Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     11  பெப்ரவரி 2018  
                                      ஆண்டின் பொதுக்காலம் 6ஆம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 
தொழுநோயாளி பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.

லேவியர் நூலிலிருந்து வாசகம் 13: 1-2, 44-46

அந்நாள்களில் ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது: "ஒருவர் உடலில் தோல்மீது தொழுநோய் போன்று, ஏதேனும் தடிப்போ, சொறி சிரங்கோ, வெண்படலமோ தோன்ற, அது தொழுநோயென ஐயமுற்றால், அவர் குருவாகிய ஆரோனிடம் அல்லது குருக்களாகிய அவர் புதல்வரில் ஒருவரிடம் கொண்டுவரப்பட வேண்டும்.

அவர் தொழுநோயாளி. அவர் தீட்டுள்ளவர். அவர் தீட்டுள்ளவர், எனக் குரு அறிவிப்பார். ஏனெனில் நோய் அவர் தலையில் உள்ளது.

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக்கொண்டு, "தீட்டு, தீட்டு", என குரலெழுப்ப வேண்டும்.

நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
 
பதிலுரைப் பாடல்தி.பா:
32: 1-2. 5. 11 (பல்லவி: 7a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, நீரே எனக்குப் புகலிடம்.

1 எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர். 2 ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். பல்லவி

5 "என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்" என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். பல்லவி

11 நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 
நான் கிறிஸ்துவைப்போல் நடக்கின்றேன்; நீங்கள் என்னைப்போல் நடங்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 31 - 11: 1

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள். யூதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள்.

நானும் அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய் இருக்கிறேன். நான் எனக்குப் பயன் தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன். நான் கிறிஸ்துவைப்போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள்.- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================

தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45

ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்'' என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார்.

இயேசு அவர்மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!'' என்றார்.

உடனே தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

பிறகு அவரிடம், "இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்'' என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.

ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார்.

அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கி வந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இயேசு செபவீரர் மட்டுமல்ல, செயல்வீரரும் கூட

ஜெர்மன் நாட்டைச் சார்ந்த பெண்ணொருத்தி கோடை விடுமுறையை செலவழிப்பதற்காக இத்தாலிக்கு அருகே இருந்த ஒரு தீவுக்குச் சென்றிருந்தாள். அந்தத் தீவு மிகவும் ரம்மியமாகவும் அவ்வளவாக ஆள் நடமாட்டம் இல்லாததாகவும் இருந்தது. ஆனால், அந்தத் தீவில் நடந்துகொண்டிருந்த இன்னொரு சம்பவம் அவரை மனம் நோகச்செய்தது. அது என்னவென்றால், அந்தத் தீவுக்கு வந்தபோன சுற்றுலாப் பயணிகள் சிலர் மது அருந்திவிட்டு, மது பாட்டில்களை ஆங்காங்கே போட்டுவிட்டுச் சென்றனர். இன்னும் சிலர் பிளாஸ்டிக் குப்பைகளை ஆங்காங்கே சிதறவிட்டுவிட்டுச் சென்றார். இதனால் அந்தத் தீவே பொழிவிழந்து காணப்பட்டது.

இதைப் பார்த்து அந்தப் பெண்மணியால் சும்மா இருக்க முடியவில்லை. அவர் தன்னால் முடிந்த மட்டும் அங்காங்கே சிதறிக்கிடந்த மது பாட்டில்களை, பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தார். இப்படியாக அந்தப் பெண்மணி தீவு சுத்தமாக இருக்க உதவிகள் செய்து வந்தார்.

ஒருநாள் மாலை வேளையில் அவர் வழக்கம் போல் தீவில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த குப்பைகளை, பிளாஸ்டிக் பொருட்களை, மது பாட்டில்களை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கும்போது, அவரைப் போன்றே ஒரு வயதான மனிதர் தீவில் கிடந்த மது பாட்டில்களை, பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தார். அந்த மனிதர் ஒவ்வொருநாள் காலையிலும் தீவில் இருக்கும் தேவாலயத்தில் நடைபெறும் திருப்பலியில் கலந்துகொள்ளும் மனிதர் போன்று அவருக்குத் தெரிந்தது.

உடனே அந்தப் பெண்மணி பெரியவரிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார், "பெரியவரே! நீங்கள் ஒவ்வொருநாளும் தீவில் இருக்கும் தேவாலயத்தில் நடைபெறும் திருப்பலியில் கலந்துகொள்கின்றவர்தானே?" என்று கேட்டார். "ஆமாம். நான்தான் அவர்" என்றார். தொடர்ந்து அந்தப் பெரியவர் பெண்மணியிடத்தில் பேசத் தொடங்கினார், "திருப்பலில் கலந்துகொள்வதால் மட்டும் என்னுடைய விசுவாச வாழ்க்கை முழுமை பெறவில்லை என்று எனக்குத் தோன்றியது. அதனால்தான் என்னால் இயன்ற மட்டும் இந்த தூய்மைப்படுத்துகின்ற பணியில் ஈடுபட்டு, என்னுடைய விசுவாச வாழ்க்கையை முழுமையாக்க முயற்சி செய்துகொண்டிருக்கின்றேன்".

பெரியவரின் வார்த்தைகளால் தொடப்பட்ட அந்தப் பெண்மணி, அதன்பிறகு தீவினைச் சுத்தப்படுத்துகின்ற பணியை அந்தப் பெரியவரோடு சேர்ந்தே செய்தார்.

ஜெபம் செய்வது மட்டும் கிறிஸ்தவ வாழ்க்கை கிடையாது, செயலிலும் ஈடுபடுவதுதான் உண்மையான எடுத்துகாட்டன கிறிஸ்தவ வாழ்க்கை என்னும் உண்மையை இந்த நிகழ்வு மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது.

பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் "இயேசுவைப் போன்று செபவீரராக மட்டுமல்லாமல், செயல்வீரராகவும் வாழ அழைப்புத் தருகின்றது. நாம் எப்படி செயல்வீரராக மாறுவது என்று இன்றைய இறைவார்த்தையின் வழியாக சிந்தித்துப் பார்ப்போம்.

மாற்கு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகம் ஆண்டவர் இயேசுவினுடைய பணிவாழ்வில் ஒருநாள் எப்படியெல்லாம் கழிந்தது என்பதைப் பற்றி மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. இயேசு விடியற்காலையில் தனிமையான ஓர் இடத்திற்கு இறைவேண்டல் செய்வதற்காக சென்றார் என்று தொடங்கும் அவருடைய நாள், மாலை வேளையில் பல்வேறு பிணிகளால் வருந்திய மக்களை இயேசு குணப்படுத்தினார் என்பதோடு அவருடைய ஒருநாள் பணிவாழ்க்கை இருக்கின்றது. இயேசு இறைவனோடு தனிமையில் ஜெபித்தார் என்பது அவர் ஜெப வீரர் என்பதை சுட்டிகாட்டுகின்ற அதே வேளையில், அவர் பல்வேறு பிணிகளால் வருந்திய மக்களைக் குணப்படுத்தினார் என்பது அவர் உண்மையான செயல்வீரர் என்னும் உண்மையை நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

இயேசு பேய்களை ஒட்டியது, நோயாளிகளைக் குணப்படுத்தியது, நற்செய்தி அறிவிக்க பல்வேறு ஊர்களுக்குச் சென்றது, இறைவனின் ஜெபித்தது எல்லாம் அவர் மனுக்குலத்தின் மீது கொண்ட உண்மையான அன்பினால் செய்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. இறைவாக்கினர் எசாயா கூறுவது போன்று "மெய்யாகவே இயேசு நம்மீது கொண்ட அன்பினால் நம்முடைய பிணிகளையும், துன்பங்களையும், பாடுகளையும் தன்மீது சுமந்து கொண்டார் (எசா 53: 4) என்று சொன்னால் அது மிகையாகாது.

அது மட்டுமல்லாமல், நற்செய்தி அறிவிப்பும், ஆண்டவரின் இரக்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு நலமான வாழ்வினைத் தருவதுதான் தன்னுடைய இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டார். அது இன்றைய நற்செய்தி வாசகத்தில் மிகத் தெளிவாக தெரிகின்றது. "நாம் அடுத்த ஊர்களுக்கும் போவோம் வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியை பறைசாற்றவேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கின்றேன்" என்னும் வார்த்தைகள்" இயேசு மக்கள்மீது கொண்ட உண்மையான அன்பினையும், அவருடைய இலட்சியக் கனவினையும் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசுவைப் போன்று மக்கள்மீது உண்மையான அன்புகொண்டு, அவர்களுக்கு உதவி செய்து, நடமாடும் நற்செய்தியாய் இருக்கவேண்டும் என்பதுதான் இயேசுவின் திருவுளமாக இருக்கின்றது.

இப்படி ஆண்டவர் இயேசு போதித்த, வாழ்ந்துகாட்டிய விழுமியங்களின் படி வாழ்ந்தவர் தூய பவுலடியார் என்று சொன்னால் அது மிகையாகாது. கொரிந்தியருக்கு எழுதப்பட்ட முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகம் அதற்குச் சான்றாக அமைகின்றது.

இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், "நான் நற்செய்தியை அறிவிக்கின்றேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! என்று சொல்லிவிட்டு, எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன்" என்கின்றார்.

பவுலடியார் நற்செய்தியின்மீது கொண்ட தாகம் அளப்பெரியது, அது மட்டுமல்லாமல் அவர் மக்களை ஆண்டவருக்குள் கொண்டு வருவதற்கு பட்ட துன்பங்கள், கஷ்டங்கள், சந்தித்த அவமானங்கள், வேதனைகள் அனைத்தையும் வார்த்தையில் விளக்கிச் சொல்ல முடியாது. இவற்றையெல்லாம் அவர் மக்கள்மீதும் இறைமகன் இயேசுவின் மீது கொண்ட உள்ளார்ந்த அன்பினாலேயே செய்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அதைவிடவும் பவுலடியார் தான் செய்துவந்த பணிகள் அனைத்தையும் பெருமைக்காக அல்ல, தன்மேல் சுமத்தப்பட்ட கடமையாக செய்தார். ஆகையால், நாம் பவுலடியாரைப் போன்று, ஆண்டவர் இயேசுவைப் போன்று நற்செய்தி அறிவிப்பதையும், நற்செயல் புரிவதையும் கடமையுணர்வோடு செய்யவேண்டும். அப்போதுதான் நாமும் ஆண்டவர் இயேசுவைப் போன்று, பவுலடியாரைப் போன்று செயல்வீரர்களாக மாறமுடியும்.

ஓர் ஊரில் மார்கரெட் என்னும் இளம்பெண் வாழ்ந்து வந்தாள். அவளுடைய குடும்பம் பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பம்; அவளுடைய பெற்றோரோ வயது முதிர்ந்தவர்களாக இருந்தார்கள். இதனால் அவள்தான் குடும்பச் சுமையை தன்னுடைய தோள்மேல் சுமக்கவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது. மார்கரெட்க்கு நல்லதொரு வேலை கிடைக்கவில்லை. குறைந்த ஊதியத்தில்தான் வேலை பார்த்து வந்தார். நல்லவொரு வேலை கிடைக்கவேண்டும் என்பதற்காக அவள் பல்வேறு நிறுவனங்களை ஏறி இறங்கினாள்.

இப்படிப்பட்ட தருணத்தில் ஒருநாள் மார்கரெட் ஒரு பெரிய நிறுவனத்திடம் வேலை வேண்டி புறப்பட்டுச் சென்றாள். ஆச்சரியம் என்னவென்றால், அவளைப் போன்றே நிறையப் பெண்கள் அந்த பெரிய நிறுவனத்திடம் வேலை வேண்டிச் சென்றார்கள். அவர்கள் எல்லாரும் பார்ப்பதற்கு கொஞ்சம் வசதி படைத்தவர்கள் போன்றும், அழகானவர்கள் போன்றும் இருந்தார்கள். இது மார்கரெட் உள்ளத்தில் ஒருவிதமான அச்சத்தைத் தோற்றுவித்தது. எப்படியும் வேலை கிடைத்தால்தான் தன்னுடைய குடும்பத்தை கரையேற்ற முடியும் என்ற முனைப்போடு குறிப்பிட்ட நிறுவனத்தை நோக்கி மார்கரெட் வேகவேகமாகப் போய்க்கொண்டிருந்தார்.

அப்போது ஓர் எதிர்பாராத சம்பவம் நடந்தது. ஆம், வேலை வாய்ப்பு தரும் அந்த நிறுவனத்தை நோக்கி நடந்துபோய்கொண்டிருந்தபோது ஒரு நடுத்தவர வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் கால் இடறிக் கீழே விழுந்துவிட்டார். அவருக்கு அருகிலே நடந்து சென்றவர்கள் எல்லாரும் பெண்ணொருத்தி வீழே விழுந்ததுகூடத் தெரியாமல், குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறுவனத்திற்குள் செல்ல வேண்டும் என்ற பரபரப்போடு சென்றபோது, மார்கரெட்டோ கீழே விழுந்த பெண்மணியை தூக்கி நிறுத்தி, அருகே இருந்த மருந்தகத்திற்கு அவரை அழைத்துச் சென்று, முதலுதவியைச் செய்து அந்தப் பெண்மணியிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

எதிர்பாராத சம்பவம் நடந்து கால தாமதமானதால், தனக்கு வேலை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றத்துடனே மார்கரெட் அந்த நிறுவனத்திற்குள் காலடி எடுத்து வைத்தார். எல்லாரும் போனபின்பு கடைசியாகத்தான் மார்கரெட் நேர்முகத் தேர்வு நடைபெறும் அறைக்குள் செல்ல முடிந்தது. அவர் அந்த அறைக்குள் சென்றபோது அவளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ஆம், சில மணித்துணிகளுக்கு முன்பாக மார்கரெட் யாருக்கு சாலையில் உதவிசெய்தாளோ அந்தப் பெண்மணிதான் அங்கு இருந்தார். அவர் மார்கரெட்டைப் பார்த்தவுடன், "வா! உனக்காகத்தான் நான் இவ்வளவு நேராம் காத்திருந்தேன். நீ வருவாய் என்று எனக்கு நிச்சயம் தெரியும். இங்கே நிறையப் பேர் வேலைதேடி வந்தார்கள். ஆனால், அவர்களிடத்தில் அடுத்தமட்டில் அன்பும் அக்கறையும் இல்லை. உனக்கு இருக்கின்றது. அதனால் உன்னை இங்கு ஒரு முக்கியமான பொறுப்பில் வேலைக்கு அமர்த்துகின்றேன்" என்றார். இதைக் கேட்டு மார்கரெட் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரைப் போன்று அடுத்தவர் மட்டில் உண்மையான அன்போடும் அக்கறையோடும் இருக்கவேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்படுவோம் என்பது உறுதி.

ஆகவே, நம் பெருமான் இயேசுவின் போன்று செபவீரர்களாக மட்டும் இல்லாமல், செயல்வீரர்களாகவும் வாழ்வோம். அடுத்தவர் மட்டில் அன்பு கொண்டு வாழ்வோம், அதனை நம்முடைய கடமையாக நினைத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!