Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     18  மார்ச் 2018  
                                      ஆண்டின் தவக்காலம் 4ஆம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 புதிய உடன்படிக்கை செய்துகொள்வேன்; பாவங்களை நினைவுகூரமாட்டேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 31-34

இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வேன், என்கிறார் ஆண்டவர்.

அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக, அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறிவிட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.

அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர்.

இனிமேல் எவரும் "ஆண்டவரை அறிந்துகொள்ளும்" எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தரமாட்டார். ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர், என்கிறார் ஆண்டவர்.

அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன்; அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவுகூரமாட்டேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 51: 1-2. 10-11. 12-13 (பல்லவி: 10a)
=================================================================================
பல்லவி: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். 11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி

12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். 13 அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்; அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 7-9

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார்.

அவர் இறை மகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 12: 26
அல்லேலூயா, அல்லேலூயா! "எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர்," என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 20-33

அக்காலத்தில் வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர். இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, "ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்" என்று கேட்டுக்கொண்டார்கள். பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அது பற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர்.

இயேசு அவர்களைப் பார்த்து, "மானிடமகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்" என்றார்.

மேலும் இயேசு, "இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்" என்பேனோ? இல்லை! இதற்காகத்தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன். தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்" என்றார்.

அப்போது வானிலிருந்து ஒரு குரல், "மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன்" என்று ஒலித்தது. அங்குக் கூட்டமாய் நின்றுகொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, "அது இடிமுழக்கம்" என்றனர்.

வேறு சிலர், "அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு" என்றனர்.

இயேசு அவர்களைப் பார்த்து, "இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது. இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்" என்றார். தாம் எவ்வாறு இறக்கப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

இவ்வாசகங்களுக்குப் பதிலாக முதலாண்டு வாசகங்களையும் பயன்படுத்தலாம். (காண்க: பக்கம் 311)
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
மடிந்து பலன்தரும் கோதுமைமணிகள் ஆவோம்!

முன்பொரு காலத்தில் டெலமசுஸ் (Telemachus) என்னும் துறவி பாலைவனத்தில் தங்கி, அங்கே சிலகாலம் தனிமையில் இறைவனிடம் ஜெபித்து வந்தார்.

ஒருநாள் அவருடைய உள்ளுணர்வு "நீ உரோமை நகருக்குச் செல். அங்கு நடைபெறுகின்ற கிளாடியேட்டர் விளையாட்டைப் பார்" என்று சொல்லியது. உடனே அவர் பாலைவனத்திலிருந்து கிளம்பி உரோமை நகருக்குச் சென்று, கிளாடியேட்டர் விளையாட்டு நடைபெறுகின்ற அரங்கத்திற்குள் சென்றார். இரண்டு பேர் பயங்கரமாக அடித்துக்கொண்டு சாவதுதான் இந்த விளையாட்டின் உள்ளடக்கம்.

கிளாடியேட்டர் விளையாட்டு நடைபெற இருந்த அந்த அரங்கில் ஏறக்குறைய எண்பதாயிரம் பேர் கூடி இருந்தார்கள். சிறுது நேரத்திலேயே விளையாட்டு தொடங்கியது. இரண்டு வீரர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக்கொண்டார்கள். கூட்டம் அவர்கள் சண்டையிடுவதைப் பார்த்து, ஆரவாரம் செய்து மகிழ்ந்தது. இப்படி ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு சாவது ஒருபோதும் கூடாது என நினைத்த டெலமசுஸ் மைதானத்திற்கு உள்ளே சென்று, சண்டை போட்டுக்கொண்டிருந்த இரண்டு பேருக்கும் மத்தியில் சென்று, அவர்களை விலக்கிவிடத் தீர்மானித்தார். அவர்களோ அவரைத் தூக்கித் தூர எறிந்தார்கள். டெலமசுஸ் மீண்டுமாக அவர்களுக்கு நடுவிலே சென்று, அவர்களிடம் சண்டை வேண்டாம் என்று கேட்டுப் பார்த்தார்.

இதற்கிடையில் அரங்கில் இருந்த பார்வையாளர் டெலமசுஸ் செய்யும் செயலால் ஆட்டம் பாதிக்கின்றது என்று சொல்லி, அவர்மீது கற்களை வீசினார்கள். இதனால் அவருடைய உடல் முழுவதும் காயங்கள் பட்டு, இரத்தம் வழிந்தோடியது. அதனை எல்லாம் அவர் பொருட்படுத்தாமல் சண்டை போட்டுக் கொண்டிருந்த இரண்டு வீரர்களையும் அவர் விளக்கிவிடவே முயன்றுகொண்டிருந்தார். ஒருகட்டத்தில் ஒரு வீரர் வீசிய வாள் டெலமசுஸ் மேல் இறங்கவே, அவர் அந்த இடத்திலேயே இறந்துபோனார். சண்டை போட்டுக்கொண்டிருந்த இரண்டு வீரர்களும், அரங்கில் இருந்த பார்வையாளர்களும் ஒரு கணம் திகைத்துப் போனார்கள். ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் இந்த விளையாட்டு வேண்டாம் என்பதற்காகத்தானே இந்த மனிதர் தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார். இனிமேலும் இப்படிப்பட்ட ஒரு விளையாட்டுத் தேவையில்லை என முடிவு எடுக்கப்பட்டது. அன்றிலிருந்து கிளாடியேட்டர் விளையாட்டு அறவே ஒழிந்தது. இவ்வாறு டெலமசுஸ் தன்னுடைய இறப்பின் மூலம், ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளக்கூடிய கிளாடியேட்டர் விளையாட்டு அறவே ஒழிவதற்குக் காரணமாக இருந்தார்.

பிறருக்காகத் தன் இன்னுயிரையே தந்த டெலமசுஸ் கோதுமை மணியைப் போன்று மடிந்து பலன்தரக்கூடியவராக இருந்தார். தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள், "கோதுமைமணியைப் போன்று மடிந்து பலன்தரும் மக்களாவோம்" என்று சிந்தனையைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்செய்தி வாசகத்தில் திருவிழாவிற்கு வந்திருந்த கிரேக்கர்கள் சிலர் ஆண்டவர் இயேசுவைப் பார்க்க விரும்புகின்றார்கள். பிலிப்பும் அந்திரேயாயாவும் அவர்கள் இயேசுவைப் பார்க்க உதவிசெய்கின்றார்கள். இங்கே நாம் கவனிக்கவேண்டிய செய்தி "இயேசு யூதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல, எல்லாருக்கும் சொந்தம்" என்பதாகும். இயேசுவைத் தேடி எல்லா இனத்தாரும் - புறவினத்தார் நிறையப் பேர் வந்தார்கள். இயேசு அவர்களுக்கு நலம் தந்ததுடன் இறைவார்த்தையையும் கடவுளின் இரக்கத்தையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்கின்றார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு, ஒருசில வாழ்வில் உண்மைகளையும் மானிட மகன் எப்படி இறப்பார் என்பதைப் பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். "மானிட மகன் மாட்சி பெறவேண்டிய நேரம் வந்துவிட்டது. கோதுமை மணி மண்ணில் விழுந்து முடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்" என்பதுதான் இயேசு கிரேக்கர்களுக்குச் சொல்லும் செய்தியாக இருக்கின்றது.

இயேசு கிரேக்கர்களிடம் பேசியதிலிருந்து ஒருசில உண்மைகளை நாம் அறிந்துகொள்ளலாம். அதில் முதலாவது, ஒருவருடைய வாழ்வு முழுமையாகப் பலன் கொடுக்க வேண்டும் என்றால், அவர் தன்னையே முற்றிலுமாக தியாகம் செய்யவேண்டும் அல்லது தன்னை முற்றிலுமாகக் கரைக்கவேண்டும். எப்படி கோதுமை மணியானது தன்னை இழப்பதினால் அதிகமான பலன் கொடுக்கின்றதோ, அது போன்று நாமும் நம்மை இழக்கின்றபோது அதிகமான பலன் கொடுப்போம் என்பது உறுதி. அந்தவகையில் பார்க்கின்றபோது இந்த உலகிற்கு வாழ்வினை, மீட்பினை வழங்கவந்த இயேசு, அதனைத் தன்னுடைய சிலுவைச் சாவினால் வழங்கி நிற்கின்றார். ஆகையால், தன்னையே முற்றிலுமாக கையளிப்பதன் வழியாக மட்டுமே ஒருவர் முழுமையான பலனைத் தரமுடியும் என்பதுதான் நாம் உணர்ந்துகொள்ளவேண்டிய முதன்மையான செய்தியாக இருக்கின்றது.

இயேசு சொல்லும் இரண்டாவது செய்தி "தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வை ஒரு பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்" என்பதாகும்.

இந்த உலகத்தில் இருக்கின்ற மண், மரம், செடி கொடிகள், மழை, உயிரினங்கள் இவையெல்லாமே ஒருபோதும் தமக்காக, வாழ்ந்ததுமில்லை, இனிமேல் வாழப்போவதுமில்லை. ஆனால், மனிதன் மட்டும்தான் தனக்காகவே வாழ்ந்து மடிந்து போகின்றான். அதனால்தான் அவன் எந்தவொரு தடயமும் இல்லாமல் மடிந்து போகின்றான். இது எல்லா மனிதர்களுக்கும் பொருந்துவதில்லை. ஒருசில நல்ல மனிதர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தனக்காக மட்டும் வாழவில்லை, பிறருக்காகவும் வாழ்ந்தார்கள். பிறர் மீது அக்கறை கொண்ட வாழ்வினால் அவர்கள் இன்றைக்கும் மக்களால் நினைவுகூரப்படுகின்றார்கள். அப்படிப் பிறர் மீது அக்கறைகொண்டு, பிறருக்காக வாழ்ந்த ஒரு மானிதர்தான் இரஷ்ய நாட்டை ஆண்ட மாமன்னர் நிக்கோலாஸ் என்பவர்.

மாமன்னர் நிக்கோலாசைப் பற்றிச் சொல்லபடுகின்ற ஒரு நிகழ்வு.

நிக்கோலாசின் படையில் படைவீரன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் ஏழை. ஒருநாள் அவன் தான் பட்டிருக்கும் வீட்டுக் கடன்களை எல்லாம் ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு, அதனடியில், "இவ்வளவு கடனை யார் அடைப்பார்" என்று மலைப்போடு எழுதி வைத்தபடியே படைவீரர்களுக்கு என்று இருந்த அறையில் சோகத்தோடு தூங்கிப் போனான். அன்றிரவு தற்செயலாக படைவீரர்களின் அறைக்கு வந்த மாமன்னர் நிக்கோலாஸ் குறிப்பிட்ட அந்த படைவீரரின் தலையணைக்குக் கீழ் மிகப் பெரிய பட்டியல் ஒன்று இருப்பதைக் கண்டு அது என்னவென்று பார்த்தார். எல்லாம் அந்தப் படைவீரன் பட்ட கடன் பட்டியலாக இருந்தது.

உடனே மாமன்னர் அந்தக் கடன் பட்டியலுக்குக் கீழே "நான் அடைக்கின்றேன்" என்று எழுதிக் கையொப்பம் இட்டது மட்டுமல்லாமல், ஒவ்வொரு கடனையும் அடைத்து அந்தப் படைவீரனை நிம்மதியாக வாழச் செய்தார். இப்படிப் பிறர்மீது அக்கறை கொண்டு, பிறருக்காகவே தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்ததால்தான் அவர் இன்றளவும் மக்களால் நினைவுகூரப்படுகின்றார். நாம் கடவுள் நமக்குக் கொடுத்த வாழ்வினை நமக்காக மட்டும் வாழாமல், பிறருக்காக வாழ்கின்றபோது நிலைவாழ்வினைப் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.

நிறைவாக இன்றைய இறைவார்த்தை சொல்லும் செய்தி, "துன்பவேளையில் நாம் ஆண்டவரை நோக்கி மன்றாடுகின்றபோது, அவர் நமக்கு செவி சாய்த்து, நம்முடைய வாழ்வினை வளமானதாக மாற்றுவார்" என்பதாகும்.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, "இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும் என்பேனா? இல்லை! இதற்காகத்தானே இந்நேரம் வரை வாழ்ந்திருக்கின்றேன். தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்" என்கின்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், "மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன். இங்கு இயேசு தந்தைக் கடவுளை நோக்கி எழுப்பும் ஒருவிதமான வேதனை கலந்த ஜெபம், கெத்சமணியில் அவர் எழுப்பும் ஜெபத்தோடு ஒத்துப் போகின்றது. இயேசு தந்தைக் கடவுளை நோக்கி எழுப்புகின்ற ஜெபத்திற்கு அவர் "மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன்" என்று பதிலளிக்கின்றார்.

இயேசு தந்தைக் கடவுளை நோக்கி எழுப்புகின்ற ஜெபத்திற்கு அவர் எப்படி பதில் தந்தார் என்பதை எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகம் மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. "கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்கு செவி சாய்த்தார்" என்று நாம் அங்கு வாசிக்கின்றோம். ஆகையால், நம்முடைய துன்ப வேளையில், இக்கட்டான தருணத்தில் கடவுளை நோக்கி மன்றாடும்போது அவர் நமக்கு செவிசாய்ப்பார் என்பது உறுதி.

பளுதூக்கும் போட்டியில் உலகச் சம்பியன் பட்டத்தை வென்றவர் சிட்னி வாக்கர் (Sidney Walker). ஒரு சாதாரண ஜூ பாலிஸ் செய்யும் பையனாக இருந்து, இந்த நிலையை அடைந்தவர். ஒரு சமயம் டபிள்யு.சி.ஹெய்ன்ஸ் (W.C.Hiens) என்னும் அவருடைய நண்பர் அவரிடம், "நண்பா! உன்னால் மட்டும் பளுதூக்கும் போட்டியில் இவ்வளவு பெரிய சாதனைகளைச் செய்ய முடிகின்றதே. அது எப்படி?" என்று கேட்டார். அதற்கு சிட்னி வாக்கர், "போட்டி தொடங்குவதற்கு முன்பாக நான் செய்யும் ஜெபம்தான் காரணம்... போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இரண்டு காரியங்களுக்காக ஜெபிப்பன். ஒன்று எதிராளி எந்தவிதமான காயமும் படக்கூடாது என்பதற்கு. இரண்டு போட்டியில் நிச்சயம் நான் ஜெயிக்கவேண்டும் என்பதற்கு. கடவுள் என்னுடைய ஜெபத்தைக் கேட்கின்றார். அதனால்தான் நான் பெரிய சாதனைகளைச் செய்துகொண்டிருக்கின்றேன்" என்றார்.

இறைவனை நோக்கி நாம் எழுப்பும் வேண்டுதலுக்கு இறைவன் நிச்சயம் பதில் தருவார் என்பதைத்தான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆகையால், கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்க நம்மையே முற்றிலுமாக இறைபணிக்காய், பிறர் பணிக்காய் தியாகம் செய்வோம், இந்த வாழ்வு நமக்கானது மட்டுமல்ல, பிறருக்கானதும் கூட என்பதை உணர்ந்து, அதன்படி வாழ்வோம், இப்படிப்பட்ட வாழ்வில் சவால்கள் வருகையில் அதனை இறைவனிடம் ஒப்புக் கொடுத்து ஜெபிப்போம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!