந்தையைச் சரியாக
வளர்த்தெடுப்பதற்கு பெற்றோர்கள் மட்டும் போதாதா? ஏன் ஞானப்
பெற்றோர்கள்? அவர்களின் கடமையும் பொறுப்பும் என்ன?
பிள்ளைகளின் தேவைகளை நிறைவு செய்வதில், பெற்றோர்கள் கண்ணும்
கருத்துமாக இருப்பது இயல்பானதே. அவரவர் வசதிக்கு ஏற்றபடி
உயர்தரமான சத்தான உணவு, அழகான விலையுயர்ந்த ஆடை, விதவிதமான
விளையாட்டுப் பொருட்கள், உயர்தரமான மருத்துவம், மிகச்
சிறந்த பள்ளியில் படிப்பு என்று குழந்தைகளின் உடல், அறிவு
சார்ந்த காரியங்களில் பெற்றோர்கள் அதிக அக்கறை எடுத்துக்
கொள்வார்கள்.
ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அவர்களது கவனம்
சற்று குறைய வாய்ப்பு இருக்கிறது. அதுவும் இன்றைய
காலக்கட்டத்தில் இக்குறைபாட்டை வெளிப்படையாக அதிகமாகவே
காணலாம். அதுதான் பிள்ளைகளின் ஆன்மீகம் சம்மந்தப்பட்ட
காரியங்கள். எல்லாவற்றிலும் தாங்கள் விரும்புவதை பிள்ளைகள்
மீது திணிக்கும் பெற்றோர்கள், ஆன்மீக காரியங்கள் என்று
வரும் போது மட்டும் பிள்ளைகளின் சுதந்திரம் பற்றிப்
பேசுவார்கள். பிள்ளைகளின் களைப்புப் பற்றிப் பேசுவார்கள்.
ஒருவேளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய
விசுவாசக் கடமைகளிலிருந்து தவற நேர்ந்தால், அவர்களுக்கு
அதை நினைவூட்ட வேண்டியது ஞானப் பெற்றோர்களின் கடமை.
தங்களின் ஞானப் பிள்ளைகள் ஆன்மீகத்திலும் ஞானத்திலும்
வளர்கிறார்களா என்பதை கவனிக்கவும், அவ்வாறு அவர்கள்
வளர்வதற்கு உதவி செய்வதற்கும்தான் ஞானப் பெற்றோர்கள்.
திருமுழுக்கின் போது இக்கடமையைச் செய்வதாக அவர்களும்
இறைவனுக்கு வாக்குறுதி கொடுக்கிறார்கள்.
சுருக்கமாக, திருச்சபையில்
உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காக
குழந்தைகள் திருமுழுக்கை திருச்சபை ஊக்குவிக்கதில்லை.
அப்படியொரு தேவையும் திருச்சபைக்கு இல்லை. பயனற்ற ஒன்றை
காலங்காலமாக திருச்சபை கடைபிடிக்க வேண்டிய நிர்ப்பந்தமும்
அதற்கு இல்லை.
திருச்சபை எதைச் செய்தாலும் அதில் ஓர் ஆழ்ந்த அர்த்தம்
இருக்கும். ஒருவேளை காலப்போக்கில் ஒரு சிலருக்கு அது
தெரியாமல் போயிருக்கலாம். அதனாலேயே திருச்சபையின் செயலும்
நடைமுறையும் தவறாகி விடாது. குழந்தைகள் உடலளவிலும்
அறிவிலும் மேன்மேலும் வளரும் போது, கூடவே விசுவாசத்திலும்
ஆன்மீகத்திலும் இயல்பாகவே அவர்கள் வளர வேண்டும் என்பதற்காக,
சாதாரண நடைமுறை வாழ்க்கையை அடிப்படையாக வைத்தே
திருச்சபையானது குழந்தைகள் திருமுழுக்கை ஊக்குவிக்கிறது.
யோவானின் திருமுழுக்கை முன்னுதாரணமாக கொள்ள வேண்டிய
தேவையில்லை. அது வேறு, நாம் பெறும் திருமுழுக்கு வேறு.
கிறிஸ்தவ திருமுழுக்கின் அடிப்படையையும் அதன் உள்ளார்ந்த
அர்த்தத்தையும் புரிந்து கொள்ளாதவர்களே, குழந்தை
திருமுழுக்கு தவறு என்றும் முழுக்கு ஞானஸ்நானம்
பெற்றால்தான் இரட்சணியம் என்று வாதிடுவார்கள்.
|
|