Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      29  நவெம்பர் 2017  
                                                   பொதுக்காலம் 34ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
மனித கைவிரல்கள் தோன்றி எழுதத் தொடங்கின.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 5: 1-6, 13-14, 16-17, 23-28

அந்நாள்களில் பெல்சாட்சர் என்ற அரசன் உயர்குடி மக்கள் ஆயிரம் பேருக்குப் பெரியதொரு விருந்து வைத்தான்; அந்த ஆயிரம் பேருடன் அவனும் திராட்சை மது குடித்தான். அவ்வாறு குடித்துக்கொண்டிருந்தபொழுது, அரசன் தானும் தன் மனைவியரும் வைப்பாட்டிகளும் குடிப்பதற்கென்று, தன் தந்தையாகிய நெபுகத்னேசர் எருசலேம் திருக்கோவிலிலிருந்து கொண்டு வந்திருந்த பொன், வெள்ளிக் கிண்ணங்களைக் கொண்டுவரச் சொன்னான்.

அதன்படி, எருசலேமிலிருந்த கடவுளின் கோவிலிலிருந்து கொண்டு வந்த பொன் கிண்ணங்களை எடுத்து வந்தார்கள்; அரசனும் அவனுடைய உயர்குடி மக்களும், அவனுடைய மனைவியரும், வைப்பாட்டியரும் அந்தக் கிண்ணங்களிலிருந்து குடித்தார்கள். அவர்கள் திராட்சை மது குடித்துக் கொண்டே பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தங்கள் தெய்வங்களைப் புகழ்ந்தார்கள். திடீரென்று ஒரு மனிதனுடைய கைவிரல்கள் தோன்றி அரசனது அரண்மனை உட்சுவரில் விளக்குத் தூணுக்கு எதிரே எழுதத் தொடங்கின. அவ்வாறு எழுதும்போது அரசன் அந்த உள்ளங்கையைப் பார்த்தான். அதைக் கண்டு அரசன் முகம் கறுத்து, நெஞ்சம் கலங்கி, குலைநடுங்கி, தொடை நடுக்கமுற்றான். இதற்கு விளக்கம் அளிக்குமாறு, அரசன் முன்னிலைக்குத் தானியேல் அழைத்து வரப்பட்டார்.

அரசன் அவரைப் பார்த்து, "என் தந்தையாகிய அரசன் யூதாவிலிருந்து சிறைப்பிடித்து வந்தவர்களுள் ஒருவனாகிய தானியேல் என்பவன் நீதானே? உன்னிடத்தில் புனிதமிகு கடவுளின் ஆவியும் அறிவொளியும் நுண்ணறிவும் சிறந்த ஞானமும் உண்டென உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். விளக்கங்கள் கூறவும் சிக்கல்களைத் தீர்க்கவும் உன்னால் முடியும் எனக் கேள்விப்படுகிறேன்.

இப்பொழுது நீ இந்தச் சொற்களைப் படித்து இவற்றின் உட்பொருளை விளக்கினால், உனக்கு அரச உடை உடுத்தி, கழுத்தில் பொன் மாலை அணிவித்து, என் அரசில் மூன்றாம் நிலையில் உன்னை அமர்த்துவேன்'' என்றான்.

அப்பொழுது அரசனுக்குத் தானியேல் மறுமொழியாகக் கூறியது: "உம்முடைய அன்பளிப்புகள் உம்மிடமே இருக்கட்டும்; உம் பரிசுகளை வேறு யாருக்காவது கொடும். ஆயினும், இந்தச் சொற்களை அரசருக்குப் படித்துக் காட்டி அவற்றின் உட்பொருளை விளக்கிக் கூறுவேன்.

விண்ணுலக ஆண்டவருக்கு எதிராக உம்மையே உயர்த்தினீர்; அவரது கோவிலின் கிண்ணங்களைக் கொண்டு வரச் செய்து, நீரும் உம் உயர்குடி மக்களும், உம்முடைய மனைவியரும், வைப்பாட்டியரும் அவற்றிலிருந்து திராட்சை மது குடித்தீர்கள்; மேலும் காணவோ, கேட்கவோ, எதையும் உணரவோ இயலாத வெள்ளி, பொன், வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தெய்வங்களைப் புகழ்ந்தீர்கள். ஆனால் உமது உயிரையும் உம் வழிகளையும் தம் கைக்குள் வைத்திருக்கும் கடவுளை நீர் பெருமைப்படுத்தவில்லை. ஆகையால் அவர் இந்தக் கையைத் தம் திருமுன்னின்று அனுப்பி, இந்த எழுத்துக்களைப் பொறிக்கச் செய்தார்.''

பொறிக்கப்பட்ட சொற்களாவன: "மேனே மேனே, தேகேல், பார்சின்'' இவற்றின் உட்பொருள்: "மேனே: கடவுள் உமது அரசின் நாள்களை எண்ணி வரையறுத்து அதனை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார். தேகேல்: நீர் தராசில் நிறுக்கப்பட்டீர்; எடையில் மிகவும் குறைந்துள்ளீர். பார்சின்: உமது அரசு பிரிக்கப்பட்டு மேதியருக்கும் பாரசீகருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல்தானி (இ) 1: 39-40. 41-42. 43-44 (பல்லவி: 39b)
=================================================================================
பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.

39 கதிரவனே, நிலவே, ஆண்டவரை வாழ்த்துங்கள். 40 விண்மீன்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

41 மழையே, பனியே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்; 42 காற்று வகைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

43 நெருப்பே, வெப்பமே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 44 நடுக்கும் குளிரே, கடும் வெயிலே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திவெ 2: 10

அல்லேலூயா, அல்லேலூயா! இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக் கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.

அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரிகள் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.

ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.

நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்"

சில ஆண்டுகளுக்கு முன்பாக "Christian Digest" என்ற ஆங்கில மாத இதழில் வந்த ஒரு நிகழ்வு.

ஆப்ரிக்க தேசத்தில் மறைபோதகப் பணி செய்து, அங்கே ஆண்டவர் இயேசுவுக்காக தன்னுடைய இன்னுயிரைத் துறந்தவர் டேவிட் லிவிங்ஸ்டன் என்பவர். டேவிட் லிவிங்ஸ்டனின் இறந்த உடலானது அவருடைய சொந்த ஊருக்கு இறுதி அஞ்சலி செலுத்துப்படக் கொண்டுவரப்பட்டது. அப்போது அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கணக்கான மக்கள் அங்கு கூடி வந்தார்கள்.

இறுதி அஞ்சலில் செலுத்தவந்தவர்களில்  இருந்த பெரியவர் ஒருவர் மிகவும் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தார். அவருக்கு அருகில் இருந்தவரில் ஒருவர் அவரிடம், "டேவிட் லிவிங்ஸ்டனுக்காக இப்படி அழுகுகிறீரே, இதற்கு முன்னதாக அவரைப் பற்றி உமக்கு தெரியுமா?" என்று கேட்டார். அதற்கு அந்தப் பெரியவர், "ஆம். அவரைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நானும் அவரும் வகுப்புத் தோழர்கள். ஒருமுறை அவர்தான் என்னிடம், "நாம் இருவரும் ஆப்ரிக்காவிற்கு சென்று, அங்கே ஆண்டவர் இயேசுவுவைப் பற்றிய நற்செய்தி அறிவித்து, அவருக்காக  மறைசாட்சியாக உயிர் துறப்போம் என்று சொன்னார். நானோ என்னால் வரமுடியாது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், மறைசாட்சியாக உயிர் துறக்கவேண்டும் என்னும் அவருடைய எண்ணத்தைக் கேலிசெய்தேன். இன்றைக்கு உலகமே அவர் ஆண்டவர் இயேசுவுக்காக மறைசாட்சியாக உயிர்துறந்ததை நினைத்துப் பெருமைப் படுக்கின்றது. எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லையே என்று நினைத்து நான் அழுதுகொண்டிருக்கின்றேன்" என்றார்.

ஆண்டவர் இயேசுவுக்காக மறைசாட்சியாக உயிர்துறக்கின்ற பாக்கியம் எல்லாருக்கும் கிடைத்துவிடுவதில்லை. அது டேவிட் லிவிங்ஸ்டனுக்குக் கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம்தான்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னைப் பின்தொடர்ந்து நடக்கின்றவர்கள் இறுதி நாட்களில் எத்தகைய துன்பத்திற்கு உள்ளாவார்கள் என்று எடுத்துக் கூறுகின்றார். "அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள். என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடம் இழுத்துச் செல்வார்கள், எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்" என்கிறார் இயேசு.

இயேசு தன்னுடைய சீடர்களுக்குக் கூறுகின்ற இவ்வார்த்தைகளிலிருந்து ஒருசில உண்மைகளை அறிந்துகொள்ளலாம். அதில் முதலாவது, ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளில் பொய்யான வாக்குறுதிகள் இல்லை; எதார்த்தமே இருக்கின்றது என்பதாகும். இன்றைக்கு நிறையத் தலைவர்கள் அது ஆன்மீகத் தலைவர்களாக இருக்கட்டும், அரசியல்கள் தலைவர்களாக இருக்கட்டும். அவர்கள் பொய்யான, போலியான வாக்குறுதிகளை அள்ளிவிடுகின்றார்கள். தங்களிடத்தில்  வந்தால் துன்மில்லை, சந்தோசம் மட்டுமே இருக்கும்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்பது போன்ற வாக்குறுதிகளே அவர்களுடைய வார்த்தைகளில் இருக்கின்றன. இவையெல்லாம் உண்மையா, இவற்றையெல்லாம் அவர்கள் நிறைவேற்றித் தருவார்களா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

ஆண்டவர் இயேசு அப்படியில்லை. அவர் தன்னைப் பின்பற்றி  வரக்கூடியவர்கள் எத்தகைய துன்பத்தையும், சவால்களையும் சந்திக்கவேண்டும் என்ற எதார்த்தத்தை எடுத்துச் சொல்கின்றார். மருந்து, மாத்திரைகள் கசப்பாக இருந்தாலும், அது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருவதுபோல, இயேசுவின் வார்த்தைகள் சற்று பயமுறுத்துவதாக இருந்தாலும், அதன்படி நடக்கின்றபோது நிலையான மகிழ்ச்சி கிடைக்கும் என்பது உறுதி.

நற்செய்தி வாசகத்தின் வழியாக இயேசு நமக்கு வெளிப்படுத்தக்கூடிய இரண்டாவது உண்மை. துன்பத்தை நாம் தனியாளாய் சந்திக்கப் போவதில்லை, துன்ப நேரத்தில் இறைவனின் துணை நமக்கு எப்போதும் நமக்கு இருக்கும் என்பதாகும். ஆளுநரிடமும் அரசரிடமும் இழுத்துச் செல்லப்படும்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்படவேண்டாம். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞாத்தையும் கொடுப்பேன்" என்கிறார் இயேசு. ஆம், இது முற்றிலும் உண்மை. திருத்தூதர்களின் தலைவரான பேதுருவின் வாழ்விலும் இதுவெல்லாம் நடந்தது என்று திருவிலியம் நமக்குச் சான்று பகர்கின்றது. ஆகவே, ஆண்டவருடைய பணியைச் செய்யக்கூடிய ஒவ்வொருவரையும் ஆண்டவர் ஒருபோதும் கைவிட்டுவிடமாட்டார்; அவர்களை தன்னுடைய திருக்கரத்தில் தாங்குவார் என்ற உண்மையை உணர்ந்துகொள்ளவேண்டும்.

நிறைவாக, ஆண்டவரின் பணியாளருக்கு ஒன்றும் நேராது என்ற வாக்குறுதியையும் தருகின்றார். "இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்" என்ற இயேசுவின் வார்த்தைகள் அதைத் தான் நினைவுபடுத்துகின்றன.

ஆகவே, இயேசுவின் சீடர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கும் நாம், சீடத்துவ வாழ்வில் எதிர்வரும் சவால்களை ஆண்டவர் இயேசு நம்முடன் இருக்கின்றார் என்ற உறுதியான மனநிலையோடு எதிர்கொள்வோம், இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!