Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     25  பெப்ரவரி 2018  
                                                 தவக்காலம் 2ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 நம் முதுபெரும் தந்தை ஆபிரகாமின் பலி.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-2, 9-13, 15-18

அந்நாள்களில் கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் "இதோ! அடியேன்" என்றார். அவர், "உன் மகனை, நீ அன்புகூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு, மோரியா நிலப் பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிட வேண்டும்" என்றார்.

ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின்மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார்.

அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று "ஆபிரகாம்! ஆபிரகாம்" என்று கூப்பிட, அவர் "இதோ! அடியேன்" என்றார். அவர், "பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்துகொண்டேன்" என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார்.
இதோ, முட்செடியில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரிபலியாக்கினார்.

ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, "ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய்.

ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப்போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன்.
உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக்கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்" என்றார்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 116: 10,15. 16-17. 18-19 (பல்லவி: 9)
=================================================================================
பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.

10 "மிகவும் துன்புறுகிறேன்!" என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன். 15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. பல்லவி

16 ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். 17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். பல்லவி

18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்; 19 உமது இல்லத்தின் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
  கடவுள் தம் சொந்த மகனென்றும் பாராமல், அவரை நமக்காக ஒப்புவித்தார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 31b-34

சகோதரர் சகோதரிகளே, கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ? கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்?
அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே. அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டுக் கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்." அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என் அன்பார்ந்த மைந்தர் இவரே.

தூயமாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 2-10

அக்காலத்தில் இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின.
அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தார்கள்.

பேதுரு இயேசுவைப் பார்த்து, "ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட, அந்த மேகத்தினின்று, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது. உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.
அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தபோது அவர், "மானிடமகன் இறந்து உயிர்த்தெழும்வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, `இறந்து உயிர்த்தெழுதல்' என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
நீயாக மாறுவதே நிரந்தர மாற்றம்.

உருமாற்றம். இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்ட அத்தனை படைப்புகளும் உருமாற்றம் அடைகின்றன. விதை தளிராகி, செடியாகி, மரமாகிறது. உயிரினம் கருவாக உருவாகி, உயிராக வடிவம் பெறுகிறது. ஓரறிவு உயிரினம் முதல் ஆறறிவு மனிதன் வரை அனைவருக்கும் உருமாற்றம் நிகழ்கிறது.

ஆனால் அந்த உருமாற்றங்கள் எல்லாம் நம் உடனிருப்போருக்கு எந்தவிதமான தூண்டுதலையும் பாதிப்பையும் தருவதில்லை. ஆனால் இயேசுவின் உருமாற்றம் எவ்வாறு நமக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை வெளிபடுத்தவே இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்புவிடுக்கிறது.

அகில உலகத்தையும் படைத்த கடவுளின் மகனான இயேசு நம்மைப் போல் ஒரு சாதாரண மனிதராகவே வாழ்ந்தார். தெய்வ இயல்பு முழுவதும் இருந்தும் மனித இயல்பிலேயே தனது வாழ்க்கையை வாழ்ந்தார். இன்றைய விவிலிய நிகழ்வை ஒரு காட்சியாக அதுவும் அரண்மனை, ராஜாங்க காட்சியாக கற்பனை செய்து பார்ப்போம்.
முற்காலத்தில் இளவரசர்கள் மன்னராக முடி சூடுவதற்கு முன்பு மாறுவேடத்திலோ, அல்லது சாதாரண மனிதர் வேடத்திலோ மக்களுடன் தங்கி அவர்களது இன்னல் இடையூறுகளைக் கண்டறிந்து அதனைத் தீர்க்க முற்படுவர். அப்போது தனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களையே உடன் அழைத்துச் செல்வர். சில சமயங்களில் மக்களில் சிலரையே தங்களது நண்பர்களாக தேர்ந்தெடுத்து உடன் அழைத்துச் செல்வர். இறுதியில் மக்களின் துயர் களைந்து, தங்களின் வேடம் களைவர். பின் மணிமுடி சூடி மன்னராவர்.

இயேசுவின் உருமாற்றமும் அப்படி ஒரு காட்சியாகத் தான் தோன்றுகிறது.
மாமன்னர் - இறைவன்.
இளவரசர் - அவர் தம் மகன் இயேசு.
ராஜ மந்திரிகள் - மோயீசன், எலியா.
நண்பர்கள் - சீடர்கள் மூவர்.
மன்னராக இயேசு தனது இறைவல்லமையினுள் நுழைகிறார். மோயீசன் எலியா என்னும் இரு பெரிய வல்லுநர்களோடு தனது பயணத்திட்டத்தைப் பற்றி உரையாடுகிறார். அவரது பேச்சிலும் உடையிலும் ராஜ வனப்பு ( இறை) மிளிர்கிறது. மக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்களான சீடர்களுக்கு இயேசுவின் இறையரசு பற்றியும் வல்லமை பற்றியும் அதிகம் தெரியாத நேரம். திடிரென்று அவரது ராஜ வனப்பையும் மந்திரிகளுடனான அவரது உரையாடலையும் கண்டு வாயடைத்துப் போய் நிற்கின்றனர். இப்படியே இருந்து விடலாமே இவர்! எதற்கு இப்படி காட்டிலும் மேட்டிலும் கால்நடையாக நடந்து துன்பப்பட வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

நாம் இங்கேயே இருப்பது எத்துணை நலம் என்றும், மூன்று கூடாரங்கள் அமைத்து விடலாம் என்பது வரை அவர்கள் சிந்தனை போகிறது.அப்போதும் கூட அந்த எளியவர்கள் தங்களைப் பற்றி சிறிதும் எண்ணவில்லை.

இவரே என் அன்பார்ந்த மகன் இவருக்கு செவிசாயுங்கள் என்ற அரசனின் குரலுக்கு அடிபணியும் சேவகர்களாய் சீடர்கள்.

வழக்கம் போல் இதை யாருக்கும் சொல்லவேண்டாம் என்று கூறும் இயேசு. (இந்த முறை ஒரு கால வரையறை வைக்கிறார். அதாவது மானிடமகன் இறந்து உயிர்த்தெழும் வரை என்று).

உயிர்த்தெழுதலா?அப்படி என்றால் என்ன ? என்று தங்களுக்குள் விவாதிக்கத் தொடங்கும் அப்பாவி சீடர்கள் என காட்சி முழுவதும் ஒரு ராஜாங்க நிகழ்வாகத் தோன்றுகிறது.

எங்கு? மலை; தனிமையான இடத்தில் தன்னை இறைவன் முன்னிறுத்தி செபிக்கிறார். மலையில் பெரும்பாலும் தூய காற்றும் சுகாதாரமும் கிடைக்கும். தூய்மை இருக்கும் இடத்தில் மகிழ்வும் தெளிவும் இருக்கும். இத்தகைய் மகிழ்வையும் தெளிவையும் தேடி இயேசு செல்கிறார். அதை கண்டடைகிறார். தனது சீடர்களுக்கும் அதை வெளிப்படுத்துகிறார்.

எதற்காக ? தனது நோக்கத்தைக் கூர்மைப்படுத்தவும், தனது இறை வல்லமையைப் பிறருக்கு வெளிப்படுத்தவும், தந்தை தன் மீது வைத்திருக்கும் அன்பை பிறர் அறியச் செய்யவும் உருமாறுகிறார்.

யாருடன்? மோசே, எலியா. மோசே இஸ்ரயேல் மக்களை எகிப்து நாட்டிலிருந்து கானான் நாட்டிற்கு வழிநடத்தியவர். எலியா ஆண்டவரின் வாக்கை சிதறிக்கிடந்த இஸ்ரயேல் மக்களுக்கு சென்று அறிவித்தவர். இரண்டு பேருமே இஸ்ரயேல் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள். கடவுளின் அன்பை வல்லமையை மக்களுக்கு வெளிப்படுத்தியவர்கள். இவர்களோடு இயேசு உரையாடுகிறார்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் இங்கு இவருக்கு ஒரு படி மேலே போய் உடையிலேயே தெரிகிறது.ஆடை பளீரென்று வெண்ணிறமாக மாறும் அளவுக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியடைகின்றார் இயேசு.

இன்றைய இயேசுவின் உருமாற்றம் நமக்கு தரும் செய்தி இதுதான்.
மகிழ்வும் தெளிவையும் உனக்குள் தேடு.
இறையடியார்களின் துணை நாடு,
கடவுளின் அன்பு மகனா/ளாக மாறு.
நீ நீயாக மாறு
அதுவே நிரந்தரமாற்றம் என்பதை நமக்கு உணர்த்தவே இயேசு உருமாறுகிறார். மனிதரான இயேசு இறை மனிதராக மாறுகிறார். நாமும் மாறுவோம். உடலளவில் அல்ல உள்ளத்தளவில்.

காகிதம் கசக்கி எறியப்படும் போது குப்பையாகிறது
காசாக மாறும்போது, தான் அதன் மதிப்பு உயர்கிறது.
மூங்கில் உடைபடும்போது மரத்துண்டாகிறது,
குழலாக ஊதப்படும்பொழுது அதன் இன்னிசை இனிமை தருகிறது.
எதுவும் அப்படியே இருந்தால் எந்த பயனுமில்லை.
உருமாறிய இயேசுவுக்கு தந்தையின் அன்பும் ஆசீரும்கிடைத்தது. நாமும் நம் உருவை மாற்ற முயல்வோம். எதிர்காலப் பயணத்திட்டத்தை இறை உதவியுடன் திட்டமிடுவோம். இறைவாக்கினர்களின் பாதையில் இறையாசீர் பெறுவோம் உருமாறுவோம் உருமாற்றுவோம். எல்லாம் வல்ல இறைவனின் ஆசிர் நம்மோடும் நம் குடும்பத்தோடும் என்றும் இருப்பதாக ஆமென்.

மறையுரை வழங்குபவர் சகோதரி மெரினா
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!