Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                       28  ஐனவரி 2018  
                                      ஆண்டின் பொதுக்காலம் 4 ஆம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவருடைய வாயில் வைப்பேன்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 18: 15-20

அந்நாள்களில் மோசே மக்களிடம் கூறியது: உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப் போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு. ஓரேபில் திருப்பேரவை கூடிய நாளில், நீ உன் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடி, "நான் இறந்து போகாதபடி, என் கடவுளாகிய ஆண்டவரின் குரலொலியை இனி நான் கேட்காமலும் இப்பெரும் நெருப்பை இனி நான் காணாமலும் இருப்பேனாக" என்று விண்ணப்பித்தபோது, ஆண்டவர் என்னை நோக்கி, "அவர்கள் சொன்னதெல்லாம் சரி" என்றார்.

உன்னைப் போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான். என் பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பேன்.

ஆனால், ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக்கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
 
பதிலுரைப் பாடல்தி.பா: 95: 1-2. 6-7. 8-9 (பல்லவி: 8b, 7c )
=================================================================================

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்.

1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். 2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். பல்லவி

6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். 7 அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! பல்லவி

8 அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். 9 அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 கன்னிப் பெண் தூயவராக இருக்கும் வண்ணம் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறையாக இருக்கிறார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 32-35

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.

மணமாகாதவர் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் மணமானவர் உலகுக்கு உரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் மனம் பிளவுபட்டுள்ளது.

மணமாகாத பெண்ணும் கன்னிப் பெண்ணும் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறை கொள்வதால் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் தூயோர் ஆகின்றனர்.

ஆனால் மணமான பெண், உலகுக்கு உரியவற்றில் அக்கறை கொள்வதால் எப்படித் தம் கணவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்.

உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, உங்கள் நலனுக்காகவே இதை நான் சொல்கிறேன். எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழு மனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக்கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 16

அல்லேலூயா, அல்லேலூயா! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது. அல்லேலூயா.


=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 21-28

ஒருமுறை இயேசுவும் அவர் சீடர்களும் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.

அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.

அவரைப் பிடித்திருந்த ஆவி, "நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்"" என்று கத்தியது.

"வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ" என்று இயேசு அதனை அதட்டினார்.

அப்பொழுது அத்தீய ஆவி அம் மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங் கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.

அவர்கள் அனைவரும் திகைப்புற்று, "இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!" என்று தங்களிடையே பேசிக்கொண்டனர்.

அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இயேசு என்னும் இறைவாக்கினர்களுக்கு எல்லாம் பெரிய இறைவாக்கினர்!

Tales to Hoffman என்னும் நூலில் இடம்பெறுகின்ற ஒரு நிகழ்வு.

ஒரு சமயம் கடலில் ஓர் அமெரிக்கக் கப்பல் போய்க்கொண்டிருந்தது. அந்தக் கப்பலின் மேல் தளத்தில் இருந்த குருவானவர் அங்கிருந்த மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். மக்களும் அவருடைய போதனையை வியந்து கேட்டனர்

அவருடைய போதனை முடிந்ததும் அவருடைய போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த கப்பல் பயணி ஒருவர் அவரிடம் வந்து, "தந்தையே! உங்களுடைய போதனை மிக அருமையாக இருந்தது" என்றார். "எதை வைத்து அவ்வாறு சொல்கின்றீர்?" என்று குருவானவர் அவரிடம் கேள்வி கேட்க அவர், "உங்களுடைய போதனை உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்தாக இருந்தது. மேலும் அது என்னுடைய உள்ளத்தைத் தொடுவதாக இருந்தது" என்றார்.

உள்ளத்திலிருந்து போதிக்கப்படும் எந்தவொரு போதனையும் / மறையுரையும் எப்போதும் பிறருடைய உள்ளத்தைத் தொடுவதாகவே இருக்கும்.

இப்படி சாதாரண இறையடியார்களின் போதனையே உள்ளத்தைத் தொடுவதாக, வியந்து பார்க்கக்கூடியதாக இருக்கும்போது இறைவாக்கினர்களுக்கு எல்லாம் பெரிய இறைவாக்கினராகிய இயேசுவின் போதனை எந்தளவுக்கு வல்லமையுள்ளதாக இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்.

பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் "இயேசு என்னும் இறைவாக்கினருக்கு எல்லாம் பெரிய இறைவாக்கினர்" என்னும் சிந்தனையைத் தருகின்றன. நாம் அதனைக் குறித்து சில மணித்துளிகள் சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று போதிக்கத் தொடங்குகின்றார். அவருடைய போதனையைக் கேட்ட மக்கள் வியந்துபோய் நிற்கின்றார்கள். மக்கள் வியந்து பார்க்கின்ற அளவுக்கு இயேசுவின் போதனை இருந்ததற்குக் காரணம் என்ன என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இயேசுவின் போதனை மக்களால் வியந்து பார்க்கக்கூடிய அளவுக்கு இருந்ததற்கு மூன்று முக்கியமான காரணங்களை நாம் சொல்லலாம். ஒன்று அவருடைய போதனை அதிகாரம் கொண்டதாக இருந்தது. பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் போதித்தபோது "அவர் சொன்னார்", "இதில் இப்படி இருக்கின்றது" என்றுதான் போதித்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ "நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்று போதிக்கின்றார். அதனாலே அவருடைய போதனை அதிகாரம் கொண்ட போதனையாகவும், மக்களால் வியந்து பார்க்கின்ற போதனையாக இருந்தது.

இரண்டாவது காரணம் ஆண்டவர் இயேசுவுக்கு அலகையும் கட்டுப்பட்டது. யூத போதகர்கள், சமயத் தலைவர்கள் மாய வித்தைகளை வைத்துக்கொண்டு அலகையை ஒட்டிவந்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ அப்படி இல்லை. அவர் தூய ஆவியின் துணையைகொண்டு அலகையை ஒட்டி வந்தார். திருத்தூதர் பணிகள் நூல் 10 ஆவது அதிகாரம் 38 ஆவது இறைவார்த்தை இதை மிக அழகாக எடுத்துரைக்கின்றது, "கடவுள் நாசரேத்து இயேசுவின் மேல் தூய ஆவியின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால், அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்". ஆகையால், இயேசுவின் போதனைக் கேட்டு வியப்பதற்கு காரணமாக அவர் அலகையின் மீது அதிகாரம் கொண்டிருந்ததையும் சொல்லலாம்.

மூன்றாவது காரணம் அவர் ஆண்டவர் சொன்னதையே போதித்தார் என்பதாகும். இஸ்ரயேலில் ஒரு சில (போலி) இறைவாக்கினர்கள் இருந்தார்கள். அவர்கள் கடவுள் சொல்லாதையும் கடவுள் சொன்னதாகப் போதித்தார்கள். இதனால் மக்கள் அந்த போலி இறைவாக்கினர்களின் போதனையால் தவறாக வழிநடத்தப்பட்டார்கள். ஆனால், ஆண்டவர் இயேசுவோ தந்தையாம் கடவுள் எதைப் போதிக்கச் சொன்னாரோ அதையே போதித்தார். அதைவிடவும் இயேசு தான் போதித்ததை வாழ்வாக்கினர், வாழ்ந்ததைப் போதித்தார். அதனாலேயே மக்கள் அவருடைய போதனையை வியந்து பார்த்தார்கள். ஆகையால், இயேசுவின் போதனை மக்களால் வியந்து பார்க்கக்கூடிய அளவுக்கு இருந்தது என்று சொன்னால் அவருடைய பேச்சில் அதிகாரம் இருந்தது, அவருடைய போதனைக்கு அலகையும் கட்டுப்பட்டது; அவர் வாழ்ந்ததையோ போதித்தார், போதித்ததையே வாழ்ந்தார் என மிக உறுதியாகச் சொல்லலாம். ஓர் உண்மையான இறைவாக்கினர் என்பவர் இறைவாக்கினருக்கு எல்லாம் பெரிய இறைவாக்கினராகிய இயேசுவைப் போன்று இருக்கவேண்டும் என்பதுதான் நாம் நம்முடைய மனதில் பதிய வைக்கவேண்டிய செய்தியாக இருக்கின்றது.

இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், ஓர் இறைவாக்கினர் என்பவர் யார்? அவருடைய பணிகள் என்ன? என்பதைக் குறித்து மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. நாம் அதனைக் குறித்து சிந்தித்துப் பார்த்துவிட்டு பெரிய இறைவாகினராகிய இயேசுவின் வழியில் எப்படி நடக்கலாம் என்ற முயற்சிப்போம்.

"ஓர் இறைவாக்கினனை உங்களுடைய (அவர்களுடைய) சகோதரர்களினின்று நான் உங்களுக்கு ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான். என் பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்கு செவிகொடுக்காதவனை நான் வேரருப்பேன்" என்று இன்றைய முதல் வாசகத்தில் நாம் படிக்கின்றோம்.

ஆம், ஓர் இறைவாக்கினன் என்பவர் மனிதரால் தேர்தெடுக்கப்படுகின்றவர் அல்ல, அவர் கடவுளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றவர்; கடவுளின் வார்த்தைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றவர். எனவே, அவரை ஏற்றுக்கொள்வது கடவுளை ஏற்றுக்கொள்வதற்கும், அவரைப் புறக்கணிப்பது கடவுளைப் புறக்கணிப்பதற்குச் சமமாக இருக்கின்றது. மத்தேயு நற்செய்தியில் இதைத்தான் ஆண்டவர் இயேசு, "உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கின்றார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கின்றார்" (மத் 10: 40) என்கிறார்.

பல நேரங்களில் கடவுளின் வார்த்தையை மக்களுக்கு எடுத்துச் சொல்கின்ற இறைவாக்கினர்கள்/ இறையடியார்கள் மக்களால் புறக்கணிக்கப்படுவது மிகவும் வேதனை தரக்கூடியதாக இருக்கின்றது.

1960 - களின் தொடக்கத்தில் ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள சூடானில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மிகப்பெரிய மதக்கலவரம் வெடித்தது. அப்போது அங்கிருந்த கிறிஸ்தவர்கள் எல்லாரும் தங்களுடைய உயிரை காத்துக்கொள்ள அண்டை நாடான உகாண்டாவிற்குத் தப்பி ஓடினார்கள். அப்படித் தப்பி ஓடிய கிறிஸ்தவர்களில் பாரிட் தபான் (Paride Thapan) என்ற சிறுவனும் அடங்கும். அவர் உகாண்டாவிற்கு சென்று, அங்கிருந்த குருமடத்தில் குருத்துவக் கல்வி பயின்று குருவாக மாறினார். ஒருசில ஆண்டுகளுக்குப் பிறகு சூடானில் அமைதி திரும்பியபோது அருட்தந்தை தபான் தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பினார்.

சூடானுக்குத் திரும்பிய பிறகு அருட்தந்தை தபானை பலோடகோ என்னும் பங்கில் பங்குத்தந்தையாக நியமித்தார்கள். அவரும் அந்தப் பங்கில் சிறப்பான பணிகளைச் செய்ய வேண்டும் என்று மிக ஆர்வமாகச் சென்றார். ஆனால், அவருக்கு அங்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அது என்ன அதிர்ச்சி என்றால், பலோடகா பங்கில் இருந்தவர்கள் அனைவரும் ஆங்கிலேயர்கள், இவரோ கருப்பினத்தைச் சார்ந்தவர். ஒரு கறுப்பினத்தைச் சார்ந்தவரை எப்படி பங்குக் குருவாக ஏற்றுக்கொள்வது என்று மக்கள் அவரைப் புறக்கணித்தார்கள். இதற்கிடையில் இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருச்சபையில் மிகப்பெரிய மறுமலர்ச்சியையும், மாற்றத்தையும் கொண்டு வந்தது. அவற்றையெல்லாம் அருட்தந்தை தபான் அமல்படுத்த முயன்றபோது, மக்களிடமிருந்து அவருக்கு அளவுக்கு அதிகமாக எதிர்ப்புகள் வந்தன. அவற்றையெல்லாம் தாங்கிகொண்டு இறைப்பணியை அவர் செவ்வனே செய்தார்.

ஒருகட்டத்தில் பங்கு மக்கள் அவர் செய்து வந்த நற்பணிகளைப் பார்த்து, அவரை மெல்ல ஏற்றுக்கொள்ளத் தொடங்கினார்கள்.

இறைப்பணியாளர்களும் இறையடியார்களும் எப்படி இன ரீதியாக, சாதிய ரீதியா மொழி ரீதியாக ஒதுக்கப்படுகின்றார்கள், புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்பதற்கு அருட்தந்தை தபான் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இன்றைக்கும் ஏராளமான இறையடியார்கள், குருக்கள் மக்களால் புறக்கணிக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதைப் பார்க்கின்றபோது நெஞ்சம் கனக்கின்றது.

இந்த இடத்தில் நாம் ஒரு முக்கியமான உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும். அது என்னவென்றால் இறைப்பணியாளர்களை வெறுப்பவர்களுக்கு, ஒதுக்கின்றவர்களுக்கு இறைவன் கொடுக்கின்ற தண்டனை. இன்றைய முதல் வாசகம் ஓர் இறைவாக்கினர் என்பவர் யார் என்பதை எடுத்துக்கூறுகின்ற அதே வேளையில் இறைவாக்கினரைப் புறக்கணிக்கின்றவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. "என் பெயரால் இறைவாக்கினர் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்காதவனை நான் வேரருப்பேன்" (இச 18:19) என்று ஆண்டவர் மிகக் கண்டிப்பாய் கூறுகின்றார். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூட இதை ஒத்த கருத்தினைத் தான் சொல்கின்றார், "உங்களை எவராவது ஏற்றுக்கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றிற்கு செவி சாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை அல்லது நகரைவிட்டு வெளியேறும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதவி விடுங்கள். தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப் பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையைவைத் அந்த நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்" (மத் 10: 14 -15).

ஆகையால், இறைப்பணியைச் செய்யும் இறைவாக்கினர்கள் இறைவனின் அடியார்கள் என்பதை உணர்வது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது. அது நேரத்தில் இறைவாக்கினர்களுக்கு எல்லாம் பெரிய இறைவாக்கினராகிய இயேசுவை ஏற்றுக்கொள்வதைக் கொண்டே நம்முடைய வாழ்வும் மீட்பும் அடங்கி இருக்கின்றது.

ஆகவே, நம் மத்தியில் இறைப்பணி செய்யும் இறையடியார்களுக்கு உரிய முக்கியத்துவம் தருவோம், இயேசுவே உண்மையான இறைவன், இறைவாக்கினருக்கு எல்லாம் பெரிய இறைவாக்கினர் என்பதை உணர்வோம். அவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Maria Antonyraj, Palayakottai.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!