Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     12 மே 2018  
                                           பாஸ்கா காலம் 4ஆம் ஞாயிறு - 3ம் ஆண்டு
     
=================================================================================
முதல் வாசகம்

=================================================================================
நாங்கள் பிற இனத்தாரிடம் செல்கிறோம்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 14, 43-52


அந்நாள்களில் பவுலும் பர்னபாவும் பெருகையிலிருந்து புறப்பட்டுச் சென்று பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவை அடைந்தார்கள். ஓய்வு நாளன்று அவர்கள் தொழுகைக்கூடத்திற்குச் சென்று அங்கு அமர்ந்திருந்தார்கள்.

தொழுகைக் கூடத்தில் இருந்தோர் கலைந்து சென்றபோது பல யூதர்களும் யூதம் தழுவிக் கடவுளை வழிபட்டவர்களும் பவுலையும் பர்னபாவையும் பின்தொடர்ந்தார்கள்.

இவ்விருவரும் அவர்களோடு பேசிக் கடவுளின் அருளில் நிலைத்திருக்கும்படி அவர்களைத் தூண்டினர்.

அடுத்து வந்த ஓய்வுநாளில் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய நகரத்தார் அனைவரும் கூடிவந்தனர்.

மக்கள் திரளைக் கண்ட யூதர்கள் பொறாமையால் நிறைந்து, பவுல் கூறியதை எதிர்த்துப் பேசி அவரைப் பழித்துரைத்தார்கள்.

பவுலும் பர்னபாவும் துணிவுடன், ``கடவுளின் வார்த்தையை உங்களுக்குத்தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதனை உதறித்தள்ளி நிலை வாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள். எனவே நாங்கள் பிற இனத்தாரிடம் செல்லுகிறோம். ஏனென்றால், `உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்' என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்'' என்று எடுத்துக் கூறினார்கள்.

இதைக் கேட்ட பிற இனத்தார் மகிழ்ச்சியடைந்தனர்; ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்தனர். நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட்டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர். அப்பகுதியெங்கும் ஆண்டவரின் வார்த்தை பரவியது.

ஆனால் யூதர்கள் கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய பெண்களையும் நகரின் முதன்மைக் குடிமக்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் இன்னலுக்குள்ளாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து துரத்திவிட்டார்கள். அவர்கள் தங்கள் கால்களில் படிந்திருந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிவிட்டு, இக்கோனியாவுக்குச் சென்றார்கள். சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 100: 1-2. 3. 5 (பல்லவி: 3c)
=================================================================================
பல்லவி: நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!

அல்லது: அல்லேலூயா.

1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! 2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! பல்லவி

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்; வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும்.


திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 7: 9, 14b-17

யோவான் நான் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள்.

மூப்பர்களுள் ஒருவர் என்னிடம் கூறியது: ``இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.

இதனால்தான் கடவுளது அரியணைமுன் நின்று கொண்டு அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டு வருகிறார்கள்; அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார்.

இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா; கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கா. ஏனெனில் அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்; வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும். கடவுள் அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.''


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 10: 14-15

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நான் என் ஆடுகளுக்கு நிலைவாழ்வை அளிக்கிறேன்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 27-30


அக்காலத்தில் இயேசு கூறியது: ``என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன்.

அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள மாட்டார்.

அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர்.

அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது. நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
(திருத்தூதர் பணிகள் 13: 14, 43-52; திருவெளிப்பாடு 7: 9, 14-17; யோவான் 10: 27-30)

நிலைவாழ்வளிக்கும் நல்லாயன் இயேசு

நிகழ்வு

ஓய்வுப்பெற்ற ஆசிரியர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் திடீரென இறந்துபோனார். இறந்த அவர் விண்ணகத்திற்குச் சென்றார். அப்பொழுது விண்ணக வாசலில் அமர்ந்திருந்த பேதுரு அவரைத் தடுத்து நிறுத்தி, "கொஞ்சம் நில்லுங்கள். விண்ணகத்திற்குள் நுழையவேண்டும் என்றால், நீங்கள் நூறு புள்ளிகள் (100 points) பெற்றிருக்கவேண்டும். அப்பொழுதுதான் உங்களால் நுழையமுடியும். இப்பொழுது சொல்லுங்கள்... நீங்கள் மண்ணுலகில் வாழ்ந்தபோது என்னென்ன நல்ல காரியங்கள் செய்தீர்கள் என்று" என்றார்.

உடனே அந்த ஓய்வுபெற்ற ஆசிரியர், "நாற்பது ஆண்டுகள் தவறாமல் கோவிலுக்குச் சென்று திருப்பலி கண்டிருக்கிறேன்" என்றார். "நாற்பது ஆண்டுகள் தவறாமல் திருப்பலி கண்டிருக்கிறீர்களா... சரி அதற்கு ஒரு புள்ளி. அடுத்து என்ன நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள்?" என்றார். 'நாற்பது ஆண்டுகள் தவறாமல் திருப்பலி கண்டதற்கு ஒரு புள்ளிதானா?' என்று மனதிற்குள் நினைத்தவராய், 'நான் வின்சென்ட் தே பவுல் சபையில் உறுப்பினராக இருந்து ஏராளமான ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் செய்திருக்கிறேன்" என்றார். "வின்சென்ட் பவுல் சபையில் உறுப்பினராக இருந்து உதவிகள் செய்ததற்காக இன்னொரு புள்ளி. தொடர்ந்து சொல்லுங்கள்" என்றார் பேதுரு.

பேதுரு இவ்வாறு சொன்னதைக் கேட்டுப் அதிர்ந்துபோன அந்த ஓய்வுபெற்ற ஆசிரியர், "இப்படியே தொடர்ந்தால் என்னால் நிச்சயமாக விண்ணகத்திற்குள் நுழையமுடியாது... இறையருள் இருந்தால்தான் என்னால் விண்ணகத்திற்குள் செல்ல முடியும்" என்றார். "நீங்கள் சொல்வதுதான் சரி, இறைவனின் அருளின்றி எவரால் விண்ணகத்திற்குள் நுழையமுடியாது... இதை நீங்கள் நம்புகிறீர்களா?" என்றார் பேதுரு. "ஆமாம். நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார் ஓய்வுபெற்ற ஆசிரியர். "நீங்கள் இறைவன்மீது நம்பிக்கை வைத்திருப்பதால் உங்களுக்கு நூறு புள்ளிகள். இப்போது நீங்கள் விண்ணகத்திற்குள் போகலாம்" என்று சொல்லி பேதுரு அந்த ஓய்வுபெற்ற ஆசிரியரை விண்ணகத்திற்குள் அனுப்பி வைத்தார்.

இறைவன்மீது/இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழ்கிறவருக்கே விண்ணகம்/நிலைவாழ்வு உண்டு என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் ஜாக் ம்கார்டல் (Jack Mcardle) என்ற எழுத்தாளர் சொல்கின்ற இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய நற்செய்தியில் இயேசு, "நான் என் ஆடுகளுக்கு நிலைவாழ்வை அளிக்கிறேன்" என்கிறார். இயேசு அளிக்கின்ற நிலைவாழ்வினைப் பெற நாம் என்ன செய்வது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

நம்பினோருக்கு நிலைவாழ்வை அளிக்கும் நல்லாயன் இயேசு

நல்லாயன் ஞாயிறான இன்று நாம் வாசிக்கின்ற நற்செய்தியில் இயேசு கூறுகின்ற, "நான் அவற்றுக்கு நிலைவாழ்வை அளிக்கின்றேன்" என்று வார்த்தைகளை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளவேண்டுமெனில், இதற்கு முந்தைய பகுதியில் இயேசு கூறுகின்ற வார்த்தைகளையும் இணைத்துப் பார்க்கவேண்டும்.

இதற்கு முந்தைய பகுதியில் யூதர்கள் இயேசுவிடம், "நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்" என்று சொல்கின்றபோது, இயேசு அவர்களிடம், "நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள்தான் நம்பவில்லை. ஏனெனில் நீங்கள் என் மந்தையைச் சேர்ந்தவர்கள் அல்ல" என்கிறார் (யோவா 10: 24-26). இயேசு இங்கு பேசுகின்ற வார்த்தைகளிலிருந்து இரண்டு உண்மைகளை அறிந்துகொள்ளலாம். ஒன்று, இயேசுவின் மந்தையைச் சேர்ந்தவர் அவரை நம்பவேண்டும். அப்போதுதான் அவருக்கு நிலைவாழ்வு கிடைக்கும். இரண்டு, இயேசுவை நம்பாதவர் அவருடைய மந்தையாக இருக்கமுடியாது, அவருக்கு நிலைவாழ்வும் கிடையாது. அப்படியானால், இன்றைய நற்செய்தியில் நல்லாயனாம் இயேசு தருவதாகச் சொன்ன நிலைவாழ்வைப் பெற, அவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வது இன்றியமையாததாக இருக்கின்றது.

ஆடுகளை அழிவிலிருந்து காப்பாற்றும் நல்லாயன் இயேசு

நல்லாயன் இயேசு ஆடுகளை அழிவிலிருந்து காப்பாற்றுபவராக இருக்கின்றார். அது எப்படியெனில், ஆடுகளுக்கு வாயிலாக இருக்கும் இயேசு (யோவா 10: 9) திருடரோ கொள்ளையரோ ஆடுகளை நெருங்கவிடாமல் பாதுகாக்கின்றார். மட்டுமல்லாமல், அரணும் கோட்டையும் கேடயமும் மீட்புமாக இருக்கின்ற அவர் (திபா 18:2) எதிரிகள் ஆடுகளை எந்தவிதத்திலும் தாக்காத வண்ணம் காக்கின்றார். இவ்வாறு இயேசு தன் மக்களை தன் ஆடுகளை- எல்லாவிதமான அழிவிலிருந்தும் காப்பாற்றிப் பாதுகாக்கின்றார்.

இஸ்ரயேல் சமூகத்தில் போலி ஆயர்கள் ஏராளமான பேர் இருந்தார்கள். அவர்கள் மக்களை அடித்துத் தின்று கொழுத்துப் போனார்கள். அதுமட்டுமல்லாமல், அவர்கள் நலிந்தவற்றைத் தேற்றவும் இல்லை, திடப்படுத்தவும் இல்லை (எசே 34: 3-4) இப்படிப்பட்டவர்கள்தான் இயேசுவின் காலத்திற்கு முன்பு இருந்தார்கள். இவர்களே போலி ஆயர்கள். ஆனால், இயேசு அப்படிக் கிடையாது. அவர் ஆடுகள் அழிந்துபோகக்கூடாது என்பதற்காக தன்னுடைய வாழ்வைக் கொடுத்தார் (யோவா 10:10). அதனால்தான் அவர் நல்ல ஆயனாக இருக்கின்றார்.

ஆடுகளைத் தெரிந்து/அறிந்து வைத்திருக்கும் நல்லாயன் இயேசு

இயேசு தன்னுடைய ஆடுகளுக்கு நிலைவாழ்வு அளிக்கின்றார்; அவற்றை அழிவிலிருந்து காப்பாற்றுகின்றார். அவற்றோடு அவர் தன்னுடைய ஆடுகளை தெரிந்தும்/அறிந்தும் வைத்திருக்கின்றார் என்று இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது. அவர் எப்படி தன்னுடைய ஆடுகளை தெரிந்து/அறிந்து வைத்திருக்கின்றார் என்பதை இப்போது பார்ப்போம்.

திருப்பாடல் ஆசிரியர் இவ்வாறு கூறுவார்: "நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலைவிலிருந்தே உய்த்துணர்கிறீர்." (திபா 139: 2) இவ்வார்த்தைகளை நாம் இயேசுவின் வாழ்வோடு ஒப்பிடும்போது அவை அப்படியே பொருந்திப் போகின்றன. இயேசு தன்னுடைய பணிவாழ்வில் ஏராளமான மக்களைக் குணப்படுத்தினார். அதில், மக்கள் அவர்மீது நம்பிக்கையோடு வந்து குணம்பெற்றுச் சென்றபோக, ஏராளமான மக்களை அவராகவே குணப்படுத்தினார். குறிப்பாக அவர் பெருந்திரளான மக்களைக் கண்டபோது, அவர்கள்மீது பரிவுகொண்டு அவர்களிடமிருந்த நோயாளிகளைக் குணப்படுத்தியதையும் (மத் 14: 14) உணவளித்ததையும் முப்பதெட்டு ஆண்டுகளாக உடல் நலமாற்றிருந்தவரைக் குணப்படுத்தியதையும் ( யோவா 5: 1-4) எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம். இயேசு இம்மனிதர்களை எல்லாம் அவர்கள் கேட்கும்முன்பாக, தாமாகவே முன்வந்து குணப்படுத்தியது, அவர் தன் ஆடுகளைத் தெரிந்துவைத்திருக்கின்றார் என்பதையே காட்டுகின்றது. மட்டுமல்லாமல், இயேசு தன்னுடைய சீடர்களையும் மற்ற மனிதர்களையும் பெயர் சொல்லி அழைத்ததுகூட, அவர் தன் ஆடுகளை முழுமையாக அறிந்துவைத்திருக்கின்றார் என்பதையே காட்டுகின்றது.

இப்படி ஆடுகளை முழுவதும் அறிந்து, அழிவிலிருந்து காப்பாற்றி, நிலைவாழ்வு தருகின்ற நல்லாயனின் மந்தையாக இருக்க ஒவ்வொருவரும் என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்பது தேவையான ஒன்றாக இருக்கின்றது. நல்லாயனின் மந்தையாக இருக்க நாம் செய்யவேண்டியதெல்லாம், இன்றைய நற்செய்தியில் நாம் வாசிப்பதுபோல, 1.நல்லாயனின்மீது நம்பிக்கை வைத்து வாழ்வதும் 2. அவருடைய குரலுக்குச் செவிசாய்ப்பதும் 3.அவரைப் பின்தொடர்ந்து செய்வதுமாகும். இம்மூன்று காரியங்களையும் கடைப்பிடித்து வாழ்ந்தால் அவருடைய மந்தையாக மாறுவோம் என்பது உறுதி

சிந்தனை

'நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுள் எவரையும் நான் இழந்துவிடவில்லை' (யோவா 18:9) என்பார் நல்லாயன் இயேசு. ஆகவே, நம்மை அழிவிலிருந்து காப்பாற்றி, நிலைவாழ்வு தரும் நல்லாயன்மீது நம்பிக்கை வைத்து, அவர் குரல் கேட்டு, அவர் வழி நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 நமக்காகத் தன்னுயிர் தரும் நல்லாயன் இயேசு

நம்முடைய தேசப்பிதா காந்தியடிகள் அவர்களுடைய வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்வு. ஒருமுறை அவருக்கு தேயிலைத் தோட்டத்தில் வேலைபார்க்கும் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆங்கிலேயர்கள் போதிய ஊதியம் தராமல் வஞ்சித்து வருகிறார்கள் என்றதொரு செய்தி வந்தது.

இதைக் கேள்விப்பட்டதும் அவர் மிகவும் வருந்தினார். எனவே தேயிலைத்தோட்ட முதலாளிகளைச் சந்தித்து, இதுகுறித்துப் பேசுவதாக முடிவு செய்தார். காந்தியடிகள் தங்களைப் பார்த்து பேசவருகிறார் என்பதைக் கேள்விப்பட்ட தேயிலைத்தோட்ட முதலாளிகளில் ஒருவர், "அவர் மட்டும் என்னிடம் கிடைத்தால், அவரைத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிடுவேன்" என்று சூளுரைத்தார்.

காந்தியடிகள் அந்த தேயிலைத்தோட்ட முதலாளி சொன்னதைக் கேள்வியுற்று, ஒருநாள் இரவில், அவருடைய வீட்டிற்குத் தனியாளாய்ச் சென்றார். "நீங்கள் என்னைக் கண்டால், துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிடுவேன் என்று சொன்னீர்களாமே, இதோ! நான் உங்களுக்கு முன்பாக வந்திருக்கிறேன். இப்போது நீங்கள் என்னைச் சுடலாம்" என்றார். இவ்வளவு துணிச்சல்மிக்க ஒரு மனிதரை இதுவரைப் பார்த்திராத அந்த முதலாளி, காந்தியின் காலடியில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். அதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய தேயிலைத் தோட்டத்தில் வேலைபார்க்கும் தோட்டத்தொழிலாளர்களுக்கு நீதியான கூலி தருவதாகவும் வாக்களித்தார். தன்னுடைய நாட்டு மக்களுக்காக உயிரையும் துச்சமாக நினைத்து செயல்பட்ட காந்தியடிகள் உண்மையிலே ஒரு மிகச்சிறந்த தலைவர் ஆயர் - தான்.

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று திருச்சபையால் நல்லாயன் ஞாயிராகக் கொண்டாடப்படுகிறது. இன்றையநாளில் நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள், "இயேசு எப்படி ஒரு நல்ல ஆயனாக இருக்கிறார்" என்பதை நமக்கு எடுத்துக்கூறுகிறது.

தொடக்க காலத்தில் யூத சமூகம் ஒரு நாடோடிச் சமூகமாகவே இருந்தது. அத்தகைய தருணங்களில் அவர்கள் ஆடுமேய்பதையே தங்களுடைய பிரதானத் தொழிலாகக் கொண்டிருந்தார்கள். மேலும் தங்களை ஆளக்கூடிய தலைவர்களை/ கடவுளை ஆயராகவும், தங்களை அவருடைய மந்தையாகவும் பார்த்தார்கள் (திபா 23). மீட்பின் வரலாற்றில் வரக்கூடிய மோசே முதல் தாவீது அரசர் வரை ஆடுமேயத்தவர்கள்தான் என்பது நாம் அனைவருமே அறிந்த ஓர் உண்மை. ஆண்டவர் இயேசு அத்தகைய பின்னணியிருந்து வருவதால் இறைமகனாகிய தன்னை ஓர் ஆயனாகச் சித்தரிக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு "நல்லாயனாகிய நான் ஆடுகளை முழுமையாக அறிந்திருக்கிறேன் என்றும், அவற்றுக்கு நிலைவாழ்வைக் கொடுக்கிறேன்" என்றும் கூறுகிறார். அதேபோன்று திருவெளிப்பாட்டு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், ஆட்டுக்குட்டியாகிய இயேசு நீரோடைக்கு அழைத்துச் செல்வார் என்றும், கண்ணீரைத் துடைப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இவ்வார்த்தைகளைக் கூர்ந்து நோக்கும்போது ஓர் ஆயன் என்று சொன்னால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை மிகத்தெளிவாக எடுத்துக்கூறுகிறது.

இன்று நம்மை ஆளக்கூடிய தலைவர்கள் நம்மை முழுமையாக அறிந்துவைத்திருக்கிறார்களா?; நமது தேவைகளை எல்லாம் நிவர்த்தி செய்கிறார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் ஆண்டவரும், நல்ல ஆயனுமாகிய இயேசு நம்மை முழுமையாக அறிந்துவைத்திருக்கிறேன் என்று சொல்கிறார்.

திருப்பாடல் 139:2 ல் வாசிப்பதுபோல இறைவன் நாம் அமர்வதையும், எழுவதையும், நமது எண்ணங்களையும் அறிந்து வைத்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் தாயின் வயிற்றில் நாம் உருவாகுமுன்னே நம்மை அறிந்துவைத்திருக்கிறார். (எரேமியா 1:5). ஆகவே நல்லாயனாகிய இயேசு ஆடுகளாகிய நம்மை முழுமையாக அறிந்துவைத்திருக்கிறார் என்பது இதன்மூலம் நாம் கண்டுகொள்ளக்கூடிய உண்மையாக இருக்கிறது.

அடுத்ததாக நல்லாயனாகிய இயேசு நம்மை முழுமையாக அறிந்திருப்பதோடு மட்டுமல்லாமல் நமக்கு நிலைவாழ்வினையும் தருபவராக இருக்கின்றார். யோவான் நற்செய்தி 10:10 ல் வாசிக்கின்றோம், "ஆடுகள் வாழ்வுபெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு இந்த மண்ணுலகிற்கு வந்தேன்" என்று ஆண்டவர் இயேசு கூறுவதாக படிக்கின்றோம். இன்று நம்மை ஆளும் தலைவர்கள் நமக்கு அமைதியான, நிம்மதியான வாழ்வினை வழங்குகிறார்களோ? இல்லையோ நல்லாயனாகிய இயேசு நமக்கு நிலையான வாழ்வினை வழங்குகின்றார்.

ஆகவே, நாம் ஒவ்வொருவரும் பிறருக்கு வாழ்வை வழங்கும் வள்ளலாக இருக்கவேண்டும் என்பது இறைவார்த்தை நமக்குத் தரும் அழைப்பாக இருக்கின்றது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக திருக்கழுக்குன்றத்தைத் சேர்ந்த திரு.அசோகன் மற்றும் திருமதி. புஷ்பாஞ்சலி ஆகியோருடைய மகன் ஹிதேந்திரன், தன்னுடைய நண்பர்களைப் பார்ப்பதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் போய்க்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படவே, அவன் நிலைகுலைந்து போனான்.

இதை அறிந்த அவனுடைய பெற்றோர்கள் கதறி அழுதார்கள். அவனைப் பிழைக்க வைப்பதற்காக என்னவெல்லாமோ செய்துபார்த்தார்கள். ஆனால் இறுதியில் அப்பல்லோ மருத்துவமனைக்கு எடுத்துச்சென்ற ஹிதேந்திரனின் பெற்றோர்கள் அவன் ஏற்கனவே இறந்துபோய்விட்டான் என்றும், அவனுடைய மூளை மட்டும் இன்னும் உயிர்த்துடிப்போடு இருக்கிறது என்றும் அறிவுறுத்தப்பட்டார்கள்.

அப்போது அந்த பெற்றோர்கள் (இருவரும் மருத்துவர்கள்) ஒரு முடிவை எடுத்தார்கள். அது இன்றுவரைக்கும் யாருமே எடுத்திராத ஒரு முடிவு. அம்முடிவு என்னவென்றால் தன்னுடைய மகனின் உடல் உறுப்பை தானமாகக் கொடுக்க அவர்கள் முன்வந்தார்கள்.

இன்றைக்கு ஹிதேந்திரன் உயிரோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் பல மனிதர்களில் அவன் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கிறான். இந்த ஹிதேந்திரனைப் போன்றுதான் நல்லாயனாகிய இயேசுவும் நாம் அனைவரும் நிலைவாழ்வு பெறுவதற்காக தன்னுடைய உயிரையே தருகின்றார்.

இந்த வேளையில், நல்லாயனாகிய இயேசுவுக்கு உகந்த மக்களாக/மந்தையாக எப்படி இருக்கவேண்டும் என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதற்கு ஆடுகளாகிய நாம் ஆயனின் குரலுக்குச் செவிமடுக்கவேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் படிக்கின்றோம், "என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிகொடுக்கின்றன" என்று. ஆம், ஆடுகள் ஆயனின் குரலுக்குச் செவிமடுக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் எல்லா ஆபத்துக்களிலிருந்தும் காப்பாற்றப்பட்டு அமைதியான வாழ்வு வாழமுடியும். ஒருவேளை ஆடுகள் தங்களுடைய மனம்போன போக்கில் வாழ்ந்தால் இறுதியில் அழிவுதான் மிஞ்சும்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் பவுலும், பர்னபாவும் இறைவனின் வார்த்தையை அந்தியோக்கு நகருக்குச் சென்று, அங்கே உள்ள தொழுகைக்கூடத்தில் கற்பித்தபோது, அங்கே இருந்த யூதமதம் தழுவியவரும், யூதரல்லாதவரும் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள் என்று வாசிக்கின்றோம். ஆகவே ஆயனின் மந்தையாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் ஆயனின் குரலுக்குச் செவிகொடுத்து, அவரைப் பின்தொடரவேண்டும் என்பதே இங்கே சுட்டிக்காட்டப்படும் செய்தியாக இருக்கிறது.

இப்படி நாம் ஆயனின் குரலுக்குச் செவிமடுத்து, அவரைப் பின்தொடர்ந்தோம் என்றால் முதல் வாசகத்தில் கேட்பதுபோன்று கடவுள் நம்முடைய கண்ணீரை எல்லாம் துடைத்துவிடுவார். மேலும் இணைச்சட்ட நூல் 4:40 ல் வாசிக்கின்றோம், "நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும், கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்" என்று.

ஆகவே, நாம் ஒவ்வொருவரும் ஆயனின் குரல் கேட்டு, அவரைப் பின்தொடர்ந்து வாழும் மக்களாவோம். பல நேரங்களில் நாம் நம்முடைய மனம்போன போக்கில் வாழலாம். அப்படி வாழும்போது இறைவன் அளிக்கும் கொடைகளை, ஆசிரை நம்மால் நிச்சயமாகப் பெறமுடியாது. எனவே நாம் இறைவனின் குரல் கேட்டு, அவர் வழியில் நடக்கும் மக்களாவோம்.

ஒரு ஊரில் ஒரு பணக்காரத் தந்தை இருந்தார். அவருக்கு ஒரு புதல்வன் இருந்தான். அவன் ஊதாரித்தனமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தான். தந்தை அவனுக்கு எவ்வளவோ புத்திமதி சொல்லியும் அவன் கேட்காமல், தன்னுடைய மனம்போன போக்கில் வாழ்ந்துகொண்டிருந்தான். இதனால் அவர் பெரிதும் மனம் வருந்தினார்.

ஒருநாள் தந்தை மரணப்படுக்கையில் வீழ்ந்தார். அப்போது அவர் தன்னுடைய மகனை தன்னருகே அழைத்து, "இப்போதாவது நீ என்னுடைய அறிவுரையைக் கேள்" என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்.

"இதுநாள்வரை நான் சேர்த்துவைத்த செல்வத்தை எல்லாம் நம்முடைய நிலத்தில் புதைத்து வைத்திருக்கிறேன். உனக்கு வேண்டுமானால் நீ போய் நிலத்தைத் தோண்டி, அதனை எடுத்துக்கொள்" என்று அவனிடம் சொன்னார். உடனே அவன் ஒரு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு, நிலத்தைத் தோண்டத் தொடங்கினான்.

நாட்கள் சென்றன. ஆனால் புதையல் மட்டும் அவனுக்குக் கிடைக்கவில்லை. இப்போது அவன் அந்த நிலம் முழுவதையும் தோண்டியிருந்தான். அப்போதும் அவனுக்கு புதையல் கிடைக்கவில்லை. தந்தை தன்னை ஏமாற்றிவிட்டாரோ என்று வருந்தினான். பிறகு என்ன நினைத்தானோ தெரியவில்லை. தோண்டிய நிலத்தை நன்றாகப் பண்படுத்தப் தொடங்கினான். அதிலே பயிரிட்டான். இப்போது நிலமானது வளம்கொழிக்கத் தொடங்கியது. அப்போதுதான் அவன் உணர்ந்தான் தந்தை நிலத்தை பண்படுத்தி, பயிர்டுவதைதான் நிலத்தில் புதையல் இருப்பதாக சொல்லியிருக்கிறார் என்று உணர்ந்துகொண்டான்.

இந்த ஊதாரி மகன் எப்படி தந்தையின் சொல்கேட்டு நடந்ததனால் அவருடைய ஆசிரைப் பெற்றானோ, அதுபோன்று நாமும் நல்லாயனாகிய இயேசுவின் குரல் கேட்டு நடந்தால் நமக்கு என்றும் ஆசிரும், அருளும்தான்.

ஆதனால் நமக்காகத் தன்னுயிர் தரும் நல்லாயனின் குரல் கேட்டு நடப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3 பாஸ்கா காலம் 4ம் ஞாயிறு (மே 12, 2019)
=================================================================================
 சரியான குரலைக் கேட்க!


 திருத்தூதர் பணிகள் 13:14, 43-52
 திருவெளிப்பாடு 7:9, 14-17
யோவான் 10:27-30

எங்கேயோ வாசித்த ஒரு கதை. ஒரு அப்பார்ட்மென்ட். அந்த அப்பார்ட்மென்டில் தீ. தீ நெருங்கிக்கொண்டிருக்கும் அறையில் சிறுவன் ஒருவன் இருக்கின்றான். வெளியே அவனுடைய அப்பா இருக்கின்றார். ஜன்னலுக்கு அருகில் வருகின்றான் சிறுவன். ஒரே புகை மூட்டமாய் இருக்கிறது. ஆனால், கீழே இருந்து, 'ஜானி!' என்று அழைக்கும் அவனுடைய அப்பாவின் குரல் மட்டும் கேட்கிறது. 'உங்களை நான் பார்க்க முடியவில்லை' என்கிறான் மகன். 'நான் கூப்பிடுவது உனக்குக் கேட்கிறதா?' என்கிறார் தந்தை. 'கேட்கிறது' என்கிறான் மகன். 'குதி!' என்கிறார். பாதுகாப்பான தந்தையின் கரங்களுக்குள் குதித்துவிடுகிறான் மகன். 'மேலும் சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் நீர் என்னோடு இருப்பதால் நான் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்' (காண். திபா 23:5) என்று திருப்பாடல் ஆசிரியர் பாடும்போதும் அவருடைய மனத்தில் ஏறக்குறைய இந்த ஜானியைப் போலத்தான் உணர்ந்திருப்பார். ஏனெனில், இருளில் ஆயனின் உடனிருப்பு வெறும் குரலாக மட்டும்தானே இருக்கும்.

பாஸ்கா காலத்தின் 4ஆம் ஞாயிற்றை நல்லாயன் ஞாயிறு என்று கொண்டாடுகிறோம். இன்றைய நாளில் தாய்த் திருச்சபை பணிக்குருத்துவத்திற்கான அழைத்தல் ஞாயிறாக இதைச் சிறப்பிக்கிறது. நல்லாயன் இயேசுவின் குரலைக் கேட்டுத் தன் மந்தையை வழிநடத்தும் நல்மேய்ப்பர்களை இறைவன் நமக்குத் தர இன்றைய நாளில் வேண்டுவோம்.

'சரியான குரலைக் கேட்பது' - இதை இன்றைய நம் சிந்தனையின் மையக் கருத்தாக எடுத்துக்கொள்வோம்.

இன்று நம்மைச் சுற்றி நிறையக் குரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. நம் அலைபேசிகளின் ரிங்டோன்கள். நம் வாகனங்களின் ஹார்ன் ஒலிகள். எந்திரங்களின் சப்தங்கள். நாம் பயன்படுத்தும் கருவிகளின் சப்தங்கள். டிவி, ஹோம் தியேட்டர், யூட்யூப் சப்தங்கள் என ஒலிகளும் குரல்களும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இச்சப்தங்களுக்கு நடுவில் நாம் அமைதியாய் இருக்கும்போது, நம் மூளையும் ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறது. நமக்கு வெளியிலும் குரல்கள், நமக்கு உள்ளேயும் குரல்கள் என ஏகப்பட்ட குரல்கள். இந்த ஏகப்பட்ட குரல்கள் நடுவே ஒரே ஒரு ஏகக் குரலைக் கண்டுகொள்வது எப்படி? அந்தக் குரலுக்குச் செவிமடுப்பது எப்படி?

இன்றைய முதல் வாசகம் (காண். திப 13:14, 43-52) பவுல் மற்றும் பர்னபா ஆகியோர் இணைந்து புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கத் தொடங்கியதன் நிகழ்வை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது. தங்களுடைய முதல் தூதுரைப் பயணத்தில் பவுலும் பர்னபாவும் பிசிதியாவில் உள்ள அந்தியோக்கியாவிற்கு (இன்றைய துருக்கி) வருகின்றனர். இது அன்றைய நாளின் மிக முக்கியமான வியாபார தளம். கிரேக்க நகரமாக இது இருந்தாலும் நிறைய யூதர்கள் இங்கே குடியேறியிருந்தனர். வுழக்கமாக மற்ற திருத்தூதர்கள் செய்தது போலவே, பவுலும் பர்னபாவும் யூதர்களுக்கே நற்செய்தி அறிவிப்பு செய்தனர். யூதர்களின் தொழுகைக்கூடத்திற்குச் செல்கின்ற பவுல், சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்ட இயேசுவே மெசியா என்றும், அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்றும் அறிவித்தார். மேலும், பாவ மன்னிப்பும் மக்களின் மீட்பும் அவர் வழியாகவே சாத்தியம் என்றும் எடுத்துரைத்தார் (காண். திப 13:16-40). அத்தொழுகைக் கூடத்தில் யூதர்கள் மட்டுமல்லாமல், யூதம் தழுவிய கிரேக்கர்கள், மற்றும் யூத வழிபாட்டிற்கு வந்த மற்றவர்கள் என பிறரும் இருந்தனர். இவர்கள், 'கடவுளுக்கு அஞ்சியவர்களாக' இருந்தனர். பவுலின் செய்தி எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், பவுல் பேசுவதை மீண்டும் கேட்பதற்காக, அடுத்த ஓய்வுநாளில் புறவினத்தார் அனைவரும் கூடி வந்தனர்.

ஆனால், அடுத்த ஓய்வுநாள் சற்று வித்தியாசமாக விடிந்தது திருத்தூதர்களுக்கு. பவுலின் செய்தியை மறுத்த தொழுகைக்கூடத் தலைவர்கள் அவரை எதிர்க்கவும், இயேசுவைப் பழித்துரைக்கவும் செய்தனர். சிலுவையில் அறையுண்ட ஒருவர் மெசியாகவும், இஸ்ரயேலின் மீட்பராகவும் இருக்கிறார் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதைக் குறித்து அவர்கள் மிகவே இடறல்பட்டனர். மேலும், திருத்தூதர்களின் செய்தி புறவினத்தாருக்கு ஏற்புடையதாக இருப்பதை எண்ணி அவர்கள் பொறாமைப்படவும் செய்தனர்.

யூதர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட பவுலும் பர்னபாவும் தங்களுடைய கவனத்தைப் புறவினத்தார்பக்கம் திருப்புகின்றனர். மேலும், புறவினத்தார் பக்கம் திரும்புவதை இறைவாக்கினர் எசாயாவின் இறைவாக்கின் நிறைவு என்றும் கண்டனர் (காண். ஏசா 49:3). புறவினத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்தப்பட்டவர்கள் என்று பவுலும் பர்னபாவும் தங்களையே கருதிக் கொண்டனர். அவர்களுடைய செய்தியைக் கேட்ட பலரும் அவர்களை ஏற்றுக்காண்டனர். இவர்களின் பணி புறவினத்தாருக்கு ஏற்புடையதாக இருப்பது பற்றிக் கேள்வியுற்ற யூதர்கள் மீண்டும் இவர்களுக்குத் தொல்லை கொடுத்து, இவர்களை நகரத்தைவிட்டு வெளியே துரத்துகின்றனர். தலைவர்களின் பொறாமை திருத்தூதர்களுடைய பணிக்கு இடையூறாக இருக்கிறது. ஏனெனில், யூத நம்பிக்கையின் தூண்கள் மற்றும் காப்பாளர்கள் என்று அவர்கள் தங்களைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்தனர். ஆக, தங்களுடைய நிலையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற அதீத ஆர்வத்தில் அவர்கள் சரியான குரலுக்கு, மீட்பின் குரலுக்குச் செவிமடுக்கவில்லை.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். திவெ 7:9, 14-17) உலகெங்கும் உளள பலர் அரியணையைச் சுற்றி நிற்பதைக் காட்சியில் காண்கிறார் யோவான். அவர்களுடைய ஆடைகள் வெண்மையாக இருக்கின்றன. வேண்மை தூய்மையின் அடையாளமாக இருக்கிறது. மேலும், வெற்றியின் அடையாளமாக அவர்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியிருந்தனர். மேலும், இவர்கள் யார் என்பதை அங்கிருந்த மூப்பர் ஒருவர் யோவானுக்கு விளக்கிச் சொல்கிறார். இவர்கள் கடவுளையும், இயேசுவையும் ஏற்றுக்கொண்டதால் அதற்காக துன்பங்கள் பலவற்றை ஏற்றவர்கள். ஆனால் தங்கள் நம்பிக்கையை அவர்கள் காத்துக்கொண்டதால் கடவுள்முன் வெற்றியாளர்களாக நிற்கிறார்கள். மேலும், இவர்கள் தங்கள் தங்கள் மறைசாட்சியத்தின் வழியாக தங்கள் ஆடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் தோய்த்துக்கொண்டனர். இவ்வாறாக, இயேசுவின் இறப்போடு தங்களை இணைத்துக்கொண்ட இவர்கள், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் தூய்மை அடைந்து தங்கள் பாவங்கள் நீங்கப்பெற்றவர்களாக இருந்தனர். மண்ணகத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்ட இவர்கள் விண்ணகத்தில் முதன்மையான இடத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு பசியோ, தாகமோ, துன்பமோ இல்லை.

யோவானின் இக்காட்சி அவருடைய சமகாலத்துக் கிறிஸ்தவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. ஏனெனில், உரோமைப் பேரரசின் குரலுக்குச் செவிமடுத்து அவரை வழிபடுவதா, அல்லது கிறிஸ்துவின் குரலுக்குச் செவிமடுத்து இறுதிவரை அவரைப் பற்றிக்கொண்டு வாழ்வதா என்பது ஒரு பெரிய போராட்டமாக இருந்தது. கிறிஸ்துவின் குரலுக்குச் செவிமடுப்பதே நிலைவாழ்வைப் பெற்றுத்தரும் என்று அறிவுறுத்துகிறார் யோவான்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 10:27-30), இயேசுவை, 'நல்லாயனாக' முன்வைக்கிறது. இயேசுவுக்கும் அவருடைய மந்தைக்குமான உறவை அடையாளப்படுத்த, நற்செய்தியாளர், 'அறிதல்' என்ற கருத்துருவைப் பயன்படுத்துகின்றார். ஆடுகள் இயேசுவின் குரலுக்குச் செவிகொடுக்கின்றன. இயேசுவுக்கும் ஆடுகளைத் தெரியும். ஆடுகளுக்கும் மேய்ப்பனுக்குமான இந்தப் புரிதல் இரண்டு நிலைகளில் மந்தைக்குப் பயன்தருகின்றது. ஒன்று, ஆடுகள் நிலைவாழ்வைப் பெறுகின்றன. இரண்டு, ஆடுகள் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்கின்றன. எந்தவொரு காரணியும் இயேசுவையும் சீடர்களையும் பிரிக்க முடியாது. தொடர்ந்து, தன்னுடைய அதிகாரமும் ஆற்றலும் தன் தந்தையோடு தான் இணைந்திருப்பதன் வழியாகவே வருகின்றது என்கிறார் இயேசு. மேலும், இயேசு ஆடுகளைத் தம் தந்தையின் கைகளில் ஒப்படைத்திருப்பதால் ஆடுகள் இரட்டிப்பான பாதுகாப்பைப் பெறுகின்றன. 'என் ஆடுகள் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றன' என்னும் இயேசுவின் வார்த்தைகளில், ஆடுகள் இயேசுவுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்ற கட்டளையும் அடங்கியிருக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகம் யோவான் நற்செய்தி பிரிவு 10ன் ஒரு பகுதியாக இருக்கிறது. ஆட்டுக்கொட்டில் (10:1-1-6), ஆயன் (10:1-18) என உருவகங்கள் வழியாக இயேசு பேச, அது யூதர்களின் காதுகளுக்கு எட்டிக்காயாகக் கசக்கின்றது. இந்தக் காதுகள் யாவே இறைவனை அல்லது ஆண்டவரை மட்டுமே ஆயன் என்று கேட்டு (காண். திபா 23) பழக்கப்பட்ட காதுகள். இந்த நெருடலால் அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் (10:19-21).

முதலில், 'அறிதல்' அல்லது 'அறிந்திருத்தல்' என்பதன் பொருளைப் பார்ப்போம். 'அறிதல்' என்பது மூன்று அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது என்று நாம் அறிகிறோம்(!): (அ) 'அறிதல்' என்றால் 'திருமண உறவு கொள்ளுதல்.' 'நான் கணவனை அறியேனே' (லூக்கா 1:34) என்று மரியாள் வானதூதரிடம் சொல்லும்போதும், 'ஆதாம் ஏவாளை அறிந்தான்' (தொநூ 4:1) என்ற இடத்திலும், 'அறிதல்' என்பது 'திருமண உறவு அல்லது உடலுறவு கொள்ளுதலை' குறிக்கின்றது. (ஆ) 'அறிதல்' என்றால் 'புரிந்து கொள்ளுதல்.' 'நான் செய்வது இன்னதென்று நானே அறிவதில்லை' (உரோ 7:15) என்று புலம்பும் பவுல், இங்கே 'நான் செய்வது இன்னதென்று எனக்கே புரியவில்லை' என்று சொல்கின்றார். இதே அர்த்தத்தில்தான் 1 கொரி 13:12இலும், 'இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன் - புரிந்து கொள்கிறேன்' என எழுதுகின்றார். (இ) 'அறிதல்' என்றால் 'அறிமுகமாயிருத்தல்' அல்லது 'அருகிருத்தல்' அல்லது 'அந்நியோன்யமாய் இருத்தல்'. இந்த அர்த்தத்தில்தான் யோவான் இயேசுவின் அறிதலை முன்வைக்கின்றார். தான் ஆடுகளை அறிந்திருத்தலைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம், இயேசு தான் தந்தையை அறிந்திருத்தலையும் சொல்கின்றார். இங்கே 'திருமண உறவு' என்ற அர்த்தம் அறவே இல்லை. 'புரிந்து கொள்ளுதல்' என்ற அர்த்தம் கொஞ்சமாக இருக்கிறது. இவை இரண்டிற்கும் மேலாக, 'அருகிருத்தல்' அல்லது 'நெருக்கமாக இருத்தல்' என்ற அர்த்தம்தான் இங்கே மேலோங்கி நிற்கின்றது. ஆங்கிலத்தில் 'டு நோ' என்ற வினைச்சொல்லை ஒட்டுமொத்தமாக 'அறிதல்' என மொழிபெயர்க்கின்றோம். இத்தாலியன் மொழியில் இதற்கு இரண்டு வினைச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன: ஒன்று, 'சபேரே' ('மூளை சார்ந்த அறிவு'). உதாரணத்திற்கு, இசைக்கருவிகள் மீட்டும் அறிவு, மொழி அறிவு, பொது அறிவு, பீட்சாவுக்கு எவ்வளவு உப்பு சேர்க்க வேண்டும் என்ற அறிவு. இரண்டு, 'கொனோஸரே' ('மனம் சார்ந்த அறிவு'). நண்பர்களை அறிவது, புதியவர்களுக்கு அறிமுகம் ஆவது போன்றவை.

இந்த அறிதலை, 'பயன்' மற்றும் 'உணர்வு' என்ற அடிப்படையில் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். முதலில், பயன். காம்பியா நாடு எங்கே இருக்கிறது என்ற அறிவினாலோ, சச்சின் டென்டுல்கரின் சாதனையை யார் முறியடித்தார் என்ற அறிவினாலோ, பத்ம பூசன் விருது ரஜனி காந்துக்கு ஏன் வழங்கப்பட்டது என்ற அறிவினாலோ நமக்கு பயன் ஏதும் இருக்கிறதா? இல்லை. இந்த அறிவு நம் வாழ்வின்மேல் எந்தவொரு தாக்கத்தையும் நேரிடையாக ஏற்படுத்துவதில்லை. ஆனால், அழுது கொண்டிருக்கின்ற ஒரு குழந்தைக்கு, அல்லது பசியால் வாடும் ஒரு குழந்தைக்கு, அம்மா எங்கே இருக்கிறாள் என்ற அறிவு முக்கியமானது. அந்த அறிவு உடனடியாகக் குழந்தையைப் பாதிக்கிறது. அவள் நெருக்கமாய் இருக்கிறாள் என்ற அறிவு குழந்தைக்கு ஆறுதலாகவும், அவள் தூரமாக இருக்கிறாள் என்ற அறிவு பதற்றமாகவும் இருக்கிறது. இரண்டாவது, உணர்வு. உணர்வு என்பது மூளை சார்ந்ததே என்றாலும், நாம் உணர்வை இதயம் சார்ந்ததாகவே பார்க்கிறோம். அந்த வகையில், முதல் வகை அறிவு மூளை சார்ந்தது. இரண்டாம் வகை அறிவு இதயம் சார்ந்தது. முதல் வகை அறிவால் நம் உணர்வில் எந்தவொரு மாற்றமும் ஏற்படுவதில்லை. ஆனால், இரண்டாம் வகை அறிவில் நம் உணர்வு அதிகமாகவே பாதிக்கப்படுகிறது.

மொத்தத்தில் இயேசு என்னும் ஆயனின் அறிதல் என்பது ஒரு தாய் தன் குழந்தையை அறிதலைப் போன்றது.

இரண்டாவதாக, செவிமடுத்தல். 'இஸ்ரயேலே, செவிகொடு. நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே...' (இச 6:4) என்ற முதன்மைக் கட்டளையின் பின்புலத்தில் பார்த்தால், 'செவிகொடுத்தல்' என்பதற்கு, 'கேட்டல்' என்றும், 'கீழ்ப்படிதல்' என்றும் இரண்டு பொருள் கொள்ளலாம். 'செவிசாயுங்கள்' என்ற வினைசொல்லில், 'கேளுங்கள்,' 'கீழ்ப்படியுங்கள்,' 'பின்பற்றுங்கள்' என்ற மூன்று பொருள்கள் மறைந்திருக்கின்றன.

நம் மூளைக்குள் செல்லும் தகவல்கள் அதிகமாக நம் பார்வை மற்றும் கேட்டல் வழியாகச் செல்கின்றன. கண்களை இமைகளைக் கொண்டு மூடுவதன் வழியாக நாம் பார்வையைக் கட்டுப்படுத்திவிடலாம். ஆனால், காதுகளை மூடுவதற்கு நம் முழு முயற்சி தேவை. காதுகளை மூடுவதற்கு நாம் நம் மனத்தை மூட வேண்டும். அதாவது, எதைக் கேட்க வேண்டும், எதைக் கேட்கக் கூடாது என்று நம் மனத்திற்குப் பயிற்சி அளிக்க வேண்டும். ஆக, செவிமடுத்தலில் காதுகளைவிட நம் மூளைக்குத்தான் அதிக வேலை இருக்கிறது. நம் மூளை கேட்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். கேட்டதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும். கேட்டதை செயல்படுத்த வேண்டும்.

ஆடுகள் செய்ய வேண்டிய வேலை இதுதான் 'செவிமடுத்தல்.' ஆடுகளைப் பற்றி கூகுள் செய்து பார்த்ததில், ஆடுகள் தாங்கள் பார்ப்பதை வைத்து அறிவதைவிட, கேட்பதை வைத்துத்தான் அதிகம் அறிகின்றன என்று கண்டேன். மேலும், தூரம் அதிகமாகும்போது பார்த்தலைவிட கேட்டலே சாத்தியமாகிறது.

மூன்றாவதாக, 'பின்பற்றுதல்.' யோவான் நற்செய்தியில் 'பின்பற்றுதல்' (அகோலுதுவோ) என்பது மிக முக்கியமான வார்த்தை. முதற்சீடர்கள் செய்த முதல் வேலையும் இதுதான் (1:40), இறுதியாக பேதுருவிடம் பேசும் வார்த்தையும் இதுதான் (21:19). 'பின்பற்றுதல்' என்பது இயேசுவின் சீடராக இருப்பதை அல்லது இயேசுவுக்கு ஒத்திருப்பதைக் குறிக்கிறது.

'நிலைவாழ்வு' என்பது இங்கே 'நிறைவாழ்வு' அல்லது 'இறைவாழ்வு' என்ற பொருளில்தான் எடுக்கப்பட வேண்டும். இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வு பற்றிய புரிதல் இது எழுதப்பட்ட காலத்தில் இன்னும் முழுமையாக வளரவில்லை. 'அவை என்றுமே அழியா', 'அவைகளை யாரும் பறித்துக் கொள்ள முடியாது' - ஆக, தங்களாலும் அவர்களுக்கு அழிவில்லை. பிறராலும் அழிவில்லை. அவர்களுக்கு நிறைய உணவு கிடைக்கும். நோய் நீங்கி இருப்பார்கள். எதிரிகள் மற்றும் திருடர்களின் தொந்தரவும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பார்கள். ஆக, உணவு, உடல்நலம், பாதுகாப்பு என்ற மூன்று தேவைகளை உறுதி செய்கிறார் இயேசு.

கடைசியாக, 'நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்' - இந்த ஒன்றாய் இருத்தல் 'ஆயனும் ஆடுகளும் ஒன்றாய் இருப்பதற்கான' அழைப்பாக இருக்கின்றது. 'ஒன்றாய் இருத்தல்' என்பது 'ஒன்றுபோல இருத்தல்' அல்ல. மாறாக, இரண்டும் ஒன்றென ஆவது. 'போல' இருப்பது என்பதிலிருந்துதான் 'போலியாக' இருப்பது உருவாகிறது. ஆனால், ஒன்றென இருத்தலில் போலிக்கு இடமில்லை. இயேசுவைப் போல நாம் இருக்கத் தேவையில்லை. அவ்வளவு ஏன், நாம் யாரைப்போலவும் இருக்கத் தேவையில்லை. ஆனால், இயேசுவும் நானும் ஒன்றென வாழ்தல் சால்பு.

ஆக, இன்றைய முதல் வாசகத்தில் பவுலின் குரலுக்குச் செவிசாய்த்தவர்கள் மீட்பின் குரலுக்குச் செவிகொடுத்ததால் அவர்கள் சரியான குரலுக்கச் செவிகொடுத்தனர். இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்துவின் குரலுக்குச் செவிசாய்த்தவர்கள் தங்களின் மீட்பை உரிமையாக்கிக்கொண்டனர். நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் குரலுக்குச் செவிசாய்க்கும் ஆடுகள் நிலைவாழ்வும் பாதுகாப்பும் பெறுகின்றன. இன்றைய திருப்பாடல் (காண். 100) ஆசிரியரும், 'ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள். அவரே நம்மைப் படைத்தவர். நாம் அவர் மேய்க்கும் ஆடுகள்' என்று பாடுகின்றார்.

இன்றைய ஞாயிறு நமக்கு வைக்கும் சவால்கள் எவை?

1. ஆயனை இழக்கும் அபாயம். ஆயனின் குரலுக்கு நாம் செவிகொடுக்க மறுத்தால், ஆயன் வேறு மந்தையைத் தேடிப் போய்விடுவான். தன் குரலுக்குச் செவிகொடுக்கும் ஆடுகளைத் தேடிச் செல்வான். இதைத்தான் திருத்தூதர்கள் பவுலும், பர்னபாவும் செய்கின்றனர். யூதர்கள் இயேசு என்னும் நற்செய்தியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். 'நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்' என்ற எண்ணம் அவர்களின் கோப்பையை நிறைத்திருந்ததால், புதிய தண்ணீரை அவர்களால் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. இவர்கள் மறுத்ததால் நற்செய்தி புறவினத்தார் நோக்கிச் செல்கின்றது. ஆக, ஆட்டுக்குட்டிகளாகிய நாம், நம் ஆயனின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லையென்றால், அவரைப் பின்பற்றவில்லையென்றால், நம் ஆயனையே இழந்துவிடும் அபாயம் இருக்கின்றது.

2. மகிழ்ச்சியான வாழ்வு. 'என் ஆடுகள் நிலைவாழ்வைப் பெறும்' என்று இயேசு சொல்கின்றாரே. இந்த நிலைவாழ்வை அல்லது நிறைவாழ்வை நாம் எப்படி மதிப்பிடுவது? 'மகிழ்ச்சி' என்ற அளவுகோலால்தான் மதிப்பிட முடியும். இன்றைய முதல் வாசகத்தில், பவுல் மற்றும் பர்னபா அறிவித்த வார்த்தைகளைக் கேட்டவுடன் மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். அதாவது, இவ்வளவு நாள்கள் அவர்கள் எவ்வளவோ போதனைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், இன்றுதான் மகிழ்ச்சி தரும் போதனையைக் கேட்கிறார்கள். ஆக, இன்று நம்மை நோக்கி வரும் ஆயனின் குரல்கள் பல இருக்கலாம். ஆனால், எது நமக்கு மகிழ்ச்சி தருகிறதோ அதுவே நல்லாயனின் குரல். சில குரல்கள் நம்மைக் கண்டிக்கும். சில குரல்கள் நம் மனத்தைக் குத்தும். சில குரல்கள் ஏன்டா கேட்டோம் என்று சொல்வது போல இருக்கும். ஆனால் வெகுசில குரல்களே அல்லது நல்லாயனின் ஒரு குரல் மட்டுமே நம் ஆன்மாவைப் பண்படுத்தி அங்கே மகிழ்வை விதைக்கும்.

3. செவிகொடுத்தலும் பின்பற்றுதலும். அருள்பணி மற்றும் துறவற வாழ்வைப் பற்றிச் சிந்திக்கும் நாளில், 'செவிகொடுத்தலும், பின்பற்றுதலும்' இன்று அருள்பணி இனியவர்களுக்கு இன்னும் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இறையழைத்தல் முகாம் சென்ற முதல் நாள் கேட்ட இறைவனின் குரல் படிப்படியாக மறைந்து போகும் அபாயமும், அல்லது இறைவனின் குரலைக் கேட்க விடாமல் நம் கவனத்தைத் திசைதிருப்பும் குரல்களும் எந்நேரமும் நம்மைச் சுற்றிக் கேட்கும். யாரின் கவனம் திசைதிரும்புகிறதோ, அவர் அல்லது அந்த ஆடு முன்னேறிச் செல்லமுடியாமல் தேக்க நிலையை அடைந்துவிடுகிறது. 'வந்தவரைக்கும் போதும்!' என்று ஓய்ந்திடத் துணிகிறது. இதற்கு மாற்றாக பவுல், 'விடாமுயற்சியோடும், ஆர்வம் மிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள்' (உரோ 12:11) என்கிறார். மேலும், ஏதோ ஒரு வாழ்க்கைச் சூழல் காரணமாக ஆயனின் குரலுக்குச் செவிமடுத்து, தொடர்ந்து பின்பற்ற முடியாமல், அல்லது பயணத்தில் சோர்வுற்ற ஆயன்களை (ஆடுகளை) நாம் கனிவோடும் பரிவோடும் பார்த்தல் வேண்டும்.

இறுதியாக,
இன்று நாம் கேட்கும் பல குரல்களில் அவருடைய குரல் எது என்று அறிந்த அதற்கு நான் செவிமடுத்தால், அவரை நான் பின்பற்றினால் எத்துணை நலம்!

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!