Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     10 ஜனவரி 2018  
                                       * பொதுக்காலம் ஆண்டின் 5ம் ஞாயிறு* - 3ம் ஆண்டு
     
=================================================================================
முதல் வாசகம்

=================================================================================
இதோ அடியேன் என்னை அனுப்பும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 6: 1-8

உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்; அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது. அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்; ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன; ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்; மற்ற இரண்டால் பறந்தனர்.

அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து: 'படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது' என்று உரத்த குரலில் கூறிக்கொண்டிருந்தார்.

கூறியவரின் குரல் ஒலியால் வாயில் நிலைகளின் அடித்தளங்கள் அசைந்தன; கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது.

அப்பொழுது நான்: "ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே"என்றேன்.

அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப் பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக்கொண்டு என்னை நோக்கிப் பறந்து வந்தார்.

அதனால் என் வாயைத் தொட்டு, "இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது" என்றார்.

மேலும் "யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?" என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, "இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்"என்றேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 138: 1-2a. 2bc-3. 4-5. 7c-8 (பல்லவி: 1b)
=================================================================================
 பல்லவி: தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.

1 ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
2a உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன்.
-பல்லவி

2bc உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.
3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.
-பல்லவி

4 ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர்.
5 ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது!
-பல்லவி

7உ உமது வலக் கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.
8 நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும்.
-பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
திருத்தூதர்கள் போதித்ததையே நாங்கள் பறைசாற்றுகிறோம்; நீங்களும் நம்புகிறீர்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (15: 1-11)

சகோதரர் சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள்.

நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே.

நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.

மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப் பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன்.

ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிடவில்லை. திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன்.

உண்மையில் நானாக உழைக்கவில்லை; என்னோடு இருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது. நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராய் இருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

அல்லது

குறுகிய வாசகம் :

திருத்தூதர்கள் போதித்ததையே நாங்கள் பறைசாற்றுகிறோம்; நீங்களும் நம்புகிறீர்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (15: 3-8,11)

சகோதரர் சகோதரிகளே, நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.

மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்.

பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர்.

பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார்.

எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார். நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராய் இருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
- இறைவா உமக்கு நன்றி.

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 19

அல்லேலூயா, அல்லேலூயா! "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்,"என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அனைத்தையும் விட்டுவிட்டு, சீடர்கள் இயேசுவைப் பின்பற்றினார்கள்.

புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (5: 1-11)

ஒரு நாள் இயேசு கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகை விட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார்.

அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.

அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, "ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்"என்றார்.

சீமோன் மறுமொழியாக, "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்"என்றார்.

அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையில் இருந்தன.

இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, "ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்"என்றார்.

அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர்.

சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள்.

இயேசு சீமோனை நோக்கி, "அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்"என்று சொன்னார்.

அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டுபோய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================

(எசாயா 6:1-8; 1கொரி 15:1-11; லூக்கா 5:1-11)

ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போ

நிகழ்வு

கான்சாஸ் நகரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் அற்புதமாக கேலிச் சித்திரங்களை வரையக்கூடியவன்.

ஒருநாள் அவன் தான் வரைந்து வைத்திருந்த கேலிச் சித்திரங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு, ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கேட்டுப்போனான். அந்த நிறுவனத்தில் இருந்தவர்களோ இளைஞன் கொண்டுவந்திருந்த கேலிச் சித்திரங்களைப் பார்த்துவிட்டு, "இந்த மாதிரிக் கேலிச் சித்திரங்களை எல்லாம் மக்கள் இரசித்துப் பார்க்கமாட்டார்கள்" என்று சொல்லி அனுப்பிவிட்டனர். இளைஞன் அதை நினைத்து வருத்தமடையாமல், மறுநாள் வேறு ஒரு நிறுவனத்திற்குச் சென்றான். அங்கேயும் அவன் வேறொரு ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியே அனுப்பி வைக்கப்பட்டான். இப்படி அவன் பல நிறுவனங்களின் வாசலை ஏறியபோதும், அவனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இதற்காக அவன் சிறிதும் மனதளராமல், ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்கினான்.

ஒருநாள் அவன் ஓர் அருட்தந்தையைச் சந்தித்து, வேலை கேட்டு நின்றான். அருட்தந்தையோ, "உனக்கு வேலை கொடுக்கிற அளவுக்கு இங்கு பெரிதாக வேலை எதுவும் இல்லை... வேண்டுமானால், இங்கேயே தங்கிக்கொண்டு ஆலயத்திற்கு விளம்பரப் பலகைகளைத் தயாரித்துக்கொடு" என்றார். அவனும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு, அருட்தந்தை கொடுத்த ஒரு சிறிய அறையில் தங்கிக்கொண்டு, ஆலயத்திற்கு வேண்டிய விளம்பரப் பலகைகளைத் தயாரித்துக் கொடுத்துக் கொண்டும் தன்னுடைய திறமைகளையும் வளர்த்துக் கொண்டும் வந்தான்.

அந்த இளைஞன் தங்கியிருந்த அறை கொஞ்சம் பாழடைந்திருந்தது. அதனால் அவ்வப்போது அந்த அறைக்குள் எலிகள் வந்துபோயின. நாளடைவில் எலிகளுக்கும் அவனுக்கும் இணக்கம் ஏற்பட, அவன் எலிகளை சற்று வித்தியாசமாக வரைந்து, மக்களுடைய பார்வைக்கு வைத்தான். ஒருகட்டத்தில் அவன் வரைந்த எலிகளைப் பற்றிய கேலிச் சித்திரங்கள் பிரபலமடையவே, அவன் பெரும் பணக்காரன் ஆனான். ஆம்- அந்த இளைஞனின் பெயர் வால்ட் டிஸ்டினி, அவன் வரைந்த கேலிச்சித்திரத்தின் பெயர் மிக்கி மவுஸ். இன்றைக்கு உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு மையங்களாக இருக்கக்கூடிய டிஸ்டினி லாண்டும் டிஸ்டினி வோல்ட்டும் இவருக்குச் சொந்தமானவை என்பது குறிப்பிடத் தக்கது.

தான் வரைந்த கேலிச் சித்திரங்கள் தொடக்கத்தில் பலராலும் புறக்கணிக்கப்பட்டபோது அதை நினைத்து மனந்தளராமல், தன்னுடைய திறமையின்மீது நம்பிக்கை வைத்து விடாமுயற்சியோடு போராடி, வாழ்க்கையில் வெற்றிகண்டார் வால்ட் டிஸ்டினி. நம்முடைய வாழ்க்கையில் வரும் சிறு சிறு தோல்விகளைக் கண்டு மனந்தளராமால், விடாமுயற்சியோடு, அதே நேரத்தில் நாம் எடுத்த காரியத்தில் மேம்போக்காக இல்லாமல், ஆழமாக சென்றால், வெற்றிகள் கைகூடுவது உறுதி.

பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நாம், இன்றைய இன்றைய நாளில் படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகத்தை அடிப்படையாகக் கொண்டு, 'ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போ' என்ற தலைப்பில் சிந்திக்க இருக்கின்றோம். எனவே, அதைக் குறித்து இப்போது பார்ப்போம்.

தோல்வியைச் சந்தித்த சீமோன்

நற்செய்தியில், இயேசு கெனசரேத்து ஏரிக்கரைக்கு வந்தபோது, அங்கு முந்தின நாள் இரவு, கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று, மீன்பாடு கிடைக்காமல் கரைக்குத் திரும்பி வந்து, வலைகளை அலசிக்கொண்டிருந்த சீமோனையும் அவருடைய கூட்டாளிகளையும் கண்டார். சீமோன் ஒரு மீனவர், அவருக்கு மீன்பிடிப்பதில் உள்ள நெளிவு சுழிவுகள் எல்லாம் தெரியும். அப்படியிருந்தும் அவருக்கும் அவருடைய கூட்டாளிகளுக்கும் இரவு முழுவதும் பாடுபட்டும் மீன் ஒன்றும் கிடைக்காமல் இருப்பது வியப்பாக இருக்கின்றது.

சில சமயங்களில், நமக்கு எல்லாம் அத்துப்பிடி என்று நினைத்துக்கொண்டிருக்கின்ற துறைகளில்கூட தோல்விகள் ஏற்படலாம். அத்தகைய தருணங்களில் நாம் மனமுடைந்து போகாமல், அடுத்த கட்டத்திற்கு நகர்வதுதான் நல்லது. முந்தின நாள் இரவு மீன்பிடிக்கச் சென்ற சீமோன், மீன் ஒன்றும் கிடைக்காததற்காக மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு ஓடிவிடவில்லை, மாறாக, அவர் வலைகளை அலசிக்கொண்டிருக்கின்றார். வலைகளை அலசுதல் என்பது, மீண்டுமாக மீன்பிடிக்கச் செல்வதற்கு தன்னையே தயார்செய்வதாக இருக்கின்றது.

ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய் வலைவீசிய சீமோன்

படகில் அமர்ந்தவாறே மக்களுக்குப் போதித்த இயேசு பின்னர் சீமோனிடம், "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்கிறார்.

இவ்வாறு சொன்ன இயேசுவிடம் பேதுரு விசனப்பட்டிருக்கலாம், 'இவர் தச்சரின் மகன்தானே, இவருக்கு எப்படி மீன்பிடிப்புப் பகுதி தெரியும், அதுவும் இந்தப் பகல்வேளையில் இப்படி ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கச் வலைகளைப் போடச் சொல்கிறாரே' என்று. ஆனால் அவர் அப்படியெல்லாம் விசனப்படாமல், "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்று படகை ஆழத்திற்கு இழுத்துக் கொண்டுபோய் வலைகளை வீசுகிறார். அதனால் வலையே கிழிந்து போகின்ற அளவுக்கு பெருவாரியான மீன்கள் கிடைக்கின்றன.
இங்கு பேதுரு, இயேசுவின் வார்த்தைகளின்மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையையும் இயேசுவின் வார்த்தைகளுக்கு அவர் கீழ்ப்படிந்து நடந்ததையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். வேறு யாராக இருந்தாலும் ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போகச் சொன்ன இயேசுவிடம், 'எல்லாம் எங்களுக்குத் தெரியும்' என்றுதான் சொல்லியிருப்பார்கள். ஆனால், பேதுருவோ அப்படிச் சொல்லாமல், இயேசுவின் வார்த்தைகளை நம்பி, அதன்படி நடக்கின்றார். அதனால் அதிசயத்தைக் கண்டுகொள்கிறார்.

மனிதர்களைப் பிடிப்பவராக மாறிய சீமோன்

சீமோன் (பேதுரு), இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு நடந்ததனால், நடந்த அதிசயத்தைக் கண்டு திகைத்துப் போய், "ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்" என்கின்றார். ஆனால் இயேசுவோ அவரிடம், "அஞ்சாதே! இதுமுதல் நீ மனிதரைப் பிடிப்பவர் ஆவாய்" என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகள், 'என் வாய் திக்கும்' (விப 4:10), 'நான் தூய்மையற்ற உதடுகளைக் கொண்டவன்' (எசா 6:5) , 'நான் சிறுபிள்ளைதானே' (எரே 1:6) என்று சொன்ன, மோசே, இறைவாக்கினர்களான எசாயா, எரேமியா போன்றோரிடம் ஆண்டவர் சொன்ன திடப்படுத்தும் வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துவதாக இருக்கின்றன.

மீன்பிடித் தொழிலைச் செய்து இயல்பாகவே பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான மன உறுதியையும் பொறுமையையும் இணைந்து உழைப்பதற்கான ஆற்றலையும் பெற்றிருந்த சீமோனால், திரு அவைக்குத் தலைமை தாங்கி வழிநடத்த முடியும் என்பதை அறிந்த இயேசு, அவரை மனிதர்களைப் பிடிப்பவர் ஆக்குகின்றார். பேதுருவும் ஆண்டவரிடத்தில் தன்னை முழுவதும் ஒப்படைத்துவிட்டு அவர் பணி செய்யப் புறப்படுகின்றார்.
சிந்தனை

ஒரு சாதாரண மீனவராக இருந்த சீமோன் பேதுரு, மனிதர்களைப் பிடிப்பவர்களாக மாறி, பின்னர் திரு அவைக்கே தலைவராக மாறினார் என்றால், அது அவர் இயேசுவை முழுமையாக நம்பி, அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்ததனாலேயே சாத்தியமானது. நம்முடைய வாழ்விலும் அது போன்ற அதிசயங்கள் நடக்கவேண்டும் என்றால், நாம் இறைவனை முழுமையாக நம்பி, அவருடைய வார்த்தைகளுக்குப் கீழ்படிந்து நடக்கவேண்டும்.
ஆகவே, நாம் இறைவன் மீது ஆழமான நம்பிக்கை வைத்து, அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
மீன்களால் நிரப்பப்பட்ட இரு படகுகளும் மூழ்கும் நிலையில் இருந்தன.
இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின்; கால்களில் விழுந்து,
'ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்' என்றார்" (லூக்கா 5:7-8)

அன்பார்ந்த நண்பர்களே!

-- கலிலேயாக் கடல் என்றழைக்கப்பட்ட கெனசரேத்து ஏரியில் மீன் பிடிக்கும் தொழில் சிறப்பாக நடைபெற்றது. பொதுவாக மீனவர்கள் இரவு நேரத்தில்தான் அங்கே மீன்பிடிப்பது வழக்கம். ஓர் இரவு முழுவதும் பாடுபட்ட பிறகும் சீமோன் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோருக்கு மீன் கிடைக்கவே இல்லை. காலை நேரத்தில் இயேசு அவர்களைச் சந்திக்கிறார். சீமோனின் படகில் இயேசு ஏறுகிறார்; அங்கிருந்து மக்களுக்குப் போதிக்கிறார். "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்"என இயேசு கூறியதும் பேதுருவுக்கு மீன் கிடைக்கும் என்னும் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் இயேசுவின் சொல்லுக்கு மதிப்புக் கொடுத்து அவர் வலை வீசுகிறார். மீன் கிடைக்காத நேரமாகிய பகல் பொழுதில் வலைகள் கிழியும் அளவுக்குப் பெருமளவு மீன் படுகிறது. இந்த அதிசயத்தைக் கண்ட பேதுரு இயேசுவின் கால்களில் விழுகிறார்; அவரை "ஆண்டவரே"என்றழைத்து, "நான் பாவி, என்னை விட்டுப் போய்விடும்"என்கிறார் (லூக் 5:8). இங்கே பேதுரு தன் தகுதியற்ற நிலையை ஏற்கின்ற அதே வேளையில் இயேசுவின் புனிதத் தன்மையையும் அறிக்கையிடுகிறார். இயேசுவை அவர் "ஆண்டவரே" என அழைப்பதும் கருதத் தக்கது. இயேசு மக்களுக்குப் போதிக்கும் போது, "நான் நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்"என இயேசு கூறுவார் (லூக் 5:32). இங்கோ பேதுரு தன்னைப் பாவி என அழைத்து, இயேசு தம்மை விட்டுப் போய்விட வேண்டும் எனக் கேட்கிறார். ஆனால் இயேசு பேதுருவை விட்டுப் போய்விடும் எண்ணத்தில் இல்லை.

-- மாறாக, தான் பாவி என்பதை உணர்ந்த அந்த பேதுருவைத் தான் இயேசு தனிப்பட்ட விதத்தில் அழைத்தார்; பேதுருவுக்கு ஒரு முக்கியமான பொறுப்பையும் அளித்தார். அதாவது, பேதுரு இனிமேல் மீன் பிடிக்கும் தொழிலை விட்டுவிட்டு இயேசுவுக்காக இன்னொரு தொழிலைச் செய்யப் போகிறார். அதாவது, மனிதர்களை இயேசுவிடம் அழைத்து வருவார். கடவுளின் உடனிருப்பை நாம் உணரும்போது நம் உள்ளத்தில் அச்சம் எழுவது இயல்பு. இங்கேயும் பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் அதிசயமான மீன்பாட்டைக் கண்டு "திகைப்புறுகிறார்கள்"; இயேசுவிடத்தில் துலங்கிய அதிசய சக்தியைக் கண்டு "அச்சமுறுகிறார்கள்". எனவே இயேசு சீமோனை நோக்கி, "அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்"என்று சொல்கிறார் (லூக் 5:10). இயேசுவின் சாவுக்கும் உயிர்த்தெழுதலுக்கும் பிறகு பேதுரு இயேசு பற்றிய நற்செய்தியை மக்களுக்குத் துணிச்சலோடு அறிவிப்பார். அவர்களை இயேசுவிடம் கொண்டு செல்வார். அந்த வரலாற்றை லூக்கா "திருத்தூதர் பணிகள்" நூலில் பதிவுசெய்துள்ளார் (காண்க: திப 2:14:41; 3:1-26; 4:1-22). மக்கள் மனம் மாறி, நற்செய்தியை ஏற்று, இயேசுவில் நம்பிக்கை கொள்வது கடவுளின் வல்லமையால் நிகழும் ஓர் அதிசயமே. என்றாலும், நற்செய்திப் பணியை ஆர்வத்தோடு செய்திட இயேசுவின் சீடர்கள் அழைக்கப்படுகிறார்கள. அவர்களும் "மனிதரைப் பிடிப்பவர்கள் ஆக வேண்டும்". படகு, வலை, திரளான மீன்கள் போன்றவை திருச்சபைக்கும், நற்செய்தி அறிவிப்புக்கும், கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கும் முறையே உருவகமாகப் பொருள் கொள்ளப்படுவதுண்டு.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

=================================================================================
திருப்பலி முன்னுரை :
=================================================================================


அழைக்கப்பட்டவர்களே,

பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். கடவுளுக்காக மனிதரைப் பிடிப்பவர்களாக மாற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது பாவத்தின் காரணமாக கடவுளின் பணியை செய்வதற்கான தகுதியை இழந்துவிட்டதாக கருத வேண்டியதில்லை என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். அதேவேளையில், கடவுளின் முன்னிலையில் நமது சிறுமை நிலையை ஏற்றுக்கொண்டு தாழ்ச்சியோடு வாழ வேண்டும் என்ற படிப்பினையும் நமக்கு வழங்கப்படுகிறது. சீமான் பேதுரு தன் சொந்த விருப்பத்தின்படி செயல்படாமல், இயேசுவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்ததால் அவருக்கு ஏராளமான மீன்கள் கிடைத்தன. நாமும் கடவுளின் திட்டத்துக்கு ஏற்ப வாழ்ந்து, அவரது அருளின் கொடைகளை நிறைவாய் பெற்றுக்கொள்ளவும், பேதுருவைப் போன்று ஆண்டவருக்காக மனிதரைப் பிடிப்பவர்களாய் மாறவும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

விசுவாசிகள் மன்றாட்டுகள்:

விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

திருப்பணிக்கு அழைப்பவராம் இறைவா,
உமது திருச்சபையில் வழிகாட்டிகளாக விளங்கும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது முன்னிலையில் தங்கள் சிறுமை நிலையை உணரவும், உம் பணிக்காக தங்களை முழுமையாக அர்ப்பணிக்கவும் துணைபுரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

மாட்சிமையின் மன்னராம் இறைவா,
எம் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், பிற சமய மக்கள் முன்னிலையில் வல்ல இறைவாக்கினராய் திகழ்ந்து, உமக்காக மனிதரைப் பிடிப்பவர்களாய் திகழ உதவி புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எம்மை கைப் பிடித்து நடத்தும் தந்தையே! எம் இறைவா!
எங்கள் குடும்பங்கள் இயேசுவின் மறைஉடலில் இணைந்திருக்கவும், ஒருவரை ஒருவர் அன்பிலும், செபத்திலும் தாங்கிக் கொள்ளவும், துன்பங்களில் ஆறுதலாக இருக்கவும், மகிழ்ச்சிப் பெருமையோடு பகிர்ந்துக் கொள்ளவும், குடும்பங்களில் உமதருள் நிறைந்திருக்கவும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

விடுதலையின் நிறைவே இறைவா,
பலவிதமான உடல், உள்ள, ஆன்ம நோய்களால் வருந்தும் மக்களை கனிவுடன் கண்ணோக்கி, அவர்களுக்குத் தேவையான நற்சுகமும், புதுவாழ்வும் அளித்து பாதுகாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா!
இன்றைய நாட்களில் உலகமெங்கும் நிலவும் போட்டிகளுக்கும், பயங்கரவாதத்திவிற்கும் முக்கியக் காரணமான அன்பில்லாமையைப் போக்கிடவும், அகதிகளாய் பிறநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த மக்களுக்கு வேண்டி அடைக்கலமும், அவர்களின் தனித்தன்மைகள் போற்றப்படவும், எல்லோரையும் தம் சகோதர சகோதரிகளாய் ஏற்றுக்கொள்ள நல் எண்ணங்களை அருளவேண்டி உம்மை மன்றாடுகிறோம்.

எமக்கு மன்னிப்பு அளித்து எமக்கு புதுவாழ்வை வாக்களித்த தந்தையே இறைவா!
எம் இளைய சமுதாயம் தனது வாலிப நாட்களில் நீர் தரும் நலன்களை கண்டுக் கொண்டு அதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள தூயஆவியானவரின் அருங்கொடைகளை அபரிமிதமாகப் பொழிந்தருளவேண்டும் என்ற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.




திருப்பலி முன்னுரை

கடவுளால் இயலாதது எதுவுமில்லை; தகுதியின்மையை தகுதிமிக்கவை ஆக்கவும், வெறுமையை நிறைவாக்கவும் ஆற்றல் படைத்த இறைவனில் நம்பிக்கை கொண்டவராய் வாழ பொதுக்காலம் 05ஆம் ஞாயிறு திருப்பலிக்கு நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம்.

இறைவன் தன்னில் உண்மையான நம்பிக்கை கொண்டவரின் தேவைகளைச் சந்திப்பவராகவும், கஷ்டங்களில் கை தூக்கி விடுபவராகவும் இருக்கிறார் என்ற நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வோம்.

யுத்தம் பல செய்து நித்தம் போராடுகிறோம்; வசந்தமான வாழ்வுக்காக அல்ல; நம் வாழ்வை நாம் வாழ்வதற்காக. இந்த யுத்தத்தில் வாகை சூட இறைவனின் கரம் பற்றிக் கொள்வோம்.

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர், தூய்மையற்ற உதடுகளைக் கொண்டவர் என தம் தகுதியின்மையை இறைவனிடம் புலம்புகின்றார். ஆனால் இறைவனோ தகுதியின் பொருட்டு எவரையும் தேர்ந்து கொள்வதில்லை. பணியின் பொருட்டு அதற்குரிய தகுதியையும் தந்து வழிநடத்துகிறார். இளைஞனாகச் சுற்றி திரிபவனுக்கு குடும்பம் என்ற பணியைத் தந்து அதை நடத்திச் செல்ல தகுதி, திறமையைத் தருகின்றார். தனி ஒரு மனிதனை தலைவனாக்கும் திறமை நமக்கும் தரப்பட்டுள்ளது. கரங்களை கறைப்படுத்தாமல் நேர்மையாய் வாக்கு அளிக்கும்போது திறமையுள்ளவன் தலைவனாவான். நாடு நல்வழிப்பாதையில் பயணிக்கும். நாம் சிந்திப்போம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், "நான் பாவி, என்னை விட்டுப் போய்விடும்" என்கிறார் பேதுரு. ஆனால் இயேசு பேதுருவை அழைத்து, "அஞ்சாதே! இதுமுதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்" என்கிறார். இறைவன் அவரவர் திறமைக்கேற்ப பணியைப் பகிர்ந்தளித்து, பலரை இல்லறத்திற்கும் சிலரை துறவறத்திற்கும் தேர்வு செய்கின்றார். இறை அழைப்பு அனைவருக்கும் உண்டு. அவரவர் அழைப்பிற்கேற்ற வாழ்க்கையில் உண்மையும் நீதியுமாய் வாழ வேண்டியது நம் கடமை. 'கடவுளால் ஆகாதது எதுவுமில்லை' என்ற நம்பிக்கையில் வாழ வேண்டும். வெறுமையிலிருந்து மாபெரும் உலகை உருவாக்கிய இறைவனால் மட்டுமே மகிழ்ச்சியை எம் வாழ்வில் வயப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உடையோராய் இத்திருப்பலியில் இணைவோம்.

மன்றாட்டுகள்

1. 'நானே உங்களைத் தேர்ந்து கொண்டேன்' என்று இத்திருச்சபையை வழிநடத்த நீர் தேர்ந்தெடுத்துள்ள எம் திரு அவைப் பணியாளர்களை ஆசீர்வதித்து, பணி வாழ்வில் அவர்களை மக்களை பிடிக்கும் கருவிகளாகவும், நற்செய்திப் பணியின் பாதைகளில் ஏற்படும் தடைகளை உடைத்து தளராது நடைபோடவேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. திறமைக்கேற்ப பணியைப் பகிர்ந்தளிப்பவரே எம் இறைவா!
எம் நாட்டை ஆளும் தலைவர்கள், மக்கள் நலப் பணியில் ஈடுபட்டு தங்களது திறமைகளை நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கான செயல்களில் வெளிப்படுத்தவும், தாங்களும் நேர்மையோடு நடந்து, நாட்டை நேரிய பாதையில் வழிநடத்த தேவையான ஆற்றலைத் தர வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. வெறுமையை நிறைவாக்குபவரே எம் இறைவா
இவ்வுலகில் அன்றாட வாழ்க்கையை நகர்த்த பொருளாதார சுமையோடு போராடும் மக்களையும் கடின உழைப்பில் ஈடுபட்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் உயர்ந்து, வறுமை நீங்கி வளமான வாழ்வை தந்திடும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. ஆற்றலின் பிறப்பிடமே எம் இறைவா!
எம் பகுதியில் நீர்வளம் சிறந்து வேளாண்மை ஏற்றம் பெறவும், பொருளாதாரம் உயர்ந்து, குடும்பங்களில் சமாதானம், சந்தோஷம் பெருகவும், படிக்கும் பிள்லைகளின் ஆற்றல் மேம்படவும், நல் வேலைவாய்ப்புகளைப் பெற்று மகிழவும், திருமணம், குழந்தை வரம் வேண்டுவோர் பெற்று மகிழவும்வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!