Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     24 மார்ச் 2018  
                                               * பொதுக்காலம் ஆண்டின் 8ம் ஞாயிறு* - 3ம் ஆண்டு
     
=================================================================================
முதல் வாசகம்

=================================================================================
பேசுவதற்கு முன்பே மனிதரைப் புகழாதே.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 27: 4-7

சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது; அவ்வாறே மனிதரின் பேச்சில் மாசு படிந்துவிடுகின்றது. குயவரின் கலன்களை, சூளை பரிசோதிக்கின்றது; மனிதரை, உரையாடல் பரிசோதிக்கின்றது.

கனி, மரத்தின் கண்காணிப்பைக் காட்டுகின்றது; சொல், மனிதரின் உள்ளப் பண்பாட்டைக் காட்டுகின்றது. ஒருவர் பேசுவதற்கு முன்பே அவரைப் புகழாதே; பேச்சைக்கொண்டே அவரை அறிந்து கொள்ளலாம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 92: 1-2. 12-13. 14-15 (பல்லவி: 1a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று.

1 ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று. 2 காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று. பல்லவி

12 நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர். 13 ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். பல்லவி

14 அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்; 15 'ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை' என்று அறிவிப்பர். பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 இயேசுவின் வழியாக வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 54-58

சகோதரர் சகோதரிகளே, அழிவுக்குரியது அழியாமையையும், சாவுக்குரியது சாகாமையையும் அணிந்து கொள்ளும்போது மறைநூலில் எழுதியுள்ள வாக்கு நிறைவேறும்: "சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே?"

பாவமே சாவின் கொடுக்கு. பாவத்துக்கு வலிமை தருவது திருச்சட்டமே.

ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!

எனவே என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, உறுதியோடு இருங்கள்; நிலையாய் நில்லுங்கள்.

ஆண்டவருக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
பிலி 2: 15-16

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 39-45

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்கு உவமையாகக் கூறியது: "பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவர் அல்லவா?

சீடர் குருவைவிட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போல் இருப்பர்.

நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்?

உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்துகொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், `உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?' என்று எப்படிக் கேட்க முடியும்?

வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.

கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும்.

ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை.

நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
(சீராக் 27: 4-7; 1கொரிந்தியர் 15: 54-58; லூக்கா 6: 39-45)

குறைகளையல்ல, நிறைகளைப் பார்க்கப் பழகுவோம்


நிகழ்வு

பெருநகர் ஒன்றில் நட்சத்திர உணவங்கள் இரண்டு எதிரெதிரே அமைந்திருந்தன. ஒருநாள் ஒரு நட்சத்திர உணவகத்தின் உரிமையாளர், தன்னுடைய உணவகத்திற்கு எதிரிலுள்ள உணவகத்தின் வெளித்தோற்றத்தை, தன் அறையின் கண்ணாடி வழியே கண்டு, "இந்த உணவகத்தில்தான் எவ்வளவு அழுக்கு!... எவ்வளவு ஒட்டடை!... எப்படித்தான் இங்கு மக்கள் வருகிறார்களோ!..." என்று விமர்சிக்கத் தொடங்கினார். இது பல நாட்களாகத் தொடர்ந்து கொண்டிருந்தது.

ஒருநாள் காலை, வழக்கம்போல் அவர் கண்ணாடி வழியே பார்த்தபோது, எதிரே இருந்த உணவகம் தூய்மை ஒளிவீசியதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். விசாரித்தபோதுதான் விவரம் புரிந்தது, எதிரிலுள்ள உணவகத்தின் கண்ணாடியல்ல, தன்னுடைய உணவகத்தின் கண்ணாடி தான் அழுகாகவும் ஒட்டடை படிந்தும் இருந்தது என்று. உடனே அவர், 'அழுக்கையும் ஒட்டடையையும் தன் அறைக் கண்ணாடியில் வைத்துக்கொண்டு, அடுத்தவருடைய கட்டிடத்தில் இருந்ததாக இத்தனைநாளும் குறைபட்டுக் கொண்டோமே' என்று தன்னை நொந்து கொண்டார்.

தன்னிடம் குறை வைத்துக்கொண்டு, அடுத்தவரிடம் குறைகாணும் இதுபோன்ற மனிதர்கள் நம்மில்தான் ஏராளம். பொதுக்காலம் எட்டாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று, நாம் படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம் நமக்குத் தருகின்ற மேலான அழைப்பு, 'குறைகளை அல்ல, நிறைகளைப் பார்க்கப் பழகுவோம்' என்பதாகும். எனவே, நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.


குறைகாணும் உலகம்


நாம் வாழும் இவ்வுலகில் எதற்கெடுத்தாலும் குறைக்காணும் மனிதர்கள் ஏராளம்... நாமும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. மனிதர்களிடம் இருக்கும் இந்த 'அரியவகை' நோய்க்கு மிக முக்கியமான காரணம், தன்னை நேர்மையாளர்கள் போலும் அடுத்தவரைக் குற்றவாளிகள் போலும் பார்க்கின்ற மனநிலைதான். இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த பரிசேயர்களிடம் இத்தகைய மனநிலைதான் இருந்தது. இதனால்தான் அவர்கள் எதற்கெடுத்தாலும் இயேசுவிடம் குற்றம் கண்டார்கள். இயேசுவும் தனக்கு வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் அவர்களை மிகக் கடுமையாகச் சாடினார் (லூக் 18:9).

மனிதர்களிடம் காணப்படுகின்ற இந்த அரியவகை நோய்க்கு குறைகாணும் போக்கிற்கு இரண்டாவது மிக முக்கியமான காரணம், தன்னிடம் உள்ள குறைகளை மூடி மறைக்கவேண்டும்... அதற்காக அவர்கள் அடுத்தவரிடம் உள்ள குறைகளை பெரிது படுத்துகிறார்கள். உளவியலில் இத்தகைய போக்கை Projection என்று அழைக்கிறார்கள்.

பலருக்குத் தங்களுடைய தவறுகள் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயம். அதனால்தான் அவர்கள் அடுத்தவரிடம் இருக்கின்ற சிறு சிறு குறைகளை அல்லது அடுத்தவர் செய்கின்ற சிறு சிறு தவறுகளைப் பெரிதுபடுத்துகிறார்கள். இரண்டு மனிதர்களுக்கிடையே பிரச்சினை வெடிக்கின்றபோது இதனை நன்றாகக் காணலாம். ஒருவர் தன்னுடைய தவறு வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக அடுத்தவர் செய்த தவறைப் புட்டுப்புட்டு வைப்பார். பதிலுக்கு அவர், அவருடைய தவறு வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதகாக இவருடைய தவறைப் புட்டுப்புட்டு வைப்பார். இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் தவறுகளைப் பெரிதுபடுத்திக் கொண்டிருந்தால், இந்த உலகத்தில் யாரும் மிஞ்ச மாட்டார்கள் என்பதுதான் வேதனை கலந்த உண்மை.


பிறரைத் திருத்துவதற்கு முன்பு தன்னைத் திருத்துவது நல்லது


இன்றைக்குப் பெரும்பாலோருக்கு அடுத்தவருடைய தவறுகள்தான் அவர்களுடைய கண்களுக்குத் தென்படுகின்றன. அவர்களுடைய தவறுகள் அவர்களுக்குத் தென்படுவதுமில்லை, அதைக் குறித்து அவர்கள் கவலைப்பட்டுக் கொள்வதுமில்லை. இப்படி அடுத்தவர்களுடைய தவறுகளைப் பெரிதுபடுத்தியும் தங்களிடம் உள்ள தவறுகளைக் கண்டும் காணாமல் இருப்பவர்களைப் பார்த்துத்தான் நற்செய்தியில் இயேசு, "முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்" என்கின்றார்.
மரக்கட்டையானது அளவில் பெரியது. அந்தளவுக்குத் தவறு செய்த ஒருவர், துரும்பளவுக்கு சிறு தவறு செய்த ஒருவரைப் பார்த்து, உன்னிடம் உள்ள தவற்றைத் திருத்திக்கொள் என்று சொல்வது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவேளை பெரியளவுக்குத் தவறுசெய்த ஒருவர், தான் செய்த தவற்றையெல்லாம் திருத்திக்கொண்டு, அடுத்தவரிடம் உள்ள தவற்றைச் சுட்டிக்காட்டினால் அது ஏற்புடையதாக இருக்கும். அப்படியில்லாத பட்சத்தில் தன்னிடம் தவறு வைத்திருக்கும் ஒருவர், இன்னொருவருடைய தவறைச் சுட்டிக்காட்டுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று அல்ல.

விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசுவிடம் இழுத்துக்கொண்டு வந்து, அவருக்குத் தீர்ப்பளிக்கவேண்டும் என்று சொன்னவர்களைப் பார்த்து, அவர், "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண் மேல் எறியட்டும்" என்றுதான் சொல்கிறார் (யோவா 8:7) ஆகையால், தவறு இல்லாத அல்லது தவற்றைத் திருத்திக்கொண்ட ஒருவர்தான் இன்னொருவருடைய தவறைத் திருத்திக்கொள்ளச் சொல்ல முடியும். ஆனால், இப்படியோர் மனிதரை இந்த உலகத்தில் காண்பது அரிதிலும் அரிதான ஒரு செயலாகும்.


கனிந்த இதயத்தோடு திருத்துவது நல்லது


தவறு செய்யாத அல்லது தன்னிடம் உள்ள தவற்றைத் திருத்திய பின்பு, ஒருவர் அடுத்தவரிடம் உள்ள தவற்றைத் திருத்த முயற்சிப்பது நல்லது என்று மேலே பார்த்தோம். அது அவ்வளவு சுலபம் இல்லை என்பதால், இதையொட்டி பவுலடியார் கூறுகின்ற ஒரு கருத்தினை நம்முடைய கருத்தில் எடுத்துக்கொண்டு, அதனை நம்முடைய வாழ்வினில் செயல்படுத்த முயற்சி செய்வோம்.

தூய பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுகின்றார், "சகோதர, சகோதரிகளே, ஒருவர் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டுக்கொண்டால், தூய ஆவியைப் பெற்றிருக்கும் நீங்கள் கனிந்த உள்ளத்தோடு அவரைத் திருத்துங்கள்," (கலா 6:1). பவுலடியாரின் இக்கூற்று நம்முடைய ஆழமான சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. கனிந்த இதயத்தோடு ஒருவரைத் திருத்த முயற்சித்தால், அவரிடம் இருக்கின்ற குற்றங்கள் நமக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. மாறாக, நம்மிடம் உள்ள கரிசனையும் அன்பும்தான் வெளிப்படும். பழிவாங்கத் துடிக்கும் ஒருவர்தான் தவறு செய்தவரைத் திருத்துகிறேன் என்ற பெயரில் அவரை வீழ்த்தவோ அல்லது மட்டும் தட்டவோ முயற்சி செய்வார். ஆனால், தூய பவுல் சொல்வது போல் கனிந்த இதயத்தோடு தவறு செய்த ஒருவரைத் திருத்த முயற்சித்தால் வளர்ச்சிக்குரிய காரியங்கள்தான் நடந்தேறுமே ஒழிய அடுத்தவரை மட்டப்படுத்துவதற்கான காரியங்கள் நடக்காது.

தவறிழைக்கும் ஒருவரை கனிந்த இதயத்தோடு திருத்துவது சிறந்ததொரு வழிமுறை என்று சிந்தித்துப் பார்த்தோம். ஆனால், இதைவிடவும் சிறந்தொரு ஒரு வழிமுறை இருக்கின்றது, அதுதான் அல்லவைகளை அல்ல, நல்லவைகளைப் பார்க்கும் மனநிலை. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஒருவரிடம் இருக்கும் குறைகளைப் பார்க்காமல், நிறைகளை பார்க்கப் பழகினால் குறைகாணும் அரியவகை நோய் நம்மிடம் இல்லாமலே போய்விடும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

சிந்தனை

'நல்லவை பெருகினால் அல்லவை தானாய் மறையும்' என்பது மூத்தோர் வாக்கு. இதன்படி, நாம் நம்மிடம் நல்லவற்றைப் பாக்கும் நல்ல மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு, குறைகாணும் மனப்பான்மையை விட்டொழித்து, இறைவனுக்கு உகந்த அன்பு வழியில் நடப்போம்.அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
I. சீராக்கின் ஞானம் 27:4-7 II. 1 கொரிந்தியர் 15:54-56 III. லூக்கா 6:39-45

நற்கனிகள் அறிதலும் தருதலும்

ஆர்எம்எஸ் டைட்டானிக் என்ற ஆடம்பரப் பயணிகள் கப்பல் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். 'கடவுளால் கூட இக்கப்பலைக் கவிழ்க்க முடியாது' என்று விளம்பரம் செய்யப்பட்டு, 1912ல் தன் முதல் சேவையைத் துவக்கியது இக்கப்பல். உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பலும் இதுவே. இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு நியுயார்க் நகர் நோக்கிச் சென்ற இக்கப்பல் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் இரவு வட அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றின் மேல் மோதி, மோதிய 3 மணி நேரங்களில் முழுவதுமாகக் கடலில் மூழ்கியது. கப்பலின் கேப்டன் எவ்வளவோ முயன்றும் கப்பலைப் பனிப்பாறையின்மேல் மோதவிடாமல் தடுக்க முடியவில்லை என்பதுதான் சோகம். கடலில் தெரிந்த பனிப்பாறை கடலுக்கு மேல் நீட்டிக்கொண்டிருந்த அளவை மட்டும் வைத்து பனிப்பாறையின் கனத்தை குறைவாக மதிப்பிட்டதால்தான் இந்த ஆபத்து நேரிட்டது. வெறும் 5 சதவிகத பனிப்பாறை மட்டுமே கடலின் மேற்புரத்தில் தெரிய மீதி 95 சதவிகிதம் கடலுக்கு அடியில் மூழ்கி மிதந்துகொண்டிருக்கும். வெளியில் தெரியும் சிறு பகுதியை மட்டும் வைத்து ஒட்டுமொத்த பனிப்பாறையின் அளவை ஊகிப்பது தவறு. அதே வேளையில், பனிப்பாறையின் இருப்பை இந்த நுனிப்பகுதி காட்டுகிறது என்பதை அறியாமல் அதன் இருப்பைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தவறு.

இன்னொரு உருவகம். நம் தோட்டத்தில் இருக்கின்ற ஒரு மாமரம். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாம்பழங்கள் பழுத்துத் தொங்குகின்றன என வைத்துக்கொள்வோம். மாம்பழம் என்ற கனியை மரத்தின் மற்ற பகுதிகளான கிளை, தண்டு, வேர் ஆகியவற்றோடு ஒப்பிட்டால் கனியின் அமைப்பும் அளவும் மிகவும் சிறியது. ஆனால், அச்சிறிய கனியைக் கொண்டே நாம் அந்த மரத்தின் இயல்பைச் சொல்லிவிடலாம். அது இனிமையான கனி கொடுக்கும் மரமா அல்லது புளிக்கும் கனி கொடுக்கும் மரமா என்பதை நாம் சொல்வதற்கு அதன் கனியை மட்டுமே எடுத்துக்கொள்கிறோம். யாரும் மரத்தின் இலை அல்லது தண்டைச் சாப்பிட்டுவிட்டு மரத்தை ஆய்வு செய்வதில்லை. கனி என்ற மரத்தின் சிறிய நீட்சி ஒட்டுமொத்த மரத்தின் இயல்பைச் சுட்டிக்காட்டுகிறது.

பனிப்பாறையின் நுனி மற்றும் மரத்தின் கனி இவை இரண்டிற்கும் இன்றைய இறைவாக்கு வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு? வெறும் நுனியைக் கண்டு மொத்தத்தையும் அளந்துவிடாதே என எச்சரிக்கிறது இன்றைய முதல் வாசகம். வெறும் கனியைக் கண்டு ஒரு மரத்தின் இயல்பை அளவிடு என அறிவுறுத்துகிறது இன்றைய நற்செய்தி வாசகம். மறைந்திருக்கும் நல் இயல்பு வெளியில் தெரியும் பேச்சிலும் செயலிலும் வெளிப்படுகிறது. நல்ல இயல்பிலிருந்தே நல்ல சொற்களும், நற்செயல்களும் வெளிவர முடியும்.

எப்படி?

இன்றைய முதல் வாசகம் (காண். சீஞா 27:4-7) இஸ்ரயேலின் பிந்தைய ஞானத் தொகுப்பான சீராக்கின் ஞானத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஞானம் என்பது கடவுளின் கட்டளைகளுக்கும், நியமங்களுக்கும் கீழ்ப்படிவதன் கொடை எனப் பொதுவாக அறியப்பட்டாலும், ஞானம் மனித வாழ்வின் அன்றாட அறநெறி மற்றும் வாழ்வியல் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகவே அமைகிறது. உருவகங்கள், பழமொழிகள் என காணக்கூடிய ஒன்றிலிருந்து காண இயலாத மதிப்பீடுகளுக்கு மக்களை அழைத்துச் சென்றனர் ஞானியர். இவ்வகையில் ஏறக்குறைய கி.மு. 200ல் யேசு பென் எலயேசர் பென் சீராக் (காண். சீஞா 50:27) என்பவரால் எழுதப்பட்ட சீராக்கின் ஞானநூல் பல ஞானக் கோர்வைகளைப் பல்வேறு தலைப்புக்களில் தாங்கி நிற்கிறது. இஸ்ரயேல் மக்களின் சட்டநூல்கள் என்றழைக்கப்படுகின்ற முதல் ஐந்நூல்களில் உள்ள கருத்துக்களை எடுத்து அக்கருத்துக்களை அன்றாட வாழ்வில் செயல்முறைப்படுத்தும் வழிமுறைகளைத் தருகிறார் ஆசிரியர்.

அவ்வகையில் ஒரு மனிதரின் மறைந்திருக்கும் குணம் அல்லது இயல்பு எப்படி வெளிப்படும் என்பதை இரண்டு பழமொழிகள் வழியாக விளக்குகிறார் ஆசிரியர். முதல் பழமொழி: 'சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது. அவ்வாறே, மனிதரின் பேச்சில் மாசுபடிந்து விடுகின்றது.' அதாவது, சலிக்கின்ற போது சல்லடையில் மேலே தங்குகின்ற உமி, அந்த அரிசியில் இவ்வளவு மாசு இருந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உமி குறைவாக இருந்தால் அரிசி கலப்படமற்றது என அறிகிறோம். அதுபோல, ஒரு மனிதர் பேசும்போது அவரிடம் எவ்வளவு மாசு இருக்கிறது என்பதை அவரிடமிருந்து வெளியே வரும் வார்த்தைகள் காட்டிவிடுகின்றன. ஆக, பேச்சும் மாசுள்ளதாக இருக்கலாம். பேசுபவரின் உள்ளமும் மாசுள்ளதாக இருக்கலாம். எனவே, வார்த்தைகளைப் பற்றிய அக்கறையும், வார்த்தை வெளிவரும் உள்ளம் பற்றிய அக்கறையும் அவசியம். இரண்டாவது பழமொழி: 'குயவரின் கலன்களை சூளை பரிசோதிக்கிறது. மனிதரை உரையாடல் பரிசோதிக்கிறது.' மண்பானை செய்கின்ற குயவன் எப்படிப்பட்ட மண்ணைப் பயன்படுத்தினான், எப்படிப் பிசைந்தான், எவ்வளவு நீர் ஊற்றினான், எப்படி சக்கரத்தில் சுற்றினான் என்னும் அவனுடைய கைப்பக்குவத்தை நெருப்பு பரிசோதிக்கும். அதுபோல, மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை அவனுடைய உரையாடலை வைத்து மற்றவர்கள் பரிசோதிப்பர். நெருப்பில் இடும் போது கீறல் விடாத பானை நல்ல பானை என அறியப்படுவது போல, ஒரு மனிதர் நல்லவர் என்பதை அவருடைய உரையாடல் வழியாக நாம் கண்டுகொள்கிறோம். தொடர்ந்து, 'ஒருவர் பேசுவதற்கு முன்பே அவரைப் புகழாதே. பேச்சைக் கொண்டே அவரை அறிந்துகொள்ளலாம்' என எச்சரிக்கிறார் ஆசிரியர். ஒருவனுடைய உரையாடலைக் கேட்குமுன்பே, அவனுடைய வெளி அலங்காரத்தை வைத்து அவனைப் புகழ வேண்டாம் என்றும், பார்ப்பதற்கு பகட்டாக இருக்கும் அவன் பேசுவது மடமையாக இருக்கலாம் என்பதும் இதன் பொருள்.

ஆக, ஒருவரின் நாணயம், நற்குணம், நல்மதிப்பீடு ஆகியவை வெளிப்புற அடையாளங்களால் அறிந்துகொள்ளப்பட முடியாதவை. மாறாக, அவர் பேசும் சொற்கள் அவருடைய மூளையின், உள்ளத்தின் நீட்சியாக இருக்க, அவற்றை வைத்து நாம் அவரின் நாணயத்தையும், நற்குணத்தையும், நல்மதிப்பீட்டையும் அறிந்துகொள்ளலாம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 15:54-58) இறந்தோர் உயிர்ப்பு பற்றிய பவுலின் வாதம் நிறைவுக்கு வருகிறது. எசா 25:8 மற்றும் ஆமோ 13:14 என்னும் இறைவாக்குகளின் பின்புலத்தில், 'சாவு முற்றிலும் ஒழிந்தது. வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே?' என்று அக்களிக்கிறார் பவுல். பவுலின் பார்வையில் கிறிஸ்துவின் உயிர்ப்பு இறந்தோர் அனைவருக்கும் கிடைத்த கொடை. ஏனெனில், கிறிஸ்துவில் இறந்தோர் அனைவரும் கிறிஸ்துவில் உயிர்ப்பர். கிறிஸ்துவின் உயிர்ப்பு நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் இறவாமையைப் பெற்றுத் தருகிறது. தொடர்ந்து பவுல், 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி' என்கிறார்.

இதன் பின்புலத்தில் உயிர்ப்பு பற்றிய உரையை நிறைவு செய்கிற பவுல், நிறைவாக கொரிந்து நகரச் சபைக்கு அறிவுரையும் வழங்குகின்றார்: 'உறுதியோடு இருங்கள். நிலையாய் இருங்கள். ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.' நாம் இறந்தவுடன்தான் எல்லாம் ஒன்றிமில்லாமல் போய்விடுகிறதே. அப்புறம் எதற்கு உழைக்க வேண்டும்? எனச் சிலர் கேள்வி எழுப்பியதன் பின்புலத்தில், 'நீங்கள் உழைப்பது வீண்போகாது' என்கிறார் பவுல். ஆக, இவ்வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் உயிர்ப்பின் கனிகளாகக் கனிகின்றன. இச்செயல்களை நிறுத்தும்போது நாம் கனிகளையும் நிறுத்துவிட வாய்ப்புண்டு. கனிகளைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து நம் வேலைகளைச் செய்ய வேண்டும்.

ஆக, இவ்வுலக வாழ்வு என்பது ஒரு மரம் போன்றது என்றால், அம்மரத்திற்காக நாம் செய்யும் உழைப்பு மறு உலகில் கனியாக நீளும். அக்கனிகள் இனிமையாக இருக்க வேண்டுமென்றால், நான் என் வாழ்க்கை என்ற மரத்தின் இயல்பை இனிமையானதாக தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக நான் உழைக்க வேண்டும். என் நம்பிக்கையில் உறுதியாகவும் நிலைத்தும் இருத்தல் வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 6:39-45) ஒருவரின் நாணயம், நற்குணம், மற்றும் நன்மதிப்பீடு எப்படி இருக்க வேண்டும் என்றும், அது எப்படி கனியாக சொல்லிலும் செயலிலும் வெளிப்பட வேண்டும் என்பதை மூன்று உருவகங்கள் வழியாகப் பதிவு செய்கிறது. முதலில், 'பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற மற்றவருக்கு வழிகாட்டுவது' - இது முதலில் சீடர்களுக்கான போதனையாக இருக்கிறது. இயேசுவின் சீடர்கள், மற்றவர்களுக்கு வழிகாட்டுவதற்கு முன்பாக, தாங்கள் முதலில் இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வது அவசியம். தங்களிலேயே நற்செயல் அல்லது நற்சொல் இல்லாத ஒருவர் அவற்றை மற்றவருக்குக் கொடுக்க முடியாது. இரண்டாவதாக, 'ஒருவர் தன் கண்ணில் இருக்கும் கட்டையைப் பார்க்காமல் மற்றவரின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கக் கைநீட்டுவது.' இதுவும், சீடர்கள் மத்தியில் இருந்த ஒரு பிரச்சினையாக இருந்திருக்கலாம். ஒவ்வொருவரும் தன் குறையைக் கண்டுகொள்ளாமல் அடுத்தவரின் குறையைப் பெரிதுபடுத்தியிருக்கலாம். இயேசு இந்த வெளிவேடத்தைக் கண்டித்து, தன் சீடர்கள் ஒவ்வொருவரும் தங்களையே தன்னாய்வு செய்து பார்க்க அழைக்கின்றார். இப்படித் தன்னாய்வு செய்யும்போது ஒருவர் தன் மதிப்பீடுகளை மறு ஆய்வு செய்ய முடியும். அப்படிச் செய்யாதபோது அவர் வளர முடியாமல் போய்விடும். மேலும், தன் கண்ணையே ஒரு கட்டை மறைப்பதால் அடுத்தவருக்கு உதவி செய்வது தொந்தரவிலும் முடியலாம். மூன்றாவதாக, 'கெட்ட கனி தரும் நல்ல மரமில்லை. நல்ல கனி தரும் கெட்ட மரமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும்.' ஒருவர் நீண்ட காலம் நடிக்கவும், ஏமாற்றவும் முடியாது. ஏனெனில், அவரின் செயல்களே அவரைக் காட்டிக்கொடுத்துவிடும் என எச்சரிக்கிறார் இயேசு. பொய்மை நீண்ட காலத்திற்கு உண்மை என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வலம் வர முடியாது. மேலும், 'உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்' என்று சொல்வதன் வழியாக ஒருவரை அவருடைய சொல் காட்டிக்கொடுத்துவிடும் என்கிறார் இயேசு.

இயேசுவின் இம்மூன்று உருவகங்களுமே சீடத்துவத்தை மையமாக வைத்திருக்கின்றன. இயேசுவின் சீடர் முழுமையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும், வெளிவேடமின்றி தன்னையே ஆய்வு செய்து பார்க்க வேண்டும், அடுத்தவருக்கு வழி காட்டுவதற்கு முன் தன்னையும், தன் வழியையும் அறிந்திருக்க வேண்டும், தன் வாழ்வில் உள்ள இரட்டைத்தன்மை அகற்ற வேண்டும்.
ஆக, ஒருவரின் உள்ளியல்பு அவரின் வழிகாட்டுதல், குற்றங்கடிதல், மற்றும் உரையாடுதல் ஆகியவற்றில் வெளிப்பட்டுவிடும் என்பதால் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

இவ்வாறாக, எளிய பழமொழிகள் மற்றும் உருவகங்கள் வழியாக சீராக்கும் இயேசுவும், 'ஒரு மனிதரின் உண்மையான குணம் அல்லது இயல்பும் அவரடைய உள்ளத்தின் பண்பாடும் அவரின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது' என்றும், பவுல், 'நல்ல செயல்கள் வழியாக உயிர்ப்பின் நற்கனிகளை அனுபவிக்க முடியம்' என்றும் நமக்கு அறிவுறுத்துகின்றனர்.

நாணயத்தின், நற்குணத்தின் நற்கனிகள் தருவது எப்படி?

1. நல்ல உளப்பாங்கு கொண்டிருத்தல்

ஆங்கிலத்தில், 'ஆட்டிட்யூட்' என்று சொல்கிறோம். இன்று, ஒருவரின் நேர்காணலில் அவரின் சொற்கள் மற்றும் செயல்களைவிட, இந்த 'ஆட்டிட்யூட்' தான் அதிகாக ஆய்வு செய்யப்படுகிறது. இன்றைய நற்செய்தி வாசகம் நான்கு வகை உளப்பாங்கை எடுத்துக்காட்டி, முதல் மூன்று வகை உளப்பாங்கை விட்டுவிடவும், நான்காவதைப் பற்றிக்கொள்ளவும் அழைக்கிறது. (அ) கெட்ட கனி தரும் மரம் - 'கெட்ட கனியால் யாருக்கும் பலன் இல்லை. கெட்ட கனிகள் விஷமாக மற்றவர்களைக் கொல்லும் ஆற்றல் பெற்றவை' இம்மரம் இயல்பிலேயே கெடுதல் செய்வதாக இருக்கிறது. இவ்வகை மரம் தீங்கையே உருவாக்குவதால், காலப்போக்கில் அதே தீங்கினால் தானும் அழிந்துவிடும். (ஆ) முட்செடிகள். முட்செடிகள் முள்கனிகளைத்தான் கொடுக்குமே தவிர அத்திப்பழங்களைக் கொடுக்காது. முட்செடிகள் போன்றவை அடுத்த மரங்களின் தண்ணீர் மற்றும் உரத்தை எடுத்துக்கொண்டாலும் இவைகள் தங்கள் இயல்பிலேயே தொடர்ந்து இருப்பவை. இவைகள், என்னதான் பசுமையாக, செழுமையாக இருந்தாலும் இவைகளின் அருகில் யார் சென்றாலும் இவை அவர்களைக் காயப்படுத்திவிடுகின்றன. (இ) முட்புதர் திராட்சைக் கனியை நாம் முட்புதரிலிருந்து பெற முடியாது. திராட்சை உயரமான பந்தலில் வளரக் கூடியவை. ஆனால், முட்புதரோ தரையோடு தரையாக மண்டிக் கிடந்து, விஷப்பூச்சிகள் தங்கும் இடமாக மாறிவிடும். புதருக்குள் மறைந்திருப்பது யாருக்கும் தெரியாது. இப்படிப்பட்ட உள்ளம் கொண்டவர்கள் தங்கள் எண்ணங்களை மிகவும் தாழ்வான எண்ணங்களாக வைத்துக்கொண்டு விஷம் தங்கும் இடமாக மாறிவிடுவர். மற்றும் (ஈ) நல்ல கருவூலம் - ஒவ்வொரு வீட்டின் பாதுகாப்பான இடம் கருவூலம். இங்கே மிகவும் மேன்மையானவற்றிற்கு மட்டுமே இடமுண்டு. நல்லவரின் உள்ளம் நல்ல கருவூலமாக இருக்கும். இதிலிருந்து வெளிப்படுபவை மதிப்பு மிக்கவையாகவும், மற்றவர்களுக்குப் பயன் தருவனவாகவும் இருக்கும். ஆக, என் உளப்பாங்கு நல்ல கருவூலமாக இருத்தல் வேண்டும்.

2. இனிய வார்த்தைகளைப் பேசுதல்

இனிய சொற்கள் பற்றிப் பேச அறிவுறுத்தும் வள்ளுவர், இனிய வார்த்தைகளைப் பேசாதவர்கள் நல்ல கனிகளை விட்டுவிட்டு கசக்கின்ற காய்களைப் பறித்துக்கொள்கிறார்கள் என்கிறார். பேச்சு ஒரு கொடை. அதே வேளையில் அது நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு. நம் வார்த்தைகளே நம் உலகத்தை உருவாக்குகின்றன. நம் பேச்சு நம்மைப் பல்லக்கிலும் ஏற்றும், பாழுங்கிணற்றிலும் தள்ளும். இன்று நாம் அரசியல் மற்றும் ஊடகங்களில் கேட்கின்ற வார்த்தைகள் வெறும் வார்த்தைகளே. அவற்றால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. அவ்வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் தொடர்பு இருப்பதில்லை. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பல வார்த்தைகள் வதந்திகளாகவும், பொய்களாகவும் இருக்கின்றன. இவற்றால் வீணான அச்சமும் குழப்பமும் உருவாகிறது. ஆனால், இவற்றிற்கு மாறாக நம் வார்த்தைகள் அடுத்தவரின் மேல் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளாக இருத்தல் வேண்டும். ஆக, பொறுப்புணர்வோடு நாம் வார்த்தைகளைக் கையாள வேண்டும்.

3. உன் வார்த்தையே நீ

'நீ அதிகமாக வெட்கம் அடைகிறாய். இந்த வெட்கத்திற்குக் காரணம் உன் பொய்மை. பொய் சொல்லாதே! அதிலும் உனக்கு நீயே பொய் சொல்லாதே. உனக்கு நீயே சொல்லும் பொய் உன்னைப் பெரிய தோல்விக்கு இட்டுச் செல்லும்' என்று இரஷ்ய எழுத்தாளர் டாஸ்டாய்வ்ஸ்கியும், 'நீ வெற்றி பெற வேண்டுமெனில் உனக்கு நீயே ஒரு போதும் பொய் சொல்லாதே' என்று பவுலோ கோயல்லோவும், 'உன் உள்ளத்தின் நிறைவே உன் பேச்சும்' என்று இயேசுவும் சொல்கின்றனர். நம்மிடம் உள்ள நாணயம் மற்றும் நன்மதிப்பீட்டின் நீட்சியாக நம் வார்த்தைகள் இருக்க வேண்டும். எனக்கு நான் கொடுக்கும் வாக்குறுதிகள் மற்றும் அடுத்தவருக்குக் கொடுக்கும் வாக்குறுதிகளில் நான் உண்மையோடு இருக்க வேண்டும். ஆகையால்தான், ஒளவையார், 'கற்பு என்பது சொல் திறம்பாமை' என்கிறார். சொல்லும், செயலும், என் இயல்பும் ஒன்றாக இருத்தலே கற்பு, தூய்மை. என் வார்த்தைகளே நானே நம்பவில்லை என்னும் நிலை வரும்போது, அடுத்தவர்கள் என் வார்த்தைகளை எப்படி நம்புவார்கள்?


வார்த்தையும் வாழ்வும், கனியும் மரமும், இயல்பும் வெளிப்பாடும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இதை அறிந்து செயல்படும் 'நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர். கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர் ... அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர். என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்' (திபா 92:12,14).

_________

- Fr. Yesu Karunanidhi, Faculty Member, Saint Paul's Seminary, Tiruchirappalli 620 001. +91 948 948 21 21. yesu@live.in


=================================================================================
திருப்பலி முன்னுரை
=================================================================================
நற்கனி கொடுக்கும் மரங்களாக வாழவும், இறைவனின் அருளால் நம் குறைகளை அறிந்து அவற்றைத் திருத்திக் கொள்ளவும் இன்றைய பொதுக்காலம் 08ஆம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்.

பேச்சைக் கொண்டே ஒருவரை அறிந்து கொள்ள முடியும் என்று நாவிற்கு உள்ள வலிமையையும், அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தினையும் சீராக்கின் ஞான ஆகமம் தெளிவுறுத்துகிறது. இரண்டு அங்குல நாக்கு, ஆறடி மனிதரை வாழ வைக்கவும் முடியும்; வீழ்த்தவும் முடியும். எனவே நாவினை சரியான முறையில் பயன்படுத்த அறிவுறுத்துகிறது சீராக்கின் ஞான ஆகமம்.

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.

என்கிறார் வள்ளுவர். நன்மையும் தீமையும் நாம் பேசும் சொற்களால் வருவதால், பேசும் சொற்களில் தவறு ஏதும் வராமல் காத்துக் கொள்ள வேண்டும் என்பது இதன் பொருள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், "ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும், உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்" என்று வார்த்தைகளும் நமது செயல்களும் இறைவன் விரும்பும் வகையில் இருக்க வேண்டும். நமது சொற்களும் செயல்களும் பிறருக்கு நன்மை தருவதாகவும், இனிமை தருவதாகவும் அமைய வேண்டும். பிறரிடம் காணப்படும் சிறு தவறுகளை மிகைப்படுத்திக் காணும் நம் கண்கள், நம் தவறுகளையும் நம்மை உறைந்தி கிடக்கும் குற்றங்களையும் பார்க்கத் தவறி விடுகிறது. இறைவன் ஒருவரைத் தவிர குறையின்றி நிறைவானவர் எவருமில்லை. மனிதருக்குரிய தவறுகளையும் பொறுத்துக் கொண்டு, அன்பால் அவற்றை ஆளுமை செய்வோம். இச்சிந்தனைகளோடு இப்பலியில் இணைவோம்.

மன்றாட்டுகள்

1. அன்பே உருவான எம் இறைவா!
எம் திருச்சபையை வழிநடத்தும் திரு அவைத் தலைவர்கள், பணியாளர்கள் அர்ப்பண வாழ்வில் அன்பை முதன்மையாகக் கொண்டு, நற்செய்தியை போதிக்கவும், அன்புப் பாதையில் மக்களை வழிநடத்தும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. நற்கனி கொடுக்க அழைப்பவரே எம் இறைவா!
எம் நாட்டை ஆளும் தலைவர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் ஆணவப் போக்கை கைவிட்டு, மக்களுக்கு நலம் தரும் திட்டங்களை, நேர்மையோடு செயல்படுத்தவும், அன்புப் பாதையை மக்களிடையே ஏற்படுத்தும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும் என்றவரே எம் இறைவா!
எம் வாய் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் நேர்மறையான விளைவுகளை எம்மிலும் பிறருக்குள்ளும் ஏற்படுத்தவும், குடும்பங்களில் பிள்ளைகள் வார்த்தைகளால் பெரியோருக்கு மரியாதை தரவும், இனிய வார்த்தைகளை பேசி உறவுகளைப் பேணிடும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. திடமளிக்கும் தெய்வமே எம் இறைவா!
எங்கள் பகுதியில் தேவையான கால சூழ்நிலை ஏற்பட்டு நீர் நிலைகள் பெருகவும், அடுத்தக்கட்ட விவசாயப் பணிகள் சிறப்பாகத் தொடரவும், தகுந்த இயற்கை சூழல் அமையவும், குடும்ப அமைதி, சந்தோஷம் நிறைந்திருக்கவும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நன்கு தேர்வு எழுதி சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளவும், இதயத்தின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படவும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!