Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                       07  ஐனவரி 2018  
                                                            ஆண்டவரின் திருக்காட்சி
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6

எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்! பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்.

உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர்.

அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; சேபா நாட்டினர் யாவரும் பொன், நறுமணப் பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
 
பதிலுரைப் பாடல்தி.பா: 72: 1-2. 7-8. 10-11. 12-13 (பல்லவி: 11)
=================================================================================

பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக. பல்லவி

7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். பல்லவி

10 தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள். 11 எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள். எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். பல்லவி

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பல்லவி================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளர் என இப்போது வெளியாக்கப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 2-3ய,5-6

சகோதரர் சகோதரிகளே, உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது.

அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 2: 2

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 
அரசரை வணங்க வந்திருக்கிறோம்.  

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்" என்றார்கள்.

இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்றுகூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.

அவர்கள் அவனிடம், "யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில், "யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்" என்று இi றவாக்கினர் எழுதியுள்ளார்" என்றார்கள்.

பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்துகொண்டான்.

மேலும் அவர்களிடம், "நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்" என்று கூறி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.

அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றி குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.

அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.

வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.

ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
மூன்று ஞானிகள் விழா!

ஹென்றி வான் டிகே (Henry Van Dyke) என்ற எழுத்தாளர் எழுதியிருக்கக்கூடிய ஒரு கற்பனைக் கதைதான் நான்காவது ஞானி என்பதாகும்.

விண்ணில் ஒரு மிகப்பெரிய அடையாளம் தோன்றியதைப் பார்த்த கீழ்த்திசை ஞானிகளான கஸ்பார், மெல்கியோர், பல்தசார் போன்றோர் அரசர் ஒருவர் பிறந்திருக்கின்றார் என்று உறுதி செய்துகொண்டு, புதிதாகப் பிறந்திருக்கின்ற அரசரைக் காண யூதேயாவை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களோடு அர்த்தபான் என்ற நான்காவது ஞானியும் புறப்படுவதாய் இருந்தது. அவர் அவர்களோடு சேர்ந்து போகவதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டு, பிறந்திருக்கும் குழந்தைக்குப் பரிசளிக்க முத்துகளையும் எடுத்துக்கொண்டு கிளம்பியபோது வழியில் பெண் ஒருவர் குற்றுயிராய்க் கிடந்தார். எனவே, அர்த்தபான் அவருக்கு பணிவிடை புரிந்து, அவரைக் குணப்படுத்திவிட்டு, தன்னிடம் இருந்த முத்துகளில் ஒன்றை அவருக்குக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.

இதற்கிடையில் அர்த்தபான் வருவார் என்று நீண்ட நேரமாகக் காத்திருந்த மற்ற மூன்று ஞானிகளும், அவர் வரக் காலம் தாழ்த்தியதால், அவரை விட்டுவிட்டுக் கிளம்பிப் போய்விட்டார்கள். அவர்கள் போனபின்பு அர்த்தபான் விண்மீனின் வழிகாட்டுதலில் கொஞ்சம் தாமதமாகவே யூதேயாவிற்குச் சென்றார்.

இந்த நேரத்தில் ஏரோது மன்னன், பெத்லகேமையும் அதனைச் சுற்றிலும் உள்ள ஊர்களிலும் இருந்த இரண்டு வயதுக்கும் அதற்கு உட்பட்ட குழந்தைகளையும் கொல்வதற்கு ஆணை பிறப்பித்திருந்தான். அவனுடைய ஆணைக்கிணங்க படைவீரர்கள் இரண்டு வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளை கொல்கின்ற வேலையில் இருந்தபோது அர்த்தபான் ஒரு வீட்டின் அருகே இருந்தார். அந்த வீட்டின் உள்ளே இரண்டு வயத்துக்கும் குறைவான வயதில் குழந்தை ஒன்று இருந்தது. படைவீரன் ஒருவன் அந்த வீட்டில் இருந்த குழந்தையைக் கொல்வதற்கு முயன்றபோது அர்த்தபான் படைவீரனுக்கு தன்னிடத்தில் இருந்த முத்துகளில் ஒன்றை கையூட்டாகக் கொடுத்து, அந்தக் குழந்தையைக் காப்பாற்றினார். இவ்வாறு அவர் ஒவ்வொரு முறையும் மெசியாவைக் காண முயன்றபோது எதாவது ஒரு தடங்கல் ஏற்பட்டு அவரைக் காணமுடியாமலே போய்க்கொண்டிருந்தது.

மெசியாவை எப்படியாவது பார்த்து, அவருக்கு தன்னிடம் இருக்கும் முத்தைப் பரிசாகக் கொடுத்துவிட வேண்டும் என்று அர்த்தபான் பல ஆண்டுகளாக எருசலேம் வீதிகளில் ஒரு பக்கிரியைப் போன்று அலைந்துகொண்டிருந்தார். இப்படி அவர் அலைந்துகொண்டிருந்தபொது தேவைப்படுவோருக்கு எல்லாம் தன்னிடம் இருந்த முத்தைக் கொடுத்து அவர் உதவிசெய்து வந்தார். இதனால் அவரிடமிருந்த முத்துக்கள் குறைந்துகொண்டே போயின.

ஒருநாள் அவர் எருசலேம் வீதிகளில் அலைந்துகொண்டிருந்தபோது மெசியா போகிறார் என்று கேள்விப்பட்டு, அர்த்தபான் அவரைப் பார்க்க விரைந்து சென்றார். அங்கோ மெசியா எனப்படும் இயேசு ஒரு குற்றவாளியைப் போன்று சிலுவை சுமந்துகொண்டு போய்க்கொண்டிருந்தார். அவருக்குப் பரிசு கொடுக்க தன்னுடைய ஆடைக்குள் கைவிட்டுப் பார்த்தபோது, அவரிடமிருந்து முத்துக்கள் ஏற்கனவே தீர்ந்துபோயிருந்தது தெரிய வந்தது. மெசியாவிற்கு தன்னால் பரிசு ஒன்றும் கொடுக்க முடியவில்லையே என்று அவர் கதறி அழுதார். அப்போது மெசியா என்னும் இயேசு அவரிடம், "மிகச் சிறியோராகிய இவர்களுக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தாய்" என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

மெசியாவைக் காணவேண்டும், அவருக்குத் தன்னிடம் இருக்கின்ற பரிசினைத் தரவேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு செயல்பட்ட அர்த்தபான் என்ற அந்த நான்காவது ஞானி, நாமும் நம்மிடம் இருப்பவற்றை ஆண்டவர் இயேசுவுக்குத் தரவேண்டும் என்ற சிந்தனையை நம்முடைய உள்ளத்தில் விதைக்கின்றார். நாம் இயேசுவுக்கு என்ன பரிசினைத் தரப்போகின்றோம் என்று சிந்தித்துப் பார்த்துக்கொள்வோம்.

இன்று நாம் மூன்று ஞானிகளின் விழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றோம். ஆண்டவர் இயேசுவைக் காணவேண்டும், அவருக்குத் தங்களிடம் இருக்கின்ற பரிசினைத் தரவேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்ட அந்த ஞானிகளின் நல்ல உள்ளம் நம்மை வியக்க வைக்கின்றது. இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்று நாம் கொண்டாடக்கூடிய இந்த மூன்று ஞானிகள் விழா அல்லது திருக்காட்சிப் பெருவிழாப் நமக்கு ஒருசில ஆழமான உண்மைகளை எடுத்துக் கூறுகின்றது. அவை என்னென்னவென்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

திருக்காட்சிப் பெருவிழா என்று சொல்கின்றபோது மெசியா என்னும் இயேசு தன்னை எல்லா மக்களுக்கும் வெளிப்படுத்தியதைதான் இன்று நாம் சிறப்பாக நினைவுகூர்ந்து பார்க்கின்றோம். இயேசுவைக் காணவந்த அந்த மூன்று ஞானிகளும் யூதர்கள் கிடையாது, அவர்கள் அனைவரும் புறவினத்தார். ஆண்டவருக்கு எல்லாரும் தன்னுடைய பிள்ளைகள், எல்லாரும் மீட்புப் பெறவேண்டும் என்பதுதான் திருவுளம். அதனால்தான் அவர் தன்னை புறவினத்தாருக்கும் வெளிப்படுத்துகின்றார்.

கீழ்த்திசை ஞானிகள் மூவர் இயேசுவைப் பார்க்க வந்த நிகழ்வு முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா கூறுகின்ற, "பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயப் கதிர்நோக்கி நடைபோடுவர்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும்" என்ற வார்த்தைகளோடு ஒத்துப் போவதை நம்மால் பார்க்கமுடிகின்றது. பிற இனத்தாரும் எருசலேமை/ ஆண்டவரை நோக்கி வருகின்றார்கள் என்றால், இறைவன் எல்லாருக்கும் பொது என்னும் உண்மையைத் தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும். இறைவன் எல்லாருக்கும் பொது என்றால், நாம் அனைவருமே சகோதர சகோதரிகள்தான் என்பதுதான் உண்மை. ஆகவே, கடவுள் எனக்குத்தான் சொந்தம், இந்தக் கோவில் என்னுடைய இனத்தாருக்குத் தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடுவதுகூட, நாம் கடவுளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் வெளிப்படையாகின்றது.

திருக்காட்சிப் பெருவிழா நமக்கு உணர்த்துகின்ற இரண்டாவது முக்கியமான செய்தி ஆண்டவர் நம்மைத் தன்னுடைய ஆசிரால் நிரப்பப் போகின்றார் என்பதாகும். பல்வேறு இடர்பாடுகளையும், இக்கட்டுகளையும் எதிர்கொண்டு, இறுதியில் ஆண்டவர் இயேசுவை குழந்தை இயேசுவின் வடிவில் சந்தித்த ஞானிகள் மட்டில்லா மகிழ்ச்சி அடைகின்றார்கள் (மத் 2:10). அவர்களுக்கு ஆண்டவர் இயேசுவின் திருக்காட்சி நிச்சயமம் மனநிறைவையும், மகிழ்ச்சியையும், எல்லா விதமான ஆசீர்வாதத்தையும் தந்திருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆகையால், யாராரெல்லாம் நேர்மையான மனதோடு ஆண்டவரைத் தேடிச் செல்கின்றாரோ அவர்களுக்கு இறைவன் தன்னுடைய ஆசிர்வாத்தைத் தருவார் என்பது உண்மையில்ம் உண்மை.

முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர், "எழு, ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது; ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! (60: 1) என்கின்றார். ஆம், ஆண்டவர்தாமே வேற்று நாட்டில் அடிமைகளைப் போன்று வாழ்ந்து வந்த இஸ்ரயேல் மக்களை, அவர்களுடைய சொந்த நாட்டிற்கு அழைத்து வந்து, அவர்கள்மீது தன்னுடைய மாட்சியைத் தோன்றச் செய்து, அவர்களை எல்லா ஆசிராலும் நிரப்புகின்றார். ஆகையால், ஆண்டவருடைய வருகை, அவருடைய திருக்காட்சி எல்லா மக்களுக்கும் எல்லா விதமான ஆசிர்வாதங்களையும் தருகின்றது என்ற உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

நிறைவாக, இவ்விழா உணர்த்துகின்ற செய்தி இறைவனிடமிருந்து ஆசிர் பெறவேண்டுமானால், அவருடைய சொந்த மக்களாக மாறவேண்டும் என்றால், அவருடைய திருக்காட்சியைக் காணவேண்டும் என்றால், நாம் அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழவேண்டும் என்பதாகும்.

நற்செய்தியில் ஆண்டவருடைய திருக்காட்சி எங்கோ இருந்து வந்த மூன்று ஞானிகளுக்கு கிடைத்தது, ஆனால் இயேசு இருந்த பகுதியிலே இருந்த ஏரோதுக்கும், அவனைச் சார்ந்தோருக்கும் கிடைக்கவில்லை. காரணம் மூன்று ஞானிகளும் கடவுளுக்கு உகந்த வழியில் நடந்து, நேர்மையான உள்ளத்தோடு அவரைத் தேடினார்கள். ஆனால், ஏரோது அத்தகைய மனநிலையோடு தேடவில்லை, அவன் இயேசுவை எப்படியாவது கொன்றுபோடவேண்டும் என்ற மனநிலையோடுதான் தேடினான். அதனால்தான் அவனுக்கு ஆண்டவனுடைய திருக்காட்சி கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் எங்கிருந்தோ வந்த ஞானிகள் ஆண்டவருக்கு உகந்தவர்களாக மாறினார்கள். ஆனால், அங்கிருந்த ஏரோதும் அவனைச் சார்ந்தவர்களும் ஆண்டவருக்கு உகந்தவர்களாகவில்லை. ஆகையால், நாம் எந்த நாடு, எந்த குலம், எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பது முக்கியம் கிடையாது. நாம் செய்யகூடிய செயல்கள்தான் முக்கியத்துவம் பெறுகின்றன.

தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்று சொல்லிக்கொண்ட யூதர்களோ இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளாமல், அவரைக் கொல்ல முயன்றார்கள். ஆனால், யூதரல்லாத புறவினத்தாராகிய நூற்றுவத்தலைவர், மூன்று ஞானிகள் இது போன்றவர்கள் ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு அவரை மெசியாவாக ஏற்றுக்கொண்டார்கள். ஆகையால், நாம் சார்ந்திருக்கும் குலமோ, சமயமோ, இனமோ அல்ல நம்முடைய செயல்கள்தான் நம்மை இறைவனுக்கு நெருக்கமாக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.

குருவானவர் ஒருவர் தனக்கு அறிமுகமான தொழிலதிபருடைய தொழிற்சாலைக்குச் சென்றார். சென்ற இடத்தில் அவருடைய பங்கைச் சார்ந்த ஜான் என்பவர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். தொழிலதிபரிடம் அவரைச் சுட்டிக்காட்டிப் பேசிய குருவானவர், "இந்த ஜான் என்பவர் என்னுடைய பங்கைச் சார்ந்தவர்தான். வேலையெல்லாம் நன்றாகப் பார்க்கின்றார்தானே?" என்று கேட்டார். தொழிலதிபர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். குருவானவர் தொடர்ந்து அவரிடம் கேட்க, தொழிலதிபர், "உங்களுடைய பங்கைச் சார்ந்த கிறிஸ்தவர் என்றுதான் நான் இவரை வேலையில் அமர்த்தினேன். ஆனால், பெரிதாகச் சொல்லுகின்ற அளவுக்கு இவர் அப்படியொன்றும் வேலை பார்ப்பதில்லை; வேலையிலும் நேர்மையில்லை" என்று பட்டெனச் சொல்லிவிட்டு அமைதியானார். குருவானவருக்கு ஏதோபோல் ஆகிவிட்டது. "கிறிஸ்தவன் என்று சொல்லிவிட்டு, கிறிஸ்தவ நெறிக்குத் தகாக வாழ்க்கை வாழ்கின்றானே இந்த ஜான்" என்று அவனை நினைத்து நினைத்தது நொந்துகொண்டார்.

ஆம், நாம் சேர்ந்திருக்கும் மதமோ, குலமோ நம்மை இறைவனுக்கு உகந்தவர்களாக மாற்றாது. நம்முடைய செயல்கள்தான் நம்மை இறைவனுக்கு உகந்தவர்களாக மாற்றும். பவுலடியார் இதைதான் நற்செய்தியின் - நற்செயலின் - வழியாக பிற இனத்தவரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகின்றனர் என்கின்றார்.

ஆகவே, இன்று நாம் கொண்டாடும் திருக்காட்சிப் பெருவிழாவை அர்த்தமுள்ளதாக்க கடவுள் எல்லாருக்கும் பொது என்பதை உணர்வோம், அது மட்டுமல்லாமல் நற்செயல்களால் அவருக்கு உகந்த மக்களாக, அவருடைய திருக்காட்சியைக் காணும் பேறு பெறுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
அவரது விண்மீன்!

ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா
(ஜனவரி 7, 2018)

எசாயா 60:1-6
எபேசியர் 3:2-3,5-6
மத்தேயு 2:1-12

கீழைத்திருச்சபையின் கிறிஸ்துமஸ் என்று அழைக்கப்படும் திருக்காட்சிப் பெருவிழாவை இன்று நாம் கொண்டாடுகின்றோம். "கிறிஸ்துவில்தான் எம் மீட்பு என்னும் மறைபொருளை புறவினத்தாருக்கு ஒளியாக இன்று வெளிப்படுத்தினீர்" என்று புகழாரம் சூட்டுகிறது இன்றைய நற்கருணை மன்றாட்டு தொடக்கவுரை. இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் மையமாக இருக்கின்ற வார்த்தை "ஒளி." "எழு! ஒளிவீசு!" என்று எருசலேமை நோக்கி இறைவாக்கு உரைக்கின்ற எசாயா, அடிமைத்தனத்திற்குப் பின் இஸ்ரயேல் அடையும் மாட்சியை முன்னுரைக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் "விண்மீன்" காட்டிய ஒளியில் இயேசுவைக் கண்டுபிடிக்கின்றனர் கீழ்த்திசை ஞானியர்.

நாம் வாழும் இன்றைய உலகம் ஃப்ளாஷ் லைட்களின் உலகம். எந்நேரமும் நாம் ஏதாவது வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். நம் அறையில் எரியும் மின்விளக்குகளின் வெளிச்சம், நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் ஃபோன்களின் வெளிச்சம், எல்.இ.டி டிவிக்கள் உமிழும் வெளிச்சம், நம் மடிக்கணிணியின் ரெட்டினா திரை வெளிச்சம், செல்ஃபி எடுக்கும்போது தானாகவே ஒளிரும் ஃப்ளாஷ் வெளிச்சம் என ஒளிசூழ் உலகில் இருக்கின்றோம்.

நாம் ஒரு பொருளை தெளிவாக பார்க்க ஒளி அவசியமாகிறது. அதாவது, ஒளி பட்டு எதிரொளித்தால்தான் பார்வையும் காட்சியும் சாத்தியமாகிறது. விண்மீன் காட்டிய வெளிச்சம் பெத்லகேம் குழந்தையை யூதர்களின் அரசராக ஞானியருக்குக் காட்டியது.

  அவரது விண்மீன் எது? 
  என் விண்மீன் எது? 
  நான் காணும் ஒளி என்ன?


இவ்வளவு நாட்களாக குழந்தை இயேசுவை சந்தித்தவர்கள் எல்லாம் இடையர்கள் மட்டுமே. வானதூதர்கள் செய்தி சொன்னதால் இவர்கள் பெத்லகேம் சென்று மெசியாவை சந்திக்கின்றனர். ஆனால், எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் தாங்களே ஓர் அடையாளத்தைக் கண்டறிந்து, அதைப் பின்பற்றி மெசியாவைக் கண்டவர்கள் ஞானியர் மட்டுமே.

"இந்த உலகில் மரணமும், நான் நடக்க வேண்டும் என நினைப்பது நடக்காமல் போகும் வரையிலும், நடக்கக் கூடாது என நினைப்பது எனக்கு நடக்கும் வரையிலும் கடவுளுக்கான தேடல் இருக்கும்" என்கிறார் சுவாமி விவேகானந்தர். நாம் இயல்பாகவே கடவுளைத் தேடுகிறோம். நாம் காண்கின்ற எதுவும் நமக்கு பொருள் தராதபோது, அல்லது முடியக்கூடிய பொருளையே தரும்போது நம் மனம் இயல்பாகவே மேல்நோக்கி எழும்பிவிடுகின்றது.

நாம் கடவுள் அனுபவம் பெற முடியுமா? கடவுளை நாம் எங்கே பார்க்கலாம்? கடவுளை நாம் எப்படி அறியலாம்?

ஏரோது நினைத்தான்: "என் அரண்மனை போதும். என் படைபலம் போதும். என் மனைவியர் போதும். உரோமைக்குக் கொடுக்கும் வரியை அதிகப்படுத்தினால், அதில் தனக்கு வரும் பங்கு போதும்." யூதக் குருக்களும், மறைவல்லுநர்கள் நினைத்தார்கள்: "தோரா என்னும் சட்டநூல்களைப் படித்தால் போதும். தொழுகைக்கூடங்களில் இதைப்பற்றிப் பேசினால் போதும். மக்களுக்குள் ஏதாவது பிரச்சினை என்றால் மோசே சட்டத்தை வைத்துத் தீர்ப்புச் சொன்னால் போதும். எருசலேம் ஆலயத்தின் காணிக்கை போதும். யாராவது கலகம் செய்தால் அவர்களை விலக்கி வைத்தால் போதும் அல்லது கல்லால் எறிந்து கொன்றால் போதும்".

யூதர்கள் நினைத்தனர்: "யாவே இறைவன் தன் சொந்த இனமாகத் தேர்ந்துகொண்ட இஸ்ராயேல் இனத்தில் பிறந்தால் போதும். மீட்பு கிடைத்துவிடும்" ஏரோதுக்கு அவனது பதவியே கடவுள். அவன் அரண்மனையே கோவில். யூதக்குருக்களுக்கும், மறைநூல் வல்லுநர்களுக்கும் சட்டமே கடவுள், எருசலேமே கோவில் (சமாரியர்களின் கெரிசிம் அல்ல!). அனைத்து யூத மக்களுக்கும் தங்கள் இனமே கடவுள், கோவில் எல்லாம்.

இந்த இரண்டையும் தாண்டி இறைவன் தன்னை வெளிப்படுத்தும் நிகழ்வைத்தான் இன்று நாம் கொண்டாடுகின்றோம்.

கடவுளைப் பற்றிய தேடலைப் புரிந்து கொள்ள முதலில் நாம் மூன்று சொல்லாடல்களைப் புரிந்து கொள்ள வேண்டும்:

அ. டிஸ்கவரி. ஒன்று "கவர்" செய்யப்பட்டிருக்கிறது. அதை ஒருவர் "அன்கவர்" அல்லது "டிஸ்கவர்" செய்கிறார். எடுத்துக்காட்டாக, "அமெரிக்கா" நமக்குத் தெரியாமல் "கவர்" செய்யப்பட்டிருக்கிறது. அதை கொலம்பஸ் "டிஸ்கவர்" செய்கிறார். "புவியீர்ப்பு விசை" நமக்குத் தெரியாமல் "கவர்" செய்யப்பட்டிருக்கிறது. அதை நியூட்டன் "டிஸ்கவர்" செய்கிறார். கண்ணுக்குத் தெரிகின்ற முடிவைப் பார்த்து கண்ணுக்குத் தெரியாத காரணத்தைக் கண்டுபிடிப்பது டிஸ்கவரி.

ஆ. இன்வென்ஷன். விரும்புகின்ற முடிவைப் பெறுவதற்காக அதற்காக காரணத்தை உருவாக்குவது. வெளிச்சம் இருக்க வேண்டும் என்பது எனது முடிவு. அதற்கான காரணமாக நான் மின்சாரத்தை உருவாக்குகிறேன் என உருவாக்குகிறார் எடிசன். ஆக, வேண்டுகின்ற ஒன்றை புதிய காரண உருவாக்கத்தில் பெற்றுக்கொள்வது இன்வென்ஷன்.

மேற்காணும் இரண்டு சொற்களால் கடவுளை அறிந்துவிட முடியாது.

கடவுளை நாம் டிஸ்கவரி செய்யவும் முடியாது. அவரை இன்வென்ட் செய்யவும் முடியாது. பின் அவரை எப்படிக் கண்டு கொள்வது?

. ரெவலேஷன். அதாவது, கடவுள் தாமே தன்னை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவது. காட்சி, இறைவார்த்தை அறிவித்தல், உணர்தல் இவை அனைத்தும் வெளிப்பாடுகள். இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 3:2-3,5-6) தூய பவுலடியார், "அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது" என்கிறார். ஆக, கடவுள் தாமே "தூய ஆவி வழியாக திருத்தூதருக்கும், இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்துகின்றார்."

எப்படி ஒவ்வொரு டிஸ்கவரி மற்றும் இன்வென்ஷனிலும் புதிய செயல் ஒன்று நடக்கிறதோ, அவ்வாறே ரெவலேஷனிலும் புதிய செயல்பாடு ஒன்று நடக்கிறது. பவுலைப் பொறுத்தவரையில், "பிற இனத்தாரும் உடன் உரிமையாளர் மற்றும் உடன் பங்காளிகளாக மாறுகிறார்கள்" என்பதே கடவுளின் புதிய செயல்பாடு.

ஆக, இறைவன் இயேசு கிறிஸ்து வழியாக தன்னை வெளிப்படுத்தி மற்ற இனத்தாரையும் தன் கைகளுக்குள் கூட்டிச் சேர்க்கின்றார்.

இதே செய்தி இறைவாக்காக இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 60:1-16) முன்வைக்கப்படுகிறது. பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்ட மக்கள் தாங்கள் மட்டும் திரும்பி வரப்போவதில்லை. மாறாக, மற்ற இனத்தாரையும் தங்களிடம் கூட்டிக்கொண்டு வருவர் என்பதே புதிய செயல்பாடு. இந்தப் புதிய செயல்பாடு எப்படி நடக்கிறது? "கடவுளின் மாட்சி வெளிப்படுத்துப்படுவதால்" நடக்கிறது. இங்கே புதிய பாரசீக அரசன் சைரசை இந்த ஒளி குறித்தாலும், மெசியா இறைவாக்கு அடிப்படையில் இது இயேசுவைக் குறிக்கிறது என்பது கிறிஸ்தவர்களின் புரிதல். கடவுளின் மாட்சி வெளிப்படுத்தப்பட்டவுடன் ஒரு புதிய புரட்டிப்போடுதல் நிகழ்வு நடைபெறுகின்றது. சிறைக்கைதிகளாக கால்கடுக்க நடந்து இழுத்துச் செல்லப்பட்ட புதல்வரும், புதல்வியரும் "தோளில் தூக்கிவரப்படுகின்றனர்." நகரமே வெறுமையாகிவிட்டது என்ற நிலை மாறி, "ஒட்டகங்களின் பெருந்திரள்களும், பொன்னும், நறுமணப்பொருளும் ஏந்திவரப்படுகின்றது."

இவ்வாறாக, கடவுள் தன்னை வெளிப்படுத்துகின்றார். அந்த வெளிப்பாடு புதிய செயலைக் கொண்டு வருகின்றது.

(முதல் வாசகம் எசா 60:1-6

1. பாட பின்புலம்

பாபிலோனிய படையெடுப்பினால் எருசலேம் களையிழந்து, இருள் கவ்விக் கிடக்கிறது. இன்னும் எருசலேமில் எஞ்சியிருந்த மக்கள் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, ஒவ்வொரு நாளையும் மெதுவாகக் கடத்திக் கொண்டிருக்கும்நேரம், எசாயா அவர்களுக்கு நம்பிக்கையின் செய்தியைத் தருகின்றார். இன்றைய முதல் வாசகப் பகுதியில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் இரண்டு: ஒளி, மாட்சி.

2. வார்த்தைகளும், விளக்கங்களும்
அ. "ஒளி." முதல் ஏற்பாட்டிலும், பண்டைக்கால இலக்கியங்களிலும் ஒளி என்பது வாழ்வின் உருவகம். ஒளி என்பது ஒரு இயற்கை உருவகம். பண்டைக்காலத்தில் ஒளி என்பது சூரியனை மையப்படுத்தியதாக மட்டுமே இருந்தது. சூரியன் வந்தால் நாள் வெளிச்சமாகிறது. பனி மறைகிறது. இருள் மறைகிறது. மலர்களும், செடிகளும் புத்துயிர் பெறுகின்றன. சூரியனின் மறைவு இருளையும், பனியையும் கொண்டுவந்துவிடுகிறது. ஒளி வரும்போது வாழ்வு வருகிறது. எருசலேம் இப்போது ஒளியிழந்து கிடக்கிறது அந்நியப்படையெடுப்பால்.

ஆ. "ஆண்டவரின் மாட்சி." ஒரு நகரம் அழிக்கப்பட்டால் அந்த நகரத்திலிருக்கும் கடவுள், நகரை விட்டு வெளியேறி விடுவார் என்பதும் நாம் பண்டைய இலக்கியங்களில் காணும் பண்பு. எருசலேம் நகரம் படையெடுக்கப்பட்டு, ஆலயம் தரைமட்டமாக்கப்பட்டவுடன், ஆலயத்தை நிரப்பியிருந்த கடவுளின் மாட்சி அகல்கின்றது. கடவுள் நகரை விட்டு வெளியே புறப்படுகின்றார். இப்படி அகன்று சென்ற மாட்சி திரும்ப வரும் என இறைவாக்குரைக்கின்றார் எசாயா. மேலும், எருசலேமிற்கு ஒளி தருவதும் கடவுளின் மாட்சியே. இதைத்தான் திருவெளிப்பாட்டு நூலிலும், புதிய எருசலேம் பற்றி காட்சி காண்கின்ற யோவான், "அந்நகருக்கு (புதிய எருசலேம்) ஒளி கொடுக்க கதிரவனோ, நிலாவோ தேவைப்படவில்லை. கடவுளின் மாட்சியே அதன் ஒளி. ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு" (திவெ 22:23) என்கிறார்.

இ. "கண்களை உயர்த்தி." "கண்களை உயர்த்துதல்" என்பது பார்ப்பதற்கான உருவகம். மேலும், குனிந்திருக்கும் கண்கள், தாழ்ந்திருக்கும் முகம் இனி வெட்கத்தால், அவமானத்தால் குனியாது, தாழாது என்றும், இனி எப்போதும் பெருமிதத்தால் உயர்ந்திருக்கும் நம்பிக்கை தெரிவிக்கிறார் இறைவாக்கினார்.

ஈ. "தொலைவிலிருந்து வரும் புதல்வர்." பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டோர். இவர்கள் இனி நடந்து வர மாட்டார்கள். மாறாக, சுமந்து வரப்படுவார்கள். ஆக, அவர்களும் மாட்சியோடு வருவார்கள்.

உ. "கடல் திரள்," "செல்வம்," "ஒட்டகத்திரள்," "பொன்," "நறுமணப்பொருட்கள்." வெறுமையும், சாம்பலும் மட்டும் எஞ்சியிருக்கும் எருசலேமை நோக்கி செல்வங்கள் வருகின்றன. மேலும், இங்கே மெசியாவின் பிறப்பு இறைவாக்கையும் காணலாம். அதாவது, பிறந்திருக்கும் மெசியாவைக் காண ஒட்டகத்திரளில் கீழ்த்திசை ஞானியர் வருவர் என்று இறைவாக்கினர் முன்னுரைப்பதாகவும் பொருள் கொள்ளலாம். மிதியான், ஏப்பாகு, சேபா என்று இங்கே குறிக்கப்பட்டுள்ள பகுதிகள் அனைத்தும் எருசலேமிற்கு கிழக்கே இருக்கும் பகுதிகள்தாம்.)

இரண்டாம் வாசகம் எபே 3:2-3,5-6

பிறஇனத்தாருக்கு தான் செய்யும் திருப்பணி பற்றி எபேசு நகரத் திருஅவைக்கு எழுதும் பவுல் இரண்டு விடயங்களைக் குறிப்பிடுகின்றார்: (அ) மறைபொருள், (ஆ) வெளிப்பாடு

அ. என்ன மறைபொருள்? அதாவது, கிறிஸ்து இயேசுவின் வழியாக அனைவரும் - புறஇனத்தார் உட்பட - வாக்குறுதியின் உடன் பங்காளிகள் ஆகியிருக்கின்றனர். அதாவது, மீட்பின் கதவுகள் யூதர்களுக்கு மட்டுமன்றி, எல்லாருக்கும் திறந்துவிடப்பட்டிருக்கிறது.

ஆ. எப்படி? இறைவெளிப்பாட்டால். இயேசுவே பவுலுக்கு இதை வெளிப்படுத்துகிறார்.

நற்செய்தி வாசகம் மத் 2:1-12

1. மத்தேயுவும் மற்ற நற்செய்தியாளர்களும்

ஞானியர் இயேசுவைக் காண வரும் நிகழ்வை மத்தேயு நற்செய்தியாளர் மட்டுமே பதிவு செய்கின்றார். மேலும், இயேசுவின் பிறப்பு பற்றி லூக்கா பக்கம், பக்கமாக எழுதித் தள்ள, மத்தேயுவோ, "ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்" என ஒற்றை வாக்கியத்தில் முடித்துவிடுகின்றார்.

மேலும், விண்மீன் பற்றிய குறிப்பு மத்தேயு நற்செய்தியில் மட்டுமே உள்ளது.

மத்தேயு நற்செய்தியில், யோசேப்பிற்கு கனவில் எச்சரிக்கை வருவதுபோல, ஞானியருக்கும் எச்சரிக்கை வருகிறது.

2. பழைய புரிதல்களும், புதிய சவால்களும்

அ. எத்தனை ஞானியர் வந்தனர்? மத்தேயு நற்செய்தியாளர் ஞானியர் என்று குறிப்பிடுகிறாரே தவிர, மூன்று என்று எண்ணிக்கையை குறிப்பிடவில்லை. அவர்கள் கொண்டுவந்த பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளத்தை வைத்து பாரம்பரியத்தில் நாம் மூன்று ஞானியர் எனக் குறிப்பிடுகிறோம். இவர்களுக்கு கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என பெயர்களும் கொடுத்திருக்கிறோம். நான்காம் ஞானியான அர்ட்டாபன் பற்றியும் ஒரு கதை உண்டு. ஆக, எத்தனை ஞானியர் என்பதை நாம் அறியோம். எண்ணிக்கையைக் குறிப்பிடுவதை மத்தேயு தவிர்ப்பதற்குக் காரணம், நம்மையும் ஞானியர் என்ற வட்டத்துக்குள் கொண்டுவரவே.

ஆ. நட்சத்திரம். ஏரோதைக் கண்டபின் நட்சத்திரத்தைக் கண்டார்களா? அல்லது நட்சத்திரத்தைக் கண்டபின் ஏரோதைக் கண்டார்களா? அல்லது இரண்டு முறை நட்சத்திரத்தைக் கண்டார்களா? - இதற்கான பதிலும் தெளிவாக இல்லை. மேலும், விண்மீன் ஏரோதின் அரண்மனையிலிருந்து அவர்களை இயேசு பிறந்திருக்கும் வீட்டிற்கு அழைத்து செல்கிறது.

இ. மரியாவும், இயேசுவும். வீட்டிற்குள் குழந்தையை மரியாள் வைத்திருக்கிறார். யோசேப்பைக் காணவில்லை. ஆனால், மத் 1:25ன் படி அந்த இடத்தில் யோசேப்பு இருந்திருக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கடவுளின் வெளிப்பாடு இரண்டு நிலைகளில் நடக்கிறது:

அ. விண்மீன்

ஞானியர் விண்மீன் எழுவதையும், நகர்வதையும் கண்டுகொள்கின்றனர். புறவினத்தாரின் நம்பிக்கையின்படி புதிய அரசரின் பிறப்பு விண்மீனால் அறிவிக்கப்படும். மேலும், யூதர்களின் நடுவில் விளங்கிய "மெசியா எதிர்நோக்கு" "யாக்கோபிலிருந்து தோன்றும் விண்மீன்" (காண். எண் 24:17, 1 கும்ரான்எம் 11:6) என்று அறியப்பட்டது. ஆக, விண்மீன் கீழ்த்திசை ஞானியரையும், எருசலேமின் யூதர்களையும் ஒருங்கே இணைக்கிறது. ஆனால், இந்த வெளிப்பாட்டை கீழ்த்திசை ஞானியர் கண்டுகொண்டனரே தவிர, எருசலேம்வாழ் யூதர்களும், குருக்களும், ஆட்சியாளர்களும் அதைக் கண்டுகொள்ளவில்லை. அல்லது பொருட்படுத்தவில்லை.

ஆ. கனவு

கனவுகள் வழியே கடவுளின் வெளிப்பாடு என்பது மத்தேயு நற்செய்தியாளர் பயன்படுத்தும் ஓர் இலக்கியக்கூறு. மத் 1:20, 2:12, 13, 19, 22, 27:19 என ஆறு இடங்களில் "கனவு" என்ற வார்த்தை வருகின்றது. முதல் ஏற்பாட்டு யாக்கோபு மற்றும் யோசேப்பு கதையாடல்களின் பின்புலத்தில் இதைப் பார்க்கும்போது, கனவின் வழியாக கடவுள் தன்னை வெளிப்படுத்துகின்றார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாகிறது.

"விண்மீன்" என்ற வெளி அடையாளத்தின் வழியாகவும், "கனவு" என்ற உள் அடையாளத்தின் வழியாகவும் கடவுள் தன்னை ஞானியருக்கு வெளிப்படுத்துகின்றார்.

மனிதச் செயல்பாட்டை விட இங்கே கடவுளின் வெளிப்பாடே முதன்மை பெறுகின்றது.

இந்த "அவரது விண்மீன்" நமக்கு வைக்கும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

1. "அவரது விண்மீன்" - "அவனது-அவளது விண்மீன்"

"அவரது விண்மீன்" ஞானியருக்கு இரண்டு முறை தெரிகின்றது. முதலில் தங்கள் நாட்டில். இரண்டாவது ஏரோதிடம் இருந்து வெளியே வந்தபின். ஆக, அவரது விண்மீனை நாம் கண்டுகொள்வதற்கு எங்கே இருக்கிறோம் என்பது தேவையன்று. நாம் எங்கே இருந்தாலும் அவரது விண்மீன் நமக்குத் தெரியும். நாம் பாவத்தில் இருந்தாலும், புனிதராய் இருந்தாலும், அவருக்கு அருகில் இருந்தாலும், அவரை விட்டுத் தொலைவில் இருந்தாலும் அவரது விண்மீன் நமக்குத் தெரியும். ஏரோதின் அரண்மனைக்கு வெளியே வந்தாலும் அவர்களுக்கு விண்மீன் தெரிகிறது. அதாவது, இருள், இறப்பு ஆட்சி செய்யும் ஏரோதுவைச் சந்தித்துவிட்டு வந்தாலும் அவரது விண்மீன் என் கண்ணுக்குத் தெரியும். ஆக, கடவுளின் வெளிப்பாட்டிற்கு யாரும் திரையிட முடியாது.

ஆனால், என்ன பிரச்சினை என்னவென்றால், பல நேரங்களில் "அவனது - அவளது விண்மீன்" என நானாகவே சில விண்மீன்களைக் கற்பனை செய்து கொள்வதுதான்.

எனது விண்மீன் எது? "அவரது விண்மீனா?" அல்லது "வேறு விண்மீனா?"

அவரது விண்மீன் மட்டுமே நின்று ஒளிரக் கூடியது. மற்ற விண்மீன்கள் எல்லாம் ஃப்ளாஷ் லைட்களே. அவைகளின் ஒளி சில நொடித்துளிகள் மட்டுமே.

2. "பிறந்திருக்கிறவர் எங்கே?"

தேடுவதை சரியான இடத்தில் தேடுதல் வேண்டும். தன் வீட்டுச் சாவியை எங்கோ தொலைத்துவிட்டு, தொலைத்துவிட்ட இடத்தில் தேடாமல், தெருவிளக்கின்கீழ்தான் வெளிச்சம் இருக்கிறது என்று அங்கே தேடிய முல்லாவைப் போல இல்லாமல், தேட வேண்டிய இடத்தில் தேட வேண்டும் மெசியாவை.

மெசியாவைத் தேடுகின்ற தேடலில் தேடுபவரும் தன்னைக் கண்டுகொள்கின்றார். அதுதான் அதில் உள்ள அற்புதம்.

"அவர் எங்கே?" என்று கேட்கின்ற கேள்வி, என்னை அறியாமலேயே, "நான் எங்கே?" என்ற கேள்வியை என்னுள் எழுப்பி விடுகிறது.

3. வந்த நோக்கம் நிறைவேறியது!

"வணங்க வந்தோம்" என வருகின்றனர். "வணங்கிவிட்டு" செல்கின்றனர்.

தங்கள் பயணத்தின் நோக்கம் எது என்பது அவர்களுக்குத் தெளிவாக இருந்தது. மேலும், அந்தத் தெளிவை செயல்படுத்தும் துணிவும் இருந்தது.

ஏரோதின் ஏமாற்று வார்த்தைகளும், எருசலேம் மக்களின் கலக்கமும், அரண்மனையின் பளபளப்பும் அவர்களின் பயணத்தை திசைதிருப்பவில்லை.

இன்று நான் என் பயணங்களில் திசைதிரும்புகின்றேனா? அலைக்கழிக்கப்படுகின்றேனா? அல்லது என் பயணம் பாதியிலேயே முடிந்துவிடுகிறதா?

4. "நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து"

வாழ்வின் மிகப்பெரிய அற்புதங்கள் நம் கண்களுக்குப் புலனாவதில்லை. கடற்கரையில் நின்றுகொண்டு கடலில் எவ்வளவு கண்ணீர்த் துளிகள் என்று எல்லாரும் எண்ணிக்கொண்டிருக்க, இந்த கடலே ஒற்றைத் தண்ணீர்த் துளி என்கிறார் கிப்ரான். ஒரு விதையைப் பார்க்கும்போதே அதில் ஒரு விருட்சத்தைப் பார்க்கவும், ஒரு கல்லைப் பார்க்கும்போதே அதில் ஒரு சிற்பத்தைப் பார்க்கவும், ஒரு குழந்தையைப் பார்க்கும்போதே அதில் ஒரு மெசியாவைப் பார்க்கவும் ஞானம் தேவை. அந்த ஞானம் இவர்களுக்கு இருந்தது. குழந்தையின் முன் ஞானியர் நெடுஞ்சாண்கிடையாய் விழுகின்றனர். மாட்டுத்தொழுவத்தில் ஞானம் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்துகிடக்கிறது.

"வலுவற்றிருப்பதன் மகிழ்ச்சி" என்ற சொல்லாடலை தன் "அன்பின் மகிழ்ச்சி" என்னும் திருத்தூது மடலில் இயேசுவுக்குப் பயன்படுத்துகின்றார் திருத்தந்தை பிரான்சிஸ். கடவுள் தான் ஒரு குழந்தையாக, வலுவற்றுப் பிறப்பதில் மகிழ்கின்றார். நெடுஞ்சாண்கிடைதான் உச்சகட்ட வலுவற்ற நிலை. நான் ஒருவர் முன் நெடுஞ்சாண்கிடையாய் விழுகிறேன் என்றால் அவர்முன் நான் முழுமையாக வலுவற்றவன் ஆகிறேன். அவருக்கு என்னை மிதிக்கவும் உரிமை உண்டு. தூக்கி விடவும் உரிமை உண்டு. நெடுஞ்சாண்கிடையாய் விழும்போது என் முகம் மறைகிறது. என் அடையாளம் மறைகிறது. என் கைகளும், கால்களும் செயலற்றுப்போகின்றன.

இன்று பல நேரங்களில் நான் வலுவோடு இருப்பதையே மகிழ்ச்சி எனக் கருதுகிறேன். என் படிப்பு, பெயர், புகழ், பணி, உறவுநிலை என அனைத்திலும் என்னை வலுவாக்கிக்கொள்ள நினைக்கிறேன். என் வல்லமையின் முன் மற்றவர்கள் பயப்பட வேண்டும் எனவும், சரணடைய வேண்டும் எனவும் நான் விரும்புகிறேன். ஆனால், வல்லமை என்பது "ரெலடிவ்". எப்படி? நான் வலுவானவன் என நினைத்துக் கொண்டு சிலரை என் முன் கூனிக்குறுக வைக்கிறேன். ஆனால், எனக்கு வலுவானவர் முன் நான் கூனிக்குறுகி நிற்கின்றேன். ஆனால், நான் என்னையே வலுவற்றதோடு ஒன்றிணைத்துக்கொண்டால் இப்படிப்பட்ட இருதலை வாழ்வு தேவையில்லை.

மேலும், நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தவர்கள் தங்களை வெறுமையாக்கியது மட்டுமல்லாமல், தங்களிடமிருந்த பொருள்களையும் - பொன், தூபம், வெள்ளைப்போளம் - வெறுமையாக்குகின்றனர். வலுவின்மையை முழுமையாக அணிந்து கொள்கின்றனர்.

5. "வேறு வழியாக நாடு திரும்பினார்கள்"

மெசியாவைச் சந்திப்பது இரண்டு வகைகளில் சவாலாக அமைகின்றது: (அ) மெசியாவின் முன் முழந்தாள்படியிட்ட கால்கள் மற்றவர் முன் முழந்தாள்படியிட தேவையில்லை. ஒளியின் முன், வாழ்வின் முன், குழந்தையின் முன் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தவர்கள், இருளின் முன், இறப்பின் முன், ஏரோதின் முன் நெடுஞ்சாண்கிடையாய் விழத் தேவையில்லை. அல்லது விழக்கூடாது. இரண்டும் வேண்டும் என்று இரண்டோடும் சமரசம் செய்துகொள்ள முயல்வது ஆபத்தில் போய் முடியும். (ஆ) மெசியாவை சந்திக்கும் நோக்கம் அங்கேயே அவரோடு ஒன்றித்துவிடுவதற்கு அல்ல. மாறாக, திரும்பி நம் ஊர் செல்வதற்கு. அவரைச் சந்தித்த ஒவ்வொருவரும் தங்கள் வீடு நோக்கியும், ஊர் நோக்கியும், உறவு நோக்கியும் செல்ல வேண்டும். குழந்தையோடு அமர்வதும், அதன் புன்சிரிப்பை பார்த்துக்கொண்டே இருப்பதும் மகிழ்ச்சி தரும். ஆனால், அந்த மகிழ்ச்சியை நான் என் வாழ்க்கை நிலைகளுக்குள், உறவு நிலைகளுக்குள் எடுத்துச் செல்தல் அவசியம்.

மேலும் சிந்திக்க,

அ. சில நட்சத்திரங்கள் வாழ்வில் ஒருமுறைதான் தோன்றும். சில அனுபவங்கள் நமக்கு வாழ்வில் ஒருமுறைதான் வரும். சிலரை நாம் வாழ்வில் ஒருமுறைதான் சந்திப்போம். ஆனால், நாம் அந்த நட்சத்திரத்தைக் காணத் தவறிவிட்டால், அதை ஒருபோதும் திரும்ப நம்மால் காணவே இயலாது. அன்று எருசலேம் வானில் தோன்றிய விண்மீனை எல்லாருமே பார்த்திருப்பார்கள். ஆனால், பார்த்த அனைவருமே அந்த விண்மீனைப் பின்பற்றவில்லை. விண்மீன் பலருக்கு பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்துகின்றது: விண்மீன் பற்றி கேட்ட ஏரோதுக்கு அதிர்ச்சி. தன் அரியணை பறிபோய்விடுமோ? என்ற கவலை. மறைவல்லுநர்களுக்கு அதைப்பற்றித் தெரிந்தது. ஆனால் அது எங்கேயோ? எப்போதோ? நடக்கும் நிகழ்வு என்று கண்டுகொள்ளாமல் இருந்தனர். சாதாரண மக்களுக்கு விண்மீன் ஒரு ஆச்சர்யம். ஆனால் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பார்க்கவே நேரமில்லை. விண்மீனைப் பின்தொடர எப்படி நேரம் இருக்கும்? ஆனால் இந்தக் கீழ்த்திசை ஞானியர் மட்டும் எப்படி விண்மீனைத் தொடர்ந்தனர்?

ஆ. "வணங்க வந்தார்கள். வணங்கினார்கள். திரும்பிச் சென்றார்கள்." அதாவது, ஒளியைக் கண்டவர்கள் இருளை வணங்குவதில்லை. இவர்கள் இயேசுவுக்கு செய்த மிகப்பெரிய வணக்கம் பொன்னோ, பொருளோ அல்ல. மாறாக, அவர்கள் ஏரோதுக்கு வணங்காததுதான். தங்கள் நோக்கத்தில் தெளிவாக இருக்கின்றனர். ஒளியை வணங்கியை கைகளைக் கொண்டு இருளை அவர்களால் வணங்க முடியாது. ஆகையால்தான், வேறு வழியாக நாடு திரும்புகிறார்கள்.

இ. "வெறுமையாக்கியதால் நிறைவடைந்தார்கள்." பொன், சாம்பிராணி மற்றும் வெள்ளைப்போளம் என்பது ஒருவரின் வாழ்நாள் சம்பாத்தியம். தங்களின் வாழ்நாள் சம்பாத்தியம் அனைத்தையும், ஒரு மாட்டுக்கொட்டகையில் வைத்துவிட்டு வெறுங்கையராய், ஏழையராய் நாடு திரும்புகின்றனர். "நாங்கள் வெறுமையாய் திரும்புகிறோம். ஆனால் எங்கள் உள்ளம் நிறைவாக இருக்கிறது!" என்றுதான் திரும்பியிருப்பார்கள் இந்த பெயர் தெரியா ஞானியர்.

ஈ. இரண்டு கேள்விகள்: 1. யூதர்களின் அரசராகப் பிறந்திருப்பவர் எங்கே? 2. விண்மீன் தோன்றியது எப்போது?" முதல் கேள்வியை ஞானியர் ஏரோதிடம் கேட்கின்றனர். இரண்டாம் கேள்வியை ஏரோது ஞானியரிடம் கேட்கின்றான். முதல் கேள்வியின் உட்பொருள்: எங்கே? இரண்டாம் கேள்வியின் உட்பொருள்: எப்போது? முதல் கேள்வி இடம் சார்ந்தது. இரண்டாம் கேள்வி நேரம் சார்ந்தது. மனிதர்களையும், மனிதர்களின் வரலாற்றையும் குறிப்பிடும்போது "இடம்", "நேரம்" என்ற இரண்டு அலகுகளை வைத்தே குறிப்பிடுகின்றோம். ஏதாவது ஒன்று நடந்தால் அது எங்கே எனவும், எப்போது எனவுமே கேட்கின்றோம். எங்கே, எப்போது என்ற இந்த இரண்டு வார்த்தைகள் நம் இருப்பை எடுத்துரைக்கின்றன. இந்த இரண்டு கேள்விகளும் இயேசுவின் பிறப்பை மையப்படுத்தி இருக்கின்றன. இந்தக் கேள்விகள் மனித வரலாற்றிற்குள் முழுமையாக இறைவன் நுழைந்து விட்டதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. எங்கே? எப்போது? இந்த இரண்டு கேள்விகள் தாம் நம் தேடலையும் அதிகமாக்குகின்றன. இன்றைய நற்செய்திப் பகுதியில் பெரிய கலாச்சார மாற்றங்கள் நிகழ்கின்றன. மூன்று புறவினத்தார் "யூதரின் அரசரைத்" தேடுகின்றனர். யூதர்களின் அரசன் எப்படி புறவினத்தாருக்கும் அரசராக இருக்க முடியும்? தங்கள் அரசர்களை தாங்களே கண்டுகொள்ளாதபோது மற்றவர்கள் அவரைத் தேடி வந்ததை ஏரோதும், எருசலேமும் எப்படி எதிர்கொண்டது?

உ. கண்களால் காண முடியாதவையே நம் வாழ்வை அதிகம் பாதிக்கின்றன. ஜென் துறவி ஒருவரிடம் சீடன் ஒருவன் வருகின்றான். புதிதாக வந்த சீடன் தோட்ட வேலை பார்க்க அனுப்பப்படுகிறான். அந்தச் சீடன் செடிகளுக்குத் தண்ணீர் விடும்போதெல்லாம் வேர்களுக்கு விடுவதற்குப் பதில் இலைகளுக்கும், பூக்களுக்கும் விட்டுக் கொண்டிருந்தான். கொஞ்ச நாளில் செடிகளெல்லாம் வாடிக்கொண்டிருப்பதையும், பூக்கள் விழுந்து கிடப்பதையும் காண்கின்ற துறவி, "என்ன ஆச்சு செடிகளுக்கு?" என்று கேட்கின்றார். "எனக்கு ஒன்றும் தெரியாது. நான் நன்றாகத் தான் தண்ணீர் விட்டேன்!" என்கிறான் சீடன். "எங்கே தண்ணீர் விடு பார்ப்போம்!" என்கிறார் துறவி. சீடனும் இலைகளுக்கும், பூக்களுக்கும் தண்ணீர் விடுகிறான். "வேர்களுக்கல்லவா நீர் விட வேண்டும்" என்று துறவி கேட்டதற்கு சீடன் சொல்கிறான்: "எப்படியும் தண்ணீர் இலைக்குத்தானே வரப்போகின்றது. ஆகையால் இலையிலேயே நீர் விடலாமே? ஏன் தண்ணீரை வேர்களில் வீணாக்க வேண்டும்!" "வேர்களின் விரிவுகளே இலைகள். வேர்களன்றி இலைகள் இல்லை. வேர்களைச் சார்ந்தே இலைகள் இருக்கின்றன. கண்ணுக்குத் தெரிவது மட்டும் பயன்தருபவை அல்ல. கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருப்பவையே அதிக மதிப்பு கொண்டவை" என்கிறார் துறவி. ஞானம் பெற்றான் சீடன். ஏரோதின் கண்ணுக்கும், எருசலேம் நகரத்தாரின் கண்ணுக்கும் மறைவாயிருந்தது, ஞானியருக்கு வெளிச்சமானது எப்படி?

இறுதியாக,

"அவரது விண்மீன்" ஏதோ அன்று தோன்றிய ஒன்று மட்டும் அல்ல.

அது இன்றும் தோன்றுகிறது.

நான் வலுவற்று இருக்கும்போது,

நான் என் பாதுகாப்பான கூட்டை விட்டு வெளியேற தயாராகும்போது,

நான் இருளின் முன் சமரசம் செய்து கொள்ள முயலாதபோது,

நான் என்னையே வெறுமையாக்கும்போது,

நான் என் வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொள்ளலாம் என நினைக்கும்போது,

இன்றும் தோன்றுகிறது.

அதை நான் தேடினால், கண்டுகொண்டால், பின்பற்றினால் எத்துணை நலம்!

அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Archdiocese of Madurai

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!