Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     25  மார்ச் 2018  
                                     ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 இன்றைய திருப்பலி வாசகங்கள்:

1. எசாயா 50: 4-7,
2. திருப்பாடல் 22: 7-8. 16-17. 18-19. 22-23,
3. பிலிப்பியருக்கு 2: 6-11 ,
4. புனித மாற்கு எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 14: 1-15: 47.


குருத்தோலைப் பவனி :

ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக!


புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (11: 1-10)

இயேசு தம் சீடரோடு ஒலிவ மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களைஅனுப்பி, "உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.

யாராவது உங்களிடம், "ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" என்று கேட்டால், `இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பிவிடுவார்' எனச் சொல்லுங்கள்" என்றார்.

அவர்கள் சென்று ஒரு வீட்டு வாயிலுக்கு வெளியே, தெருவில் ஒரு கழுதைக் குட்டியைக் கட்டி வைத்திருப்பதைக் கண்டு அதை அவிழ்த்துக் கொண்டிருக்கையில், அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் அவர்களிடம், "என்ன செய்கிறீர்கள்? கழுதைக்குட்டியையா அவிழ்க்கிறீர்கள்?" என்று கேட்டனர்.

அவர்கள் இயேசு தங்களுக்குக் கூறியபடியே சொல்ல, அங்கு நின்றவர்களும் போகவிட்டனர்.

பிறகு அக்கழுதைக்குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து, அதன்மேல் தங்கள் மேலுடைகளைப் போட, அவர் அதன் மீது அமர்ந்தார். பலர் தங்கள் மேலுடைகளையும் வேறு சிலர் வயல்வெளிகளில் வெட்டிய இலைதழைகளையும் வழியில் பரப்பினர்.

முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், "ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று ஆர்ப்பரித்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

அல்லது

ஆண்டவர் பெயரால் வருபவர் போற்றப்பெறுக!

புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (12: 12-16)

அக்காலத்தில் பாஸ்கா திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், "ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!" என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்.

இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதன்மேல் ஏறி அமர்ந்தார். "மகளே சீயோன், அஞ்சாதே! இதோ! உன் அரசர் வருகிறார்; கழுதைக் குட்டியின்மேல், ஏறி வருகிறார்" என்று மறைநூலில் எழுதியுள்ளதற்கேற்ப அவர் இவ்வாறு செய்தார்.

அந்நேரத்தில் அவருடைய சீடர்கள் இச்செயல்களின் பொருளைப் புரிந்துகொள்ளவில்லை. அவரைப் பற்றி மறைநூலில் எழுதப் பட்டிருந்தவாறே இவையனைத்தும் நிகழ்ந்தன என்பது இயேசு மாட்சி பெற்ற பிறகே அவர்கள் நினைவுக்கு வந்தது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

திருப்பலி இந்த ஞாயிற்றுக்கிழமையில் தரப்பட்ட மூன்று வாசகங்களையும் வாசிப்பது நலம். ஆனால் ஆண்டவருடைய திருப்பாடுகளின் வரலாறு முக்கியமானதால், அதை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது. திருக்கூட்டத்தின் நிலைக்கு ஏற்றபடி, நற்செய்திக்கு முன் வரும் வாசகங்களில், ஒரு வாசகத்தை மட்டும் வாசிக்கலாம்.

அல்லது, தேவையானால் இரு வாசகங்களையும் விட்டுவிடலாம். மேலும் தேவையானால், திருப்பாடுகளின் குறுகிய வாசகத்தைப் பயன்படுத்தலாம். மேற்கூறியவை மக்களோடு சேர்ந்து நிறைவேற்றப்படும் திருப்பலிக்கே பொருந்தும்.

முதல் வாசகம்

நிந்தனை செய்வோர்க்கு என் முகத்தை மறைக்கவில்லை. இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 4-7

நலிந்தவனை நல் வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.

ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார். நான் கிளர்ந்தெழவில்லை. விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன்.

நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 22: 7-8. 16-17a. 18-19. 22-23 (பல்லவி: 1a)
=================================================================================
பல்லவி: என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?

7 என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,
8 "ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்புகூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்" என்கின்றனர்.
-பல்லவி

16 தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்.
17a என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்.
-பல்லவி

18 என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக்கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.
19 நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலையில் போய் விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.
-பல்லவி

22 உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
23 ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள்.
-பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 கிறிஸ்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்; எனவே கடவுளும் கிறிஸ்துவை உயர்த்தினார்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் (2: 6-11)

கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து, கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார்.

மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.

எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக `இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(பிலி 2: 8-9)
அல்லேலூயா, அல்லேலூயா! சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மாற்கு எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் (14: 1-15: 47)

பாஸ்கா என்னும் புளிப்பற்ற அப்ப விழா நிகழ இன்னும் இரண்டு நாள்கள் இருந்தன. தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ்வாறு சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலை செய்யலாம் என்று வழிதேடிக்கொண்டிருந்தனர்; ஆயினும், "விழாவின்போது வேண்டாம்; ஒருவேளை மக்களிடையே கலகம் ஏற்படக் கூடும்" என்று நினைத்தனர். இயேசு, பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கே பந்தியில் அமர்ந்திருந்தபோது இலாமிச்சை நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் வந்தார். அந்தத் தைலம் கலப்பற்றது, விலையுயர்ந்தது. அவர் அப்படிகச் சிமிழை உடைத்து இயேசுவின் தலையில் ஊற்றினார். ஆனால் அங்கிருந்த சிலர் கோபமடைந்து, "இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை முந்நூறு தெனாரியத்துக்கும் மேலாக விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே," என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அப்பெண்மீதும் சீறி எழுந்தனர். இயேசு அவர்களிடம், "அவரை விடுங்கள். ஏன் அவருக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவர் எனக்குச் செய்தது முறையான செயலே. ஏனெனில் ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கின்றார்கள். நீங்கள் விரும்பும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்ய முடியும். ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை. இவர் தம்மால் இயன்றதைச் செய்தார். என் அடக்கத்திற்காக இவர் முன்னதாகவே என் உடலுக்குத் தைலம் பூசிவிட்டார். உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இவர் செய்ததும் எடுத்துக் கூறப்படும்; இவரும் நினைவுகூரப்படுவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று கூறினார். பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நோக்கத்தோடு தலைமைக் குருக்களிடம் சென்றான். அவர்கள் அதை அறிந்து மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். அவனும் அவரை எப்படிக் காட்டிக் கொடுக்கலாம் என்று வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான். புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், "நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார்கள். அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்: "நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்து கொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், " நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?" என்று போதகர் கேட்கச் சொன்னார் எனக் கூறுங்கள். அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்." சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். மாலை வேளையானதும் இயேசு பன்னிருவரோடு வந்தார். அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டுகொண்டிருந்தபொழுது இயேசு, "என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். அவர்கள் வருத்தமுற்று, ஒருவர் பின் ஒருவராக "நானோ? நானோ?" என்று அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு அவர், "அவன் பன்னிருவருள் ஒருவன்; என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவன். மானிடமகன் தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளவாறே போகிறார். ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு! அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்" என்றார். அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, "இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்" என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம், "இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள். இயேசு அவர்களிடம், "நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள். ஏனெனில், "ஆயரை வெட்டுவேன்; அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும்' என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்குமுன்பே கலிலேயாவுக்குப் போவேன்" என்றார். பேதுரு அவரிடம், "எல்லாரும் ஓடிப்போய்விட்டாலும் நான் அவ்வாறு செய்யமாட்டேன்" என்றார். இயேசு அவரிடம், "இன்றிரவில் சேவல் இரு முறை கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உனக்குச் சொல்கிறேன்" என்றார். அவரோ, "நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்" என்று மிக அழுத்தமாகச் சொன்னார். அப்படியே அவர்கள் அனைவரும் சொன்னார்கள். பின்னர் இயேசுவும் சீடர்களும் கெத்சமனி என்னும் பெயர் கொண்ட ஓர் இடத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் தம் சீடரிடம், "நான் இறைவனிடம் வேண்டும்வரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள்" என்று கூறி, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் திகிலும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர், "எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது; நீங்கள் இங்கேயே தங்கி விழித்திருங்கள்" என்று அவர்களிடம் கூறினார். சற்று அப்பால் சென்று தரையில் விழுந்து, முடியுமானால் அந்த நேரம் தம்மைவிட்டு விலகுமாறு இறைவனிடம் வேண்டினார். "அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்" என்று கூறினார்"


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்...அவருக்கு எதிராக நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு இறந்ததைக் கண்டு, 'இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்' என்றார்" (மாற்கு 15:37,39)

மாற்கு நற்செய்தியில் காணப்படுகின்ற இயேசுவின் துன்பங்கள் பற்றிய பகுதி சில தனித்தன்மைகளைக் கொண்டது. இயேசு அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் உயிர்துறக்கிறார். கடவுள் கூட அவரிடமிருந்து அகன்றுவிட்டதுபோலத் தோன்றிய வேளையில் இயேசு "உரக்கக் கத்தி உயிர்விடுகிறார்" (காண்க: மாற் 15:37). ஆனால், இருள் சூழ்ந்த அந்த நேரத்திலும் ஓர் ஒளிக்கதிர் அங்கே தோன்றி மிளிர்கின்றது. இயேசுவைத் தங்கள் எதிரியாகக் கருதிய உரோமை அதிகார வர்க்கத்தைச் சார்ந்த நூற்றுவர் தலைவரின் வாயிலிருந்து ஒரு மகத்தான உண்மை வெளிப்படுகிறது. அதாவது, நூற்றுவர் தலைவர் இயேசுவை "இறைமகன்" என அறிக்கையிடுகிறார். மாற்கு நற்செய்தி முழுவதுமே இங்கே தன் உச்சக் கட்டத்தை எய்துகிறது. இயேசு தம் பணிக்காலத்தின் தொடக்கத்திலிருந்தே தம் சீடர்களுக்கு அறிவுறுத்திய உண்மை இங்கே அப்பட்டமாகிறது. மானிட மகன் துன்பங்கள் அனுபவிப்பார் என்றும், துன்பத்தின் வழியே வாழ்வு பிறக்கும் என்றும் இயேசு போதித்திருந்தார். இங்கே சிலுவையில் தொங்கும் இயேசு துன்பத்தின் உச்சக்கட்டத்தை எட்டிவிட்ட போதிலும் "இறைமகன்" எனப் போற்றப்படுகிறார். அதுவும் பிற இனத்தைச் சார்ந்த ஒரு மனிதர் இயேசுவை இவ்வாறு போற்றுகிறார். 

இயேசு "இறைமகன்" என்பதன் பொருள் என்ன? இயேசுவிடத்தில் நாம் கடவுளின் பண்புகளைக் காண்கின்றோம். கடவுள் என்றால் யார் என்பதை இயேசு தம் வாழ்வின் வழியாக, சாவின் வழியாக, உயிர்த்தெழுதல் வழியாக நமக்கு வெளிப்படுத்துகின்றார். கடவுன் அன்பு மயமாக இருக்கிறார் எனவும், அவரிடத்தில் துலங்குகின்ற இரக்கத்திற்கும் மன்னிப்பு வழங்கும் இதய நெகிழ்ச்சிக்கும் எல்லையே கிடையாது என இயேசு நமக்குக் காட்டுகிறார். நாம் உண்மையிலேயே இயேசுவை இறைமகன் என ஏற்று, நம்புகிறோமா?

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
ஓசன்னா எனும் புகழ்ப் பாடல்!

இன்று குருத்து ஞாயிறு. ஆண்டவர் இயேசுவின் பாடுகளின் ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது. இன்றைய வாசகங்கள் குருத்தோலைப் பவனியைப் பற்றி மட்டும் பேசாமல், ஆண்டவர் இயேசுவின் பாடுகள், இறப்பைப் பற்றியும் பேசுகின்றன. எனவேதான், "பாடுகளின் ஞாயிறு" என்னும் பெயரும் உண்டு.

இன்றைய நாளில் இயேசுவின் பாடுகள், துன்பங்களைப் பற்றிச் சிந்திப்போம். ஒரு மாற்றத்துக்காக, அவருடைய உடல் துன்பத்தை அல்லாது, உளவியல் துன்பங்களை, மன உளைச்சலை எண்ணிப் பார்ப்போம். இயேசு மெய்யான மனிதர் என்னும் உண்மையின் அடிப்படையில், இயேசு உண்மையான பாராட்டுதல்களை ஏற்றுக்கொண்டார், மகிழ்ச்சி அடைந்தார் என நாம் நம்பலாம். அதுபோல, அவரைப் பற்றித் தவறான செய்திகள், வதந்திகள் பேசப்பட்டபோது அவர் மனம் புண்பட்டார், தாம் அநியாயமாகக் குற்றம் சாட்டப்படுவதாக எதிர்வாதிட்டார் என்பதையும் நற்செய்தி ஏடுகள் பதிவு செய்திருக்கின்றன.

எனவே, இயேசுவின் பாடுகளின் நாள்களில் அவருக்கு நேரிட்ட உச்ச கட்ட மன அழுத்தங்கள், உளைச்சல், தனிமை உணர்வு, அவமான உணர்வு... இவற்றையும் நாம் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

"ஓசன்னா" என்று புகழ்ப் பாடல் பாடிய அதே மக்கள் கூட்டம், "சிலுவையில் அறையும்" என்று கூச்சலிட்டபோது, இயேசு மேற்சொன்ன அத்தனை உணர்வுகளையும் நிச்சயம் அனுபவித்திருப்பார். இருப்பினும், உளமுதிர்ச்சி பெற்ற ஒரு மனிதர், அறிவுத் தெளிவு பெற்ற ஒரு தலைவர், யதார்த்த நிலை உணர்ந்த ஒரு போராளி என்ற வகையில் இந்த மன உளைச்சலையும், அவமான உணர்வுகளையும் அவர் நேர்மனதோடு ஏற்றுக்கொண்டிப்பார் என்றும் நாம் நிச்சயம் நம்பலாம். அந்த வகையில், உணர்வுரீதியில் துன்பம் அடைந்தாலும், அறிவின் பார்வையில் அவற்றையெல்லாம் இயேசு தெளிவோடு ஏற்றுக்கொண்டார். அவற்றையும் உலக மீட்பின் விலை என்று ஒப்புக்கொடுத்தார்.

இயேசுவைப் பின்பற்றி, நாமும் நமது வாழ்வில் வரும் உணர்வியல் சிலுவைகளையும், துன்பங்களையும் தெளிந்த மனதுடன் ஏற்கவும், அவற்றையும் மீட்பின் பணியாக அர்ப்பணிக்கவும் அருள்வேண்டுவோம்.

மன்றாடுவோம்: பாடுகளையும், உளவியல் துன்பங்களையும் ஏற்றுக்கொண்ட இயேசுவே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்வில் நாங்கள் எதிர்கொள்ளும் எதிர் உணர்வுகளையும் நேர்மனதோடும், விவிலிய மனநிலையிலும் ஏற்றுக்கொள்ளும் வலிமையைப் பெற்றுக்கொள்வோமாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!